Published : 18 Dec 2017 10:18 AM
Last Updated : 18 Dec 2017 10:18 AM

நதிகளை வணங்கி, கொல்கிறோமா?

னவரி 24, 2001-ல் மஹாளய அமாவாசை தினம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கங்கை மகா கும்பமேளா விழாவுக்காக அலகாபாதில் கங்கை - யமுனை - சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர் கோடிக்கணக்கான பக்தர்கள். இதனை விண்வெளியிலிருந்து படம்பிடித்த ஐகோனோஸ் (IKONOS) செயற்கைக்கோள், ‘உலக வரலாற்றில் அதிகமாகத் திரண்ட மனிதர்கள் கூட்டம்’ என்று வர்ணித்தது. அன்றைய தினம் மட்டுமே சுமார் மூன்று கோடிப் பேர் ஆற்றில் சடங்குகள் செய்து, புனித நீராடினார்கள். அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கோடிப் பேர் அங்கு நீராடினார்கள். விழாவுக்குப் பிறகு ஆற்றின் இயற்கையான உயிர்ச்சூழல் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது.

இங்கு மட்டுமல்ல, அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைனி, காசி - கங்கை, கயா, யமுனை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியிலும் இதுபோன்று நம்பிக்கை சார்ந்த புனித விழாக்கள் மற்றும் சடங்குகள் ஏராளம் நடைபெறுகின்றன.

வதைபடும் தாமிரபரணி

தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம். இங்கே ஓரளவு மாசுபடாத நதியாகக் கருதப்படுகிறது தாமிரபரணி ஆறு. அடர்ந்த கானகத்தில் தாமிரபரணியின் நதிக் கரையில் இருக்கிறது சொரிமுத்து அய்யனார் கோயில். ஆடி அமாவாசையை முன்னிட்டு நடக்கும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்காகச் சில நாட்களுக்கு முன்பே இங்கு லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். தவிர, தங்களது பூர்விக குல சாஸ்தாவை அறியாதவர்களும் ‘மூல சாஸ்தா’வாக சொரிமுத்து அய்யனாரைக் கருதி, குடும்பத்துடன் இங்கு வருகிறார்கள். இதனால், திருச்செந்தூர் சூரசம்ஹாரம் மற்றும் குலசேகரப்பட்டினத்தின் தசரா விழாவுக்கு நிகரான கூட்டம் சேர்ந்துவிடுகிறது.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே இங்கு வந்துசேரும் பக்தர்கள், தற்காலிகக் குடில்களை அமைப்பதற்காகக் கானகத்தின் சிறு மற்றும் நடுத்தர மரங்களை வெட்டுகிறார்கள். இதில் மூன்று நாட்களிலிருந்து ஒரு வாரம் வரை சுமார் இரண்டு லட்சம் பேர் தங்குகிறார்கள். உணவு சமைக்கிறார்கள். ஆற்றங்கரையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிக்கிறார்கள். குளிக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். அந்தத் தண்ணீரையே குடிக்கிறார்கள். ஷாம்பு, சோப்பு மற்றும் துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பவுடர்கள் அனைத்தும் ஆற்றிலேயே கலக்கின்றன.

பூ மாலைகள், தேங்காய், பழங்கள், வாழை இலைகள், பிளாஸ்டிக் பைகள், பாய்கள், அழுக்குத் துணிகள், கூடாரம் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஆற்றிலேயே போடப்படுகின்றன. இதே நாட்களில் மூதாதையருக்குத் தர்ப்பணம் கொடுக்கும் சடங்கும் ஆற்றில் நடக்கிறது. விழாவின் உச்ச நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையன்று, சொரிமுத்து அய்யனார் பூக்குழியில் இறங்கும் சடங்கில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் இறங்கிக் குளிக்கிறார்கள். அன்றைய தினம் தாமிரபரணி, மக்கள் வெள்ளத்தில் மூழ்கி, இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மிதிபடுகிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக அரசு இங்கே சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்.

விமோசனத்தின் விளைவு

இங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் கீழிருக்கும் பாபநாசத்திலும் கிட்டத்தட்ட இதே கதிதான் நேர்கிறது. கங்கை நதி தனது பாவத்தைப் பாபநாசத்திலிருக்கும் தாமிரபரணியில் குளித்துப் போக்கிக்கொண்டதாக நம்பப்படும் ஐதீகத்தை முன்னிட்டு தினமும் இங்கே ஆயிரக்கணக்கானோர் நீராடுகிறார்கள். குளிப்பது பெரும் பிரச்சினை இல்லை. பாவத்தைக் கழிக்கும் சடங்குக்காக அணிந்திருக்கும் ஆடைகளை அப்படியே ஆற்றில் போட்டுவிடுவதுதான் பிரச்சினை.

இயற்கை ஆர்வலர் மோகன்ராம், கடந்த பல மாதங்களாக பள்ளி மாணவர்களுடன் இணைந்து இங்கு ஆற்றிலிருக்கும் அழுக்குத் துணிகளை வாரிவருகிறார். இந்தப் பகுதி ஆற்றில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் மட்டுமே சுமார் 10 லட்சம் துணிகள் இருக்கின்றன என்கிறார் மோகன்ராம். இதுவரை 80 டன் துணிகள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் இன்னமும் சுமார் 600 டன் துணிகள் இருக்கலாம் என்கிறார். இவை தவிர, நெல்லையில் சிந்துப்பூந்துறை, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், ஆழ்வார் திருநகரி, கைலாசபுரம் இங்கெல்லாம் அமைந்திருக்கும் தீர்த்தக் கட்டங்களின் படித்துறைகளில் கரும தீர்த்தம் உட்பட தினமும் நடக்கும் சடங்குகள் ஏராளம். தாழையூத்து வெள்ளக்கோயில் அருகேயிருக்கும் இடுகாட்டில் எரிக்கப்படும் பிணங்கள் கரைக்கப்படுவதும் தாமிரபரணி ஆற்றில்தான். இதே தண்ணீரைத்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுத்திகரித்து நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் அருந்துகிறார்கள்.

