Last Updated : 07 Dec, 2017 09:36 AM

 

Published : 07 Dec 2017 09:36 AM
Last Updated : 07 Dec 2017 09:36 AM

இணையச் சமநிலை: நம்பிக்கையளிக்கும் சமிக்ஞைகள்!

மீ

ண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது இணையச் சமநிலை தொடர்பான விவாதம். அண்மையில் இந்தியத் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணையச் சமநிலைக்கு ஆதரவாக அமைந்துள்ளன. இது இணையச் சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையச் சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28-ல் டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்துக்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளக் கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என்பதே இதன் பொருள். அதாவது எல்லா வகையான இணைதளங்களையும் சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். டிராயின் பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும் என்றாலும், இணையச் சமநிலை ஆதரவாளர்களிடம் இவை ஏற்படுத்தியிருக்கும் நம்பிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணையச் சமநிலை தொடர்பான போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது ‘ஓவர் தி டாப்’ சேவைகள் என சொல்லப்படும் ‘வாட்ஸ்அப்’, ‘ஸ்கைப்’ போன்ற சேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணையச் சமநிலைக்குப் பாதகமான விஷயங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையப் போராட்டம்

இதையடுத்து இணைய சுதந்திரத்தைக் காக்க இணையவாசிகள் திரண்டனர். இணையச் சமநிலைக்கு ஆதரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் லட்சக்கணக்கில் மின்னஞ்சல்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் பயனாக, குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ‘ஏர்டெல் ஜீரோ’ போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்கள் கைவிடப்பட்டன. ‘ஜீரோ பேசிஸ்’ எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் பேஸ்புக் நிறுவனத்தின் திட்டமும் கைவிடப்படும் சூழல் உருவானது.

டிராயின் பரிந்துரைகள் சர்வதேச அளவில் இணையச் சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக, இணையப் புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட இணையச் சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்துசெய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இணையச் சமநிலை இல்லாத நிலை உருவானால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் எனும் விவாதமும், இணையச் சமநிலைக்கான ஆதரவுக் குரல்களும் அமெரிக்காவில் வலுத்திருக்கின்றன.

இணையச் சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் எனில், இணையத்தின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். ‘இ-காமர்ஸ்’, பணப் பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணையக் கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தைப் பயன்படுத்த முடிகிறது. இணையம் என்றால் என்ன என்பதையெல்லாம் தாண்டி அது அன்றாடப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனினும், அதன் அடிப்படையைத் தெரிந்துகொள்வது நல்லது.

மையம் அற்ற தன்மை

இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கணினிகளும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளன. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களிலிருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில், இணையம் என்பது மையமில்லாதது. எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவேதான் தணிக்கை முயற்சிகளையெல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது.

இணையம் மையமாகக் கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணையப் போக்குவரத்தைத் தாங்கியிருக்கும் ‘ரவுட்டர்’கள், கணினிகள் போன்றவற்றையெல்லாம் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம்தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.

சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் கூறுவதை இதன் அடிப்படையில் பார்க்க வேண்டும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படைச் சமூகக் கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கியக் காரணம் என்கிறார் அவர். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் ‘இன்பர்மேஷன் ஏஜ்’ எனும் மூன்று பகுதிகள் கொண்ட புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

சமநிலையின் முக்கியத்துவம்

ஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். ‘நெட்ஸ்கேப் பிரவுசர்’, ‘இபே’ ஏல தளம், ‘ஜியோசிட்டிஸ்’ இணையதள சேவை தொடங்கி, ‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’ உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் வரை உருவாக அடிப்படைக் காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதும்தான்.

இந்தத் தன்மையைக் கட்டிக்காக்கவே இணையச் சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்தக் காரணத்துக்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்குப் பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும்; எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒருசில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்துத் தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களுக்கு அதிவேகப் பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணையச் சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத் தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரைப் பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோத்துப் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், புதிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் உருவாவதைக் கடினமானதாக்கலாம்.

இணையச் சமநிலை இல்லாத போர்ச்சுகலில் இணையவாசிகள் படும் சிரமம் கவனிக்கத்தக்கது. கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்துக்குக் குறிப்பிட்ட வகை இணையதளங்களைப் பயன்படுத்தும் நிலைதான் அங்கு.

எனவேதான் இணையச் சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்!

- சைபர்சிம்மன்,

பத்திரிகையாளர், ‘டிஜிட்டல் பணம்’ நூலாசிரியர்,

இதழியல் கவுரவ விரிவுரையாளர்.

தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x