Published : 23 Aug 2017 09:10 AM
Last Updated : 23 Aug 2017 09:10 AM

இரட்டைத் தலைமையும் ஏழு சவால்களும்!

அதிமுகவில் இரட்டைத் தலைமை கூடாது, கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இந்த அரசியல் வாக்கியம்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவிக்கு உலை வைத்தது. அதுவே சசிகலாவின் வழியாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது.

தற்போது கட்சி, ஆட்சி இரண்டிலுமே இரட்டைத் தலைமை உருவாகியிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அறிவித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் முறையே முதல்வராகவும் துணை முதல் வராகவும் தொடர்கிறார்கள். இந்த இரட்டைத் தலைமைக்கு முன்னால் ஏழு சவால்கள் இருக்கின்றன.

1.செம்மலையும் மூத்த அமைச்சர்களும்

அதிமுக அணிகள் இணைந்த பிறகு பதவியேற்கும் புதிய அமைச்சர்களில் செம்மலை முக்கியமானவராக இருப்பார் என்றுதான் பலரும் கணித்தனர். ஆனால், அந்தக் கணிப்பைத் தகர்த்துவிட்டார் பழனிசாமி. அதன்மூலம் அமைச்சரவைக்குள் அதிருப்தி உருவாகியிருப்பது கண்கூடு. கூடவே, மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் முதல் புதியவர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், சேவூர் ராமச்சந்திரன் வரை பலரது முக்கியத் துறைகள் மாற்றப்பட்டிருப்பது அமைச்சரவைக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்திகளும் சலசலப்புகளும் விரி வடையாமல் தடுத்து நிறுத்துவதே முதல்வருக்கு இருக்கும் முதல் சவால். அதேபோல, மாநில, மாவட்டப் பொறுப்புகள், வாரியப் பதவிகளுக்காகக் காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்களும் முதல்வருக்கான சவால்களாகவே இருப்பார்கள். என்ன ஒன்று, அவர்கள் வெளியேறும் போது வெறுமனே செல்ல மாட்டார்கள். சசிகலாவை யும் தினகரனையும் காரணமாகச் சொல்லிவிட்டு அவர்கள் பக்கம் செல்வார்கள். அதுதான் சிக்கல்.

2. ஒரு உறை, இரு கத்திகள்!

ஊழலாட்சி என்று விமர்சித்த ஓபிஎஸ்ஸுடன் கைகுலுக்கியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. இதனை எதிரியையும் அரவணைக்கும் பாணி அல்லது, எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்லலாம். எப்படிப் பார்த்தாலும் கட்சி, ஆட்சியில் இரட்டை அதிகார மையங்களை உருவாக்கியிருக்கிறார் முதல்வர். இனி கட்சி, ஆட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்திலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் என்ற இருவருடைய பங்களிப்பையும் தவிர்க்க முடியாது. அந்த முடிவுகள் பரஸ்பரம் பலன் தரும்வரை பிரச்சினையில்லை. மாச்சரியங்கள் உருவானால், மனமாற்றங்கள் உருவாகும். கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று அறைகூவல் எழுப்புபவர்கள் பலரைக் கொண்ட கட்சி அதிமுக. அப்படி யொரு குரல் எழுந்தால், அது ஆட்சி மாற்றத்துக்கும் அழைத்துச்செல்லும். அதைத் தவிர்க்க வேண்டிய பெரும்சவால் முதல்வருக்கு முன்னால் இருக்கிறது.

3. ஸ்லீப்பர்செல் சிக்கல்கள்

‘எங்கள் எம்.எல்.ஏ.க்கள் எதிரணிக்குள் ஸ்லீப்பர்செல்களாக இருக்கிறார்கள்’ என்ற தினகரனின் கூற்றை முதல்வர் பழனிசாமி எளிதாகக் கடந்துவிட முடியாது. தன் வசம் 19 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதைப் பகிரங்கமாகக் காட்டிவிட்டார் தினகரன். இன்னும் ஓரிருவர் வெளியே வந்தால் அது ஆட்சிக்கான ஆபத்து. ஸ்லீப்பர்செல்களின் அடியொற்றி, வேறு சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் நகர்ந்து, அவர்கள் எடப்பாடி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவதாக ஆளுநரிடம் முறைப்படி அறிவித்தால், எடப்பாடி அரசு எப்போது வேண்டுமானாலும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிவரும். அந்த ‘எப்போது’ என்பதை டெல்லி முடிவுசெய்யும் என்பது வெளிப்படை. ஆக, அதிருப்தி உருவாகாமல், ஸ்லீப்பர்செல்கள் விழித்துவிடாமல் பார்த்துக்கொள்வது முதல்வரின் முன்னால் இருக்கும் மற்றொரு சவால்.

