Last Updated : 17 Sep, 2017 10:10 AM

 

Published : 17 Sep 2017 10:10 AM
Last Updated : 17 Sep 2017 10:10 AM

தனிக் கட்சி ஆரம்பித்து அதில் ரஜினி இணைந்தால்..? - பக்தி, ட்விட்டர், அகிம்சை, அரசியல், குல்லா, ரஜினி.. என களைகட்டிய ‘கேள்வியின் நாயகன்’ நிகழ்வு

’தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, ‘யாதும் தமிழே’ 2 நாள் கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் ‘கேள்வியின் நாயகன்’ என்ற பெயரில், நடிகர் கமல்ஹாசனுடன் சுவாரசியமான கேள்வி - பதில் நிகழ்வு நடந்தது. இதில் வாசகர்கள், பொதுமக்கள் கேட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கும் தனது வழக்கமான பாணியில் மிகவும் உற்சாகமாக, சுவாரசியமாக அவர் பதில் அளித்தார். இனி, வாசகர்களின் கேள்விகளும்.. ‘கேள்வியின் நாயகன்’ அளித்த பதில்களும்..

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆக்டிவாக செயல்பட்டபோது அமைதியாக இருந்த நீங்கள் தற்போது திடீரென பொங்கியது ஏன்? நீங்கள் அப்போது நடித்தீர்களா, இல்லை இப்போது நடிக்கிறீர்களா?

இதற்கு நான் பதில் சொல்வதைவிட நீங்கள் (கூட்டத்தைப் பார்த்து) சொன்ன பதில் நியாயமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது பதிலல்ல; தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நல்ல நடிகன்தான். இது நடிப்பாக இருக்கக்கூடும் என்று அவர்களுக்கு வந்த சந்தேகத்துக்கு, பல நடிகர்கள் காரணம். நடிப்பைத் தொழிலாகப் பார்க்காமல், பதவிக்காக அதைச் செய்தவர்களை சொல்கிறேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகிவிட்டதால்தான் நானும் நடிப்பதாக நம்புகிறார்கள். இந்த முகம் எப்படிப்பட்ட முகம் என்பது போகப்போகத் தெரியும்.

படங்களில் வேதாந்தம், சித்தாந்தம் பேசுகிறீர்கள். உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. பகுத்தறிவோடு கடவுளை ஈர்க்கும் விஷயங்கள் ஒன்றுகூட இல்லையா? உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லை?

கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ‘உனக்குள்ளே கடந்து செல்’ என்பதுதான் அதன் பொருள். ஆதிசங்கரரின் ஸ்லோகங்கள் எல்லாம், என்னையே குறிக்கின்றன. வேறு எங்கேயும் பார்க்கவில்லை. அதை நான் இப்படி புரிந்து கொண்டிருக்கிறேன். இல்லை என்று சொல்ல பண்டிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் மதத்தையும், கடவுளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் பிரிந்து பல்லாயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்டிரக்சர். அது ஒரு பிசினஸ். அதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால், கடவுளை நம்பும் மனிதர்களைக் கும்பிடுகிறேன். ஒரு நல்லது கூட தெரியவில்லையா என்றால், எல்லா மதங்களிலும் உள்ளன. ஆனால், அது மரபாக மாறும்போது எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். ஞானம் அப்படி முந்தும். எனக்கு உங்கள் பக்தி மீது கோபமே கிடையாது. அந்த பக்தியைப் பயன்படுத்திக்கொண்டு விளையாடுபவர்கள் மீதுதான் கோபம். அவர்கள் இல்லாமல் பக்தியே இல்லை என்று நம்புகிறார்களே, அவர்கள் மீது கோபம். பக்திக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாம். கோயில்களை இடித்து தள்ளு என்று சொல்வதற்கு பெயர் பகுத்தறிவு கிடையாது. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்குப் பேசவராது. ஆனால், வேறொரு மொழி இருக்கிறது. அது அன்பெனும் மொழி. அன்பைச் சொல்லுங்கள், உடனே புரிந்துகொள்வேன்.

வேறு மதத்தில் நல்லது இல்லையா என்று கேட்டால், எனக்கு இஸ்லாத்தில், வைணவத்தில், சைவத்தில், சமணத்தில் தென்படுகிறது. தேவனில்லாத ஸ்பிரிசு்சுவாலிட்டியில் தென்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு, ‘தெய்வம் நம்முடன் இருக்கிறது. அது ஒன்றும் செய்யாது. அது அதன் வேலையைச் செய்கிறது. நாம் நம் வேலையைச் செய்வோம்’ என்கிறார்கள். அது ஒரு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள். அதன் பொருள் சகாயம் செய்யாது என்பதால்தான். இதையெல்லாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது. அதில் கெட்டது என்றால் மதாச்சாரிகள்தான்.

வலைதளங்களில் வீரம் பொங்க வார்த்தைப் போராட்டம் நடத்தும் முகநூல் போராளிகளால் நமக்கு உபகாரமா, உபத்திரவமா?

