Last Updated : 18 Oct, 2017 10:16 AM

 

Published : 18 Oct 2017 10:16 AM
Last Updated : 18 Oct 2017 10:16 AM

கொசுக்களுடன் ஒரு பனிப்போர்!

கொசுக்களுக்கு எதிரான பனிப் போர் தொடங்கி ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. இன்னும் நம்மால் அதை ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. கொசுக்களை ஒழிப்பது இந்தப் பனிப்போரின் முக்கியமான முதல் கட்டம். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி’ மருந்தைத் தெளித்தால், வீட்டைச் சுற்றியும் சாக்கடையிலும் ‘டெல்ட்ராமெத்திரின்’ மருந்தைத் தெளித்தால், நெருக்கடி மிகுந்த குடியிருப் புகளில் ‘கிரீசால்’ மருந்தைப் புகையவிட்டால், கொசுச்சுருளில் உள்ள ‘பைரித்திரம்’ மருந்தைப் புகைத்தால் கொசுக்கள் இறக்கும். ஆனால், நிலைமை மாறிவிட்டது. இந்தப் பூச்சிக்கொல்லிகளையே எதிர்க்கக் கூடிய ஆற்றல் மரபியல்ரீதியாக கொசுக் களுக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால், ஸ்பிரே, சுருள், க்ரீம் என்று எல்லாவற்றி லுமிருந்தும் தப்பித்துவிடுகிறது. இதுதான் இன்றைய விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

கொசுக்கள் வாழும் இடங்களைக் கண்டறிந்து அழித்தொழிப்பது இந்தப் பனிப்போரின் அடுத்த கட்டம். வீட்டைச் சுற்றி சுத்த தண்ணீர், கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, பிளாஸ்டிக் பொருட்களால் சாக்கடை அடைத்துக் கழிவுநீர் தேங்குவதைத் தவிர்ப்பது, தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளால் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும். ஆனால், சுற்றுப்புறச் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையும், கழிவுநீர் அகற்றுதலும் இன்னமும் முழு அளவில் வெற்றி அடையவில்லை என்பது தான் யதார்த்தம்.

பிரேசில் வியூகம்

சமீபத்தில் கொசுக்களை ஒழிப்பதற்கு உலக அளவில் இரண்டுவித நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியுள்ளனர். அதில் ஒன்று, கொசுக்களை மலடாக்குவது. ஜிகா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிற பிரேசில் நாட்டில்தான் இதைச் செயல்படுத்தி உள்ளனர். அதாவது, குறிப்பிட்ட பருவத்துக் குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு ‘டெட்ராசைக்ளின்’ மருந்து தேவைப்படும் வகையில், கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து, வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக்களோடு மற்ற கொசுக் கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள் தொடர்ந்து வளர வேண்டுமானால், அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது, அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. இறந்துவிடும். இந்த வகையில் கொசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பிரேசில்.

மேற்கு பனாமா, மலேசியா, கரீபியன் தீவுகள் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனைகளில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. என்றாலும், இந்தத் தொழில்நுட்பச் செயல்பாட்டுக்கு மிக அதிகமாக செலவு ஆகிறது என்பதும், முறையான இடைவெளியில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்தக் கொசுக்களை உற்பத்திசெய்து வெளியில் விட வேண்டும் என்பதும் இதில் இருக்கும் பெரிய சிக்கல்கள்.

நவீனக் கொசு ஒழிப்புத் திட்டம்

சில நாடுகளில் கொசு ஒழிப்புக்கு நிரந்தரத் திட்டங்களை வகுத்துள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அஃபினிஸ்’ (Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக்களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லா மல் போகும். கொசுக்களை வேரோடு ஒழிக்கும் தொழில்நுட்பம் இது.

கொசுக்களை ஒழிக்கும் அடுத்த நவீன நடவடிக்கை வடக்கு ஆஸ்திரேலியாவில் கேய்ர்ன்ஸ் நகரில் நடந்துள்ளது. ‘வால்பேச்சியா (Wolbachia) எனும் பாக்டீரியாவை ஆண், பெண் கொசுக்களின் உடலில் செலுத்திவிடுகின்றனர். இந்த பாக்டீரியா உள்ள ஆண் கொசுவோடு இது இல்லாத பெண் கொசு இனவிருத்தி செய்யுமானால், அந்தக் கொசு வால் முட்டை பொறிக்க முடியாது. பாக்டீரியா உள்ள பெண் கொசுவுடன் பாக்டீரியா உள்ள ஆண் கொசு இனவிருத்தி செய்யுமானால், முட்டை இடும்; ஆனால் இவற்றுக்குப் பிறக்கிற கொசுவுக்குள் வால்பேச்சியா பாக் டீரியா நுழைந்துவிடும். இப்படிப் புதிதாகப் பிறக்கிற கோடிக்கணக்கான கொசுக்களுக் குள் இந்த பாக்டீரியா புகுந்து, புதிய கருத் தரிப்புக்குத் தடை போடும். இதன் பலனால், கொசு உற்பத்தி குறையும். டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவது குறையும்’ என்று பிரபல ‘லேன்சட்’ மருத்துவ ஆராய்ச்சி இதழ் தெரிவிக்கிறது. தற்போது இந்தோனேசியா, வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. நம்பிக்கை தரும் முடிவுகளும் கிடைத்தன.

உலக அளவில் கொசுக்களோடு நடக்கும் இந்தப் பனிப்போர், இன்னும் முன்னேறுவதற்கு நவீன விஞ்ஞானம் தொடர்ந்து பாடுபடும் என்பது உண்மை என்றாலும், கொசுக்களின் ராஜ்யமாகத் திகழும் இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பதுதான் மிகப் பெரிய கேள்வி!

முன்பே தடுக்கலாமே?

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறைகூவலையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ‘இந்தியாவில் ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை மற்றும் தடுப்பு ஏற்பாடுகளுக்கு என்று ரூ.6,000 கோடியை மத்திய அரசு செலவுசெய்கிறது. மலேரியாவுக்கு இந்தச் செலவு ஆண்டுதோறும் ரூ.11,640 கோடி. இப்படி நோய் வந்த பிறகு கோடிக்கணக்கில் செலவு செய்வதற்குப் பதிலாக, கொசுக்களை ஒழிக்கும் நவீன வழிகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கினால், எதிர் காலத்தில் இந்த மாதிரியான செலவுகளை இந்தியாவில் நிரந்தரமாகக் குறைக்கலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. நம் அரசுகளின் காதில் விழுமா?

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x