Published : 19 Jan 2018 10:32 AM
Last Updated : 19 Jan 2018 10:32 AM

கிராமப்புற வேலைவாய்ப்புகளைப் பெருக்க என்ன செய்ய வேண்டும்?

த்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் நாளில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது; அடித்தளக் கட்டமைப்புத் துறைக்கு இந்த ஆண்டு மேலும் அதிக நிதியை நிதியமைச்சர் ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மக்களின் பொருளாதார இன்னல்களைக் களைய இந்த ஒதுக்கீடு மிகவும் முக்கியம். “நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு வேலையைத்தான் நம்பியிருக்கிறார்கள்; அது கிடைக்காததால் மிகப் பெரிய அளவுக்கு இழப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்” என்று சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி.) தெரிவிக்கிறது.

கிராமப்புறங்களில் மக்களின் ஏழ்மை நிலையை வரையறுக்க இந்தக் கணக்கெடுப்பு ஏழு குறியீடுகளைப் பயன்படுத்துகிறது. சரியாகக் கட்டப்படாமல் பெயரளவுக்கு ஓலை வேய்ந்தோ, மண் சுவர் எழுப்பியோ கட்டப்பட்ட வீடு, உழைக்கும் வயதில் ஆண் ஒருவரும் இல்லாமல் – குடும்பத்துக்குப் பெண் தலைமை தாங்குவது, மாற்றுத்திறனாளி உள்ள வீடு அல்லது வேலைசெய்யும் அளவுக்கு உடல் வலு இல்லாத ஆடவரைக் கொண்ட வீடு, பட்டியல் இனத்தவர் – பழங்குடிகள் வீடு என்று பலவாறாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடுகள் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேல் இருந்தால் அந்தக் குடும்பத்தின் வறுமை அதற்கேற்பத் தீவிரமாகவே இருக்கும். 30% கிராமப்புற குடும்பங்களில் மேலே சுட்டிக்காட்டியவற்றில் இரண்டு பின்னடைவுகள் இருக்கின்றன. 13% குடும்பங்களில் மூன்று பின்னடைவுகள் இருக்கின்றன. 0.01% குடும்பங்களில் மேலே பட்டியலிடப்பட்ட ஏழு பின்னடைவுகளும் இருக்கின்றன.

நிலமற்றவர்களின் நிலை

நாட்டிலுள்ள மொத்த கிராமக் குடும்பங்களில் 48.5%-ல் மேலே கூறியவற்றில் ஏதாவது ஒரு பின்னடைவு நிலவுகிறது. சொந்த நிலமில்லாத குடும்பங்களில் உடல் உழைப்பில் ஈடுபடுகிறவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. நாட்டில் 5.4 கோடிக் குடும்பங்கள் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டவை. அந்தக் குடும்பங்களில் சராசரியாக 5 உறுப்பினர்கள் இருப்பதாகக் கருதினால் அவர்களின் எண்ணிக்கை சுமார் 25 கோடி. கிராமங்களில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 85 கோடி முதல் 90 கோடி வரை. இந்த எண்ணிக்கையே குறைந்த மதிப்பீடுதான். காரணம், நிலம் வைத்திருப்பவர்களில் கூட 84% சிறு, குறு விவசாயிகள்.

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களில் வேறு எந்த ஆறு பின்னடைவுகள் சேர்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை மிகவும் துயரகரமாக மாறிவிடுகிறது. நன்றாகக் கட்டப்படாத வீடுகளில் வசிப்பவர்கள் 59% நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். 55% குடும்பங்களில் படித்த, 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இல்லை, தலித் மற்றும் பழங்குடிகளின் குடும்பங்களில் தலா 54%-ல் வயதுவந்த ஆண்கள் இல்லாமல் பெண்களே குடும்பத் தலைவர்களாகவும் நிலமற்றவர்களாகவும் இருப்பவர்கள். 47% குடும்பங்களில் வயது வந்த ஆண்களும் இல்லை, நிலமும் இல்லை. 45% குடும்பங்களில் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர், அதே சமயம் உடலுழைப்பில் ஈடுபடக்கூடிய ஆண்கள் இல்லை.

