Last Updated : 13 Apr, 2018 09:16 AM

 

Published : 13 Apr 2018 09:16 AM
Last Updated : 13 Apr 2018 09:16 AM

நீரில்லாமல் பாசனம் பொய்த்தால் கிராமங்கள் என்னாகும்?: விவசாயம் அற்றதால் ஆளில்லாமல்போகின்றன கிராமங்கள்

 

போ

ரால் அழிந்துபோன ஊரைப் போல காட்சி தருகிறது, கொட்டாங்குளம் கிராமம். வீடுகள் இடிந்து கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. எஞ்சிய வீடுகளின் ஆயுசும் முடியப்போவதை கரையான் அரித்த உத்திரங்களும், பிரண்டைச்செடிகள் படர்ந்த கதவுகளும் முன்னறிவிக்கின்றன. வீதிகள் எல்லாம் தூர்ந்துபோய்க் கிடக்கின்றன. நடைபாதையெங்கும் பரவியுள்ள புதரில், சரசரவென்று ஏதேதோ சிற்றினங்கள் ஊர, பாம்போ என்று பயம் வருகிறது. வீதிச் சந்திப்பில் இருந்த சின்டெக்ஸ் தொட்டி, தெருக்குழாய் போன்றவற்றை கருவேல மரங்கள் ஒளித்து வைத்திருக்கின்றன.

நம் காலடியில் நசுங்கும் சருகுச்சத்தம் கேட்டதும், கீரிப்பிள்ளையோ என்று பதறிச்சிதறுகின்றன நாட்டுக்கோழிகள். ஒவ்வொரு கிராமத்திலும் வேற்று ஆள் நுழைகையில், “யார் வீட்டுக்குப் போகணுப்பு?” என்று விசாரிப்பார்களே அப்படிப்பட்ட பெருசுகள் யாரும் இல்லை. சொல்லப்போனால், ஊரில் ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வலதுபுறம் சிட்டம்பட்டிக்கும் புதுத்தாமரைப்பட்டிக்கும் இடையேயான வயல் பரப்பிற்குள் மறைந்து கிடக்கிறது இந்தக் கொட்டாங்குளம் கிராமம்.

ஒரே ஒரு வீதியில் மட்டும் மனிதர்கள் வாழ்வதற்கான அடையாளங்கள் தென்பட்டன. இரண்டு ஜோடி மாடுகள், மோட்டார் சைக்கிள், கொடியில் காயும் துணிகள். ஏதோ ஒரு -மூலையில் விறகு வெட்டும் சத்தம். நெருங்கினால், சீமைக்கருவை குச்சிகளை நறுக்கிக் கொண்டிருந்தார் தங்கப்பொண்ணு. “என்னக்கா ஊர்ல ஆளையே காணோம்?” என்று கேட்டதுதான் தாமதம். “என்னமோ நேத்து வரைக்கும் ஆள் இருந்த மாதிரியும் திடீர்னு காணாமப் போன மாதிரியும்ல பேசுறீக. இந்த ஊர்ல மொத்தமே 4 குடும்பம்தான் இருக்கோம். அதுல பொண்டாட்டி பிள்ளைகளோட இருக்கிறது ரெண்டு பேருதான். ஒருத்தர் காசிநாதன் அண்ணே. இன்னொன்னு எங்க குடும்பம்” என்றார். ஆச்சரியம் என்னவென்றால், இவரும் இந்த ஊர்க்காரர் கிடையாது.

“அதெப்படி இந்த ஊரைத் தேடிப்பிடிச்சி குடியேறுனீங்க?”

“என் சொந்தவூரு தஞ்சாவூருப் பக்கம். மதுரை அயிலாங்குடி மாப்ளக்கு வாக்கப்பட்டேன். அவரு உடம்பு முடியாதவரு. சொந்த வீடும் கெடையாது. இந்த ஊர்லதான் வெறும் 300 ரூபாய்க்கு வாடகை வீடு கெடைச்சுது. இந்த ஊரு ரொம்பப் பிடிச்சிருக்கு தம்பி. ஆடு மாடு வாங்குனா மேய்ச்சலுக்குத் தொந்தரவில்லாத ஊரு. அப்புறம், என்னோட வறுமைய இளக்காரம் பண்றதுக்கு ஆளில்ல பாருங்க” என்று அவர் இயல்பாய் சொல்லிவிட்டார் நமக்குத்தான் ஒரு மாதிரியாகிவிட்டது.

இவரது மகள் செல்வி ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். இந்த ஊரில் பள்ளிக்கூடம் இருந்து பள்ளிக்கூடம் போகிற ஒரே பிள்ளை இவள்தான். மக்கள் வசிக்கிற அந்தத் தெருவுக்குத் திரும்பியபோது, மாடுகளைக் கையில் பிடித்தபடி ஒருவர் வந்தார். உள்ளூர்காரர் என்று நினைத்தால், “என் பேரு உத்தமன். இந்த ஊருக்காரன்தான் ஆனா, ஒத்தக்கடையில குடியிருக்கேன்பா. வீடு, நஞ்சை, ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி எல்லாம் இந்த ஊர்லதான் இருக்குது. ரொம்பப் பழமையான கிராமம் இது. ஒரு காலத்தில் அறுபது எழுபது குடும்பம் இருந்த ஊரு. அத்தனையும் விவசாயக் குடும்பம். இந்த ஊர்ல பாசனத்துக்குன்னு ஒரு கிணறோ, மழையில நிரம்புற கண்மாயோ கிடையாது. பெரியாறு அணையில இருந்து கள்ளந்திரி வாய்க்கா வழியா தண்ணி வந்தாத்தான் உண்டு. முப்போகம் வௌஞ்ச ஊரு, ரெண்டு போகமாச்சு. கடைசியில ஒரு போகத்துக்கே வழியில்லாமப் போனதும், 1980கள்ல இருந்து ஒவ்வொரு குடும்பமா வெளியேற ஆரம்பிச்சாங்க. இப்ப மொத்தமே மூணு குடும்பம்தான் இருக்கோம்.

