Published : 04 Jan 2018 09:31 AM
Last Updated : 04 Jan 2018 09:31 AM

இந்தியப் பின்னணியில் ‘மதச்சார்பின்மை’ எது?

தச்சார்பின்மை என்றால், எல்லா பிரிவினரையும் மதத்தவரையும் சகித்துக்கொள்ளும் பன்மைத்துவம் மிக்க கருத்து, கல்லின் மேல் எழுதப்பட்டதைப் போன்றது என்றே ஒருகாலத்தில் கருதிவந்தோம். ஆனால், 1990-களின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்த சம்பவங்கள் நம்முடைய கருத்துகளையும், யதார்த்தத்தையும் வெகுவாக மாற்றிவிட்டன. மத்தியிலும் பல மாநிலங்களிலும் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலரும், சில குழுக்களும் வேறுவிதமான இந்தியாவில் நம்பிக்கை வைத்திருப்பதால் பலருக்கும் பதைபதைப்பாக இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான், வேலைவாய்ப்பு - திறன் வளர்ச்சிக்கான மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பொது நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சியை அளிக்கவில்லை.

“மதச்சார்பின்மையை ஆதரிப்போருக்கு ரத்த அடையாளம் இல்லை, இந்திய அரசியல் சட்டத்தை மாற்றத்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்” என்று பேசினார் ஹெக்டே. மதச்சார்பின்மைக்கு அரசியல் சட்ட அந்தஸ்து தேவையில்லை என்பதே அவர்களுடைய கருத்து என்பது புலனாகிறது. அவருடைய கருத்து அரசின் கருத்தல்ல என்று மத்திய அரசு கூறியது. அவருமே தனது கருத்தை முழுதாகத் திரும்பப் பெறாமல், ‘அரசியல் சட்டம் மீது நம்பிக்கை இருக்கிறது, அதுதான் உயர்ந்தது’ என்று கூறினார்.

தான் பேசியது தவறு என்று ஒப்புக்கொள்ளவேயில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளனர். ‘இந்து நாடு இந்தியா என்று அங்கீகரிக்கப்பட வேண்டும், அதில் மதச்சார்பின்மை என்பது அரசியல் சட்டத்தின் அங்கமாக அல்லாமல், அதன் நோக்கங்களுக்கும் பயன்பாடுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்’ என்பதே அவர்களுடைய கருத்து.

மதச்சார்பின்மையும் நாமும்

ஹெக்டேவின் பேச்சுக்கு வந்த எதிர்வினைகள் பலதரப்பட்டவை; சிலர் அதை விவாதிப்பதற்கான விஷயம் என்று வரவேற்றனர். சிலர் அதை அடுத்து வரும் ஆபத்துக்கான அறிகுறி என்று அச்சப்பட்டனர். இந்தியா எப்போதுமே மதச்சார்பற்ற நாடாக இருந்ததில்லை. அரசியல் சட்ட நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் மூல முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சமத்துவ’ என்ற வார்த்தைகளே இல்லை என்றுகூட வலதுசாரிகள் சுட்டிக்காட்டினர். நெருக்கடிக் காலத்தின் உச்சத்தில் அரசியல் சட்டத்துக்கு இந்திரா காந்தி அரசு கொண்டுவந்த 42-வது திருத்தம் மூலம்தான் அவை சேர்க்கப்பட்டன என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அரசியல் சட்ட முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த அவையின் தலைவராக இருந்த டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் ஏற்கவேயில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

நம்முடைய அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை, அந்த ஒற்றை வார்த்தையை முகப்புரையில் சேர்த்ததால் மட்டும் வந்துவிடவில்லை. அதன் பல்வேறு சட்டப் பிரிவுகளை ஒருங்கிணைத்துப் படிக்கும்போது - அதிலும் குறிப்பாக அடிப்படை உரிமைகளையும் அதற்கான உறுதிமொழிகளையும் படிக்கும்போது வருவன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, அப்படியே அவர்கள் சட்டத் திருத்தம் கொண்டுவந்து முகப்புரையிலிருந்து அந்த வார்த்தையை அகற்றினாலும் - அது உச்ச நீதிமன்றப் பரிசீலனையின்போதே நிராகரிக்கப்பட்டுவிடும் என்றாலும் - அந்த நீக்கல் என்பது வெறும் அடையாளமாக மட்டும்தான் இருக்கும். ஆனால், ஹெக்டேவின் கருத்துக்கு வேறொரு முக்கியத்துவம் இருக்கிறது. இப்படித் திருத்தம் கொண்டுவந்து அந்த வார்த்தையை நீக்கவேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதிலாக அரசியல் சட்டத்துக்கு வெளியே, அந்த வார்த்தை கூறும் உணர்வுக்கு ஆணிவேராக இருப்பவற்றை நீக்கிவிட்டாலே போதும் என்று எண்ணிச் செயல்படுகின்றனர். இதை முறியடிக்க வேண்டும் என்றால், நாம் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டும். இதற்கு மாறான கருத்தை அரசியல் சட்டத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலியுறுத்துவதன் மூலம் உருவாக்க வேண்டும். நமது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சங்களாகத் திகழும் பன்மைத்துவம், சகிப்புத்தன்மை ஆகியவற்றில் நமக்குள்ள உறுதி வெளிப்படுத்தப்பட வேண்டும்.

