Published : 29 Nov 2017 09:18 AM
Last Updated : 29 Nov 2017 09:18 AM

வெடிக்கக் காத்திருக்கிறதா அதிமுக?

திமுகவின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ பழனிசாமி – பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அதிமுக தரப்பில் பெரிய அளவில் கொண்டாட்டங்களைப் பார்க்க முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது அதிமுக தரப்பினருக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனால், அதிமுகவின் மகிழ்ச்சி முகத்துக்குப் பின்னே கடும் குழப்பமும் அதிருப்தியும் நிலவுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதிலும், ஆட்சிமன்றக் குழுவில் இடம்பிடிப்பதிலும் கட்சிக்குள் அதிருப்தி அலைகள் உருவாகியிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக வேட்பாளர் யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏப்ரல் 12-ல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியின் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மதுசூதனன் இந்த முறையும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தொகுதியில் செல்வாக்கு உள்ளவர், ஏற்கெனவே தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அவைத் தலைவராக இருந்தவர் என்று பல்வேறு சாதகங்களைக் கொண்டவர் மதுசூதனன். வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் போட்டியிடத் தயார் என்று அவரே வாய் திறந்திருந்தாலும், கட்சியில் அது பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்படவில்லை. மறுபுறம், ஏற்கெனவே போட்டியிட்ட மருது கணேஷ்தான் மீண்டும் வேட்பாளர் என்று திமுக அறிவித்துவிட்டது.

அதிகரிக்கும் குழப்பம்

கடந்த திங்கள் கிழமை அன்று நடந்த ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் தேர்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலும் சலசலப்பும் அரசியல் பார்வையாளர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடிய இந்தக் கூட்டத்தில், ஆட்சிமன்றக் குழுவுக்கு உறுப்பினரை நியமிக்கும் விவகாரத்தில் இரண்டு அணிகளும் வெளிப்படையாகத் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவித்தன. குழப்பம் அதிகரித்ததைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி தலையிட்டுச் சமாதானம் செய்ய வேண்டிவந்தது. ஒருவழியாக, அவரவர் தங்களுக்கு விருப்பமான உறுப்பினரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தற்காலிகத் தீர்வுக்கு வந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதியை இணைத்ததன் மூலம் பழனிசாமி அணியின் கை ஓங்கியிருப்பதாகவே கட்சிக்குள் குரல்கள் எழுந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் இரு அணித் தலைவர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், ‘இது சரிப்பட்டு வராது’ என்று பன்னீர்செல்வம் அணியின் மூத்த தலைவர் கூற, முதல்வர் அனைவரையும் சமாதானப்படுத்தியதையும் அதிமுகவினர் கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் போட்டியிடவே கூடாது என்று ஒரு தரப்பும், அவர்தான் வேட்பாளர் என்று மறு தரப்பும் முரண்டுபிடிக்கவே, விருப்ப மனுவைப் பெற்று ஆட்சிமன்றக் குழு முடிவெடுக்கும் என்று ஒருவழி யாக முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அதிமுக அணிக்குத்தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர் மதுசூதனன் என்பதால், இதில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். இதையடுத்து, தனது தரப்பை உறுதிசெய்துகொள்ள பழனிசாமித் தரப்பு முனைப்புக் காட்டுவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர் கட்சியை யார் கைப்பற்றுவது என்பதில் இரண்டு தரப்பும் பதற்றப்படுவதை வெளிப்படையாகவே காண முடிகிறது. இதன் வெளிப்பாடு தான் மதுரை தோப்பூர் முப்பெரும் விழாவில் உருவான குழப்பம். விழாவில் வேண்டுமென்றே பன்னீர்செல்வத்தைப் புறக்கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தரப்பினர் குற்றச்சாட்டை வைத்தனர். அதை மைத்ரேயன் பேட்டியாகவே கொடுத்தார்.

ஆரம்பித்துவைத்த ஆர்.கே. நகர்

ஒரு வகையில் பார்த்தால், அதிமுகவின் பயணத்தில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு முக்கியக் கண்ணியாகவே தெரிகிறது. பன்னீர்செல்வம் அணிக்கும், அப்போது ஒரே அணியில் இருந்த பழனிசாமி - தினகரன் அணிக்கும் இடையில் நேரடிப் போட்டிக் களமாக உருவானது. வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க அங்கு நடந்த பணப் பட்டுவாடா பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத் தடுத்த நிகழ்வுகளில் கட்சியையும் சின்னத்தையும் முடக்கியது தேர்தல் ஆணையம். அதுவரை பன்னீர்செல்வம் தரப்புதான் பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் நெருக்கம் காட்டிவந்தது.

