Published : 05 Feb 2018 07:31 AM
Last Updated : 05 Feb 2018 07:31 AM

தாகத்தில் தவிக்கும் கேப் டவுன்: தயாராக இருக்கிறதா இந்தியா?

தெ

ன்னாப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப் டவுன், மிகப்பெரும் குடிநீர் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில், அந்நகரில் வாழும் 40 லட்சம் மக்களுக்கு முற்றிலும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படலாம். அப்போது ஒவ்வொரு நாளும் வரிசையில் நின்று அன்றைய நாளுக்கான குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். மக்கள் வரிசையைக் கட்டுப்படுத்துவதற்காக ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தயாராகிவருகிறது.

‘பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, கையில் எந்தத் தீர்வுமே இல்லை, இனி இயற்கையின் போக்கில் ஏதாவது நல்லது நடந்தால்தான் உண்டு’ என்று அந்நகரத்தின் நீர்வள ஆதாரங்களை நிர்வகிக்கும் நிபுணர்கள் கைவிரித்துவிட்டார்கள். தற்போதைக்கு, அவசர அவசரமாக 200 அவசர குடிநீர் வழங்கல் மையங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 20, 000 வீடுகளுக்குக் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

நீருக்குக் காவல்

இயற்கை நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் திருடுபவர்களைக் கண்காணிப்பதற்கு சிறப்புக் காவல் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், தண்ணீரைப் பயன்படுத்தி கார்களை சுத்தம் செய்வதைக் குற்றம் என்று அறிவிக்கலாமா என்றுகூட யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கேப் டவுனில் வசிக்கும் மக்களை எச்சரிக்கத் தொடங்கிவிட்டது தென்னாப்பிரிக்க அரசு. வழக்கமாக உபயோகிக்கும் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது. அரசின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தன்னார்வ அமைப்புகளும் பங்கெடுத்துக்கொண்டன. தற்போது, ஒரு நாளைக்கு 50 லிட்டர் நீரை மட்டும் பயன்படுத்துங்கள் என்று நகராட்சி நிர்வாகம் வலியுறுத்திவருகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியாவிட்டால், ஒரு நாளைக்கு 25 லிட்டருக்கும் குறைவாகப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். தண்ணீர் முற்றிலுமாக இல்லாத ‘டே ஜீரோ’ என்று அழைக்கப்படும் அந்த பூஜ்ஜிய நாள் அநேகமாக ஏப். 16-ல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஈரான், சோமாலியா, மெக்ஸிகோஆகிய நாடுகள் கடும் குடிநீர்ப் பஞ்சத்தைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு கோடையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டது. தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் குடிநீருக்கான பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்தியாவின் 21 நகரங்களிலும் இத்தகைய குடிநீர்ப் பஞ்சம் உருவாவதற்கான வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.

நகரங்களில் தண்ணீர்ப் பராமரிப்பு என்பது குடிநீர் சம்பந்தமான பிரச்சினை மட்டுமில்லை. சுகாதாரத்தோடும் நெருங்கிய தொடர்புள்ள விஷயம் அது. தண்ணீர்ப் பற்றாக்குறை, கழிவுகளை அகற்றுவதில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் உடன்விளைவு, தொற்றுநோய்கள்.

இந்தியாவின் நிலை என்ன?

குடிநீர் என்பது மனிதனின் அடிப்படையான உரிமைகளில் ஒன்று. ஆளும் அரசாங்கம், தங்களது குடிமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறது. அதை உறுதிசெய்து, 2010-ல் ஒரு சர்வதேச உடன்படிக்கையை ஐநா சபை வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கின்றன.

இந்தியாவில் குடிநீர் விநியோகத்திலும் நகரத் திட்டமிடலிலும் போதிய கவனம் காட்டப்படவில்லை. தொலைநோக்குப் பார்வையும் இல்லை. நிதி ஒதுக்கீட்டுச் சிக்கல்களால் தடுமாறும் வளரும் நாடுகளின் பொதுவான இயல்புகளில் இதுவும் ஒன்று. ஒருவேளை, நிதியாதாரங்கள் வலுவாக இருந்தாலும்கூட, குடிநீர் அளிப்பைச் சரிசெய்துவிட முடியாது என்பதுதான் உண்மைநிலை.

உலக மக்கள் தொகையில் 16%-ஐக் கொண்டிருக்கிறது இந்தியா. ஆனால், உலக நீர்வள ஆதாரங்களில் 4% மட்டுமே இந்தியாவில் உள்ளன. தற்போது குடிநீர்ப் பற்றாக்குறை இல்லையென்றாலும் இந்தியாவின் நிலையை, தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு முந்தைய அழுத்தநிலை என்றே நீர்வள ஆதார நிபுணர்கள் வகைப்படுத்துகிறார்கள். அதாவது, ஆபத்து வெகு தூரத்தில் இல்லை.