எறும்பும் தன் கையால் எண் சாண். பாலம் கட்ட அணில் உதவும் என்றால், தேன்கூடு கட்ட தேனீ உதவும் என்றால், நம் சமூகத்துக்கு எல்லா ஊடகங்களும் உதவும், உதவ வேண்டும். முகநூல் உள்ளிட்டவற்றை உதவும்படி நாம்தான் செய்ய வேண்டும். ட்விட்டரும் உதவும், இதோ இந்த மேடையும் உதவும். நாம் அதை மாற்ற வேண்டும். அந்தக் கடமை, நேரம் நமக்கு வந்துவிட்டது.

அரசியலுக்கு வரப்போவதாக சொல்லும் நீங்க ஏன் பொதுமேடைக்கு வரமாட்டேங்கிறீங்க?

தங்கைக்கான பதில்தான் இதோ இந்த மேடை! இன்னும் பல உண்டு.

அகிம்சை முறையில் போராடி நம்மால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா? ஜல்லிக்கட்டுக்காக கூடியவர்கள் வேறொரு பிரச்சினைக்காக ஏன் ஒன்றுகூடவில்லை?

இது என்னைக் கேட்கிற கேள்வி இல்லை; உங்களைக் கேட்கும் கேள்வி. இது ஆரம்பக்கூட்டம். தம்பி, நினைத்தோமேயானால் இதுபோல் அறவழியில் போராட முடியும். அகிம்சை என்றால் இந்த காலத்தில் பலிக்குமா? கோழைகள் அதிகமாகிவிட்டதால் அகிம்சை பலிக்காது. காரணம் வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். அதனால்தானே என்னவோ, மாபெரும் சமண முனியை மகாவீரர் என்கின்றனர். அகிம்சையின் உச்சகட்டம் மகாவீரம். மகாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? அது வந்துவிட்டாலே, அகிம்சை வந்துவிடும். அந்த வீரம் வந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். துப்பாக்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் அந்த வீரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

‘காந்தி குல்லா, காவிக்குல்லா, காஷ்மீர் குல்லா, கோமாளிக்குல்லா தமிழர் தலையில்’ என்றீர்கள். கமல் சார் குல்லா என்னவாக இருக்கும்?

முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க. குளிருக்கு வேணா போட்டுக்கலாம். அதுவும் இங்க சென்னையில் எதுக்குங்க?

தமிழக முதல்வர்களைச் சந்திக்காமல் கேரள முதல்வரைச் சந்தித்ததன் நோக்கம் என்ன?

இங்கேயும் சந்திக்க ஆசைதான்.. போறதுக்குள்ள மாறிடுமோன்னுதான் பயம். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமா இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிஸம் வருகிறார்கள். நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிஸம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன். ஆனால் முடிவை யோசித்துதான் எடுப்பேன். அது எனக்கு மட்டுமானதல்ல; பல பேருக்காக எடுப்பது. நீங்கள் கொடுக்கும் பலமும், தைரியமும், அறிவுரையும்தான். அந்த சிஸ்டம் எப்படி வெற்றியடைகிறது என்று இதோ ‘தி இந்து’வுக்கு தெரியும். நீங்கள் சொன்னதுதான் என்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் சொல்லுங்கள். குரல் தெளிவாக இருக்க வேண்டும். கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி.. லேசா அழுத்தினா போதும். உங்களால் முடியும். ஊழலற்ற தலைமை வேண்டும் என்றால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். வேண்டாம் என்று நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை ஐந்தே மாதத்தில் சம்பாதிக்கலாம். ஐந்தாயிரம் ரூபாய் தப்பான வியாபாரம்; ஏமாற்று வேலை.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்து, அதில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கே போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களைப் பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும், பேசலாம். உங்களோடு இணைபவன் அவரோடு இணையமாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

பொது வாழ்க்கைக்கு வந்தால் சொந்த வாழ்க்கை விமர்சனம் செய்யப்படும். அதை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறதா?

என் வாழ்க்கையே இதற்கு பதில். எனக்கு ஏற்படாத விமர்சனங்கள் இல்லை. என் தவறுகளை தவறு என்றும், என் முடிவுகளை இதுதான் முடிவென்றும் நம்பிச் சொன்னவன், திறந்து சொன்னவன், மன்னிப்பு கேட்பதென்றால் கேட்பவன். கேட்க வேண்டாம் என்றால் ‘முடியாது. என் முடிவு’ என்று தைரியமாகச் சொன்னவன். அதே தைரியம் இங்கும் தொடரும் என்று நம்புகிறேன்.

இப்போதைய சூழலில் பண பலம் இருந்தால்தான் அரசியலில் பயணிக்க முடியும். உங்களால் ஜெயிக்க முடியுமா?

