Last Updated : 14 Aug, 2017 09:39 AM

 

Published : 14 Aug 2017 09:39 AM
Last Updated : 14 Aug 2017 09:39 AM

ஊராளி பழங்குடியினரின் முடிவில்லாத் துயரம்!

“இ

ந்த மலையும் காடும் எங்களுக்குச் சொந்தம். எங்களின் மூதாதையரின் மூச்சுக் காற்று இந்த மலைக்குள்தான் இருக்கிறது. அவர்களின் கல்லறைகள் இன்னமும் அங்கேதான் இருக்கின்றன. நாங்களோ அந்த நிலத்தையும், காடுகளையும் இழந்து கண்ணீர் சிந்துகிறோம். காட்டிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு நிற்கிறோம்” - ஊராளிப் பழங்குடியினரின் வார்த்தைகள் இவை. தமிழகத்தில் உள்ள 36 பழங்குடியினப் பிரிவுகளில் இவர்களும் அடக்கம்!

இந்தப் பழங்குடியினரைப் பற்றி இனவரைவியல் ஆய்வுசெய்வதற்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கடம்பூர், மாக்கம்பாளையம், குன்றி போன்ற கிராமங்களைச் சுற்றி களப்பயணம் மேற்கொண்டேன். சிறு சிறு குழுக்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் ஊராளி மக்கள் ஊரையே ஒரு சிறு குடும்பமாகப் பார்க்கின்றனர். யாராவது வீட்டில் சமைக்கவில்லை என்றால், சமைத்தவர் வீட்டுக்குச் சென்று சாப்பிடலாம். காட்டில் வேட்டையாடிக் கொண்டுவந்த கறியை எத்தனை குடும்பங்கள் இருக்கின்றனவோ, அத்தனை குடும்பங்களுக்கும் சரிசமமாகக் கூறுபோட்டு பிரித்துக் கொடுப்பது கட்டாயம். ஒரு குடும்பம் அந்தக் கறியைப் பெறவில்லை என்றாலும், அது ஒரு மிகப்பெரிய குறையாக அமைந்துவிடும். பழங்குடியினரிடத்தில் சமத்துவம் எவ்வளவு இயல்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.

வாழ்க்கை முறை

தங்களுக்குள்ளாகவே கல்கட்டி, குப்பர், புங்கர், பேராதவர், மோரிகர், வெள்ளகர், உப்பிலிகள் என்று ஏழு குலங்களாகப் பிரிந்துள்ளனர் இம்மக்கள். இந்த ஏழு குலங்களுக்கும் ஒரு தலைவர் இருப்பதுபோல, ஏழு தெய்வங்களும் இருக்கின்றன. இந்த ஏழு குலதெய்வங்களுக்கும் தனித்தனியே வருடத்துக்கு ஒருமுறை விழா எடுக்கின்றனர். நல்லவேளையாக இம்மக்களைப் போல தெய்வங்களும் காட்டைவிட்டு வெளியேற்றப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை குழுவாகச் சென்று காட்டுக்குள் இருக்கின்ற இந்த தெய்வத்துக்கு பூஜைகள் செய்து, இரவு முழுவதும் வழிபட்டுப் பின்பு வீடு திரும்புகின்றனர்.

ஏழு குலங்களின் தலைவர்கள் ஒன்றுகூடித்தான் எல்லா மங்கள, அமங்கள நிகழ்வுகளிலும் முடிவெடுக்கின்றனர். திருமணத்தில் பிரச்சினை, திருட்டு, ஏனைய சொத்துப் பிரச்சினைகளுக்கு ‘நியாயப் பஞ்சாயத்து’ கூட்டப்படுகிறது. ஏழு குலத் தலைவர்களில் ஒருவர் வரவில்லையென்றாலும், அன்றைக்கு ‘நியாயப் பஞ்சாயத்து’ நடைபெறாது. ஒரே குலத்தில் உள்ளவர்கள் பங்காளி முறை என்பதால், மாமன் - மச்சான் உறவு உள்ள மற்ற குலங்களில் பெண் எடுப்பதும், கொடுப்பதும் நடைபெறுகிறது. மாப்பிள்ளை வீட்டார்தான் பெண் வீட்டாருக்குப் பணம் கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை கணவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால், பெண் சுதந்திரமாகத் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிடும் பழக்கம் இருக்கிறது. தொடக்க காலத்தில் வழக்கத்திலிருந்த தாய் வழிச் சமூகத்தின் எச்சம் இது.

