Published : 20 Apr 2018 09:04 AM
Last Updated : 20 Apr 2018 09:04 AM

பாரதிதாசன்: சில நினைவுகள்...

பு

துச்சேரி பெருமாள் கோவில் தெருவில் இன்று பாரதிதாசன் நினைவு இல்லமாகவும் அருங்காட்சியகமாகவும் மாறி நிற்கிறது அந்த வீடு. ஐம்பதுகளில் ஒருநாள் முதல் முறையாக பாரதிதாசனைச் சந்திக்கும் ஆர்வத்தோடு வேலூரிலிருந்து புதுவைக்குப் புறப்பட்டுப் போனேன்.

மட்ட மத்தியான நேரம். தெருவை அடைந்தபோது ஆள் நடமாட்டம் அதிகமில்லை. ஒரு வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியை நெருங்கி, “இங்கே பாரதிதாசன் ஐயா வீடு எதுனு தெரியுமா?” என்றேன்.“தம்பி… யாருப்பா நீ?”என்று எதிர் வீட்டிலிருந்து கேட்டது ஒரு கம்பீரமான குரல். கையில் ஒரு புத்தகத்தை ஏந்தியபடி நின்றிருந்தவர், அவரேதான்! “நான்தான் பாரதிதாசன்… இப்ப என்ன வேணும் உனக்கு?” என்றார் குறும்பாக.

அதுதான் அவருடன் முதல் சந்திப்பு. “ஐயா… வேலூரிலிருந்து வர்றேங்க… என் ஆசான் கோவேந்தன் சொல்லி வந்திருக்கேன்” என்றதுமே பாரதிதாசன் முகம் அகன்று மகிழ்ச்சியில் விரிந்தது. “அடடே… அப்ப நீ ரொம்ப வேண்டப்பட்ட பையன். உள்ளே வா” என்று அழைத்துப் போனவர், என்னைப் பேசக்கூட விடாமல், வீட்டில் இருந்தவர்களை அழைத்து எனக்கு விருந்தோம்ப வைத்துத் திணறடித்தார். இத்தனைக்கும் அப்போது நான் இருபதுகளில் இருந்த சின்னப் பையன்! தன் அருமை நண்பர் கோவேந்தனின் பெயரைச் சொன்னதுக்கே இப்படி ஒரு உபசரிப்பு தந்தார் பாரதிதாசன்.

பேதங்கள் இல்லாத நட்பு

நான் எழுதிச் சென்றிருந்த கவிதைகளை வாங்கி அக்கறையாகப் படித்துவிட்டு, அதில் சில இலக்கணத் திருத்தங்களை எளிமையாகச் சொல்லிப் புரியவைத்தார். முதல் சந்திப்பின்போதே, தன்னுடைய ‘தேனருவி’ பாடல்கள் சிலவற்றை உரக்கப் பாடிக் காட்டி, அதில் உள்ள இசை இலக்கண நுட்பங்களை எடுத்துச் சொன்னார். பாரதிதாசனுக்கு நன்கு அறிமுகமான வேலூர் கலைமாமணி கோவிந்தசாமியுடன் அடுத்தடுத்த புதுவைப் பயணங்கள் அமைந்தன. ஒருநாள் வெகு சுவாரஸ்யமாக சில பகுத்தறிவுக் கருத்துக்களை பாரதிதாசன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தசாமி, “ஐயா… இவனுக்கு அதெல்லாம் புரியுமா? இவன்...” என்று சொல்ல, எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. பாவேந்தரோ இடி இடி என்று சிரிக்கிறார். “ஐயா… கவிஞர் சுரதாகூட என்னை அப்படித்தான் கூப்பிடுவாருங்க. ஆனா, உங்களை மாதிரியே பிரியமா நடத்துவாருங்க” என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். மறுபடி இடிச் சிரிப்பு!

“ஏம்பா இவனே…. அப்படிப் பார்த்தா என் குருவே அய்யர்தானே… தமிழ் வளர்க்குறதுக்கு உடன்பட்டு யார் வந்தாலும் எனக்கு அவங்க வேண்டியவங்கதான். நீ எப்பவும்போல வந்து போயிக்கிட்டு இரு” என்றார்.