சிலர் மட்டும் வெளியூர்ல வசிச்சாலும், ரேஷன் கார்டையும், வாக்காளர் அட்டையையும் விடாப்பிடியா இந்த ஊர் பேர்லயே வெச்சிருந்தாங்க. ரேஷன் கார்டோட ஆதார் கார்டை இணைக்கச் சொன்ன பிறகு, அதுவும் ரத்தாகிப்போச்சு. கடைசித் தேர்தல்ல இந்த ஊர்ல 27 ஓட்டு பதிவாச்சு. பஞ்சாயத்துத் தேர்தல் வந்தாத்தான் இப்ப எத்தனை பேருக்கு ஓட்டு இருக்குதுன்னு தெரியும்” என்றார்.

“அதெப்படி ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே ஊரைக்காலி பண்ணுனாங்க-?” என்று நாம் கேட்க, “விவசாயம் பொய்ச்சதோடு, அரசாங்கமும் வஞ்சிச்சிருச்சி தம்பி. மதுரை மாட்டுத்தாவணியிலேருந்து 14 கல் (கி.மீ.) தூரம் தம்பி இந்த ஊரு. ஆனா, ரோடு வசதி கெடையாது. எங்க ஊரோட சேர்த்து பக்கத்து கிராமங்களான காயாம்பட்டி, காயாம்பட்டி மேடுன்னு மூணு ஊருக்கும் பஸ் இல்ல. பிள்ளைங்க பள்ளிக்கூடம் போக பஸ் இல்ல. கால்நடையாத்தான் போகணும். ராத்திரி ஏழு மணிக்கு மேல பொண்டு, பிள்ளைகளைப் பாதுகாப்பா கூட்டிட்டு வர்றதுக்கு ஒரு ஆம்பளை மெனக்கெட்டுப் போகணும். ரேஷன்ல அரிசி இலவசம். ஆனா, அதை வாங்கணும்னா சிட்டம்பட்டிக்கு ஆட்டோ பிடிச்சிப் போகணும். ரேஷன் கடை, ஆஸ்பத்திரி, பஸ் எல்லாமே ஓட்டு இருந்தாதானே நம்மூர்ல வரும்? எதுவுமே இல்லாத இடத்துல, இந்தக் காலத்துல யாருதான் குடியிருப்பாய்ங்க?” என்றார்.

இந்த ஊரில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை பிறப்போ, 30 ஆண்டுகளில் புது வீடு கட்டுதலோ நடக்கவில்லை. வெளியூரில் இறந்தவர்களின் உடல் அடக்கம் மட்டுமே உள்ளூரில் நடக்கிறது. கொட்டாங்குளம் கிராமம் அழிந்தேபோய்விட, பக்கத்து கிராமங்களான காயாம்பட்டியும், காயாம்பட்டி மேடும் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. காலி வீடுகள் அதிகரிப்பதைக் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

“500 ரேஷன் கார்டுகள் வந்தால், தனிக்கடை போடலாம் என்று அதிகாரிகள் சொல்லியிருந்தார்கள். ஆனால், 3 ஊர்களையும் சேர்த்தால்கூட, 200 வீடுகள் இல்லை. இந்த 3 ஊர்க்காரர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்த்து ஓட்டுப்போட்டாலும், சிட்டம்பட்டிக்காரரோ, வளர்ச்சியூர்க்காரோ ஊராட்சித் தலைவராகிவிட முடியும் என்பதால் இந்த ஊரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். பஞ்சாயத்து தலைவரே இப்படியென்றால், எம்பி, எம்எல்ஏக்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? ஒரே ஒரு ஆறுதல், நான்கு வழிச்சாலையோடு இந்த ஊர்களை இணைக்கும் வகையில் சமீபத்தில், மூர்த்தி எம்எல்ஏ காயாம்பட்டி வரையில் புதிதாகத் தார்ச்சாலை போட்டுக் கொடுத்திருக்கிறார். அப்படியே பஸ்சும் விட்டால் நல்லாயிருக்கும்” என்கிறார்கள் மக்கள்.

“கிராமங்களைத் தொடர்ந்து தக்க வைக்க இந்தியாவில் மிச்சமுள்ள ஒரே காரணி விவசாயம். நகரங்கள் நகரங்களாக இருக்க வேண்டும் என்றால், கிராமங்கள் கிராமங்களாக இருக்க வேண்டும்” என்று மூன்று நாட்களுக்கு முன் ‘தி இந்து’வில் வெளியான‘விவசாயிகளை ஏன் இந்த நாடு இவ்வளவு அலைக்கழிக்கிறது?’ கட்டுரையில் சொல்லியிருந்தார் சமஸ். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் வேளாம்பூர், மோதகம், புல்கட்டை என்ற 3 கிராமங்களும் அழிந்தேபோய்விட்டன. அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை. வருவாய்த்துறை, ஊரக வளச்சித்துறை ஆவணங்கள் இந்த ஊர்ப்பெயர்களை குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் ‘பேச்சில்லா கிராமங்கள்’ என்று பதிவுசெய்து வைத்திருக்கின்றன. அடுத்ததாக மேலும் மூன்று கிராமங்கள் ‘பேச்சில்லாக் கிராமங்கள்’ ஆகிக்கொண்டிருக்கின்றன.

இன்னும் விவசாயிகளையும் கிராமங்களையும் என்னவெல்லாம் செய்யப்போகிறோம்?

-கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு:magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x