உள்ளார்ந்த சுதந்திரங்கள்

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’, ‘சமத்துவ’ (சோஷலிச) என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று பிஹாரைச் சேர்ந்த பிரஜேஷ்வர் பிரசாத் கொண்டுவந்த தீர்மானத்தை, அரசியல் சட்ட நிர்ணய சபை நிராகரித்தது என்பது உண்மைதான் அதற்குக் காரணம், ‘மதச்சார்பற்ற’ என்ற கொள்கை மீது இருந்த சந்தேகத்தால் அல்ல. இந்தியாவின் தன்மையே மதச்சார்பற்றதுதான், இந்த வார்த்தையை முகப்புரையில் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் இந்நாடு கடைசிவரை மதச்சார்பற்றதாகத்தான் இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையால்தான். ‘குடியரசு’ என்று ஒரு நாடு தன்னை அறிவித்துவிட்டாலே, அந்நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் எல்லா உரிமைகளும் சமமாகவே இருக்கும். அவர்கள் விரும்பியபடி பேசலாம், விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம், அந்த நாடு மதச்சார்பற்றதாகத்தான் இருக்க முடியும் என்ற உண்மைகள் காரணமாக அவ்விரு வார்த்தைகள் சேர்க்கப்படவில்லை. அரசியல் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் வரிசையாகப் பல அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்தே சமத்துவமும் மதச்சார்பின்மையும் உறுதிப்பட்டுவிடுகின்றன. விரும்பிய மதத்தைப் பின்பற்றலாம் என்று உறுதியளிக்கும்போது, எல்லா மதங்களும் சமம் என்று இல்லாமல் போய்விடுமா?

சமத்துவம் உண்மையில் நிலவுகிறதா?

அரசியல் அறிஞர் ஷெஃபாலி ஜா இது தொடர்பாக கே.எம்.முன்ஷி கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார். “அமெரிக்க அரசியல் சட்டத்தில் உள்ளது இந்திய சூழ்நிலைகளுக்குப் பொருந்தாது; நாம் இந்தியத் தன்மையுள்ள தனித்தன்மையை உருவாக்க வேண்டும். எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மையை நாம் வழிவழியாகப் பெற்றிருக்கிறோம். யார், எந்தப் பெயரைச் சொல்லி, எப்படி வணங்கினாலும் அனைத்தும் ஒரே பரம்பொருளைத்தான் போய்ச்சேரும் என்ற புரிதலால் நாம் பிற மதத்தவரின் கடவுளையும் வழிபாட்டு முறைகளையும் அவமதிப்பதில்லை. எனவே, நாம் நம்முடைய அரசுக்கென்று ஒரு மதத்தை அறிவிக்க வேண்டியதில்லை” என்று கூறியிருக்கிறார் முன்ஷி. இந்தியாவில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசுக்கும் மதங்களுக்கும் இருந்தாக வேண்டிய கொள்கை வழிபட்ட இடைவெளிதான் என்று ராஜீவ் பார்கவாவும் குறிப்பிட்டிருக்கிறார். மத விவகாரங்களில் அரசு குறுக்கிட முடியாது என்பதல்ல இதன் பொருள். தேவைப்படும்போது அரசு குறுக்கிடலாம், ஆனால் அரசியல் சட்டம் அனுமதிக்கும் எல்லைக்குள் அது இருக்க வேண்டும். சில வேளைகளில், மதங்களுக்கு இடையே வெவ்வேறு விதமாகக்கூட நடவடிக்கை எடுக்க வழிவகுக்கலாம். “அரசியல் சட்டம் உறுதிசெய்யும் சுதந்திரம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அந்நடவடிக்கைகள் இருக்க வேண்டும்” என்கிறார் பார்கவா.

மத விவகாரங்களில் அரசு எந்த அளவுக்குத் தலையிடலாம், அது அரசியல் சட்டம் நமக்களித்த உறுதிமொழியில் தலையிடுவதாகாதா என்று நாம் விவாதிக்கலாம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது நம்முடைய மதச்சார்பின்மைக்கு இயைந்ததா, இல்லையா என்றும் விவாதிக்கலாம். வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட நம்முடைய பன்மைத்துவ சமூகத்துக்கு நம்முடைய அரசியல் சட்ட முன்னோர்கள் வகுத்தளித்த மதச்சார்பின்மைக் கொள்கையிலிருந்து எப்போதும் விலகிவிட முடியாது என்பதே உண்மை.

அரசியல் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் சட்டத் திருத்தத்தை அரசு கொண்டுவந்துவிடும் என்று நாம் ஊகிக்காமல் இருப்பதே நல்லது. இவை தொடர்பாக மட்டும் நாம் விழிப்புடன் இருந்தால் போதாது. அரசின் அனுமதியோடோ, இல்லாமலோ கொடுங்கோன்மையான பேரினவாதம் ஊக்குவிக்கப்படும் நிலை வந்துவிடாமலிருக்க, நாம் ஒவ்வொரு செயலையும் நகர்வையும் ஊன்றிக் கவனிக்க வேண்டும். காரணம், அவை சிறுபான்மைச் சமூகத்தவர்களின் சாதாரண சுதந்திர உரிமைகளுக்குக்கூட பெரிய சுமையாகிவிடும். அதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் சாரமும் ஆன்மாவாகவும் திகழும் அம்சங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

- ஷுரித் பார்த்தசாரதி, வழக்கறிஞர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x