Last Updated : 23 Feb, 2018 09:20 AM

 

Published : 23 Feb 2018 09:20 AM
Last Updated : 23 Feb 2018 09:20 AM

நீலகிரியைக் காப்போமா? இழந்துவிடுவோமா?

லகின் முக்கியச் சூழலியல் தொகுதிகளில் ஒன்றான நீலகிரி, பருவநிலை மாற்றப் பாதிப்புகளான முறையற்ற மழைப்பொழிவாலும் அதிகப்படியான வெப்பநிலையாலும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. நீலகிரி மாவட்டத் தின் உயர்ந்த பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகே மட்டுமே தென்படும் அவ்வுல் (எரியோகிரிசிஸ் ரங்காசாரி) என்கிற கோரைப் புல் அழிந்துவருகிறது. இப்பகுதியில் வாழும் மேய்ப்பர் பழங்குடிகளான தொதவர்கள் (தோடர்கள்) இப்புல்லைப் புனிதமாகக் கருதுகிறார்கள். "எங்கள் வழிபாட்டு இடங்களை அவ்வுல் புல்லைக்கொண்டே வேய் கிறோம். கடந்த சில ஆண்டுகளாக முறையற்ற மழைப்பொழிவால் பல சதுப்புநிலங்கள் வறண்டுவிட்டன. அவ்வுல் புல்லைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது" என்கிறார் நீலகிரி ஆதிப் பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவரான நோர்தே குட்டன்.

புல்வெளிகள் குறைந்துவருவது, தொதவர்கள் வளர்க்கும் எருமைகளையும் கடுமையாகப் பாதித்திருக் கிறது. மரபணுரீதியில் தனித்துவிடப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த தொதவர் எருமைகள், நீலகிரிப் பகுதியில் மட்டுமே காணப்படுபவை. இந்த எருமைகளைத் தொதவர் பழங்குடிகள் புனிதமாகக் கருதுகிறார்கள். ‘‘நான் சிறுவ னாக இருந்தபோது இந்தப் பகுதி முழுக்கப் புல்வெளி நிறைந்திருக்கும். எங்கள் எருமைகளுக்கும் மேய்ச்சலுக் குப் போதுமான புல் கிடைத்துவந்தது. பல பத்தாண்டுகளாக அயல் தாவரங்களான தைல மரமும் சீகை மரமும் எங்கள் பகுதிகளைக் கட்டுமீறி ஆக்கிரமித்துவிட்டன’’ என்கிறார் குட்டன்.

குறைந்த மழைப்பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் 5,520 சதுர கிலோ மீட்டர் பரப் பளவைக் கொண்ட உயிர்க்கோளக் காப்பகமும் இருக் கிறது. யுனெஸ்கோ உலக மரபுச் சின்னங்களில் ஒன்றான இப்பகுதி, உயிரினப் பன்மை செழிக்கும் மையமும்கூட. இந்த மாவட்டத்தில் சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 6,000 அடி உயரம் கொண்ட மலைப்பகுதிகள் உள்ளன. பசுமைமாறா சோலைக் காடுகளும், மலையுச்சிப் புல் வெளிகளும் (montane grasslands) இப்பகுதியின் தனி அடையாளம்.

இந்தச் சூழலியல் தொகுதியில் எஞ்சியுள்ளதைப் பாதுகாக்க காட்டுயிர்ப் பாதுகாவலர்கள், வனத் துறை, அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தாண்டி, மனித நெருக்கடியால் இந்தப் பகுதி தொடர்ச்சியாகச் சீரழிந்துகொண்டிருக்கிறது. அதேபோல பருவநிலை மாற்றத்தின் ஓர் அம்சமான கணிக்க முடியாத மழைப் பொழிவும் மக்கள், தாவரங்கள், உயிரினங்கள் என இப் பகுதியின் ஆதி குடிகள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

‘‘1950-களிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவருகிறது. மறுபுறம், மழைப்பொழிவின் முறையை வைத்துப் பார்த்தால், கடுமையான மழைப்பொழிவு அதிகரித்திருக்கிறது. எந்தப் பருவநிலை ஆய்வாலும் இந்தியப் பருவமழையில் ஏற்பட்டுள்ள சரிவைக் கணிக்க முடியாமல் இருப்பதுதான், இதிலுள்ள பெரும் சவால். குறிப்பாக, நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளில் பிறழ்வு உள்ளது. அதேநேரம், தென்மேற்குப் பருவமழை குறைந்திருப்பதைப் போல, வடகிழக்குப் பருவ மழையும் குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது’’ என்கிறார் ‘அட்ரி’ அமைப்பின் மூத்த ஆய்வாளரும் சூழலியல் நீரியல் நிபுணருமான ஜகதிஷ் கிருஷ்ணசாமி.

