Last Updated : 09 Feb, 2018 09:00 AM

 

Published : 09 Feb 2018 09:00 AM
Last Updated : 09 Feb 2018 09:00 AM

நடிகர்களின் அரசியல் பிரவேசமும் எதிர்வினைகளும்

‘ந

டிகர்கள் நாடாள வரலாமா?’ - புகழ்பெற்ற திரைப்பட நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக் கிறபோதும், அதற்கொரு முன்னுரையாக அரசியல் கருத்துகளைக் கூறுகிறபோதும், உறுப்பினர் பதிவு, ரசிகர்களுடன் சந்திப்பு போன்ற சில நடவடிக்கைகளில் இறங்குகிறபோதும் இந்தக் கேள்வி எழுப்பப்படு கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிற பல்வேறு கட்சிகளின் பேச்சாளர்கள், நேரடியாக எந்த நடிகரின் அரசியல் வருகையையும் எதிர்ப்பதில்லை. ஆனால், திரை நட்சத்திரங்களின் வருகையால் தங்கள் கட்சி களுக்கு ஏற்படக்கூடிய பின்னடைவு பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறார்கள். நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்த சிலரது நடவடிக்கைகளால் அதிருப்தியடையும் மக்களில் ஒரு பகுதியினரும் தங்கள் ஆட்சேபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களுடைய தனிப்பட்ட குறைபாடாக எடுத்துக்கொள்வதா, திரையுலகிலிருந்து வந்தாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று முடிவுசெய்வதா?

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு கள் பற்றி மத்திய ஆளுங்கட்சியினர் அடக்கி வாசிக்கிறார்கள். அதேசமயம், நடிகர் கமல்ஹாசனின் அரசியல் தொடர்பான அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடுகிறார்கள். அதற்குக் காரணம், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் இவர்களும் தூக்கிப் பிடிக்கிற மதவாத அரசியலுடன் அனுசரித்துப்போகலாம். கமல்ஹாசன் முன்வைக்கும் விமர்சனங்கள் அதற்கு முட்டுக்கட்டை யாகலாம் என்ற கணிப்புதான்.

திரைப் புகழைத் தாண்டி...

ஒருகாலத்தில், சட்ட மன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பெறும் அளவுக்கு வளர்ச்சிபெற்றது விஜயகாந்தின் தேமுதிக. அதன் பின்னணியில் அவரது செல்வாக்குக்கு மையமான இடம் உண்டு. அக்கட்சிக்கு ஏற்பட்ட சரிவின் பின்னணியிலும் அவரது செயல்பாடு களுக்கே மையமான இடம். சரத்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் தொடங்கிய கட்சிகள் அந்தந்த வட்டார அளவில், சமூகப் பின்னணியோடு அடையாளம் பெற்றவை. சட்ட மன்றத்துக்குள் நுழையவைத்த அந்த அடையாளத்தின் பின்னே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கு, சாதி வாக்குகளைக் கைப்பற்றும் கணக்கு ஆகியன இருந்தன.

இவர்களுக்கெல்லாம் நம்பிக்கை தரும் விஷயமாக இருப்பது, எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த வரலாறுதான். உண்மையில், எம்ஜிஆரின் அரசியல் பிரவேசமும் வெற்றிகளும் திடீரென நிகழ்ந்த அற்புதங்கள் அல்ல. தொடக்கத்திலிருந்தே திமுகவில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இடம், தனது திரைப்படங்களில் அவர் திட்டமிட்டுப் புகுத்திய அரசியல் கருத்துகள் ஆகியவற்றின் தாக்கம் மிக முக்கியமானது. அவரது ஆதரவாளர்களாகத் திரண்டிருந்த இளம் ரசிகர்கள் கூட்டம், தேர்தல் வெற்றிக்குப் பெரிய அளவில் உதவும் என்று அண்ணா மதிப்பிட்டது 1967 தேர்தலில் நிதர்சனமானது. அதிமுக-வில் ஜெயலலிதா மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுத்ததும் வெறும் சினிமா புகழால் அல்ல. கட்சிக்குள் அவருக்கு எம்ஜிஆர் அளித்த முக்கியத்துவம், பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு அவர் நடத்திய அரசியல் பயணம் ஆகியன இருந்தன. தற்போது அக்கட்சி சந்திக்கும் சீர்குலைவான நிலைக்கும் அவர் கையாண்ட வழிமுறைகள் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்.

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதுமே கலைஞர் கள் களமாடி வந்திருக்கிறார்கள். நாட்டின் விடுதலைப் போராட்ட அத்தியாயங்களில் நாடகக் கலைஞர்கள் மகத்தான பங்களித்திருக்கிறார்கள். ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில், தினைப்புனம் காவலுக்கு வரும் வள்ளி, “வெள்ளைக் கொக்குகளா போ போ” என்று பாடியது, அந்தக் காலத்தில் மிக முக்கியமான அரசியல் வெளிப்பாடு. முருகனாக நடித்த விஸ்வநாததாஸ் மேடையை விட்டு இறங்கியதும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுசெல்லப்படுவது வழக்கமாக இருந்தது. மக்களிடையே பரவும் அந்தச் செய்தி போராட்டத்துக்கு விசையூட்டியது. வில்லன் பாத்திரங்களில் நடித்த எம்.ஆர்.ராதா திரைப்படங்களில் பேசிய அரசியல், சமூக நையாண்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்த்த பெரியார், “எனது பேச்சுகளால் ஏற்படும் தாக்கத்தைவிடவும் உங்கள் வசனங்களால் நல்ல விளைவு ஏற்படும்” என்று பாராட்டினார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட ‘தியாகபூமி’ என்ற திரைப்படம், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பேசியது. சாதியத் தீண்டாமைக்கு எதிராகவும் பேசியது. அவ்வாறு பேசியதில் அரசியல் அக்கறை இருந்தது. பல ஆண்டுகளாக அந்தப் படம் முடக்கப் பட்டிருந்ததிலும் அரசியல் உள்நோக்கம் இருந்தது.

