Published : 22 Feb 2018 09:11 AM
Last Updated : 22 Feb 2018 09:11 AM

கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?

ந்தியர்களில் 60 கோடிப் பேருக்கு சுகாதார வசதிகள் பெறும் வாய்ப்பு அறவே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ சிகிச்சைக்கான நியதிகள் மதிக்கப்படாததாலும், இலக்குகளை எட்டுவதில் நிரந்தரமாகத் தவறுவதாலும், எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் சாத்தியமில்லை என்ற எண்ணப்போக்காலும் கிராமப்புற சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. கூடுதலாக 5 லட்சம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்நிலை மாற கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன, அதில் ஒன்று நம்பிக்கையூட்டுவது, ஆனால் ஒதுக்கப்பட்டுவிட்டது. அது முறையாக அமல்படுத்தப்பட்டால், கிராமப்புறங்களில் தொடக்கநிலை மருத்துவர்கள் எண்ணிக்கை குறையாது.

உத்தேச வரையறை

கிராமங்களில் சேவைசெய்ய புதிய வகை மருத்துவர்களைத் தயார்செய்வதற்கு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்த உத்தேச யோசனைக்குப் பலத்த எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்தன. மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரையில் நவீன மருத்துவம் படித்து, பயிற்சியும் முடித்தவர்களைத் ஆரம்ப சுகாதார வசதிகளை அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே அந்த யோசனை. இப்படிக் குறைந்தகால மருத்துவப் படிப்பும் சேவையும் இந்தியாவுக்குப் புதிதல்ல. 1940-களில் எல்.எம்.பி. (உரிமம் பெற்ற பட்டய மருத்துவர்) என்ற பெயரில் கிராமங்களில் தரமான மருத்துவ சேவை அளித்தனர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் இனி நிறையக் கிடைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில், 1946-ல் இந்த எல்.எம்.பி. முறையை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்தது சர் ஜோசப் வில்லியம் போர் கமிட்டி. ஆரம்ப சுகாதார நலன் தொடர்பாக வேறு சிறந்த பரிந்துரைகளையும் அளித்தது. சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் அந்தக் குழு நிர்ணயித்த இலக்குகள் எட்டப்படாமல் போகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

சொந்தமாகத் தொழில் செய்யும்போது அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதால், நன்கு படித்த, தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனைப் பணிகளுக்கு வரவில்லை. அத்துடன் அரசும் நிதிப் பற்றாக்குறை காரணமாக போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை. இதனால் பொது சுகாதார நலனுக்குத் தேவைப்பட்ட மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை வளர்ந்துகொண்டே வருகிறது.

நாட்டின் தேவையைக் கருத்தில்கொண்டு குறுகிய கால மருத்துவப் பட்ட வகுப்புக்கான பாடத் திட்டங்களை வகுக்கலாம். அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்குத்தான் முக்கியத்துவம் என்றில்லாமல், கிராமப்புறங்களில் சேவைசெய்ய விரும்பும் மாணவர்கள் படிக்க வாய்ப்பு தரலாம். அத்துடன் மருத்துவம் செய்துவரும் பாரம்பரியக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை தரலாம். இதற்கும் மேலாக, அவரவர் மாநில மொழியிலேயே படிக்கவும் வசதி செய்யலாம்.

தரமற்ற மருத்துவர்கள் அல்ல

நவீன மருத்துவத்தை ஐந்தரை ஆண்டுகள் படிக்கவில்லை என்பதற்காக அவர்களை ‘போலி வைத்தியர்கள்’ என்று முத்திரை குத்திவிடக் கூடாது. ஆரம்ப சுகாதாரம் குறித்து அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படுவதால் போலி மருத்துவர்கள் என்று அழைக்க முடியாது. இப்போதைய எம்பிபிஎஸ் பட்டப் படிப்பில் ஆரம்பநிலை சுகாதாரத் தேவைக்கும் அதிகமாக சில கற்றுத்தரப்படுகின்றன. தடயவியல் மருத்துவம் இதற்கு நல்ல உதாரணம்.

எல்.எம்.பி. மருத்துவர்கள் செய்யும் வேலையை மருந்தாளுநர் பட்டம் பெற்றவர்களும் பயிற்சி பெற்ற செவிலியர்களும்கூட செய்துவிடலாமே என்று சிலர் கேலியாக வாதிடக்கூடும். வேர்நிலையில் ஆரம்ப சுகாதாரத்துக்கென்றே தனிப்பட்ட முறையில் பயிற்சி பெறும் எல்.எம்.பி. மருத்துவர்கள் முக்கியமானவர்கள். மிகக் குறைந்த ஆண்டுகளே படித்தவர்களை மருத்துவர்களாக நியமித்தால், தங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக அரசு கருதுகிறது என்று கிராம மக்கள் நினைக்கக்கூடும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதை எளிதில் தீர்க்கலாம். கிராமப்புறங்களில் செயல்படும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படித்தவர்களை மருத்துவ அதிகாரிகள் நிலையில் நியமித்து, எல்.எம்.பி. மருத்துவர்களை அவர்களுடைய உதவியாளர்களாகப் பணியில் அமர்த்தலாம்.

