Last Updated : 07 Aug, 2017 10:06 AM

 

Published : 07 Aug 2017 10:06 AM
Last Updated : 07 Aug 2017 10:06 AM

கர்நாடகா முன்வைக்கும் கொடி அரசியல்!

ர்நாடக முதல்வர் சித்தராமய்யா, மாநிலத்துக்குத் தனிக் கொடியைக் கொண்டிருப்பது சட்டரீதியாகச் சரியா என்ற பிரச்சினையில் காட்டும் தீவிரம், அவரது விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. தேச விரோதம் என்றும் சதிச் செயல் என்றும் சுமத்தப்படும் சலிப்பான குற்றச்சாட்டுகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அடிப்படையில், இந்த விவாதம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புக்குள் மாநில - பிராந்தியங்களின் கலாச்சார சுதந்திரம் பற்றியதே.

இந்தப் பிரச்சினையைப் பற்றிய உணர்வுகள் கடந்த சில வாரங்களில் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் விளம்பரப் பலகைகளில் இந்தியைப் பயன்படுத்துவதற்கு எதிராக கடந்த மாதம் நடந்த எதிர்ப்புப் போராட்டங்கள். மிகச் சமீபத்தில், லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அதிக இந்திப் பாடல்கள் இடம்பெற வேண்டும் என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து எழுந்த அவநம்பிக்கை.

நீண்டதொரு காலவரிசை

கன்னட எழுத்தாளர் பி.எம்.ஸ்ரீகாந்தையாவின் கன்னடத பாவூடா (கன்னடக் கொடி/ பதாகை, 1938) என்ற கவிதையே ஒருவேளை கன்னடக் கொடி என்ற கருத்தாக்கத்தைத் தொடங்கிவைத்ததாக இருக்கலாம். 1926-ல் 60-க்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளைக் கன்னடத்துக்கு மொழிபெயர்த்ததற்காக நினைவுகூரப்படுபவர் ஸ்ரீகாந்தையா. அவரது கொடி பற்றிய கருத்து மைசூர், ஹைதராபாத், பம்பாய் மற்றும் மதராஸ் மாகாணங்கள், குடகு என்று கன்னடம் பேசும் மக்கள் வாழ்ந்த பகுதிகளையெல்லாம் ஒன்றாக இணைக்கும் விருப்பம் கொண்டது. சம்ஸ்கிருதத்தின் மேலாதிக்கத்திலிருந்தும் ஆங்கில மொழிக்குக் கிடைத்த மதிப்பு மரியாதைகளிலிருந்தும் கன்னடத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும் அதன் மற்றொரு விருப்பமாக இருந்தது.

அம்மாநிலத்திலிருந்து பல்வேறு கன்னட அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக 1966-ல் தொடங்கப்பட்ட கர்நாடக சம்யுக்த ரங்கா (கர்நாடக ஐக்கிய முன்னணி) என்ற அமைப்பின் செயலாளரான ராமமூர்த்தி, செயல்பாட்டாளர்களின் நோக்கங்களை வெளிப்படுத்துவதற்கும் கன்னடம் பேசும் மக்களை ஒன்றுதிரட்டவும் கொடி அவசியம் என்று கருதினார். கன்னட அமைப்புகளுடன் நடந்த சில பேச்சுவார்த்தைகளை அடுத்து, அவர் செவ்வக வடிவம் கொண்ட, கிடைமட்டவாக்கில் இரண்டாகப் பிரிந்த, மேல்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்திலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்திலும் அமைந்த கொடியொன்றினை வடிவமைத்தார். மஞ்சள் நிறம் அமைதி, தோழமை ஆகியவற்றோடு, தங்கத்தின் இருப்பிடம் என்பதையும் குறித்தது. சிவப்பு நிறம் போரிடும் குணத்தை உணர்த்தியது. இந்த இரண்டு வண்ணக் கொடிக்கு, கருப்பு - சிவப்பு நிறத்தில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி ஒரு முன்மாதிரியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் பெங்களூருவில் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலிருந்த போட்டி மனப்பான்மை கவனமாக ஆய்வுசெய்யப்பட வேண்டியது. பெங்களூருவில் ஏற்கெனவே தங்கியிருந்த தமிழ் பேசும் மக்களைக்காட்டிலும், திமுகவால் ஊக்கம் பெற்றிருந்த புதியவர்களின் வரவுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட மொழிஉணர்வால்தான் கன்னட செயல்பாட்டாளர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

