Last Updated : 22 Feb, 2018 09:19 AM

 

Published : 22 Feb 2018 09:19 AM
Last Updated : 22 Feb 2018 09:19 AM

நீட் தேர்வுக்கு விலக்களிப்பதில் என்ன தயக்கம்?

ந்திய மருத்துவக் கழகத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் - 2018, தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய சாராம்சம் - தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் தங்களின் கீழ் உள்ள 60% மருத்துவ இடங்களுக்குத் தாங்களாகவே கட்டண அளவை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதாகும். ஒரு புறம் நீட், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பகல் கொள்ளையைத் தடுக்கும் என்று கூறிவிட்டு, மறுமுனையில் தனியார் கட்டண வசூலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறது மத்திய அரசு.

தமிழகம் சமூகநீதிக் கொள்கையின் முன்னோடி. இங்கு சமூகநீதிக் கொள்கை வாழ்வியலாக உள்ளது. கல்வி, பொதுச் சுகாதாரம், வேலைவாய்ப்பு அனைத்துமே சமூகநீதித் தளத்தில் இயங்கிவருகின்றன. சமூகநீதியின் அடிப்படையில் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை, பொதுச் சுகாதாரம் ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன. இதனால், மருத்துவக் குறியீடுகளிலும்; மனித வள மேம்பாட்டுக் அளவுகோல்களிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்ற வல்லுநர்கள் பிற மாநிலங்களின் இயைந்த வளர்ச்சிக்குத் தமிழ்நாடு சமூகநீதிக் கோட்பாடுகள் வழிகாட்டியாக அமைந்துள்ளன என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

தமிழ்நாடே முன்னோடி மாநிலம்

மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளித் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு 69% இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை; முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பிற்கு 69% இடஒதுக்கீட்டுடன் 50% இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு - ஆகிய சமூக நீதிக் கொள்கைகளின்படித் தமிழக அரசு செயல்பட்டதால், நாட்டிலேயே மாவட்டத்துக்கு ஒன்று என்று 24 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான்.

இக்கொள்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வழி செய்யாமல் தற்போதைய மத்திய அரசும், நீதிமன்றங்களும் தமிழ்நாட்டின் வெற்றிப் பாதையைத் தடுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் சமூக, பொருளாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய சூழலில் உள்ள ஏறக்குறைய 500 மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்கும் வாய்ப்பை நீட் தேர்வு அழித்துவிட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில்கூட நடுத்தரப் பொருளாதாரப் பிரிவினர்களின், செல்வம் படைத்தவர்களின் பிள்ளைகள்தான் இனித் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி பயிலமுடியும். ஏனென்றால், ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள மேல்தட்டு, நகர்ப்புற சூழலில் வளரும் மாணவர்கள் மட்டுமே ஓராண்டு, ஈராண்டு ஏன் மூன்றாண்டு வரையிலும்கூட நீட் தேர்வு பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திப் படிக்கும் வாய்ப்பும் வசதியும் உள்ளது. அப்படிப் பயிற்சி மையங்களில் அதிகக் கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்லூரிகளில் சேர்பவர்களிடம், சமூகப் பொறுப்பு, பிறந்த மண்ணில் சேவை செய்யும் மனப்பான்மையை எதிர்பார்க்க முடியுமா?

மாறிப்போன கல்விமுறை

நீட் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதற்காக, எந்தப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களாக இருந்தாலும் அவர்களைக் கொள்குறி வகை (‘அப்ஜெக்டிவ்’) கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வித்தையைத் தனியார்ப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், பள்ளிக்கூடங்களின் முக்கியத்துவம் குறைந்து, மாணவர் - ஆசிரியர் தொடர்பு குறைந்து, மருத்துவக் கல்லூரிகளுக்கு இயந்திர மனிதர்கள் போல மாணவர்களை நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்குகின்றன.

ஹார்வர்ட் போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் நுழைவுத் தேர்வை ரத்துசெய்து பள்ளிப் பாடங்களின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்வதன் காரணமாக, அவற்றின் ஆராய்ச்சித் திறன், கல்வி மேம்பாடு, சமூகத் தேவைக்கேற்ற உற்பத்தித் திறன் ஆகியவை அதிகரித்துள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உலகளவில் உயர் கல்வி செல்லும் திசைக்கு எதிர்திசையில்தான் நாம் பயணிக்கப்போகிறோமா?

மத்திய அரசு நினைத்தால்...

மே 6-ல் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டது சிபிஎஸ்இ. கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழக மாணவர்கள் கடுமையாகப் போராடினாலும் சிபிஎஸ்இ விட்டுக்கொடுக்கவே இல்லை. வழக்கம்போல் தமிழக அரசும் மெத்தனமாக நடந்துகொண்டதால் வேறு வழியின்றி நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டனர்.

இந்தியா முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500 இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது? மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும்போது, தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்களிக்க முடியாதா என்ன?

நாடாளுமன்றத் தனிச்சட்டம் வழியாக இந்நிறுவனங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது என்று என்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உயர், உச்ச நீதிமன்றங்களில் வென்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் 2007-ன் அடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்களிப்பதில் மட்டும் ஏன் தயக்கம்?

- நா.எழிலன், மருத்துவர், நிறுவனர் -

இளைஞர் இயக்கம்,

தொடர்புக்கு: ezhilnagan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x