நிலமற்றவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல சிறு, குறு விவசாயிகளின் குடும்பங்களும் பரம ஏழைகளாகிவருகின்றன. 1970-களில் விவசாயிகளின் சராசரி நிலவுடமை 2.25 ஹெக்டேராக இருந்தது 2010-ல் 1.25 ஹெக்டேராக சுருங்கியிருக்கிறது. இது மேலும் குறைந்துவிட்டிருக்கும். இவர்களுக்கு விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானமும் குறைந்திருக்கும். எனவே விவசாயத்தை விட்டே விலக நேர்ந்திருக்கும். விவசாயிகளின் துயரம் வளர்ந்துகொண்டே வருகிறது, கடந்த ஆண்டு பல மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடினார்கள்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு (என்.எஸ்.எஸ்.) அமைப்பு, கல்வி, மதம், இனம், தேசிய அடையாளம் அடிப்படையில் எடுத்த கணக்கெடுப்பில், இரண்டுவித மக்கள் குழுக்கள் 2004-05 முதல் 2011-12 வரையில் அதிக ஊதியமும் தொடர் வேலைவாய்ப்பும் பெற்றது தெரியவந்துள்ளது. ஒரு குழு நன்கு படித்த இளைஞர்கள்; அதிக படிப்பில்லாத, நிலமும் இல்லாத தொழிலாளர்களும் கட்டுமானத் தொழில்களில் இக்காலகட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றனர்.

அடுத்த பத்தாண்டுகள் முதல் 2030 வரையில் வேகமாக வளரக்கூடிய இவ்விரு குழுக்களுக்கும் வேலை அளிக்கக்கூடிய வகையில் பொருளாதாரம் வளருமா என்பதே இப்போதைய கேள்வி. கடந்த இருபதாண்டுகளாக இதுவரை இருந்திராத வகையில் ஏராளமான இளைஞர்கள் கல்வி நிலையங்களில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். 2004-05 முதல் 2015-16 வரையில் ஆண்டுக்கு இருபது லட்சம் புதிய தொழிலாளர்கள் வேலை தேடி சந்தைக்கு வருகின்றனர்.

ஆனால், நிலமில்லாதவர்கள், சிறு – குறு விவசாயிகள் ஆகியோருக்கு விவசாயமல்லாத துறைகளில் உடனடியாக வேலைவாய்ப்பை வழங்குவதுதான் அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும். 2004-05 முதல் 2011-12 வரையில் கிராமங்களில் விவசாய வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 16 கோடியிலிருந்து 14 கோடியாகச் சரிந்துவிட்டது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இதே காலத்தில் 8.5 கோடியிலிருந்து 6.9 கோடியாகச் சரிந்துவிட்டது. இவர்கள் விவசாயமல்லாத துறைகளில் வேலை பெறத் தொடங்கினர்.

கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு

கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்ததால் 15 வயது முதல் 29 வயது வரையிலானவர்கள் வேலைவாய்ப்பு பங்களிப்பு 2004-05-ல் 7.5% ஆக இருந்தது 14% ஆக இரட்டிப்பானது. கட்டுமானத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளில் தொய்வு ஏற்பட்டதால் இளைஞர்களின் பங்களிப்பு 13.3% ஆக சரிந்தது. 2011-12-க்குப் பிறகு இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது மேலும் மந்தமடையத் தொடங்கியது. வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பாலும் அரசின் பொது முதலீடு குறைந்ததாலும் வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. இதனால் 2004-05 முதல் 2011-12 வரையில் விவசாய வேலையிலிருந்து 50 லட்சம் பேர் வெளியேறினர். 2011-12 முதல் 2015-16 வரையில் இது ஆண்டுக்கு 10 லட்சமாகக் குறைந்துவிட்டது.

இது நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் சிறு – குறு விவசாயிகளையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. கட்டுமானத் துறையில் புதிய வேலை கிடைத்ததாலும் விவசாய வேலைக்குப் போட்டி போடுவோர் எண்ணிக்கைக் குறைந்ததாலும் தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைத்தது, ஊதியமும் உயர்ந்தது. கட்டுமானத்துக்குத் தேவைப்பட்ட சில சாதனங்களை அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் தயாரிக்க வேண்டியிருந்ததால் அவற்றிலும் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகரித்தது. மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரக வளர்ச்சிக்கான செலவைத் தொடர்கிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற சாலைகள் அமைப்புப் பணி ‘பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா’ என்ற பெயரிலும், கிராமப்புற வீடமைப்புப் பணிகள் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ பெயரிலும் மேற்கொள்ளப்படுகின்றன. தரைவழிப் போக்குவரத்துத் துறையும் அடித்தளக் கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தப் பொது முதலீட்டு முயற்சியைத் தொடர வேண்டும். இம்மாதிரியான செலவுகளுக்காக மத்திய அரசு கூடுதலாக ரூ.50,000 கோடியைக் கடனாகத் திரட்டப் போகிறது என்ற தகவல் வரவேற்கத்தக்கது. அடித்தளக் கட்டமைப்புத் துறையில் அரசின் முதலீட்டை அதிகரிப்பதுதான் இதன் முக்கிய நோக்கமாக இருக்கும்.

- சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர்.

தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x