Last Updated : 21 Jul, 2017 09:08 AM

 

Published : 21 Jul 2017 09:08 AM
Last Updated : 21 Jul 2017 09:08 AM

வெளிநாட்டு ஊட்ட மருந்துகள் விஷமா... விமோசனமா?

சென்னையில் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் திவ்யா சத்யராஜ். சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள், அந்த நிறுவனம் தயாரித்துச் சந்தைப்படுத்தியிருக்கும் ஊட்டச்சத்து பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள், எடை குறைப்பு மாத்திரைகள், எடை கூட்டும் மாத்திரைகள் எனப் பலதரப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும்படி நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அந்த மருந்துகளை ஆய்வுசெய்த திவ்யா சத்யராஜ் அவற்றில் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்யும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவற்றை நோயாளி களுக்குப் பரிந்துரை செய்ய முடியாது என மறுத்திருக்கிறார். அப்போது அந்த மருந்துப் பிரதிநிதிகள், ‘அரசியல்ரீதியாகத் தொல்லைகள் கொடுப்போம்’ என அவரை மிரட்டினார்கள் என்று திவ்யா கூறுகிறார். இந்தத் தகவலைத் தெரிவிக்கும் விதத்தில் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம் தற்போது ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

வெளிநாட்டு மருந்து விற்பனை ரகசியம்

உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி விற்பனையைப் பிடித்திருக்கும் வெளிநாட்டு மருந்து, ஊட்டச்சத்து, வீட்டு உபயோகம் மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா முழுக்கக் கிளைகளை ஆரம்பித்துக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இவர்கள் மருத்துவர்கள் மூலம் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளையும் ஊட்டச்சத்து உணவுகளையும் மக்களுக்கு விற்பது கொஞ்சம்தான். மாவட்ட அளவில் முகவர்களை நியமித்து, அவர்களுக்கு நிறையவே கமிஷன் கொடுத்து, மக்களிடம் நேரடியாகவே விற்பனை செய்வதுதான் அதிகம்.

மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசிக்க வெட்கப்படும் நபர்களை இந்த மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் எளிதாகக் கவர்ந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, உடல்பருமன், ஒல்லி உடல், வெள்ளைப்படுதல், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் மயங்கும் விதமாகப் பேசி தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை எளிதில் விற்று விடுகின்றனர். இத்தனைக்கும் இந்த நிறுவனங்கள் விற்கும் மருந்துகளின் விலை, சந்தை மதிப்பைவிடப் பல மடங்கு அதிகம். விளம்பரத்தால் பெயர் பெற்றிருக்கும் நிறுவனங்களின்மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருப்பதைப் போல், ‘வாங்கும் பொருளின் விலை குறைவாக இருந்தால், அது தரும் பலனும் குறைவாகவே இருக்கும்; அதிக விலை கொடுத்துப் பொருள் வாங்கினால்தான் அதிக பலன் கிடைக்கும்’ என்று நம்பும் மக்கள் இருக்கிறவரை இந்த மருந்து நிறுவனங்களின் விற்பனையைத் தடுப்பது சிரமம்தான்.

 

வெளிநாடுகளில் இந்த மருந்துகளின் விற்பனை நடைபெறுகிறது என்றால், அங்கு அவர்கள் அந்த விற்பனையைப் பெரிதும் முறைப்படுத்தியிருக்கின்றனர். மருந்துத் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், மருந்து விற்பனைச் சட்டம் எனப் பல சட்ட அமைப்புகள் மூலம் இம்மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை முறைப்படி ஆய்வுசெய்து, மக்களின் ஆரோக்கியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். அங்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து மற்றும் ஊட்ட உணவுத் தயாரிப்புகளை வாங்கவும் விற்கவும் முடியாது.

