Published : 15 Apr 2018 11:00 AM
Last Updated : 15 Apr 2018 11:00 AM

மெல்லக் கொல்லப்படும் நாட்டுப்புறக் கலைகள்: அனைத்துத் துறை கலைஞர்களும் பங்கேற்கும் கலாச்சார திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்

க்களின் அன்றாட வாழ்வில் இருந்து உருவெடுத்தவையே நாட்டுப்புறக் கலைகள். காடு, கழனிக்குத் தலைச்சுமையாகக் கஞ்சி கொண்டுபோனதில் இருந்து உருவானதே கரகம். அடுக்குப்பானையில் பாலும், தயிரும் கொண்டுபோன திறமையே அடுக்குக் கரகம் ஆனது. மலைவாழ் மக்கள் மலையேறப் பயன்படுத்தும் ஊன்று குச்சிகளை வைத்து ஆடியதே ஊன்றுகோல் ஆட்டம். கால்நடை மேய்ப்போர் இரவில் வெளிச்சத்துக்காகப் பயன்படுத்திய திரியும், குடிப்பதற்காகப் பயன்படுத்திய ஆட்டுத்தோல் தண்ணீர்ப்பையுமே தற்போது கள்ளழகர் திருவிழாவில் திரியெடுத்து ஆடுதல், துருத்தி எடுக்கும் கலையாக எஞ்சி நிற்கிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தோல்பாவைக் கூத்து

நாகர்கோவிலை அடுத்த பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில் திருவிழாவில், இக்கூத்து அரங்கேறும் தகவலறிந்து போனோம்.

“ஆமா, நீ என்னை எதுக்குக் கூமுட்டை...”

“கூமுட்டை இல்லைல... ‘கூப்பிட்ட’...”

“ஆ... அதான் கூமுட்டை...”

உச்சிக்குடும்பனும், உளுவத்தலையனும் திரையில் தோன்றி இப்படிப் பேசுவதற்கு விழுந்து விழுந்து சிரிக்கிறது மொத்தக் கூட்டமும்!

திரைக்குப் பின்னாலிருந்தபடி பொம்மைகளை ஆட்டி ஆட்டி தோல்பாவைக் கூத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார் முத்துச்சந்திரன். 28 குரல்களைப் பேசும் திறமைசாலியான இவர், தமிழக அரசின் கலை வளர்மணி விருது பெற்றவர். மகாராஷ்டிராவிலிருந்து தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த கலைதான் தோல்பாவைக் கூத்து. சரபோஜி மன்னர் காலத்தில் தஞ்சை அரண்மனையில் செல்வாக்குப் பெற்றிருந்த இந்தக் கலைஞர்கள், பிற்காலத்தில் பிழைப்புக்காகத் தமிழகம் முழுமைக்கும் இடம்பெயர்ந்தார்கள். அப்படி, நாகர்கோவில் திருமலைபுரத்தில் குடியேறிய 30 குடும்பங்களில் இப்போது கூத்துத் தொழிலில் இருப்பது மூன்றே குடும்பங்கள்தான்!

“பாக்கூத்துக்கு ஒரு வெள்ளை வேட்டிதான் திரை. துவக்கத்தில் பின்னங்கொட்டை எண்ணெய்ல திரி வெச்சு மேல தொங்கவிட்டுருப்போம். அந்த ஒளிக்கீற்று வேட்டியில் பட்டு, படம் வெளியில் தெரியும். படம் காட்டுற பொம்மை ஆட்டுத்தோலில் செஞ்சது. உருவத்துக்குத் தகுந்த மாதிரி, ஆட்டுத்தோல்ல படம் வரைஞ்சு, வர்ணம் கொடுத்துப்போம். அதை மூங்கில் குச்சியில் சேர்த்து, ஆட்டி ஆட்டி படம் காட்டுவோம்” என்ற முத்துச்சந்திரனிடம் ஐநூறுக்கும் அதிகமான தோல்பாவைகள் இருக்கின்றன.