அத்துடன், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் பதிவுகளிலிருந்து நீலகிரி பகுதியில் ஆண்டு மழைப்பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணரலாம். 2012 - 1,446 மில்லி மீட்டர், 2013 - 1,534 மில்லி மீட்டர், 2014 - 1,957 மில்லி மீட்டர், 2015 - 1,720 மில்லி மீட்டர், 2016 - 889 மில்லி மீட்டர். ஆண்டுதோறும் இப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு 1,920 மில்லி மீட்டர். அத்துடன் ஆண்டில் ஒன்பது மாதங்களில் பரவலாகப் பெய்ய வேண்டிய மழை, ஒரு சில நேரம் கடுமையாகப் பொழிவதும் சில நேரம் பெய்யாமலே இருப்பதுமாக எந்தக் கணிப்புக்குள்ளும் அடங்காததாக மாறியிருக்கிறது.

‘‘கடந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருந்தது. அதேநேரம், முந்தைய ஆண்டு மோசமான வறட்சி நிலவியதால், சில சோலைக்காட்டுப் பகுதிகள் காய்ந்துவிட்டன. சமீபத் திய மாதங்களில் நல்ல மழை பெய்தாலும்கூட, நிலப்பகுதி கடுமையாக வறண்டிருக்கிறது. நிலத்தில் இறங்கிய ஈரம் ஒரு சில வாரங்களிலேயே உறிஞ்சப்பட்டுவிட்டது. முதுமலைக் காப்புக் காட்டின் தாழ்வான சில பகுதிகள் மீண்டும் வறண்டுவிட்டன’’ என்கிறார் ஊட்டியைச் சேர்ந்த சூழலியல் மீளமைப்பு ஆய்வாளர் காட்வின் வசந்த் பாஸ்கோ.

நீலகிரியின் சோலைக்காடுகள், புல்வெளிகளில் பருவநிலை மாற்றம் நிகழ்ந்துவருவதன் அறிகுறிகளை இப் பகுதிக்கே உரிய ஓரிடவாழ் தாவரங்களில் (endemic plants) காண முடிகிறது. ‘‘கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலையில் படிப்படி யான அதிகரிப்பைப் பார்க்க முடிகிறது. இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு ஏற்ப உயரத்தில் வாழும் தாவரங்கள் தகவமைத்துக்கொள்வது கடினம். சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த அனாபலிஸ் நீல்கிரியானா, மற்ற தாவர வகைகளான ஹெலிகிரிசம் விக்தியானா, ஆந்த்ரோபோகன் பாலிப்டிக்ஸ் போன்ற ஓரிடவாழ் தாவரங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்தத் தாவரங்களால் விதைகளை உற்பத்திசெய்ய முடியவில்லை’’ என்கிறார் பாஸ்கோ.

பெருகும் அயல் தாவரங்கள்

இந்தப் பின்னணியில் ஆராய்ச்சியாளர் சுகுமாரும் அவருடைய சக ஆய்வாளர்களும் ‘ட்ராபிகல் கன்சர்வேஷன்: பெர்ஸ்பெக்டிவ்ஸ் ஆன் லோக்கல் அண்ட் குளோபல் ப்ரியாரிட்டீஸ்’ (2016) என்கிற புத்தகத்தின் வழியாகப் பருவநிலை மாற்றத்தால் நீலகிரியில் ஏற்பட்டுவரும் பாதகமான விளைவுகளின் மற்றொரு அம்சத்தைக் கவனப்படுத்து கிறார்கள். அது மாறுபடும் தட்பவெப்பநிலைக்குச் சிறப்பாகத் தகவமைத்துக்கொள்ளக்கூடிய அயல் தாவரங்களின் பரவல் குறித்தது.

