Last Updated : 07 Aug, 2017 10:05 AM

 

Published : 07 Aug 2017 10:05 AM
Last Updated : 07 Aug 2017 10:05 AM

மாநிலத்திற்கென தனிக் கொடி : இதிலும் தமிழகம் முன்னோடி

ங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கர்நாடகத்திலிருந்து குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. இதுபோன்ற முயற்சிகளுக்கும் தமிழகம் முன்னோடி என்று சொல்லவேண்டும்.

அரசியலமைப்பு அவையில் அன்றைக்கு உறுப்பினராக இருந்த ஜெயபால் சிங் முண்டா தேசியக் கொடியோடு பழங்குடிகளுக்குத் தனியாகக் கொடி வழங்க வேண்டும் என்று கோரினார். அவர் முன்வைத்த கோரிக்கை விவாத அளவிலேயே முடிவடைந்துவிட்டது.

1947 ஜூன் 22-ல் பிரதமர் நேரு இந்திய தேசியக் கொடியை அரசியலமைப்பு அவையில் முதன்முதலாக அர்ப்பணித்தார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தபோது காஷ்மீருக்கு அரசியல் சாசனப் பிரிவு 370-ன் படி சிறப்பு அதிகாரங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டன. அத்தோடு, விவசாயிகளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் கலப்பை படத்தோடு கூடிய தனிக் கொடியும் காஷ்மீருக்கு அனுமதிக்கப்பட்டது.

திராவிட நாடு கேட்டுப் போராடிய திமுக, பிற்காலத்தில் மாநில சுயாட்சியை வலியுறுத்தியது. அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குழுவை அமைத்தார். நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழுவில் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலையில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக் கொடி வேண்டும் என்று வலியுறுத்தினார் கருணாநிதி.

1970 ஆகஸ்ட் 20-ல் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திரா காந்தி பதில் அளித்தார். அமெரிக்கா போன்ற நாடுகளில் மாநிலங்களுக்குத் தனிக் கொடி இருப்பதை அவரும் சுட்டிக்காட்டினார். மாநில முதல்வர்களிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்கப்போவதாகவும் கூறினார். ஆனால், மாநிலங்களுக்குத் தனிக் கொடி அவசியமில்லை என்று ஸ்தாபன காங்கிரஸும், இன்றைய பாஜகவான ஜன சங்கமும் எதிர்த்தன. “கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் மாநிலம் என்றால், அரிவாள், சுத்தியல், நட்சத்திர சின்னங்கள் அடங்கிய சீன, ரஷ்யக் கொடிகளை இங்கு கொண்டுவந்துவிடுவார்கள்” என்பது அவர்களின் வாதம்.

இந்நிலையில், 1970 ஆகஸ்ட் 27-ல் டெல்லியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்று, தான் வடிவமைத்த படத்தைக் கருணாநிதி வெளியிட்டார். அந்தப் படத்தில், மேல் பக்கம் தேசியக் கொடியும், கீழ்ப் பகுதியின் வலது பக்கத்தில், தமிழகத்தின் இலச்சினையான கோபுர முத்திரையும் இடம்பெற்றிருந்தன. இப்பிரச்சினையில் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில், சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வழங்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்.

இப்படி கருணாநிதி-தமிழகம் வழியாக முதலவர்கள் பெற்றதே தேசியக்கொடியேற்றும் உரிமை. கர்நாடகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது. அது ஏற்கப்பட்டு மாநிலங்களுக்கு தனிக்கொடி கிடைத்தால், அந்த வரலாற்றிலும் தமிழகமே முன்னோடியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x