“பாக்கூத்தைக் குடும்பமாத்தான் செய்வாங்க. நான் பலகுரலில் பேசி கூத்து காட்டுவேன். என் மனைவி ராதா பாடுவாங்க. என் தம்பி முத்துமுருகன் மிருதங்க வித்வான். அவரோட மனைவி சித்ரா ஹார்மோனியம் வாசிப்பாங்க. என் பையன் முத்துபாலன் ஜால்ரா அடிப்பான். பையன் படிக்கிறான். இருந்தாலும் பாரம்பரியக் கலை அழிஞ்சுடக்கூடாதுன்னு சும்மா இருக்குற நேரத்தில் கத்துக்கிறான்” என்கிறார் முத்துச்சந்திரன்.

கைச்சிலம்பு ஆட்டம்!

காலில் அணியும் சிலம்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு பம்பை, உடுக்கை இசையின் துணையோடு ஆடப்படும் ஒருவகை கூத்து இது. உத்திராபதி பூசாரி ஐம்பது ஆண்டு காலமாக இதனை ஆடிவந்திருக்கிறார். அவருக்குப் பின் அவரது மகன் செந்தில்குமார் பூசாரி, அதே ஊரைச் சேர்ந்த தேவநாதனுடன் சேர்ந்து கோயில் நிகழ்ச்சிகளில் இதனை நிகழ்த்திவருகிறார்கள். மூன்று பம்பைகள், ஒரு உடுக்கை, நான்கு ஆட்டக்காரர்கள் இவை மூன்றும் சேர்ந்தால்தான் இந்த கூத்தை நடத்தமுடியும், இதில் எது குறைந்தாலும் கூத்து நடக்காது. “மிக மெல்லிய உடல்வாகு கொண்டவர்களாலும் உடம்பில் அதிக வலுவுள்ளவர்களாலும் மட்டுமே தாக்குப்பிடித்து ஆட முடியும் என்பதால் இதைக் கற்றுக்கொள்ள எவரும் முன்வருவதில்லை. எட்டு வயது முதல் பத்து வயதுக்குள்ளாகவே இதைக் கற்றுக்கொண்டால்தான் ஆயிற்று. கண்ணகி கையில் சிலம்போடு உக்கிரமாக நடந்துசென்றதன் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாட்டம் தொடங்கியிருக்கலாம். இவ்வளவு அரிதான இந்தக் கலையைப் போற்றிக் கொண்டாட அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கலையே” என்கிறார் தேவநாதன்.

ராஜா ராணி ஆட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் காலனி கோயில் விழாவில், ராஜா ராணி ஆட்டம் நடைபெறும் தகவலறிந்து விரைந்தோம். ஆட்டத்துக்கு வந்திருந்த 7 பேருமே ஆண்கள்தான். இருவர் முகத்தில் மீசையை மழித்து, தலையில் கொண்டைபோட்டு பெண்ணைப் போலவே இருந்தார்கள். நள்ளிரவு 1.30 மணி வரையில் ராஜா ராணி ஆட்டம் நடந்தது. பிறகு, குறவன் குறத்தி ஆட்டம். அடுத்து மூக்காயிக் கூத்து. கோமாளி பிலாவடியான், பெண் வேடமிட்டு ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசும் வேடிக்கையான நிகழ்ச்சி அது. பாட்டு, நடிப்பின் வாயிலாக நல்லதங்காள் கதையைச் சொல்லி, மக்களை நெகிழவைத்தார்கள். கடைசியில் சாமியாட்டம், பேயாட்டத்துடன் நிகழ்ச்சி முடிகையில் பொழுதே புலர்ந்துவிட்டது.

