Last Updated : 20 Oct, 2017 10:00 AM

 

Published : 20 Oct 2017 10:00 AM
Last Updated : 20 Oct 2017 10:00 AM

ஐரோப்பாவை வியக்கவைக்கும் ரொமேனியாவின் பொருளாதார வளர்ச்சி

கி

ழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடு என்று ஒரு காலத்தில் அனுதாபப்பட வைத்த ரொமேனியா இப்போது வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தபோது கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையும் காட்டப்பட்ட அக்கறையும்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தற்போது பெரிதும் கைகொடுக்கின்றன.

ரொமேனியா, ஐரோப்பாவின் தென் கிழக்கில் உள்ளது. தலைநகரம் புகாரெஸ்ட். மொத்த மக்கள் தொகை 2 கோடிக்கும் மேல். கருங்கடல், பல்கேரியா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா, மால்டோவா ஆகியவை இந்நாட்டைச் சுற்றி உள்ளன. பரப்பளவு 2,38,397 சதுர கிலோ மீட்டர். ஜெர்மனியில் பிறக்கும் டான்யூபே நதி பல நாடுகள் வழியாக ஓடிவந்து இறுதியில் ரொமேனியாவில்தான் வடிகிறது. கார்பேத்தியன் மலைத்தொடர்கள் இந்நாட்டின் வடக்கிலிருந்து தென்கிழக்காகக் கடக்கின்றன.

நவீன ரொமேனியா 1859-ல் உருவானது. மால்டோவியா, வலாச்சியா பகுதிகள் இதில் இணைந்தன. ஆட்டோமான் பேரரசிலிருந்து 1877-ல் இது விடுதலை பெற்றது. முதல் உலகப் போருக்குப் பிறகு டிரான்சில்வேனியா, புகோவினா, பெசராபியா ஆகியவை ரொமேனியாவில் இணைந்தன. இரண்டாவது உலகப் போரின்போது முதலில் நாஜி ஜெர்மனியுடன் இணைந்திருந்த ரொமேனியா 1944-ல் நேச நாடுகளின் அணியில் சேர்ந்தது. சில காலம் சோவியத் படைகள் இதைத் தங்களுடைய ஆக்கிரமிப்பில் வைத்திருந்தன. போருக்குப் பிறகு சோஷலிசக் குடியரசானது. பிறகு வார்சா ஒப்பந்த நாடானது. 1989 மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயக நாடானது. அதிலிருந்து முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும்தான் கோலோச்சுகின்றன.

ரொமேனியாவில் தற்போது நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதி சேவைத் துறையிலிருந்துதான் கிடைக்கிறது. வேலைவாய்ப்பும் அப்படியே. இயந்திரங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் நாடு சிறந்து விளங்குகிறது. துணிகள், அறைக்கலன்கள், கார்கள் இதர நுகர்பொருள்கள் என்று அனைத்தையும் வாங்கி நுகர்வதில் 8% வளர்ச்சி இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே ஏற்பட்டிருக்கிறது.

வாய்ப்புகளை அள்ளித் தந்த

பன்மொழிப் பயிற்சி

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.7% என்ற அளவில் வளர்ந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு வேகமான வளர்ச்சி ஏற்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி வளர்ச்சி அளவு 2.4%தான். 2015-ல் 3.9% ஆக இருந்த ஜிடிபி 2016-ல் 4.8% ஆனது. இதே காலத்தில் பிரிட்டனின் வளர்ச்சி 1.8%, 2.2% ஆக இருந்தது. 2017-ம் ஆண்டு முழுக்க ரொமேனியாவின் சராசரி வளர்ச்சி 5.5% ஆக இருக்கும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) கணக்கிட்டுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் ஆழமாகவும் விரிவாகவும் வளர்ச்சி ஏற்பட்டுவருகிறது. கம்யூனிஸ நாடாக இருந்தபோது அறிவியல், கணிதம், தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் ரொமானியர்களுக்குப் பல்வேறு மொழிகளைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகம். இதனால் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாகி வளர்ந்தபோது இந்நாட்டு மக்கள் அதில் ஏராளமான வேலைவாய்ப்புகளை அயல்பணி ஒப்படைப்பாகவே பெற்றனர்.