ராமமூர்த்தி, தான் வடிவமைத்திருந்த கொடியை அவர் 1966-ல் தொடங்கிய அரசியல் கட்சியான கன்னடா பக்சாவின் கொடியாக மாற்றிக்கொண்டார். அடுத்த ஆண்டில் பண்ணையில் நடந்த விபத்து ஒன்றில் அவர் காலமானதையடுத்து, அவரது கட்சியும் முடிவுக்கு வந்தது. அதிலிருந்து, அவரது கொடி கன்னட ஆர்வலர்களால் தாராளமாகப் பயன்படுத்தப் பட்டுவருகிறது.

ஒரு குறியீட்டு அடையாளம்

மாநிலம் தழுவிய அமைப்புகள் முதல் உள்ளூர் அளவில் சிறு குழுக்களாக இயங்கும் அமைப்புகள் வரையிலான கன்னட ஆர்வலர்களின் குழுக்கள், கடந்த 20 ஆண்டுகளில், கொடிகள், சுவரொட்டிகள், கர்நாடக மாநிலத்தின் நிலப்படங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சுவர்கள், கொடிக் கம்பங்கள், பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில் ஒட்டப்படும் விளம்பரத் தாள்கள், திரைப்படப் பாடல்கள், தொலைக்காட்சி சின்னங்கள் என்று மஞ்சள் - சிவப்பு நிறத்தை மாநிலம் முழுவதற்குமான ஒரு குறியீட்டு அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள். அதிகாரபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அக்கொடி நடைமுறையில் இருக்கும்.

ஆர்வலர்களின் விவாதங்களின்போது, கன்னட அடையாளத்தை இந்தியக் கூட்டாட்சி அமைப்பிலிருந்து தனித்துப் பார்ப்பததென்பது மிகவும் அரிதானது. பிரபலமான ஒரு சம்பவத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்: குவெம்பு 1928-ல் எழுதிய ‘ஜெய கே கர்நாடக மாதே’ கவிதை 2004-ல் கர்நாடகத்தின் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதன் முதல் வரி கர்நாடகத்தை இந்தியத் தாயின் புதல்வியாக அறிவித்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான கோபம், இந்தியாவுடனான கர்நாடகத்தின் உறவைப் பற்றிய முந்தைய கருத்துக்குள் மட்டுமே உணர்வலைகளை எழுப்பி உள்ளது.

அனைத்திலும் இந்தியை முன்னெடுக்கும் மத்திய அரசின் முயற்சிகளைப் பற்றி கன்னட ஆர்வலர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். குறிப்பாக, இந்திக்கு ஆதரவான மத்திய அரசின் சமீபத்திய முயற்சிகள் அவர்களிடத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. (இந்தி பேசாத மற்ற மொழிகளைப் பேசும் பெரும்பாலானவர்களிடம் இக்கவலை உண்டு). இந்திய பாஸ்போர்ட்களில் ஆங்கிலத்தோடு இந்தியிலும் விவரங்கள் இடம்பெறும் என்ற வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முடிவும், அரசு அலுவலகங்களின் வழக்கமான உரையாடல்களில் இந்தி பேச்சுவழக்கைப் பயன்படுத்துவது பற்றிய பணியாளர் அமைச்சகத்தின் விருப்பமும் தொடர்ந்து இந்திக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க விரும்புகின்றன.