ஆனால், நம் நாட்டில் நிலைமை அப்படியில்லை. இங்கு மருந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் ‘சர்வதேச அங்கீகாரம் பெற்றவை’ எனும் சான்றிதழுடன் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் முறையான, தேவையான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்யப்படாத மருந்துகள் இவை. பெரும்பாலும் முகவர்கள் மூலமும் இணையதளங்கள் மூலமும்தான் இவற்றை நுகர்வோருக்கு விற்கின்றனர். “சத்து மாத்திரைகளைச் சாப்பிட எவருக்கும் எந்தத் தடையும் இல்லை; இவற்றை யார் வேண்டுமானாலும் தாராளமாகச் சாப்பிடலாம்” எனும் மந்திரத்தை ஓதி, மக்களிடம் இவற்றை விற்றுவிடுவது இந்த நிறுவனங்களின் தந்திரம். விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்கிறவர்கள் போன்றோர் இந்தச் சத்து மருந்துகளையும் புரத உணவுகளையும் அதிகம் விரும்புகின்றனர். “மூன்றே மாதங்களில் உயரத்தைக் கூட்டிவிடும்; எடையைக் குறைத்துவிடும்” என்ற வசீகர வார்த்தைகளில் மயங்கிவிடுகிறார்கள்.

நம் உடலுக்குத் தேவையான சத்துகளை நாம் உண்ணும் உணவின் மூலமே எடுத்துக்கொள்ளலாம். நுகர்வோர் இந்த உண்மையை மறந்து, செயற்கை ரசாயன மருந்துகளை நாடுகின்றனர். இவற்றில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட உள்மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருப்பதையும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பாதிக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் கலந்திருப்பதையும் இவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தேவைக்கு அதிகமாகச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் அவை விஷமாகிவிடும். இந்த ஆபத்தை நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.

பக்க விளைவுகள் உண்டா?

மருந்துக் கடையில் ஒரு மருந்து விற்கப்படுவதற்கும் மக்களிடத்தில் நேரடியாக விற்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மருந்துக் கடைகளில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை ஆய்வுசெய்யவும், விற்பனையைக் கண்காணிக்கவும் மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். இவற்றில் தவறு நேரும்போது தண்டிக்க ‘மருந்து மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டம்’ பிரிவு 64 மற்றும் 65 உள்ளது.

ஆனால், இம்மாதிரியான பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் வெளிநாட்டு மருந்துகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றுக்கு ரசீது இல்லை; விற்பனைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிவருவாய் குறைந்து நஷ்டம் ஏற்படுவதும் உண்மை. இவற்றில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும்கூட கவர்ச்சியான உறைகளில் விற்பனைக்கு வருவதுண்டு. இவற்றை உட்கொள்கிறவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டு ஆரோக்கியப் பிரச்சினைகள் உருவாகின்றன.

முக்கியமாக. திவ்யா சத்யராஜ் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல், தோல், கண், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்து உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்பும் உண்டு. 2003-ல் ஆந்திரத்திலும், இப்போதுள்ள தெலங்கானாவிலும் 2013-ல் கேரளத்திலும் இந்த மருந்துகளின் விலை மற்றும் தரம் குறித்த சந்தேகங்கள் பொதுமக்களால் எழுப்பப்பட்டு, சில காலம் அங்கு இவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டதை நினைவுகூரலாம்.

அரசு கவனிக்குமா?

ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தீர்வு தரும் வகையில் எந்தத் திட்டமும் இல்லாமல் தவிக்கும் நம் நாட்டில்தான், வெளிநாட்டு ஊட்டச்சத்து உணவுகளும் சத்து மாத்திரைகளும் கோடிக் கணக்கில் விற்பனை ஆகின்றன. விற்கப்படுவது எந்த மருந்தானாலும், அதன் தரத்திலும் தன்மையிலும் அதை நுகரும் மக்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டியது அரசுகளின் கடமை.

சர்வதேசச் சான்றிதழ் பெற்றுள்ளது என்ற போர்வையில் விற்கப்படும் இவற்றை மறு ஆய்வுசெய்வதற்கான புதிய சட்ட நெறிமுறைகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அரசு காலத்தோடும் அக்கறையோடும் இதில் தலையிட்டு, மக்களுக்கு முகவர்கள் மூலம் மருந்து விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும். மக்கள் நலம் காக்க விழையும் ஓர் அரசு செய்ய வேண்டிய இன்றியமையாத கடமைகள் இவை.

-கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x