ரொமானிய மொழிக்கு லத்தீன் அடிப்படை. எனவே இவர்களால் பிற மொழிகளை எளிதில் கற்க முடிந்திருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர். ஜிடிபிக்கு அது அளித்து வரும் பங்களிப்பு 2025-ல் இரட்டிப்பாகிவிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, ஐஸ்லாந்துக்குப் பிறகு அதிவேக பிராட்பேண்ட் இணையதள சேவைக் கட்டமைப்பு ரொமேனியாவில்தான் இருக்கிறது.

நாடு தேடிவரும் வேலைவாய்ப்பு

அமெரிக்க மோட்டார் கார் நிறுவனம் ஃபோர்டு, ஃபிட்பிட் நிறுவனம், ஸ்மார்ட் வாட்ச், சீமென்ஸ், பாஷ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந் நாட்டில் புதிய ஆலைகளையும் விற்பனையகங்களையும் திறந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதனால் நேரடி வேலைவாய்ப்புகளைப் பெற்றுவருகின்றனர். ரொமேனியர்கள் வேலைதேடிப் பிற நாடுகளுக்குச் செல்வதுதான் வழக்கம். இப்போது அவர்களில் பலர் உள் நாட்டிலேயே நல்ல ஊதியம் கிடைப்பதால் நாடு திரும்பவும் தொடங்கியுள்ளனர்.

ரொமேனிய அரசு நுகர்வை ஊக்குவிக்க வரி விகிதத்தை 2015-ல் குறைத்தது. மதிப்புக்கூட்டப்பட்ட வரியும் 24%-லிருந்து 20%, 19% என்று படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இது நுகர்வை அதிகப்படுத்தப் பெரிதும் உதவியிருக்கிறது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் மட்டுமல்ல அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊதியம் உயர்த்தப்பட்டது. அப்படியிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலேயே ரொமேனியாவில்தான் ஊதியம் மிகக் குறைவு. 2016-ல் வேலைவாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கை 8.6%-லிருந்து 5.9% ஆகக் குறைந்தது.

பிரெக்ஸிட் ஆதரவு வாக்களிப்புக்குப் பிறகு ஐரோப்பியச் சந்தையில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. பிரிட்டனில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை ரொமானியாவில் நிறுவ பேச்சுகளைத் தொடங்கிவிட்டன.

ரொமேனியாவில் பிரச்சினைகளும் இல்லாமல் இல்லை. ஊழல் மிகுந்த நாடு என்ற அவப் பெயர் இப்போதும் நீடிக்கிறது. அரசாங்கத்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கினால் அதைக் குற்றச்செயலாகக் கருதக் கூடாது என்றொரு சட்டம் இயற்றப்பட்டது! மக்கள் கடுமையாக அதை எதிர்த்தனர். அரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. ஆனாலும் அரசு மக்களுடைய நம்பிக்கையை முழுதாகப் பெறவில்லை. போக்குவரத்துத் துறையில் அடித்தளக் கட்டமைப்புகள் மிக மோசமாகவே இருக்கின்றன. மொத்தம் 747 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே மோட்டார் வாகனங்களுக்கான சாலை இருக்கிறது. ரயில்வே துறை அதைவிடப் பரவாயில்லை என்றாலும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

அரசின் நிதி பற்றாக்குறையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசின் செலவுக்கும் வரவுக்கும் இடையிலான பற்றாக்குறை – ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் 2015-ல் 0.8% ஆக இருந்தது 2016-ல் 3% ஆக உயர்ந்துவிட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5% ஆகப் பராமரிக்க முடியாது, 4% ஆகக் குறையும் என்றும் கணிக்கப்படுகிறது. எனினும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி எப்படி அடிப்படைக் காரணமாகவும் உந்துசக்தியாகவும் இருக்க முடியும் என்பதற்கு நவீன ரொமேனியாவின் பொருளாதார நிலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x