இப்படியே போனால் தங்களது நிலை அவ்வளவுதான் என்று நினைத்த பழனிசாமி தரப்பு, மத்திய அரசுடன் நெருங்க ஆரம்பித்தது. கட்சியிலிருந்து தினகரனை ஓரங்கட்டியது, சசிகலா குடும்பம் இல்லாத அரசியல் என்று முக்கிய முடிவுகளை எடுத்தது. காலப்போக்கில் இரு அணிகளும் இணைந்தால்தான் எதிர்காலம் எனும் சூழல் உருவானதைத் தொடர்ந்தே பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.

அணிகள் இணைந்தாலும் இருவரும் தனித்தனியாகவே இயங்கிவருகிறார்கள். பேருக்குத்தான் துணை முதல்வராக இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியவில்லை. உடனிருக்கும் சக தலைவர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட யாருக்கும் எதுவும் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் பன்னீர்செல்வம் அணியினர் மத்தியில் பரவலாக இருக்கிறது.

தாங்கள் எதிர்பார்த்த பதவிகளும் ஒதுக்கப்படவில்லை. 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற பொதுக்குழு முடிவும் அமல்படுத்தப்படவில்லை என்பதை பன்னீர்செல்வம் அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத்தொடங்கினார்கள். ‘சின்னம் வரும் வரை பொறுமை காப்போம்’ என்று பன்னீர்செல்வம் சமாதானப்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் கிடைக்கும் சூழ்நிலை உருவான நேரத்தில், தனது ஆதங்கத்தை முதன்முதலாக வெளிப்படுத்தினார் மைத்ரேயன். “அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை, வழிகாட்டுக் குழு ஏன் அமைக்கப்படவில்லை?” என்ற அவரது ஃபேஸ்புக் பதிவை மற்றவர்கள் மறுத்தாலும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்பதுதான் உண்மை என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். திண்டுக்கல் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதனும் இதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

காணாமல்போன கட்டுப்பாடு

இதோ இன்றைக்கு, ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளரை அறிவிக்கவிருக்கிறது அதிமுக. யாரை நிறுத்தினாலும் கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கும் என்றும் திமுக வேட்பாளரைத் தோற்கடிக்கும் தேர்தலாக இல்லாமல் சொந்த வேட்பாளர் மீது காழ்ப்புணர்ச்சி காட்டும் தேர்தலாக இது இருக்கும் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஜெயலலிதா காலத்தின் ராணுவக் கட்டுப்பாடெல்லாம் மலையேறிவிட்டதைத்தான் அதிமுகவின் இன்றைய நிலை காட்டுகிறது.

உண்மையில், கட்சிக்குள் குழப்பம் என்பது அதிமுகவுக்குப் புதிதல்ல. 1980-களின் இறுதியில் அதிமுகவுக்குள் நிகழ்ந்த குழப்பங்கள், அந்த காலகட்டத்தில் வேறு கட்சிகள் சந்தித்திராதவை. 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி சிதறுண்டது. ஆட்சியே மூன்றாண்டில் முடிவுக்கு வந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால், அன்று சக்திவாய்ந்த தலைமையாக உருவெடுத்த ஜெயலலிதா வின் தலைமையில் காலப்போக்கில் மூத்த தலைவர்கள் உட்பட, அதிமுகவினர் ஒன்றிணைந்தது வரலாறு. 89 சட்ட மன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா தலைமைதான் அதிமுகவை இனி வழிநடத்த முடியும் என்ற முடிவுக்கு வந்த தலைவர்கள், அவர் தலைமையின் கீழ் மீண்டும் ஒன்றுபட்டனர்.

அதன் பின்னர், தனது மறைவு வரை தலைமைப் பொறுப்பில் கட்சியை வழிநடத்தினார் ஜெயலலிதா. அதேசமயம், ஜெயலலிதா தலைமைக்குப் பின்னால் நிழல் தலைமை ஒன்றும் அதிமுகவை வழிநடத்தியது. கட்சிக்குச் சம்பந்தமில்லாதவர்கள்; ஆனால் அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் என்று இருந்த நிழல் தலைமை காரணமாக அதிமுகவின் அடுத்தகட்ட தலைமை என்பதே இல்லாத நிலை உருவானது.

அனுசரித்துச் செல்பவர்களுக்கும், நம்பகமாக இருப்பார் கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு கள் வழங்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு அடுத்து உள்ள வலிமையான தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர், வெளியேற்றப்பட்டனர். இதன் விளைவாக விசுவாசம் என்ற பெயரில் இரண்டாம் கட்டத் தலைமை, அதிமுகவுக்குள் உருவானது. ஆனால், வலுவான தலைமை உருவாகவில்லை. தற்போதைய நிகழ்வுகள் காட்டுவது அதைத்தான்!

- மு.அப்துல் முத்தலீஃப்,
தொடர்புக்கு: abdulmuthaleef.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x