Published : 04 May 2014 11:08 AM
Last Updated : 04 May 2014 11:08 AM

ஸ்வாதியின் மரணம்: கடவுளுடன் ஒரு போர்

ஓர் இளம்பெண் மே - 1 காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சிதைந்துபோனார். காலை நேரம் நாம் குயிலின் குரலையோ, ஒரு மழலையின் இசையையோ, நம் அபிமானப் பாடகியின் ஒரு பாடலையோ கேட்கும் வேளையல்லவா? சூரியனின் இளம் சிவப்பு வர்ணத்துக்கும் ஒரு பெண்ணின் உடல்சிதைவில் நாம் கண்ட சிவப்பு வர்ணத்துக்கும் தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளும் மனக்கூறு நமக்கு அமையாது. ஆனால், அன்று காலை நமக்கு அப்படி ஒரு துரதிர்ஷ்டம் நேர்ந்தது. எதிரில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அல்லது நடமாடிக்கொண்டிருந்த ஒரு பெண், அப்படியே தன்னந்தனியாளாக சிதையும்போது, எதிரிலிருந்து அதைக் கண்ணாரக் கண்ட ஒரு துரதிர்ஷ்டமிக்க பயணியாக இப்போது என்னை நான் கருதிக்கொள்கிறேன். கற்பனையே என்னை வதைக்கிறது. ஆனால், குண்டுகள் வைத்த தீவிரவாதம் இன்றுதான் தன் வாழ்க்கையின் உன்னதச் செயலைச் செய்துமுடித்த திருப்தியை அடைந்திருக்கும்.

பணியில் சேர்ந்து முதன்முறையாக ஊர் செல்லும் ஓர் இளம் பெண்ணின் மனக்கிளர்ச்சிகள் எத்தனை எத்தனை? இதை நாம் சுலபமாகப் புரிந்துகொள்ள இயலும். எவ்வளவு சிறிய வேலையாக இருந்தாலும், சிறிய சம்பளமாக இருந்தாலும், அதன்பின் நாம் ஊர் செல்லும் அந்த முதல்தருணம் மிகவும் முக்கியமானது. ஊர் செல்வதுகுறித்து அந்தப் பெண் ணுக்கு இருந்த மனக்கிளர்ச்சிகள் நம் அனைவருக்கும் இருந்திருக்கும்.

மானுடத்தைச் சாகடித்தல்

அப்படி ஒரு நபராக இப்போது நம்மைக் கருதும்போது மாத்திரமே வெடிகுண்டில் சிதைந்த ஸ்வாதியின் அந்தக் கடைசித் துளி வாழ்வை உணர முடியும். ஒரு மனிதன் அல்லது மனுஷி சிதைந்து சின்னாபின்னமான பின்னரே, தீவிரவாதம் தன் எதிரியை இன்னார் என்று அடையாளம் கண்டிருக்கும். அவன் அல்லது அவள் அல்லது அவர்கள் யார் யார், அவர்கள் பெயர் என்னென்ன, எந்தெந்த ஊர், என்னென்ன இனம் என்கிற விவரங்களையெல்லாம்கூட, தீவிரவாதம் அதன் பின்னர்தான் தெரிந்துகொள்கிறது. போர்முனையில் நிகழும் வீரமரணங்கள் இத்தகையவைதாம் என்றபோதும், அந்தப் போர்முறையும் அதில் இருக்கும் நியாய அநியாயங்களும் வேறுவேறு. அப்படிப்பட்ட போர்களும் இருக்கக் கூடாது என்று மனித இனம் போராடிவரும் காலத்தில், நம் வாழ்க்கைமுறை இத்தனை சிக்கலாக மாறியிருப்பதை என்னவென்று சொல்வது? நாம் ஸ்வாதியை வைத்துத்தான் மொத்த உலகின் இழப்புக்களையும் பேச வேண்டியிருக்கிறது. தினமும் குண்டுகள் வெடித்து மானுடத்தைச் சாகடிப்பது, நாம் வாழ்வதற்காக உருவாக்கிக்கொண்ட அத்தனை தத்துவங் களையும் சித்தாந்தங்களையும் சாகடிப்பதற்கு ஒப்பானது. நம் நேசர்களாக இருக்க வேண்டியவர்களை நாமே பலியிட்டுத் தோல்வியடைகிறோம். இந்த ரத்தக் கணக்குகள் எவ்விதப் பலன்களையும் தராது என்பதை உணர முடியாதவர்கள் நம்மிடையே இருப்பது நமக்கும் இழிவானது.