விடுதலைக்குப் பிறகும் தமிழகச் சூழலில் திராவிட இயக்க அரசியலைக் கொண்டுசென்றதில் திரைப்படங்களுக்குத் தலையாய இடம் உண்டு. திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதிய அண்ணா, கலைஞர் என ஒரு பட்டாளமே உருவானதும், இயக்கத்தில் அவர்கள் தலைமை இடங்களுக்கு வந்ததும் தற்செயலானவையல்ல. சமூநீதி நியாயங்கள் இங்கு வேரூன்றியிருப்பதிலும், மதவாத அரசியல் இங்கு கால் பதிக்க முடியாத சூழல் நிலவுவதிலும் அன்றைய திரைப்படங்களும் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியிருக்கின்றன.

நிலைப்பாடு முக்கியம்

மக்களிடையே பெயர் பெற்றுள்ள கலையுலகினர் அரசியல், சமூக அக்கறைகளை வெளிப்படுத்துவது நல்லதுதான். எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல் இருப்பதுதான் கவலைக்குரியது. “அறிக்கை விடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் வேறு சிலர் இருக்கிறார்கள். அதை நாம் செய்ய வேண்டாம்” என்று ரஜினி அறிவித்தது மிகப்பெரிய நழுவல் உத்தி. ‘நாளை நமதே’ பயணத்தைத் தொடங்கவுள்ள கமல்ஹாசனாவது கருத்து என ஒன்றைச் சொல்லி ஆதரவையும் எதிர்ப்பையும் எதிர்கொள்கிறார். மன்றத்துக்கு என்று ஒரு இணையதளம் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பொதுவெளியில் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட தனது விமர்சனங்களை முன்வைக்கிறார். நடிகர் விஷால் தனது விமர்சனங்களை வெளிப்படுத்துகிறார். நடிகர்களின் ரசிகர் மன்ற அலுவலகங்களில் உறுப்பினர் பதிவு, வட்டார அமைப்பு ஏற்பாடுகள் முதலியவை பராமரிக்கப்படுவதைக் கவனித்திருக்கிறேன். “தலைவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அப்படி முடிவெடுப்பாரானால் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என மன்றங்களின் பொறுப்பாளர்கள் கூறினார்கள். அந்த வகையில் நடிகர்களின் வருகையில் ஒரு தொடர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

அரசியல் அக்கறை

அதேசமயம், திரைப்படங்களின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை என வருகிறபோதுகூட திரைக் கலைஞர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புப் போராட்டங் களுக்கு வருவதில்லை - அரசியல் பிரவேசம் பற்றிப் பேசிவரும் நடிகர்கள் உட்பட. அது அந்தந்தப் படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினை என்பதாக ஒதுங்கு கிற போக்குதான் இருக்கிறது. இதை ஆரோக்கியமற்ற அரசியலாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசியல் என்பது யாருக்கோ நேர்ந்துவிடப்பட்ட ஒன்றல்ல. முன்பொரு முறை கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாசரிடம், குறிப்பிட்ட ஒரு பிரச்சினை தொடர்பாகப் பார்வையாளர்கள் கேள்வியெழுப்பினர். “ஏன் இதை ஒரு நடிகனைப் பார்த்து மட்டும் கேட்கிறீர்கள்? ஒரு விஞ்ஞானியையோ, ஒரு பேராசிரியரையோ, ஒரு பத்திரிகையாளரையோ கேட்க வேண்டாமா?” என்று கேட்டார் நாசர். “வெறும் உணர்ச்சி கரமான அறிவிப்புகளைப் பார்த்து அரசியல் முடிவு களுக்கு வராதீர்கள், ஆழமாகச் சிந்தித்து விவாதித்து முடிவெடுங்கள்” என்பதே அவரது நிலைப்பாடு.

எல்லோர் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்துகிற அரசியல் பற்றிய அக்கறை எல்லாத் துறைகளையும் சேர்ந்தோருக்கு வேண்டும். கலைத் துறைச் செயல்பாட்டின் காரணமாக மக்களின் அன்பைப் பெற்றவர்கள் அந்த அன்பை ஆக்கபூர்வமான அரசியலுக்குப் பயன்படுத்தப்போகிறார்களா, ஏற்கெனவே சீர்குலைந்திருக்கிற ‘சிஸ்டம்’ மேலும் பின்னுக்குப் போக உதவப்போகிறார்களா என்பதுதான் பேசப்பட வேண்டும். இவர்களில் சிலர் பெரியதொரு சக்தியாக உருவெடுக்காவிட்டாலும், அரசியல் பிரவேசத்தின் மூலம் சில பேரங்களை நடத்தலாம் என்றுகூட கணக்கிட்டிருக்கக்கூடும்.

ஆக, நடிகர்கள் நாடாள வரலாமா என்ற கேள்விக்கு இப்படிப் பதிலளிக்கலாம்: நாடாள வருவோர்தான் நடிக்கக் கூடாது, நடிகர்கள் நாடாள வரலாம். எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்க மக்கள் இருக்கிறார்கள்!

- அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: kumaresanasak@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x