கோமாளி பிலாவடியானிடம் பேச்சுக்கொடுத்தோம். “மன்னன் மணிக்குறவன் கதை, மதுரை சரஸ்வதி பள்ளி விபத்து, தனுஷ்கோடி புயல், ஆளவந்தார் கொலை வழக்கு, பாலம்மாள் கதை என்று ஊருக்கேத்தபடி கூத்து நடத்திப் பாடுவோம். இங்கிட்டு ஆடுனதுல 3 பேரு அண்ணன் - தம்பிங்க சார். என் கடைசித் தம்பி சென்றாயப்பெருமாள் நல்லாப் படிச்சான். இந்தக் கலையைப் பத்தியே பி.எச்டி. வரைக்கும் பண்ணி, இப்ப மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா ஆகிட்டாப்டி” என்றார். “சாதி ஒடுக்குமுறையால் மோசமா பாதிக்கப்பட்ட கலைஞர்கள் ராஜா ராணி கலைஞர்கள்தான். தங்குறதும், மேக்கப் போடுறதும் மாட்டுத்தொழுவத்தில்தான். ஊர்க்காரர்கள் திடீரென அடிப்பார்கள். சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். வருடத்தில் நான்கைந்து மாதங்கள்தான் தொழில் இருக்கும்னாலும், வருடம் முழுக்க பெண்களைப் போல முடிவளர்த்து, முகத்தை மழித்து வாழ வேண்டிய நிலையிருக்கிறது. இதனால், பொதுச்சமூகத்தின் கேலிக்கும் ஆளாகிறார்கள். சாவு வீடுகளுக்கு ஆடப்போனதுதான் இவர்கள் செய்த பெரிய தவறு” என்கிறார் பேராசிரியர் சென்றாயப்பெருமாள்.

குன்றுடையான் உடுக்கடி கதைப்பாட்டு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு நெகமத்தில் உள்ள தங்கவேலு அய்யன் கே.வி.கே.திருமண மண்டபத்தில் குன்றுடையான் கதைப்பாடல் நிகழ்ச்சி. நுழையும்போதே உடுக்கடி இசை காதை அதிர வைக்கிறது. கூடவே பாடலும். உடுமலையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் கா.சீதாராமன், சிவகுமார், மாரிமுத்து ஆகியோர் அரிதாரம் பூசி ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.

“400 ஆண்டுகளுக்கு முன்பு நிகழப்பெற்றதாக சொல்லப்படும் குன்றுடையான் கதை நம் பாரதத்துக்கு இணையாகக் கற்பனைகள் ஏற்றி உடுக்கடி கதைப்பாடல் வடிவில் கோவை கிராமங்களில் 30 நாட்கள் நடப்பது வழக்கம். ஆண், பெண் வேஷம் கட்டி அரிதாரம் பூசி இதைப் பாடி ஆடுபவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பரம்பரை பரம்பரையாய் வாய்மொழியாய் வந்த பாடல்தான். அது அப்படியே அருகி வழக்கொழிந்துவிட்டது. இந்தக் கதையை திரிபுகளுடன் பூளவாடி பொன்னுசாமி உள்ளிட்ட பலரும் எழுதியிருக்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி பொன்னர் சங்கரைத் தொடராக எழுதினார். அதிலும்கூட கதைத்திரிபு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த கே.பி.இளவரசு சின்னண்ணன்-பெரியண்ணன் என்ற தலைப்பில் இதை வரலாற்றுக் காவியமாக படைத்தார். அதையே சுருக்கி ஐந்தரை மணி நேரம் வரக்கூடிய அளவில் திரைச்சித்திரமாக உருவாக்கி, ஊர்கள்தோறும் திருவிழாக்களில் குறைந்தபட்ச செலவில் காட்டிவருகிறோம்” என்கிறார் பேராசிரியர் சீதாராமன்.

இந்த மண்ணின் பெருமை சொல்லும் கலைகள் பலவும் மெல்லச் செத்துக்கொண்டிருக்கின்றன. கலைஞர்கள் இத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் சுமார் 36,000 கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயில் விழாக்களுக்கு அந்தந்த வட்டார நாட்டுப்புறக் கலைஞர்களைப் பயன்படுத்தினாலே போதும். அதேபோல அரசுப் பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களைக்கொண்டு விருப்பமுள்ள மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். இதன் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களும் வாழ்வார்கள்; கலையும் வாழும்!

- © ‘தி இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’

கடந்த வார இதழில் வெளியான கட்டுரையின்

சுருக்கப்பட்ட வடிவம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x