நிறைவேறாமல்போன திரைக்கனவு

நெடுஞ்சாலைத் துறையில் வேலையில் இருந்துகொண்டே, கவிதை, நாடகம் என்று நான் எழுதிக்கொண்டிருப்பதை பாரதிதாசன் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சின்போதெல்லாம், திரைப்படத் துறை மீது அவருக்கிருந்த ஆர்வம் அடிக்கடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ‘வளையாபதி’, ‘பொன்முடி’ என்று அவருடைய பங்களிப்பில் படங்கள் உருவானாலும், தனது ‘பாண்டியன் பரிசு’ இலக்கியத்தைத் தானே படமாக்கிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார் பாரதிதாசன். சிவாஜி கணேசன் அதன் நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

புதுவையிலிருந்து சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்தார் பட வேலைகளுக்காக. ‘பாண்டியன் பரிசு’க்காக எடுக்கப்பட்ட கம்பீரமான சிவாஜி கணேசனின் படம் அவர் வீட்டில் நுழையும்போதே சிரித்து அழைக்கும்.

சினிமா உலகம் எத்தனை சிக்கல்கள் நிறைந்தது என்பதைப் பாரதிதாசன் சீக்கிரமே புரிந்துகொண்டார். படம் உருவாக முடியாமல் பல தடைகள் ஏற்பட்டு, அந்தக் கனவுத் திட்டம் நின்றே போனது. அப்போதும்கூட, “போகட்டும்யா…. என் குருநாதர் வரலாற்றைப் படமாக எடுக்கும்விதமாக முழுப் பிரதியும் எழுதிவிட்டேன். அதற்கு ஒரு வாய்ப்பு வந்தால் அதுவே போதும்” என்று சொல்லி மனதை ஆற்றிக்கொள்வார் அவர்.

அதுவும் கடைசிவரை நிறைவேறாமல் போனாலும், ‘ஆயிரம் கவிஞர்கள் இணையும் ஏடு’ என்ற அறிமுகத்துடன் அவர் தொடங்கிய ‘குயில்’ பத்திரிக்கை அவருக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது. இதழ்களை ஒழுங்குபடுத்துவது, பிழை திருத்துவது உள்ளிட்ட விஷயங்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னைக்கு வந்து செய்வதற்கு அவர் என்னை அனுமதித்தார். அப்படியே நான் எழுதும் கவிதைகளையும் அன்புடன் பிரசுரிக்க உற்காகம் கூட்டினார்.

திசை எட்டும் சேர்ப்போம்!

ஒருநாள், ‘குயில்’ இதழுக்கு மொழிபெயர்ப்பு தொடர்பாக வந்திருந்த படைப்பு பற்றி பேச்சு வந்தது. “தெரியுமாய்யா…. என் படைப்பை ‘செக்’ மொழியில் ஒரு பேராசிரியர் மொழிபெயர்த்து இருக்காரு. குருநாதர் சொல்ற மாதிரி, இங்குள்ள நல்ல கவிதைகள் எல்லாமே வெளி மொழிகளுக்குப் போகணும்யா. இல்லாட்டி, நம்மூர்க்காரனே நம்ம அருமையைப் புரிஞ்சுக்காமத்தான் இருப்பான்” என்று சொன்னபோது அவர் குரலில் ஒரு வேதனை இழையோடியது.

1964-ம் வருடம், ஏப்ரல் மாதம் 21-ம் நாள்… உடல்நலக் குறைவால் சென்னைப் பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இன்னுயிர் பிரிந்தது. புதுவையில் அதே பெருமாள் கோவில் தெரு இல்லத்துக்கு அவர் உடல் வந்து சேர்ந்தது. எப்போதும் அவரை அகலாமல் இருந்த ஒரு சிறு கூட்டம்தான் அவருடைய இறுதி ஊர்வலத்திலும் கண்ணீருடன் முன்னால் நடந்தது. பாப்பாம்மாகோவில் மயானத்தை அடைந்தபோது, அதிலும் பலர் பாதியிலேயே திரும்பிவிட்டதைக் கண்டு என் நெஞ்சு பதைத்தது.

இறுதி வரை இருந்த அன்பர் கூட்டம் இடுகாட்டிலேயே நினைவுக் கூட்டம் நடத்திவிட்டுக் கலைந்தபோது… அந்த மாபெரும் ஆத்மாவின் தன்மானத்தையும் தமிழ்க் காதலையும் வாய்ப்பு வரும்போதெல்லாம் ஊருக்குச் சொல்வோம் என்ற உறுதிமொழியுடன்தான் அந்தக் கூட்டம் கலைந்தது.

- வேலூர் இரா.நக்கீரன், கவிஞர்.

ஏப்ரல் 21: பாரதிதாசன் நினைவுதினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x