Last Updated : 01 Oct, 2017 10:33 AM

 

Published : 01 Oct 2017 10:33 AM
Last Updated : 01 Oct 2017 10:33 AM

பேரறிவாளனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும் பரோல்: மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரபராதியை விடுவிக்குமா?

 

வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமானைப் பார்க்க ஒருமுறை நண்பர் அமீர் அப்பாஸ், இயக்குநர் மீரா கதிரவன், கீற்று ரமேஷ் மற்றும் என் உதவி இயக்குநர்களோடு சென்றேன். அப்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்கில் தொடர்பு உடையவர்களாயிற்றே.. சந்திப்பதா, வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று பேசத் தொடங்கினோம். எங்களைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். பிறகு, அவ்வப்போது பேரறிவாளனை சந்திக்கத் தொடங்கினேன். அது நட்பாக உருவானது. இந்த நேரத்தில்தான் தமிழக சட்டப்பேரவையில் ‘பேரறிவாளனை விடுதலை செய்யலாம்’ என்ற தீர்மானம் நிறைவேறியது. மற்றொரு புறம், ‘உரிய அரசு விடுதலை செய்யலாம்’ என்ற தீர்ப்பும் வந்தது.

செங்கொடி மீதான மதிப்பு

நான் ஒரு சினிமா இயக்குநர். எப்போதுமே நாம் கற்பனை செய்யும் உணர்ச்சியைவிட (எமோஷன்) உண்மை நிகழ்வு உணர்ச்சிகரமானது என்பது என் நீண்டகால வாதம். ஒரு திரைப்படத்துக்கான கதை விவாதம் நடக்கும்போது பெரும்பாலான இடங்களில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அம்மா – மகன் பாசம், அப்பா – மகள் அன்பு, நண்பர்கள் தியாகம்.. என்பதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சிகள் படத்தில் ஆங்காங்கே சிதறியிருக்க வேண்டும். கதை விவாதத்தின்போது, இந்த கருத்தை வலியுறுத்தி, படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளை இடம்பெறச் செய்வதுதான் ஒரு படைப்பாளியின் வேலை. அந்த உணர்ச்சிதான் படத்தை வெற்றியடைய வைக்கும். அதுதான் படத்தின் பிரதான தேவையாக இருக்கிறது.

மரண தண்டனைக் கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை ஆவார்களா? இல்லையா என்ற சந்தேகம் நிலவிய சூழலில், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இளம்பெண் செங்கொடி தீக்குளித்து இறந்தார். பேரறிவாளனும், செங்கொடியும் அண்ணன் தங்கை இல்லை. இருவரும் பார்த்துக்கொண்டதுகூட இல்லை. இந்த மாதிரியான உணர்ச்சி தான் எல்லாவற்றையும் கடந்தது. இது எந்த சினிமாக்காரனும் கற்பனை செய்ய முடியாதது. தூக்கு தண்டனைக்கு எதிராக, உலகில் வேறு எங்கும் இதுபோல நடந்ததில்லை. செங்கொடியின் மரணம் குறித்து கேள்விப்பட்ட பிறகு பேரறிவாளன், ‘‘இதற்கு நானே இறந்திருக்கலாம்’’ என்றார்.

பேரறிவாளனின் தந்தை, ஜோலார்பேட்டையில் வசிக்கிறார். தான் வசிக்கும் வீட்டுக்கு ‘பேரறிவாளன் இல்லம்’ என்று மகன் பெயரைத்தான் சூட்டியிருந்தார். இந்த சூழலில், பரோலில் வீட்டுக்கு வந்திருக்கும் பேரறிவாளன் தனக்கு தூக்குத்தண்டனை குறித்த நாளான செப்டம்பர் 9-ம் தேதியிலேயே அந்தப் பெயர் பலகையை எடுத்துவிட்டு தனக்காக உயிர் நீத்த செங்கொடி மீதான பெரும் மதிப்பால் ‘செங்கொடி இல்லம்’ என்ற பெயர்ப் பலகையை வீட்டுச் சுவரில் மாட்டியுள்ளார். இந்த உணர்ச்சியை எப்படி விவரிப்பது!

மாற்றப்பட்ட இறுதிக்காட்சி

பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை 8 நிமிடங்கள் போனில் பேசக் கிடைக்கும் அனுமதியில் என்னோடும் பேசுவார். அதுவும், ‘எப்படி இருக்கீங்க?’ என்று நலம் விசாரிப்பதற்குள் நேரம் ஓடிவிடும். அப்போதுகூட அவர் சொல்ல வரும் தகவல்களை சரியாக கலந்து பேசிக்கொள்ள முடியாது.