4. ஸ்டாலினின் அடுத்த நகர்வு

“தேவைப்பட்டால், எடப்பாடி பழனிசாமி அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம்” என்று கூறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அந்தத் ‘தேவைப்பட்டால்’ என்பது தினகரன் பக்கம் திரளும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இந்த இடத்தில், தினகரன் பயன்படுத்திய ‘துரோகம்’ என்ற வார்த்தையும், ‘துரோகத்துக்குப் பதிலடி துரோகம்தான்’ என்ற தினகரன் ஆதரவு முன்னாள் அமைச்சரின் கருத்தை யும் இணைத்துப் பார்க்கும்போது, டெல்லி ஆசியுடன் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, தினகரன் தரப்பு ஸ்டாலினின் உதவியை மறைமுகமாக நாடினாலும் வியப்படைய ஏதுமில்லை. அப்படி ஒன்று நடந்தால், அது எடப்பாடி அரசுக்கான முதன்மை நெருக்கடி.

5. இரட்டை இலை மீட்பு

இரட்டை இலையை மீட்டெடுக்க அணிகள் இணைப்பு காலத்தின் கட்டாயம். அதையே ஈபிஎஸ் ஸும் ஓபிஎஸ்ஸும் செய்திருக்கிறார்கள். ஆனால், அது மட்டுமே போதாது. முக்கியமாக, டெல்லி மனது வைக்க வேண்டும். ஆம், சமீபத்திய சமாஜ்வாதி சர்ச்சையின் படி பார்த்தால், இரட்டை இலை எடப்பாடி - ஓபிஎஸ் இணைந்த அணிக்கே கிடைக்க வேண்டும். அதுதான் அளவுகோல் என்றால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே இரட்டை இலை சசிகலா அணிக்குக் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதைத் தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆக, இப்போதும்கூட சின்னம் தேர்தல் ஆணையம் கைகளில்தான் இருக் கிறது. எனவே, இரட்டை இலை இல்லாத தேர்தல்தான் அதிமுகவை எளிதாகக் கையாள உதவும். முக்கியமாக, தாமரைச் சின்னத்தைத் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கொண்டுசேர்க்க உதவும் என்று ‘டெல்லி’ கணக்குப் போடும் பட்சத்தில், இரட்டை இலை மீட்பு கானல் நீர்தான்.

6. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானால், அதுதான் அதிமுகவுக்கான பெரிய சவால். அதை விடவும் ஆகப் பெரிய சவால் உள்ளாட்சித் தேர்தல். இரட்டை இலை சின்னம் இல்லாததால்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி அரசு தயங்குகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலுவையில் இருக்கிறது. ஒருவேளை, இரட்டை இலை சின்னம் கிடைத்து அல்லது கிடைக்காமல், உள்ளாட் சித் தேர்தலை நடத்தவேண்டிவந்தால், அதுவும்கூட ஒருவகையில் முதல்வருக்கான நெருக்கடிதான். ஆளுங்கட்சி செய்யும் குழப்படி அரசியலால் அதிருப்தி யில் இருக்கும் மக்கள், உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்குத் தோல்வியைக் கொடுக்கும் பட்சத்தில், அது எடப்பாடி அரசின் மீதான மதிப்பீடாகவே புரிந்துகொள்ளப்படும். அது, கட்சியிலும் ஆட்சியிலும் ஓபிஎஸ்ஸின் கைகளையே பலப்படுத்தும்.

7. சுழற்சி முறையில் முதல்வர் பதவி

இன்றைக்கு சசிகலாவையும் தினகரனையும் காட்டித் துணை முதல்வர் பதவியைப் பெற்றுள்ள ஓபிஎஸ், கடைசிவரை துணை முதல்வராக மட்டுமே நீடிப்பார் என்று சொல்ல முடியாது. மூன்று முறை முதல்வராக இருந்தவர், மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு பெற்றவர் என்ற முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் தனது ஆளுமையை விரிவுபடுத்த முதல்வர் பதவியைக்கூடக் கேட்கக்கூடும். முழுமையாக இல்லாவிட்டாலும், சுழற்சி முறையிலேனும் பகிர்ந்தளிக்கக் கோரலாம். அதற்கு டெல்லியின் ஆதரவு கிடைத்தால், அதைச் செய்துதர வேண்டிய நெருக்கடி முதல்வருக்கு வரலாம். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் துணிந்தாலும் தவறினாலும் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சிக்கலையே தரும். இந்த இடத்தில், துணை முதல்வராகப் பதவியேற்ற கையோடு ஓபிஎஸ்ஸுக்கு வந்த மோடியின் வாழ்த்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது பொருத்தம்.

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘தமிழக அரசியல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x