Published : 23 Apr 2018 08:38 AM
Last Updated : 23 Apr 2018 08:38 AM

பிஹாரில் பாஜக-நிதீஷ் கூட்டணி என்னவாகும்?

த்தர பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவை இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வி காரணமாக, பக்கத்து மாநிலமான பிஹாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்வி அதிகம் கவனத்துக்கு வராமல் போய்விட்டது. பிஹாரில் அராரியா மக்களவைத் தொகுதியிலும் ஜெஹனாபாத் சட்டப் பேரவைத் தொகுதியிலும் பாஜக கூட்டணிக்குத் தோல்வி ஏற்பட்டது. நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மக்களுடைய ஆதரவைத் தொடர்ந்து இழந்துவருகிறது. இது பாஜகவுக்குத் தலைவலியாக மாறிவருகிறது.

உத்தர பிரதேசத் தோல்வியைவிட பிஹார் தோல்விதான் பாஜகவுக்கு அதிகக் கவலையைத் தரும் நிலையில் உள்ளது. கோரக்பூர், புல்பூரில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து தோல்வியைத் தந்தாலும், வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. அராரியா, ஜெஹனாபாத் தொகுதிகளில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) வேட்பாளர்கள், பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளனர். ஆர்ஜேடி ஏற்கெனவே வென்ற தொகுதிகளைத்தான் தக்கவைத்துக்கொண்டது, எனவே 2019 மக்களவை பொதுத் தேர்தலில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது என்று சமாதானப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், உண்மை அதுவல்ல. 2005 முதல் பிஹாரில் வெவ்வேறு கட்சிகளின் வளர்ச்சியைப் பார்க்கும்போது பாஜகவுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஒரு பாரமாக மாறி வருவது புரியும்.

கட்சிகளின் பெருக்கம்

அரசியல் விழிப்புணர்வுள்ள மாநிலம் பிஹார். ஒவ்வொரு தேர்தலின்போதும் புதிய அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் களத்துக்கு வருகின்றனர். இதனால் பெரிய கட்சிகள் பெறக்கூடிய மொத்த வாக்குகள் 70% முதல் 80% வரைதான் இருக்கின்றன. எனவே 25% வாக்கு வங்கி வைத்துள்ள எந்தக் கட்சியும் சிறிய கட்சிகளுடன் கூட்டு வைத்து 30-35% வாக்குகள் பெற்றால் கூட ஆட்சிக்கு வர முடியும். பிஹாரில் கடந்த இருபது ஆண்டுகளாக பாஜக, ஜேடியு, ஆர்ஜேடி ஆகியவை பெரிய கட்சிகளாக இருக்கின்றன. காங்கிரஸ், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) அடுத்த இடங்களில் உள்ளன.

2005 வரையில் ஆர்ஜேடி முதலிடத்தில் இருந்தது. 28% வாக்கு வங்கியுடன் ஆட்சி நடத்தியது. 2005 முதல் 2010 வரையிலான காலத்தில் அதன் செல்வாக்கு சரிந்தது. 2009-ல் அதன் வாக்குவங்கி 20% ஆகவும் 2010-ல் 18.84% ஆகவும் குறைந்தது. 2014 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டு வைத்த ஆர்ஜேடி 20.10% வாக்குகள் பெற்றது. 2015-ல் 'மகா கட்பந்தன்' என்ற கூட்டணி அமைத்து 18.4% வாக்குகள் பெற்று போட்டியிட்ட 101 தொகுதிகளில் 80 தொகுதிகளை வென்றது. அதில் ஜேடியு, காங்கிரஸ் இருந்தன.

2005-ல் 11% வாக்கு வங்கியுடன் மூன்றாவது இடத்தில் இருந்த பாஜக 2005 அக்டோபரில் 15.65% ஆக வளர்ந்தது.2010-ல் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டு வைத்து 16.46% ஆக வளர்ச்சி பெற்றது. 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது மோடி அலையால் 29.9% வாக்குகளை ஈர்த்து மாநிலத்தில் முதலிடக் கட்சியானது.

