Published : 06 Dec 2017 10:31 AM
Last Updated : 06 Dec 2017 10:31 AM

சுதந்திரம் ஏன் முக்கியமானது?

கே

ம்டனில் உள்ள லண்டன் பாரோவில் ‘பிரிம்ரோஸ் ஹில், எண். 10 கிங் ஹென்றி வீதி’ என்ற முகவரியில் உள்ள வீட்டின் முன், நீலநிறத்தில் உள்ள பெயர்ப் பலகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைச் சுமந்தபடி நிற்கிறது. ‘டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், 1891-1956, சமூக நீதிக்காகப் பாடுபட்ட இந்தியப் போராளி 1921-22-ல் இங்கு வசித்தார்’ என்கிறது. 2015-ல் மகாராஷ்டிர அரசு விலைக்கு வாங்கிய அக்கட்டிடம் அருங்காட்சியகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பட்ட வகுப்பின் இறுதியாண்டு மாணவராக, 30 வயதைக் கடந்த நிலையில், அந்த வீட்டிலிருந்துகொண்டு படித்தார் அம்பேத்கர். அவருக்கு 17 வயதிலேயே திருமணமாகியிருந்தது. அவருடைய இளம் மனைவியும் குழந்தையும் பம்பாயில் இருந்தனர். பரோடா மகாராஜாவுக்கு ‘மிலிட்டரி செக்ரட்டரி’ என்ற ஆலோசகர் பதவியிலிருந்த அம்பேத்கர், 1913-1917-ல் வெளிநாடு சென்று மேலும் படிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பதவியை, ராஜிநாமா செய்தார். இதனால் 10 ஆண்டுகளுக்கு அவருக்குத் தடையின்றி கிடைத்திருக்கக்கூடிய கல்வி உதவித்தொகைக்கு ஆபத்து வந்தது. அவரது விலகல் பரோடா மகாராஜாவுக்கும் பம்பாயில் இருந்த சில பிரமுகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆயினும் தன்னுடைய சொந்தச் செலவிலாவது மேலும் படிக்க அம்பேத்கர் முடிவுசெய்தார்.

1918 முதல் 1920 வரையில் பம்பாயில் சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பாடம் நடத்தி, பிரிட்டன் செல்லப் பணம் சேமித்தார். நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்ற அம்பேத்கர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்ற உயர் கல்வி நிறுவனத்தில் இரண்டாவது டாக்டரேட் வாங்கத் தீவிரமாக உழைத்தார். அதே நேரத்தில், லண்டனில் கிரேஸ் இன் என்ற சட்டக் கல்லூரியில் சட்டத்திலும் பட்டப் படிப்பு படித்தார். இதனால் அவருக்கு நேரமும் பணமும் போதவில்லை.

படிப்பின் மூலம் விடுதலை

‘அம்பேத்கர் மிகுந்த சிக்கனமாகவும், எளிமையாகவும் வாழ்ந்தார். பசி, வறுமை, தனிமை ஆகியவை வாட்டினாலும் கல்வியில் உயர் சாதிக்காரர்களை விட சாதித்துக் காட்ட வேண்டும் என்ற லட்சியம் காரணமாக அவற்றைப் பொருட்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினார். பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகம், இந்திய அலுவலக நூலகம், லண்டன் பல்கலைக்கழக நூலகம் ஆகியவற்றில் காலை முதல் இரவு வரை மாறி மாறி இடைவிடாமல் படித்துக்கொண்டிருப்பார். அமெரிக்க, பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டங்கள் பெற்ற பிறகு, ஜெர்மனியில் பயில பான் நகருக்குப் பயணமானார். 1923-ல் கைப்பணம் முழுக்கத் தீர்ந்த பிறகே இந்தியா திரும்பினார்’ என்று அவருடைய வாழ்க் கைக் குறிப்பில் எழுதியிருக்கிறார் தனஞ்செய் கீர்.

அடுத்த நாள் காலையில் அந்த வீட்டுக்கு மறுபடியும் சென்றபோது, படிப்பில் மிகச் சிறந்து விளங்க வேண்டும் என்ற வேட்கை காரணமாக அம்பேத்கர் வாழ்ந்த கடினமான வாழ்க்கை என் கண் முன் தோன்றியது. அந்த வீடு அம்பேத்கர் தனது இளமை யில் வாழ்ந்த காலத்தை மட்டும் நினைவுபடுத்தவில்லை, படிப்பின் மூலம் ‘விடுதலை’ பெற்றுவிட வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தையும் நினைவுபடுத்தியது. சாதியிலிருந்தும், சமூகம் தன்னைச் சிறுமைப்படுத்துவதிலிருந்தும், இன வெறியிலிருந்தும், காலனியாதிக்கத்திலிருந்தும் இந்தியாவோ - அமெரிக்காவோ - பிரிட்டனோ எந்த நாடாக இருந்தாலும் காட்டப்படும் பாகுபாட்டிலிருந்தும் விடுதலைபெற விரும்பினார். அவருடைய வாழ்நாள் முழுக்க சாதி அடையாளம் காரணமாக அவமானங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டார்.