கையறு நிலை

ஊராளி மக்களின் பொருளாதாரம் விவசாயம், ஆடு மாடு மேய்த்தல் ஆகிய இரண்டையும் சார்ந்தே இருக்கிறது. வேட்டை அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனால், இப்போது அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டனர். இவர்களின் வாழிடமும், நிலங்களும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேயிலை, காபி போன்ற பணப் பயிர்கள் பயிரிடுவதற்காக ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்டன. விடுதலைக்குப் பிறகு பெரும் பணக்காரர்களும், வணிகர்களும், உயர்த்தப்பட்ட சாதியினரும் ஊராளி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நிலங்களைப் பிடுங்கிக்கொண்டனர். இன்றைக்கு அதே நிலங்களில் அன்றாடக் கூலிகளாக இருக்கிறார்கள் ஊராளி மக்கள். அரசு இன்னும் ஒரு படி மேலே போய், வனப் பாதுகாப்புச் சட்டம், புலிகள் சரணாலயம் என்று புதிய சட்ட திட்டங்களை அறிவித்து, ஊராளி மக்களைக் காட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

இப்போது கால்நடை மேய்ப்பது ஒன்றே இவர்களது முக்கியமான வேலையாக இருக்கிறது. படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய இளைஞர்கள் கட்டிட வேலை, ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற வேலைகளுக்குச் செல்கிறார்கள். பெண்கள் விவசாயக் கூலியாக இருக்கிறார்கள். வாய்க்கும், கைக்குமான அளவிலேயே வருவாய் இருக்கிறது. காட்டையும், மேட்டையும் கொத்திச் சேர்த்த நிலத்தை ஆக்கிரமிப்பு என்று கூறி பட்டா வழங்க மறுக்கிறது அரசு. எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கிறார்கள்.

மலைப் பகுதியில் சாலை வசதிகள் இல்லையென்பதால், இவர்கள் உயர் கல்விக்குச் செல்ல முடிவதில்லை. உயர் கல்விக்குச் சென்றால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் பல முன்னுரிமைகள் இருக்கின்றன என்பதை அறியாமலேயே இருப்பது இன்னும் கொடுமை. தமிழக அரசு கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சிகள் எல்லோருடைய வீட்டிலும் இருக்கின்றன. ஆனால், பல நேரங்களில் அவை சரியாகத் தெரிவதில்லை. நவீன டிஜிட்டல் உலகம் கொண்டுவந்த அலைபேசிகள் இளைஞர்கள் கையில் இருந்தாலும், போதிய ‘சிக்னல்’ இல்லாததால் வெளியுலகத்தோடு தொடர்புகொள்ள முடிவதில்லை. காட்டுக்குள் எங்காவது ஒரு மூலையில், ஒரு புள்ளி சிக்னல் கிடைத்தாலும் அங்கே சென்று நின்று பேசுகிறார்கள். இணைய இணைப்பெல்லாம் இங்கு சாத்தியமே இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

நாகரிகம் என்ற பெயரில் வெளிச் சமூகத்தில் உள்ள வணிகர்கள், தரகர்கள், அதிகாரிகள் இங்கு வந்து இவர்களை எளிதில் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிவிடுகிறார்கள். அரசியல் தளத்தில் இவர்களின் பிரச்சினைகளையும், வாழ்வியல் சவால்களையும் எடுத்துரைக்க ஒரு தலைவர் கூட இல்லை. இவர்களுடைய குரல் சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஒலிப்பதேயில்லை.

குறைந்தபட்சம், பல்வேறு இடங்களிலும், சிறுசிறு ஊர்களிலும் பிரிந்து கிடக்கின்ற இவர்களை ஒரு சங்கமாக, இயக்கமாக ஒன்றுதிரட்டுவதுதான் தற்போது உடனடியாகச் செய்ய வேண்டிய வேலை. புலிகள் சரணாலயம், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். காடும், மலையும், மண்ணும், மரமும் பூர்வகுடிகள் என்று அறியப்படுகிற இவர்களுக்குத்தான் முதலில் சொந்தம் என்ற சிந்தனை பரவலாக்கப்பட வேண்டும். அவர்களை மலையிலிருந்து அந்நியப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் செயலும் அவர்களை அழித்தொழிப்பதற்குச் சமம் என்பதை பொதுச் சமூகமும் உணர வேண்டும்!

- அ.இருதயராஜ்,

லென்ஸ் ஊடக மையத்தின் இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x