யுனிசெப் நிறுவனம் 2013-ல் வெளியிட்ட ‘இந்தியாவில் நீர்வளம்- நிலையும் வாய்ப்புகளும்’ என்ற ஆய்வறிக்கை, இந்தியா எதிர்கொண்டிருக்கும் சில சவால்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் காரணமாக இருக்கும் எதிர்பாராத மழைப்பொழிவு, தண்ணீர்ப் பயன்பாட்டில் போதிய திறனற்ற நிலை, வரம்பில்லாத நிலத்தடி நீர் உபயோகம், நீர் மாசுபாடு, நீர்ப் பராமரிப்புச் சட்டங்கள் சரியாக நடைமுறைப்படாததால் நீரின் தரம் குறைவது என்று தொடரும் அந்தப் பட்டியலைப் பார்த்தால் கேப் டவுனின் நிலைக்குக் காரணமான அனைத்து அம்சங்களும் நமக்கும் பொருந்தக்கூடியவைதான் என்று தெரிகிறது. இந்தியாவில், பாதுகாப்பான குடிநீர் வழங்கலில் கிராமங்களைக் காட்டிலும் நகர்ப்பகுதிகளே முன்னிலை வகிக்கின்றன. அதேநேரத்தில் எதிர்பாராத தண்ணீர்ப் பஞ்சங்களால் கடும் பாதிப்புக்கு முதலில் ஆளாகப்போவதும் நகரங்களாகத்தான் இருக்கும். எனவேதான், நகரங்கள் உருவாகிறபோதே, குடிநீர்க் குறித்த தெளிவான திட்டமிடல்களும் அவசியமாக இருக்கின்றன.

சென்னை சந்தித்த சவால்கள்

சென்னை நகரம் உருவானபோதும்கூட அத்தகைய திட்டமிடல்கள் இருந்திருக்கின்றன. 1776-ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்காக, கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி கேப்டன் பேக்கர், ஜார்ஜ் டவுனின் வடமேற்கில் அடுத்தடுத்து 10 கிணறுகளை வெட்டி, அவற்றுக்கு இடையே சுரங்க இணைப்பு கொடுத்தார். அவற்றில் மூன்று கிணறுகள் தூர்ந்துபோயின. மிச்சமிருந்த ஏழு கிணறுகளின் பெயராலேயே அந்தப் பகுதி இன்றும் அழைக்கப்படுகிறது.

1818-ல் மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தை சென்னை எதிர்கொண்டது. அப்போது சென்னைஆட்சியாளராக இருந்த ஃபிரான்சிஸ் வைட் எல்லீஸ் 27 கிணறுகள் வெட்டினார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. இந்தக் கிணற்றில் எல்லீஸ் செய்த அந்த நற்செயலைப் பற்றி எழுதப்பட்ட பாடல் கல்வெட்டாக இன்றும் இருக்கிறது.

1960-களின் இறுதியில் சென்னை மாநகரில் ஏற்பட்ட மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சத்தை தனது தண்ணீர் நாவலில் சித்தரித்திருக்கிறார் அசோகமித்திரன். குடிதண்ணீருக்காக ஆண்களும் பெண்களும் இரவும் பகலுமாய்க் கையில் குடங்களோடு அலைந்து திரிந்த காட்சிகள் விரிவாகவே அந்நாவலில் பதிவாகியிருக்கின்றன.

பேசப்படாத காரணம்

கேப் டவுனின் குடிநீர்ப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, அந்நகரின் நீராதாரங்களாக இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுபோய்விட்டன என்பதுதான். ஆனால், அது மட்டுமே காரணமில்லை. நகரத்தின் கிடுகிடு வளர்ச்சி, நகரத்திற்குக் குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை மிதமிஞ்சி அதிகரித்தது ஆகியவையே குடிநீர்த் தேவை மற்றும் அளிப்பில் ஏற்பட்டிருக்கும் சமநிலை சீர்குறைந்துபோனதற்கு அடிப்படைக் காரணங்கள். இந்த இரண்டு காரணங்களும் சென்னைக்கும் பொருந்தக்கூடியவை. இந்தக் காரணங்களைத் தாண்டி பேசப்படாத இன்னொரு காரணமும் உண்டு என்பதையும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அது, தண்ணீரை உபயோகப்படுத்துவதைப்பற்றி நமக்கு இருக்கும் அலட்சியம்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு உருவாக்கிய கட்டாயத்தின்பேரில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் பின்பற்ற ஆரம்பித்தோம். தற்போது, அந்தத் திட்டம் தனது தீவிரத்தை இழந்துநிற்கிறது. நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் அக்கறையும் நம்மிடம் இல்லை. நகரத்தின் குறுக்கே ஓடும் நதிகள் மாசுபட்டுக் கிடக்கின்றன. நீரை வணங்கி வழிபடும் நமக்கு, பயன்படுத்தும் நீரின் அளவு குறித்த விழிப்புணர்வு இல்லை. மழைக்காலங்களில் முழங்கால் நனைய சாலைகளில் தேங்கிக்கிடக்கும் நீரில் நடக்கும்போது, அடுத்துவரும் கோடையைச் சமாளித்துவிடலாம் என்று மகிழ்ச்சியடைகிற நிலையில்தானே நாமும் இருக்கிறோம். நகரங்களின் வரலாற்றில் குடிநீர் வழங்கலுக்கான திட்டமிடல்களுக்கும், எதிர்பாராத பற்றாக்குறை நிலையைச் சமாளித்தலுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. இன்று ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பஞ்சம் வரையமுறையற்று வளர்ந்துகொண்டிருக்கும் சென்னைக்கும் ஒரு எச்சரிக்கைப் பாடம்!

செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x