Published : 21 Aug 2017 09:59 AM
Last Updated : 21 Aug 2017 09:59 AM

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?- நூலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புப் புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நூலில் உள்ள சில தகவல்கள், குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும், பண்பாட்டுக்கு எதிராக இருப்பதாகவும் புகார் தெரிவித்து 2014-ம் ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், மாதொருபாகன் நூலை திரும்பப் பெறுவதாகவும் பெருமாள் முருகன் எழுதிக் கொடுத்தார். இது எழுத்தாளரின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒரு நாவலைப் படிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது வாசிப்பாளரின் விருப்பம். ஆனால், ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது.

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது. பெருமாள் முருகன் மீதான குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதுடன், நாவல் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தீர்ப்பு வழங்கியது.

‘ஒன் பார்ட் உமன்’

இதற்கிடையில், மாதொருபாகன் நூலை அனிருத்தன் வாசுதேவன் என்பவர், ‘ஒன் பார்ட் உமன்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தப் புத்தகம் 2016-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு, சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகமாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த மாத இறுதியில் சண்டிகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்று பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மனுநீதி அறக்கட்டளைத் தலைவர் மாணிக்கம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் தலைசிறந்த கலாச்சாரம், உலகம் முழுவதும் பரவுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள சில வெளிநாட்டு சக்திகள், சிலருக்கு நிதியுதவி வழங்கி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், வரலாற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவது, இதுபோன்ற சர்ச்சைக்குரிய எழுத்தை ஊக்குவிப்பதாக அமையும். எனவே, மாதொருபாகன் நூல் மற்றும் அதன் மொழிபெயர்ப்பை தடை செய்வதுடன், சர்ச்சைக்குரிய நூல்களுக்கு விருது வழங்கக் கூடாது.

இதுதொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம். தமிழக அரசும் சர்ச்சைக்குரிய புத்தகத்தை தடை செய்யவும், இருப்பில் உள்ள புத்தகங்களைப் பறிமுதல் செய்யவும் சிஆர்பிசி 95-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொங்குதேச கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிர்வாக அறங்காவலர் டி.ராஜ்குமார் கூறும்போது, ‘வரலாற்று நாவல் எழுதுவதாகக் கூறி, ஆராய்ச்சி செய்வதற்காக ஐஎஃப்ஏ என்ற அமைப்பு மூலம் நிதியுதவி பெற்று இந்த நூலை எழுதியுள்ளதாக பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.

ஆனால், நாவலில் குறிப்பிட்ட விஷயங்கள் தொடர்பாக அவர் எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. பல்லாயிரம் மாணவர்களுக்கு பேராசிரியராக இருப்பவர், ஆதாரமில்லாத தகவல்களை வரலாறாக பதிவு செய்தது ஏன்? அவரது கற்பனையில் உருவான சம்பவங்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்தது உண்மையா, இல்லையா என்று கூறவில்லை. கருத்து சுதந்திரம் பாதிக்கப்படக் கூடாது என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சமூகப் பிரிவினையை, மோதலை ஏற்படுத்தும் நாவலை தடை செய்ய வேண்டும். இதற்கோ, இதன் மொழி பெயர்ப்புக்கோ எந்த விருதும் வழங்கக்கூடாது’ என்றார்.

திருச்செங்கோடு இறைபணி மன்ற நிர்வாகி சி.மனோகரன் கூறும்போது, ‘மாதொருபாகன் நூல் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறவில்லை. ஊரே கொண்டாடும் திருவிழாவுக்கு நீங்கா அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம் இல்லாத ஒரு தகவல், பெண்களைக் கொச்சைப்படுத்தி, மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது. இத்தகைய நூலின் மொழிபெயர்ப்புக்கு, உயர்ந்த விருது வழங்குவது வேதனையைத் தருகிறது. மக்களின் எண்ணத்தையும் விருது கொடுப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கம், சன்மார்க்க சங்கம், மோட்டார் வாகன மெக்கானிக்கல் உரிமையாளர்கள் சங்கம், கொங்குநாடு ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும், மாதொருபாகனின் மொழிபெயர்ப்பு நூலுக்கு விருது வழங்கக் கூடாது என்றும், நூலை தடை செய்ய வலியுறுத்தியும் ஏற்கெனவே மத்திய கலாச்சாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x