பணத்துக்கு ஏன் அப்படி பலம் வந்தது என்பதை யோசிக்கவேண்டும். அது நாம் கொடுத்ததல்ல. அரசு கொடுத்த பலம். பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் பணத்தை தேடும்போது, ஏழைகள் எல்லாம் அங்கேயேதான் இருக்கின்றனர். அவர்கள் மக்களின் கோயில் வாசலில் நின்று யாசகம் கேட்பவர்கள். அதைவிட பெரிய பணம் மக்களிடம் இருக்கிறது. மக்கள் கோயில் அது. அங்கு இருக்கிறது பணம். எத்தனை கஜானாக்கள் காலியாக இருக்கிறது. எத்தனை பெட்டகங்களை காலிசெய்திருக்கிறார்கள். அத்தனையையும் மீண்டும் நிரப்பியது யார்? எடுத்தவர்களா, இல்லை. கொடுத்தவர்கள். அங்கே இருக்கிறது பணம். எனக்கு அது வரும். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு கமல் சொல்லும் தீர்வு என்ன?

இங்கு பேசியது பற்றிதான் கேள்வி கேட்கிறார். இது நாம் அங்கேயோ அல்லது நான் இங்கேயோ இருந்து எடுக்கும் முடிவு அல்ல. அழுத்தமான அரசுகள் வேண்டும். ஆணித்தரமான கருத்துகள் நிலவ வேண்டும். அன்பான சக மாநிலங்கள் இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு வரும். இல்லையென்றால் தண்ணீர் வராது; தகறாறுதான் வரும்.

அரசியலுக்கு வருவதாகக் கூறும் நீங்கள் மார்க்சிய வழியா, காந்தி வழியா, பெரியார் வழியா, ஆர்எஸ்எஸ் வழியா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பெரியார் காந்திய வழி, அதில் இருந்து மாறுபட்டு, கருத்து வேறுபாடுடன் வேறு வழியில் சென்று, தனக்குத் தேவையான சுதந்திரத்தைப் பெறும் முயற்சியை அவர் எடுத்துக் கொண்டார் என்பது தெரிந்திருக்கும். மார்க்சிஸம் என்று கூறும்போது, லெனின், மார்க்ஸ் பேசியது இங்கு இருப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது என்பார்கள். காந்திய மார்க்சிஸமும் இங்கு இருந்திருக்கிறது. இவர்களது தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தொலைவில் ஒளி தெரிகிறது. அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன நல்ல கருத்துகளை எடுத்துக்கொண்டு, தீமைகளை எல்லாம் நீக்க முற்படுவேன்.

லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

லோக்கல் கவர்னன்ஸ் தாண்டி பர்சனல் கவர்னன்ஸை பார்க்கிறேன். இண்டிவிஜுவல் சத்தியாகிரகா என்று உள்ளது. சரியில்லை, சரியில்லை என்றால் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்னால் முடிந்தவரை நான் வரியை சரியாகக் கட்டிக்கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை தப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்லுங்கள். என்னை வாத்தியாராகப் பார்க்காமல் மாணவனாகப் பாருங்கள். கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வன்முறைக்கு தனி அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானாலும் மதம் மாறும். அதனால், ஒரு மதத்தைக் கூறினால், அடுத்து வேறு மதம் அதே பாதையில் ஈடுபடும். இப்போது உங்களுக்கு திருப்தியான பதிலை நான் சொல்லவில்லை என்று கவலைப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். தோல்வியுற்றவன் கையில் எடுக்கும் விஷயம் வன்முறை. கோபப்பட்டு ஆதங்கத்தில் செய்யும் விஷயம் அது. அது தோல்வியின் முதல் அடையாளம். அந்த வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல. இன்று போய் நாளை வா. நாளை பார்ப்போம் நான் இருந்தால். இல்லாவிட்டால் தோள்கொடுக்க வேறு தோழன் இருப்பான். வேறு பத்திரிகை இருக்கும். வேறு பத்திரிகையாளன் இருப்பான். மாறி மாறி நடப்பதுதானே. பெரிய தேசமாக இருந்தது இரண்டு தேசமானது.இதில் எந்த பக்கம் வன்முறை குறைவு. இதை யோசிக்க வேண்டும். நாம் மொத்தத்தில் கோபத்தைவிட, சடகோபம் பழக வேண்டும்.

அரசியல் குறித்து உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்குமா? முழுமையாக அரசியலில் எப்போது ஈடுபடப் போகிறீர்கள்? நேரடி அரசியல் களம் எப்போது?

‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, வரமாட்டீர்களா?’ என்று இனி கேட்காதீர்கள். இதுவரை என்ன பேசிக்கொண்டிருந்தோம். யாரையாவது விட்டுவைத்தோமா? முடிவு செய்ய வேண்டியது நீங்கள், நான் அல்ல. அவசரப்படாமல் நீங்கள் முடிவு செய்யவேண்டியது உள்ளது. இன்னும் பல மேடைகள் இருக்கின்றன. பிறந்தநாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு? அது நான் பிறந்த நாள். நமக்கு வேண்டியது தேதி. ஜோசியம் அல்ல. புரட்சி பிறந்தநாளில் தேடி வைப்போம். நல்ல நாளில் முடிவு செய்வோம்.

செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் !

கண்டிப்பாக! ஆனால், எந்த வருடம் என்பதை நான் முடிவு செய்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x