பரோலில் வெளிவர இத்தனை ஆண்டுகளாக விண்ணப்பிக்காமல் இருந்த பேரறிவாளன், அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று பரோலுக்கு விண்ணப்பித்தார். முதலில் கிடைக்கவில்லை. ‘இனி பரோலில்கூட வெளியே வர முடியாதா?’ என்று அவர் வேதனைப்படுவதைப் பார்த்தபோது வலி படர்ந்தது.

மரண தண்டனையை மையமாக வைத்து ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற படத்தை எடுத்தேன். பட வேலைகள் தொடங்கிய நேரத்தில், ‘பேரறிவாளனுக்கு மரண தண்டனை’ என்ற வழக்கு நிலுவையில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை உறுதியானால், என் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஆர்யாவை தப்பிக்கச் செய்து மகிழ்ச்சியான முடிவாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு வந்த தால் படத்தின் கிளைமாக்ஸில் மரணதண்டனையின் வலி எப்படி இருக்கும் என்று சொல்ல விரும்பினேன். சொன்னேன். படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்ததுகூட பேரறிவாளனின் வழக்குதான்.

பேரறிவாளன் மீது குற்றம் பதிவு செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை, ‘நான் நிரபராதி; விடுதலை செய்யுங்கள்’ என்று மட்டும்தான் அவர் சொல்லி வருகிறார். கருணை மனுவில்கூட ‘எனக்கு கருணை காட்டுங்கள்’ என்று குறிப்பிடவில்லை.

பேரறிவாளன் பரோலில் வெளியே வந்ததும் நான், இயக்குநர் அமீர், நடிகர் பொன்வண்ணன் மூவரும் அவர் வீட்டுக்குச் சென்றோம். நிறைய பகிர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அமீரும், பொன்வண்ணனும், ‘நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று அவரை வேண்டிக் கொண்டனர். அவர் மறுத்தார். திரும்பத் திரும்ப அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், நான் வலியுறுத்தவில்லை. ஏனென்றால் நானும் திருமணமாகாதவன். நான் வலியுறுத்தவில்லையே தவிர, என் விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. ஏனென்றால், நான் திருமணமாகாமல் வெளியே இருப்பது வேறு; அவரது நிலை வேறு. இத்தனை ஆண்டுகளாக சிறைக்குள் இருந்த இளைஞன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஒருவழியாக அதற்கு அவர் சம்மதித்திருக்கிறார்.

உப்பில்லாத உணவு

நீண்ட உரையாடலுக்கு இடையே, ‘அப்பப்போ உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. கவனமாக இருங்கள்?’ என்றேன். அதற்கு அவர், ‘அண்ணே! அதுதான் எனக்கு ஒரு ரிலீஃப். உடல்நிலை சரியில்லாமல் போவதால்தானே அப்பப்போ வெளியே வர முடிகிறது. அதற்காகவாவது உடல்நலமின்றி இருக்கலாமே’ என்றார்.

இப்போது கிடைத்திருக்கும் பரோல்கூட அவருக்கு மனக் கஷ்டத்தைதான் கொடுத்திருப்பதாக உணர்கிறேன். மீண்டும் உள்ளே போக வேண்டும் என்பது அவரது வலியை இன்னும் அதிகரிப்பதாக உணர்கிறார்.

அவரது வீட்டில் இருந்து நாங்கள் புறப்படத் தயாரானபோது, ‘சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று கூறிய பேரறிவாளன் எங்களை விடவே இல்லை. எல்லோரும் சாப்பிட்டோம். சாப்பாட்டில் உப்பும், காரமும் குறைவாக இருந்தது. சிறையில் உப்பு, காரம் எதுவும் இல்லாமல் சாப்பிட்டே பழகியிருக்கிறார் என்பது புரிந்தது. அவரைத் திரும்பிப் பார்த்தேன். ‘அப்படிதாண்ணே ஆகிப்போச்சு’ என்றார்.

எத்தனை குற்றவாளிகள் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது உலக நீதி. பேரறிவாளன் விஷயத்திலும் அந்தக் கருத்து தான் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ‘உரிய அரசு விடுதலை செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் 01CHRGN_JANANATHAN ஜனநாதன் right

அறிவித்தது நாம் அறிந்ததே. உரிய அரசு எது என்ற வழக்குதான் இப்போது நிலுவையில் உள்ளது.

‘அவரை விடுதலை செய்வதற்கான உரிமை, மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்க வேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவத்தின்படி சரி’ - இதுதான் என் அரசியல் கருத்து. ஒரு கட்டுரையாளனாக இந்த இடத்தில் இதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். தவிர, மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்தே தனக்கு விடுதலை தர வேண்டும் என்பதைதான் பேரறிவாளன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளின் அந்தச் செயல் வாயிலாக, ஒரு நிரபராதி விடுதலை செய்யப்படுவார் என்றே நானும் கருதுகிறேன்.

கட்டுரையாளர்: தேசிய விருது பெற்ற ‘இயற்கை’ திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x