ஜேடியு கடந்த பாதை

பாஜகவுடன் கூட்டு வைத்து 2005 பிப்ரவரி சட்டப் பேரவைத் தேர்தலில் 14.55% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஜேடியு, 2005 அக்டோபர் தேர்தலில் 20.46% வாக்குகளைப் பெற்றது. 2010 பேரவைத் தேர்தலில் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வென்றது. 2014 மக்களவை பொதுத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிட்டதால் 15.80% வாக்குகளுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

2015 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மகா கூட்டணியில் 16.8% வாக்குகள் பெற்று ஆட்சிக்குத் தலைமை வகித்தது. ஜேடியு, ஆர்ஜேடி இரண்டும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆர்ஜேடி 80 தொகுதிகளிலும் ஜேடியு 71 தொகுதிகளிலும் வென்றன. ஆர்ஜேடி 18.4% வாக்குகளும் ஜேடியு 16.8% வாக்குகளும் பெற்றன. வெற்றி சதவீதம் ஆர்ஜேடிக்கே அதிகம். 2010 சட்டப் பேரவைத் தேர்தலில்கூட 102 இடங்களில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களில் வென்றது. ஜேடியு 141 தொகுதிகளில் போட்டியிட்டு 115 தொகுதிகளில்தான் வென்றது. வெற்றி சதவீதம் பாஜகவுக்கே அதிகம்.

பிஹாரில் 2005-ல் நடந்த தேர்தல் தொடங்கி சமீபத்தில் நடந்த தேர்தல் வரை ஆராய்ந்தால் மூன்று உண்மைகள் தெரியும். முதலாவதாக, 2005 முதல் ஆட்சியில் இருந்தாலும் ஜேடியுவும் நிதீஷ் குமாரும் மக்களிடையே செல்வாக்கை இழந்து வருகின்றனர். 2005 முதல் (ஜித்தன்ராம் முதல்வராக இருந்த சில மாதங்கள் தவிர) இப்போதுவரை முதலமைச்சராக இருக்கும் நிதீஷ்குமாருக்கு தனியாகவே பெரும்பான்மையோரின் ஆதரவு கிடைத்திருக்க வேண்டும். அவருடைய கட்சியும் முதல் இடம் பிடிக்கும் கட்சியாகியிருக்க வேண்டும். வாக்கு சதவீதம் உள்பட அனைத்திலும் அக்கட்சி மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. பாஜக பிறகு ஆர்ஜேடி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தோழமைக் கட்சிகளைவிட அதிகத் தொகுதிகளில் போட்டியிட்டும் குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெறுகிறது. இரண்டாவதாக, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், போட்டியிட்ட தொகுதிகளில் பெறும் வெற்றிவிகிதம் ஜேடியுவுக்குக் குறைவாகவே இருப்பது தொடர்கிறது.

மூன்றாவதாக, கட்சிக்கு வலுவான நிர்வாக அமைப்புகளோ, வாக்காளர்களைக் கவரக்கூடிய திறமையோ இல்லாததால் 2019 மக்களவை பொதுத் தேர்தலிலும் யாருடைய முதுகிலாவது சவாரி செய்தால்தான் ஜேடியுவால் தாக்குப்பிடிக்க முடியும். நிதிஷ் குமாரின் தோழமைக்காக பாஜக அதிக தொகுதிகளை ஜேடியுவுக்கு விட்டுக் கொடுத்தால் மக்களவையில் பெரும்பான்மை பெற முடியாமல் போகும்.

அப்படியானால் பாஜக என்ன செய்ய வேண்டும்? ஜேடியு கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தாலும் அதன் வாக்கு வங்கிக்கு ஏற்ப குறைந்த மக்களவைத் தொகுதிகளை மட்டுமே அதற்கு ஒதுக்க வேண்டும். காரணம், இனி அக் கட்சியால் ஆர்ஜேடியுடன் கூட்டு வைக்க முடியாது. தனித்தும் போட்டியிட முடியாது. 2014 பொதுத் தேர்தலில் பிஹாரில் 40 மக்களவைத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 31 தொகுதிகளில் வென்று சாதனை படைத்திருக்கலாம். ஆனால், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயம் அதற்குச் சவால்தான்.

© ‘பிசினஸ் லைன்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x