மூழ்கிக் கிடக்கும் ஆபத்து!

மேற்குத் தொடர்ச்சி மலையில் அவலாஞ்சி மலைப் பகுதியின் மேல்பகுதியில் உற்பத்தியாகும் பவானி ஆறு மேட்டுப்பாளையம் வந்தடையும் வரை பெரிய அளவில் பிரச்சினை இல்லை. அதன்பின்பு வழக்கமான தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகளுடன், ஈரோடு அருகே பவானி காவிரி ஆற்றுடன் சங்கமிக்கும் கூடுதுறையில் நடக்கும் சடங்குகளில் கொட்டப்படும் கழிவுகள் ஏராளம். இங்கும் ஆற்றில் டன் கணக்கில் துணிகள் மூழ்கியிருக்கின்றன. குளிப்பவர்களின் காலில் துணிகள் சிக்குவதால், பலர் தடுமாறி நீரில் மூழ்கி இறக்கும் விபத்துகளும் இங்கே சகஜம்.

போகிப் பண்டிகையின்போது பழைய பாய், தலையணை, மெத்தை, விரிப்புகள், தட்டுமுட்டுச் சாமான்கள் போடப்படுவதால் காவிரி ஆற்றில் ஏற்படும் பாதிப்புகள் நிறைய. ஆடிப்பெருக்கு விழாவின்போதும் இதே நிலைதான். மேட்டூர், பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி வேலூர், குளித்தலை, திருச்சி, ஸ்ரீரங்கம், பூம்பூகார் என காவிரி ஆற்றின் பெரும்பாலான பகுதிகளில் ஆற்றுக்குச் சீர் கொடுப்பதாகச் சொல்லி, ஆற்றில் டன் கணக்கில் பூக்கள், மாலைகள், தாலிக் கயிறுகள், வளையல்கள், புது பிளாஸ்டிக் குடங்களைக் கொட்டுகிறார்கள். ஆற்றுக்குப் புத்தாடை உடுத்தி மகிழ்கிறார்கள். ஆடைகளால் அடைத்துக்கொண்டு மூச்சுத் திணறுகிறது காவிரி.

ஆறுகள் மட்டுமல்ல; விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சில விழாக்களில் வழிபடுதலின் பெயரில் ஏரி போன்ற நீர்நிலைகளும் சீரழிக்கப்படுகின்றன. மயிலாடுதுறையில் முதல் முறையாக புஷ்கரத்துக்காக, அமைச்சர்கள் புடைசூழ நீராடி விழாவைச் சிறப்பித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வருங்காலத்தில் கும்பகோணம் மகாமகம் குளம்போல இதுவும் பிரபலமாகலாம்.

ஆய்வுகளும் சடங்குகளா?

தேசியத் தண்ணீர் தரக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆறு, ஏரி, குளம், பொதுக் கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளின் தண்ணீர் தரத்தைக் கண்காணித்துப் பராமரிக்க 2,500 நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் 1,687 நிலையங்கள் ஒவ்வொரு நீர்நிலையிலும் மாதம் ஒரு முறையும், 807 நிலையங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் ஆய்வு மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 கண்காணிப்பு நிலையங்களில் 53 நிலையங்கள் மாதாந்திர ஆய்வும், இரு நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வுசெய்வதாகவும் தேசியத் தண்ணீர் தரக் கட்டுப்பாடு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சடங்குகள் நடக்கும் நீர்நிலைகளில் நடத்தப்படும் ஆய்வுகளும் வெறும் சடங்குகளாகவே நடப்பதாகத் தெரிகிறது. ஆறு மற்றும் குளங்களில் 100 மில்லி தண்ணீரில் அதிகபட்சமாக 500 எம்.பி.என். வரை மட்டுமே Facecal coliform எனப்படும் மலத்தில் காணப்படும் நுண்ணுயிரிகள் இருக்கலாம். ஆனால், சடங்கு நடக்கும் நதிகளில் இது 10,000 எம்.பி.என். அளவையும் தாண்டுகிறது என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மனித நாகரிகங்கள் தொடங்கிய இடங்கள் நதிக்கரைகளே. மனிதன் தனது இறப்புவரை ஏதோ ஒரு வகையில் நதியைச் சார்ந்திருக்கிறான். அதனாலேயே நதிகளைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் ஆடிப்பெருக்கு விழா தொடங்கி, பெளத்தர்களின் புத்த பூர்ணிமா வரை அனைத்தும் நதிக்கரை விழாக்களே. மக்கள்தொகை அதிகம் இல்லாத காலகட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகளால் நதிகள் அதிகம் மாசுபடவில்லை. ஆனால், மக்கள் தொகையும் நகரமயமாக்கலும் தொழில் வளர்ச்சியும் அசுர வளர்ச்சியடைந்த நாகரிகத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளும் சீர்திருத்தங்களும் கொண்டுவரப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் நதிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் மிஞ்சியிருக்கும்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x