ஆரம்ப சுகாதார அமைப்பில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டும். கிராமப்புறங்களின் துணை மையங்களில் எல்.எம்.பி. மருத்துவர்களை நியமிக்கலாம். அங்கே அவர்கள் மருந்து தந்து சிகிச்சை தருவதுடன் சில நிர்வாகப் பொறுப்புகளையும் வகிக்க அனுமதிக்க வேண்டும். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் செல்வதும், அவரச கால சிகிச்சை பெறுவதும் எளிதாகும். மருத்துவ அதிகாரியாக எம்பிபிஎஸ் படித்தவர்கள் நியமிக்கப்படுவதால் பட்டதாரி, பட்டய மருத்துவர்கள் இடையே தேவையற்ற போட்டிகளும் வராது.

பட்டம் படித்த மருத்துவர்கள் தலைமை வகிக்கும் ஆரம்ப நிலை சுகாதார மையங்களில் பட்டய மருத்துவர்களைப் பணியில் அமர்த்துவதால் அவர்கள் மருத்துவமனை சிகிச்சைகளில் மேலும் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற முடியும். அந்தப் பயிற்சியை அவர்களுக்குக் கட்டாயமாக்கலாம். ஆரம்பநிலை சுகாதார மையங்களில் உள் நோயாளிகள் பிரிவைத் தொடங்கி வசதிகளை மேம்படுத்தலாம். சார்பு சுகாதார மையங்களிலிருந்து எல்.எம்.பி. மருத்துவர்கள் பரி்ந்துரைக்கும் நோயாளிகளை இம்மையங்களில் உள்நோயாளிகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்; எல்.எம்.பி. மருத்துவர்களின் பணியையும் இவற்றில் கண்காணிக்கலாம்.

கிடைக்கும் பயன்கள்

பட்டய மருத்துவர்களை வேலைக்கு அமர்த்துவதில் பல நன்மைகள் ஏற்படும். ஆரம்ப சுகாதார மையங்களில் எல்.எம்.பி. மருத்துவர்கள் சேர்க்கப்படுவதால் அதிக நோயாளிகளைப் புற நோயாளிகளாகவும் உள் நோயாளிகளாகவும் சேர்த்து சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்பநிலை சுகாதாரங்களுக்கான நிதி ஆதாரங்களை அதிகம் ஒதுக்கி பயனுள்ள வகையில் செலவிட முடியும். மருத்துவ மையங்களின் அடித்தளக் கட்டமைப்பும் பணியாளர்கள் எண்ணிக்கையும் உயரும். மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகளின் ஊதியமும் அதிகமாகும்.

எம்பிபிஎஸ் படித்த பட்டதாரி மருத்துவர் மீது நிர்வாகரீதியாக இப்போது சுமத்தப்படும் சில பொறுப்புகளைக் குறைக்க முடியும். ஆரம்ப சுகாதார மையங்களில் அவசரநிலையில் கொண்டுவந்து சேர்க்கப்படும் நோயாளிகளுக்குத் தரமுள்ள உடனடி கவனிப்பையும் சிகிச்சையையும் அளிக்க முடியும். இப்போது ஒரு சில ஆரம்பநிலை சுகாதார மையங்களில் மட்டும்தான் உள்நோயாளிகள் சேர்க்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது.

இப்போது எம்பிபிஎஸ் படித்த இளம் மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் கட்டாய சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அனுபவக் குறைவால், மருத்துவமனை நிர்வாகத்தையும் சிகிச்சையையும் ஒரு சேர கவனிக்க முடியாமல், பணிப்பளு அவர்களைச் சோர்வடையச் செய்கிறது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

எல்.எம்.பி. மருத்துவர்கள் விரும்பினால் அப்பிரிவிலேயே முதுநிலைப் படிப்பு படிக்கவும் அனுமதிக்கலாம். முதுநிலை படித்தவர்கள் சுகாதார சேவையில் மேலும் முன்னேற வாய்ப்பு தரலாம். சொந்தமாகத் தொழில் செய்யவும் மருத்துவக் கல்லூரிகளில் புதிய எல்.எம்.பி. மாணவர்களுக்குக் கற்றுத்தரவும் கூட அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்.எம்.பி. முறையை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் கிராமப்புறங்களில் நிலவும் பயிற்சி பெற்ற ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பற்றாக்குறையைக் கணிசமாகக் குறைக்கலாம். இதை அமல்படுத்த மேலும் போதுமான ஆலோசனைகளும் விவாதங்களும் அவசியம்.

-சோஹம் டி. பாதுரி, மும்பை மருத்துவர்.

‘தி இந்தியன் பிராக்டிஷனர்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

தமிழில்: சாரி,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x