Published : 22 Mar 2018 09:43 AM
Last Updated : 22 Mar 2018 09:43 AM

கைவிடப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள்!

ட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.28,000 கோடி நிதியை வழங்காத மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 22 ஆண்டுகளாக மாநிலங்களின் கருவூலங்களில் தேங்கிக்கிடக்கும் நல நிதி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசக் கட்டுமானத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பை சமூகரீதியாகவோ பொருளாதாரரீதியாகவோ ஈடுகட்டிவிட முடியாது என்று வேதனை தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதற்கு முக்கியக் காரணம், மாநிலங்களில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் காட்டிய அலட்சி யம் என்கிறது நீதிபதிகள் மதன் பி.லொக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு வழங்கியிருக்கும் 57 பக்கத் தீர்ப்பு.

“பெயரில்லாத லட்சக்கணக் கான அந்தத் தொழிலாளர்களுக்குப் பெயரளவுக்கான நீதியைத்தான் வழங்க முடியும். உண்மையான, தெளிவான நீதியை ஒருபோதும் வழங்கிவிட முடியாது.

கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக உறுதியான நடவடிக்கை எடுப்பதில் அரசுகள் காட்டியிருக்கும் அலட்சியம், ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களைவிட மோசமானது” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித் திருக்கிறார்கள். கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (வேலை வாய்ப்பு மற்றும் சேவைகளின் நிலைமை) சட்டத்தையும், கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல கூடுதல் வரிச் சட்டத்தையும் 1996-ல் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

கட்டுமானத் தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்து வதற்காக இந்த நிதி வழங்கப்படு கிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும், அவர்களது குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் வகையிலும் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் இவை. கட்டுமானத் தொழிலாளர்கள் நல நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியை மாநில அரசுகள் பெற்றுவருகின்றன. கடந்த 22 ஆண்டுகளில் மொத்தம் ரூ.37,400 கோடியை மாநில அரசுகள் பெற்றிருக்கின்றன. ஆனால், தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ.9,500 கோடி மட்டுமே.

“இத்தனை பெரிய தொகையை வைத்துக்கொண்டு மாநில அரசுகள் என்னதான் செய்கின்றன? நாடு முழுவதும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இந்த நிதியின் பலன்கள் ஏன் மறுக்கப்படுகின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் காற்றில் பறக்கின்றன” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் 4.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கிறார் கள் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1996-ல் அமல்படுத்தப்பட்ட சட்டங்களின்கீழ் 2.8 கோடி தொழிலாளர்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்கள் இல்லை; வெறுமனே ஊக அடிப்படையிலான தரவுகளை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

“1990-கள் அல்லது அதற்கு முன்பிருந்து பணிபுரிந்துவரும் கட்டுமானத் தொழிலாளர்களில் சிலர் துரதிர்ஷ்ட வசமாக மரணமடைந்திருக்கலாம். சிலர் எங்கிருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்கள் பெண்கள். அவர்களது வருமானத்தை நம்பி குழந்தைகளும் இருந்திருப்பார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்” என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது, பேறுகாலப் பலன்கள், குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது ஆகிய நடவடிக்கைகளை இனிமேலாவது எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக் கும் உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கட்டுமானத் தொழிலாளர்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்களின் கண்ணீர் துடைக்கப்படும் என்று நம்புவோம்!

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x