இந்தியாவில் மொழி அடிப்படையிலான ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவதற்கு, நிச்சயமாக மத்திய அரசு மட்டுமே காரணமல்ல. பரவலான கலாச்சார அடிப்படையைக் கொண்ட முன்முடிவுகளும்கூட ஒரு காரணம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆர்எஸ்எஸ் வார இதழான பஞ்சஜன்யாவின் முன்னாள் ஆசிரியருமான ஒருவர், ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இன அடிப்படையிலானது என்று கூறிய கருத்து இதையே எடுத்துக்காட்டுகிறது: ‘நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால், தமிழ், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் என்று தென்னிந்தியர்களுடன் எங்களால் எப்படி சேர்ந்து வாழமுடியும்? எங்களைச் சுற்றிலும் கறுப்பு நிறத்தவர்களே இருக்கிறார்கள்.’

இதிலிருந்து வட இந்தியாவே ஒட்டுமொத்த இந்தியா என்று கருதப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கருப்பு நிறத்தைப் பற்றிய அவரது கருத்திலிருந்து தென்னிந்தியர்கள் வட இந்தியப் பகுதிகளில் எவ்வாறு பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இது மொழிப் பிரச்சினையைக் காட்டிலும் மேலும் சிக்கலானது. கர்நாடகத்துக்குக் குடிபெயரும் புதிய ‘வட இந்திய’ குடியேறிகள், கன்னடத்தைக் கற்றுக்கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை, மற்றவர்களும் அப்படியே இந்தியில் பேசுவார்கள் என்ற எண்ணமே, பெங்களூரு மெட்ரோவில் இந்தி விளம்பரப் பலகைகளுக்கு எதிரான போராட்டங்களின் அடிப்படை.

மொழி இணக்கம்

மொழி இணக்கத்தின் நியாயங்கள் குறித்த பொது விவாதத்துக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மிகப்பெரும் இயக்கங்கள் உள்ள காலத்தில், மொழியினங்களுக்கு இடையிலான உறவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வகைப்படுத்த முடியாது.

கர்நாடகத்திலிருந்து இடம்பெயர்பவர்கள் அவர்கள் செல்கின்ற மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப் போலவே மற்ற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து இம்மாநிலத்துக்கு வருபவர்களும் கன்னடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கன்னட எழுத்தாளர்கள் நீண்ட காலமாக விவாதித்துவருகிறார்கள். கூட்டாட்சி அமைப்புக்குள் மொழிகளைப் பற்றிய நேர்மையான அணுகுமுறை இதுதான். இதில் தியாகம் இருப்பதோடு, இந்தியர்கள் தாங்கள் தங்கும் பிராந்தியத்தின் மொழியைக் கற்றுக்கொள்ள முடிவெடுக்கும்போது, அது அம்மொழிக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வருங்காலத்தில் அம் மொழி நல்ல நிலையில் இருப்பதற்கும் உதவுகிறது. இந்த அறம்சார்ந்த கட்டமைப்பு, இடம்பெயர்ந்து வாழும் புதிய சமூகங்களுக்கிடையே உள்ள தார்மிக உணர்வை எடுத்துக்காட்டுவதோடு, இடம்பெயர்ந்து வந்தவர்கள் தங்களது மொழிகளைக் கைவிட வேண்டும் என்றோ தாய்மொழி நலனுக்காகப் பணிபுரியக் கூடாது என்றோ கட்டாயப்படுத்துவதில்லை.

கொடியோ அல்லது வேறு எந்த அடையாளமோ, இந்தியாவில் உள்ள இந்தி பேசாத மக்கள், தங்களது கலாச்சாரச் சுதந்திரத்துக்குப் போராடுவதற்குப் புதிய போராட்ட உத்திகளோடு வருகிறார்கள். அவர்களது அக்கறையில் உள்ள உணர்வு, ஒரு கூட்டாட்சி அரசியலுக்கான மதிப்புமிக்க வேண்டுகோள். உண்மையில், இந்தியாவை இந்தி பேசும் நாடாக மாற்றுவதற்கான நோய்மை பீடித்த திட்டத்துக்கு உடனே முடிவுகட்ட வேண்டும்.

- சந்தன் கவுடா, பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப் பேராசிரியர்

©: ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x