Last Updated : 27 Nov, 2017 09:43 AM

 

Published : 27 Nov 2017 09:43 AM
Last Updated : 27 Nov 2017 09:43 AM

தமிழ்நாட்டின் கிளர்ச்சிகள் சுதந்திர இந்தியாவுக்கானவை இல்லையா?

ஒடிசாவில் ‘பைகா’ சமூகத்தினர் போர் வீரர்களாகவும் இருந்தனர். அவர்களது வாடகை இல்லா நிலங்களை, 17-ம் நூற்றாண்டில் அங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் கைப்பற்றினர். இதை எதிர்த்து ஒடிசாவின் குர்தா பகுதி மன்னரின் தளபதியான பக் ஷி ஜகாபந்து பித்யாதர் தலைமையில் 1817-ல் கிளர்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆங்கிலேயர்கள் அடித்து விரட்டப்பட்டனர். ‘பைகா கிளர்ச்சி’ எனப்படும் இந்தச் சம்பவத்தை முதல் சுதந்திரப் போராக அறிவிக்க வேண்டும் என ஒடிசாவில் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைப்பு காட்டுகிறது.

சமீபத்தில் புவனேஸ்வர் சென்றிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், முதல் சுதந்திரப் போர் மாற்றி எழுதப்பட இருப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு முதல் பள்ளிப் பாடங்களில் ஒடிசாவில் ‘பைகா கலகம்’ முதல் இந்திய சுதந்திரப் போராக மாற்றி எழுதப்படுவதாகவும் உறுதியளித்துள்ளார். இதன் மூலம், நாம் நடத்திய முதல் சுதந்திரப் போர் சுமார் 50 ஆண்டுகள் முன்பாகவே தொடங்குகிறது என்பது நல்ல விஷயம். ஆனால், அது ஒரு அரசியல் ஆதாயம் தேடும் அறிவிப்பாக இருப்பதுதான் முரண்.

அரசியல் ஆதாயம்

ஒரு அறிவிப்புக்கு முன்பாக அதன் மூலம் கிடைக்கப்போகும் பலனை முன்கூட்டியே திட்டமிடும் வழக்கம் பாஜகவுக்கு உண்டு. ஒடிசாவில் முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு பட்நாயக்கிடம் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பறிக்கும் தீவிர முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. இதனால், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை பைகா கிளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு முதல் முறையாக அங்கீகரித்தது. “200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரை எதிர்த்து ஒடிசாவில் பைகா கிளர்ச்சி நடைபெற்றது. இதற்கு உரிய கெளரவம் அளிப்போம்” என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். இதன் பிறகு ஏப்ரல் 16-ல் புவனேஸ்வர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பைகா கிளர்ச்சிக்குத் தலைமை ஏற்றிருந்த தளபதியான பக் ஷி ஜகாபந்து பித்யாதர் குடும்பத்தின் சந்ததியினரைக் கெளரவித்திருந்தார். இப்போது மத்திய அமைச்சர் ஜவடேகர் பைக்கா கிளர்ச்சியை முதல் சுதந்திரப் போராக அறிவிக்க ஒடிசாவில் அச்சாரமிட்டு வந்திருக்கிறார்.

கேரளத்தின் திருவாங்கூரில் 1808-ல் நடைபெற்ற கிளர்ச்சியை முதல் சுதந்திரப் போராக அறிவிக்க வேண்டும் என தென்னிந்திய வரலாற்றாசிரியர்கள் கோரிவருவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் நினைவுகூர்ந்தார். ஆனால், கேரளத்துக்கு முன்னதாகவே 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கிளர்ச்சி அவரது நினைவுக்கு வரவில்லை. ஒடிசாவிலும் கேரளத்திலும் கட்சியை வளர்ப்பதில் தீவிரமாக இருக்கும் பாஜகவுக்கு இதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்பதுதான் நோக்கம். தமிழகத்தில் கட்சி வளர்ச்சி தற்போதைக்குச் சாத்தியம் இல்லை எனும் சூழலில், வீரபாண்டிய கட்டபொம்மனின் போரையும், வேலூர் கிளர்ச்சியையும் சொல்ல ஜவடேகருக்கு மனமில்லை போலும்.

எதிர்ப்புக் குரல்கள்

1857-ல் மீரட்டின் சிப்பாய்க் கிளர்ச்சி பற்றி சாவர்கர் எழுதிய நூலில் அதை இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக முதன்முறையாகக் கூறியிருந்தார். அதே நூலில் 1806-ல் வேலூரிலும் இதைப் போன்ற ஒரு கிளர்ச்சி நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முதல் சுதந்திரப் போராக மீரட் கிளர்ச்சி பேசப்பட்டது. இதுவே தற்போது வரலாற்றுப் பாடங்களில் முதல் இந்திய சுதந்திரப் போராக 1857-ல் நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைந்த கல்விக் குழு, முதல் சுதந்திரப் போர் என்பது மீரட் கிளர்ச்சியில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் மா.பொ.சி தலைமையிலான ‘தமிழரசு கழகம்’ உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தது. வரி கட்ட முடியாது என கிழக்கிந்தியக் கம்பெனியினரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் 1792-ல் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் நடத்திய போரில் இருந்தே முதல் சுதந்திரப் போர் தொடங்கப்பட வேண்டும் என அது வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து 1801-ல் மருது பாண்டிய சகோதரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து நடத்திய போர், 1806-ன் வேலூர் சிப்பாய்க் கலகம் ஆகியவற்றிலிருந்து முதல் சுதந்திரப் போர் வரலாற்றைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தைப் போல் கேரளம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தன. 1806-ல் திருவிதாங்கூரின் வேலுத்தம்பி கிழக்கிந்திய கம்பெனியினரை எதிர்த்துப் புரிந்த போரை கேரளத்தவர் நினைவுகூர்ந்தனர்.

அரசியல் ஆதாயம்

கர்நாடகத்தில், மீரட் சிப்பாய்க் கிளர்ச்சிக்கு 100 ஆண்டுகள் முன்பாக கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த ஹைதர் அலியிலிருந்து தொடங்கவும், 1824-ல் கிழக்கிந்திய கம்பெனியிடம் போர் புரிந்த ராணி கிட்டூர் சின்னம்மாவின் வெற்றியும் இடம்பெற வேண்டும் என்றும் குரல் கொடுத்தனர். சமீபத்தில் கர்நாடக சட்ட மன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்து வீர மரணம் அடைந்தவர் திப்புசுல்தான் என நினைவுகூர்ந்துள்ளார்.

2006-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் வேலூர் சிப்பாய் கலகத்தின் 200-வது ஆண்டு விழா நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. அப்போது நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகளில் நடைபெற்றன. அப்போது, 1857-க்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை வரலாற்றாசிரியர்கள் பலரும் தம் ஆய்வில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் சுதந்திரப் போர் எது என்பது தொடர்பாக, இதுபோன்ற குரல்கள் பல்வேறு தரப்பிலிருந்து ஒலித்துவரும் நிலையில், இவை தொடர்பாக ஆய்வுசெய்ய தேசிய அளவில் வரலாற்றாசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். நம் நாட்டின் முதல் சுதந்திரப் போரை அவர்கள் இறுதி முடிவுசெய்து அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதை விடுத்து, மத்தியில் ஆட்சிக்கு வரும் அரசுகள் தன்னிச்சையாகச் செய்யும் அறிவிப்புகள் அரசியல் ஆதாயத்துக்கானவை என்றே பார்க்கப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x