அம்பேத்கர் சாதியமைப்புக்கு எதிராக நடத்திய போராட்டம் அனைத்தும் சமத்துவம், நீதிக்கான கிளர்ச்சி என்பதாகவே புரிந்துகொண்டிருக்கிறேன். உயர் சாதி இந்துக்கள், தேசியவாதம் பேசும் மேல்தட்டு மக்கள் ஆகியோரை விட, அதிகம் படித்தவராகிவிட வேண்டும் என்ற வேகம் அவரைப் பற்றியிருந்தது. சாதிகளை ஒழித்துவிட வேண்டும் என்ற அவருடைய போராட்ட உணர்வின் அடிநாதமாக இருந்தது, சாதியத் தளைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை உணர்வே.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் மன்சூர் அடாய்ஃபி என்ற அரபு எழுத்தாளர், இதன் இன்னொரு கோணத்தைக் காட்டுகிறார். கியூபாவின் தென் கிழக்கில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமாக குவாந்தநாமோ விரிகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டவர்களின் நிலையை அக் கட்டுரையில் விவரித்துள்ளார். அச்சிறைவாசிகள் அருகில் உள்ள கடலை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஒரு நாள் கியூபாவை நோக்கி சூறாவளி வரத் தொடங்கியது. அங்கிருந்த தடுப்புகளைச் சிறை நிர்வாகிகள் அகற்றினர். அந்தச் சில நாட்களில் கைதிகளிடையே பெருத்த உற்சாகம் ஏற்பட்டது. ஓவியங்கள், கவிதைகள், வசன நடையில் உரையாடல்கள் என்று அவர்களிடமிருந்து மகிழ்ச்சி பல விதங்களில் வெளிப்பட்டது. “கடல் என்பது சுதந்திரத்தின் குறியீடு” என்கிறார் அடாய்ஃபி.

அறிவே சுதந்திரம்

தமிழ் நாவலாசிரியர் பெருமாள் முருகன் கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இவற்றில் சில குல தெய்வமான அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. எஞ்சியவை பஞ்ச பூதங்களையும் கொங்கு நாட்டின் நிலப்பரப்பையும் இயற்கைக் காட்சிகளை யும் உள்ளடக்கியவை. கவிதையில் கையாளும் வரிகள் மண்ணின் மணம் கமழ்பவை. பனை மரம்தான் அவருடைய வீட்டுக்கும் வேர்களுக்குமான அடையாளம். பெருமாள் முருகன் இந்தக் கவிதைகளை கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிடம் அளித்துவிட்டார். கிருஷ்ணா அவற்றை இசையாக உருமாற்றிவிட்டார். இருவரும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருபவர்கள்.

பெருமாள் முருகனின் விருத்தங்கள், மாதொரு பாகனிடம் பாதுகாப்பையும் ஏற்பையும் வழங்குமாறு இறைஞ்சுகின்றன. அவருடைய கீர்த்தனைகள் அவருக்கு உற்சாகம் அளித்த நிலத்தையும் மொழியையும் கொண்டாடுகின்றன. காற்று என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதியுள்ள கவிதையை, நளினகாந்தி ராகத்தில் பாடலாக்கியிருக்கிறார் கிருஷ்ணா. அடக்கவும் கட்டுப்படுத்தவும் முடியாத காற்றைப் பற்றியது அந்தப் பாடல். காற்று தான் விரும்பும் இடங்களுக்குச் செல்கிறது, தனக்குப் பிடித்தவர்களைத் தீண்டுகிறது, எல்லைகளையும் பிரிவினைகளையும் தாண்டி தடையில்லாமல் செல்கிறது.

தீட்சா பூமி

அந்தக் காற்று வேறொன்றுமில்லை, சுவாசம்தான். சுதந்திரம் என்கிற சுவாசம் இல்லாவிட்டால் சம்பவிப்பது மரணம்தான். அம்பேத்கருக்கு அறிவு தான் சுதந்திரம். அடாய்ஃபி சுட்டிக்காட்டியபடி பலருக்குக் கடல்தான் சுதந்திரம், பெருமாள் முருகனுக்குக் காற்றுதான் சுதந்திரம்.

சுதந்திரம் நம் அனைவருக்கும் அவசியம். நாம் உயிர் வாழ அதைத் தேட வேண்டும், அதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அடைய வேண்டும். சுதந்திரத்தை மறுப்பது நமக்கு வாழ்க்கையை மறுப்பதைப் போல.

அக்டோபர் 14, 1956-ல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி நகரில் அவருடன் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மதம் மாறினர். அந்த இடம் ‘தீட்சா பூமி’ என்ற பெயரை அதுமுதல் பெற்றது. சாதி இழிவைச் சுமத்திய இந்து மதத்தை நிராகரித்து, அவர் புத்த மதத்தில் சேர்ந்தார். “சுதந்திரம், சமத்துவம், தோழமை ஆகியவற்றைப் போதிக்கும் பெளத்த மதத்தை விரும்புகிறேன்’’ என்று அறிவித்தார். 61 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

அம்பேத்கர் வாழ்ந்த பிரிம்ரோஸ் ஹில் வீட்டில் ஒரு பதாகை தொங்குகிறது. இந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு ஏன் மாறினேன் என்று அம்பேத்கர் கூறிய வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. “சுதந்திரம், சமத்துவம், தோழமையைக் கற்றுக்கொடுக்கும் மதத்தை நான் விரும்புகிறேன்” என்கிறார் அம்பேத்கர். அவருடைய பட்டியலில் முதலில் வருவது ‘சுதந்திரம்’!

- அனன்யா வாஜ்பாய்,

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வருகைதரு ஆய்வு மாணவர், தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

இன்று அம்பேத்கர் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x