‘‘மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 6,000 அடிக்கு மேலே உயரம் கொண்ட மலையுச்சிப் புல்வெளிகளில் ‘சி4’ எனப்படும் இயல் புல் வகைகள் வாழ்கின்றன. அதிகரித்துவரும் ‘சி3’ அயல் தாவரங்களால் இந்தப் புற்கள் ஆபத்தைச் சந்தித்துவருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பு, பனி விழுவதற்கான சாத்தியம் குறைந் திருப்பது, வளிமண்டலக் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பது போன்ற அம்சங்கள் இயல் தாவரங்களைவிட, அயல் தாவரங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன. இதன் காரணமாக ஏற்கெனவே மலையுச்சிப் புல்வெளிகளில் பயிரிடப்பட்ட ஆஸ்திரேலியத் தாவரங்களான சீகை மர வகைகளும் (அகேசியா டீல்பேட்டா, அகேசியா மீர்ன்சி), கோத்தகிரி மஞ்சள் மலரைத் தரும் விளக்குமாறு செடியும் (சிஸ்டிசஸ் ஸ்காபேரியஸ்) சமீபகாலத்தில் பெருமளவு பரவியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’’ என்று சுகுமார் சுட்டிக்காட்டுகிறார். இப்பகுதியில் நீலகிரிக்கான இயல் தாவரங்கள் முன்பு பரவலாகக் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தகவமைக்கும் முயற்சி

இப்பகுதியில் 2016-17-ல் கடுமையான வறட்சி நிலவியது. நிலத்தடி ஊற்றுகளும் காய்ந்துபோகும் அளவுக்கு இந்த வறட்சி இருந்தது. ‘‘அதன் காரணமாகக் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால், குடிநீர் விநியோகத்துக்காக நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக ஆழ்துளைக் கிணறுகளை வெட்ட அப்போதைய ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதைச் சூழலியல் தொகுதியில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கிய அறிகுறியாகப் பார்க்கிறேன். நாம் விழித்துக்கொண்டு செயலாற்ற வேண்டிய நேரம் இது’’ என்கிறார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா. அதேநேரம், நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்குத் தற்போது முற்றிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது. மழைப்பொழிவைக் கணிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், நீலகிரியின் பூர்வகுடி மக்களின் பாரம்பரிய வேளாண் நடைமுறைகளிலும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இப்பகுதியின் முக்கிய குடிசைத் தொழிலான தேன் சேகரிப்பிலும் இதைக் காண முடிகிறது.

‘‘இப்பகுதியில் உள்ள பல்வேறு மரங்கள், தாவரங்களின் பூக்கும் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தேனீக்களின் உணவுத் தேடல் பாதிக்கப்பட்டுள்ளது. தேன் உற்பத்தியும் மோசமான தாக்கத்தைச் சந்தித்துள்ளது’’ என்கிறார் கீஸ்டோன் அறக்கட்டளையைச் சேர்ந்த அனிதா வர்கீஸ். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி வாழ் பூர்வகுடிகளான குரும்பர், இருளர் பழங்குடிகளுடன் இணைந்து இந்த அறக்கட்டளை பணிபுரிந்துவருகிறது.

“இயற்கையுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்ட உழவர்கள், மீனவர்கள், வேட்டையாடிகள் போன்றோரால் தட்பவெப்பநிலையைக் கணிப்பது இனிமேல் சாத்தியமில்லை. அவதானிக்கப்படும் மாற்றங்கள், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதிதான். இதை மட்டுப்படுத்த வேண்டும். அதேநேரம், காடுகளைப் பற்றிய மரபு அறிவைக் கொண்டவர்கள், இந்த சூழலியல் மாற்றத்துக்கு எதிர் வினையாற்றவும் அனுமதிக்க வேண்டும். சில விஷயங்களை அவர்கள் தகவமைத்துக்கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் வேண்டியிருக்கும். மாற்றங்கள் நடைபெறும் இந்தக் காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள்தான் இங்கே வாழ்ந்துவருகிறார்கள். நகர்ப்புறச் சமூகம் சில நூற்றாண்டுகளாகத்தானே இங்கே வாழ்ந்துவருகிறது’’ என்கிறார் அனிதா.

தமிழ்நாடு அரசு இந்தக் குரல்களுக்குச் செவிமடுக்குமா? நீலகிரியைக் காப்போமா அல்லது பருவநிலை மாற்றத்திடம் பறிகொடுத்துவிடுவோமா?

- சிபி அரசு, சுற்றுச்சூழல் இதழாளர்.

தொடர்புக்கு: arasusibi@gmail.com

தமிழில்: ஆதி வள்ளியப்பன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x