தீவிரவாதத்தின் வலிமை

அநேகமாக இத்தகைய போக்குகளை எதிர்கொண்டு முறியடிக்க நாம் வலிமையில்லாமல் போய்விட்டோம். எத்தனை விதமான பாதுகாப்பு முறைகள், துறைகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் தீவிரவாதம் வென்று தன் கணக்கை விரிவாக்குகிறது. உடனடியாக நமக்கு எழும் கோபங்கள், தாபங்கள், செயல்பட வேண்டும் என்ற துடிப்புகள் சில நாட்கள், சில பொழுதுகள் என்று குறுகிவந்து, பின் இல்லவே இல்லாமல் போய்விடுகின்றன. ஆனால், நம் எதிரிகள் தங்கள் கோபங்களை, வெறுப்புகளை, சதிகளை மேலும்மேலும் பெருக்கிக்கொண்டே போகிறார்கள், அவர்கள் இம்சையின் மீது முழுப் பற்றும் பாசமும் கொண்டு இன்னும்இன்னும் என்று நம் எதிரே அருவமான முறையில் போர்புரிகிறார்கள். ஆனால், எதிர்முனையில் நம்மையும் நம் பிரதிநிதிகளாகச் செயல்படுபவர்களையும் நம் அரசுக் கட்டமைப்புகளையும் நோக்கும்போது நாம் எப்படி மானுடத்தின் மீதும் நீதிநெறி சார்ந்த செயல்பாடுகளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறோம்? நம்முடைய பணிகள், வருவாய்கள், அந்தஸ்துகளை மிஞ்சி நமக்கு வேறு இலக்குகள் இல்லாமல் போகும்போது நம்முடைய சமூகம் அனாதையாக நிற்பதை நாம் அறிந்துகொள்கிறோம்!

ஒருவரையொருவர் வென்றாக நினைக்கும்போது, தீவிரவாதத்தின் போக்கும் நோக்கும் பலமான ஆணிவேர்களைக் கொண்டுள்ளன. ஆனால், தேசபக்தக் கடமையோடு நிற்கும் ஜனநாயகத்தின் கட்டமைப்பில் பல பெரிய குறைபாடுகள் உள்ளன. இவற்றை வெளிப்படையாகப் பேச நமக்குள் பெரிய மனத்தயக்கம். தீவிரவாதத்தின் கிளைகள் பல திசைகளிலும் படரும்போது, அதற்கு எதிரான வியூகங்கள் பலவீனமாக, திசைகளைக் கண்டறிய முடியாதவையாக இருக்கின்றன.

என்னதான் செய்கிறது அரசு?

ஒருவகையில் இப்படிச் சொல்ல வேண்டும்; தீவிரவாதத்தை எதிர்கொண்டு அடக்குவதில் அதிகமான விளம்பர நோக் கங்கள் இருக்கின்றன; நாம் பெறக்கூடிய தகவல்கள் கற்பனா வாதம் கொண்டவையாக இருக்கலாம்; அதைச் சரிபார்ப்ப தற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். மேலும், பொது மக்கள் மத்தியில் தீவிரவாதம்பற்றிய பீதியைத் தொடர்ந்து ஏன் உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும்? அதன் தேவை என்ன? நம் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரவாதப் பாதைகளைக் கண்டறிந்து, அவற்றை ஒடுக்கிவிட்டதற்கான செய்தியைப் பெறவில்லை. தலைதூக்கிவிட்ட தீவிரவாதத்தை அதன் பரிமாணங்களையும் மீறி, கூடுதலாகக் காட்டி அரசியல் லாபம் பெறத் துடிக்கும் செயல்களும் இங்கே அரங்கேறுவது ஏன்? இது தீவிரவாதத்தை ஒடுக்கும் முறை என்று நம் அரசு அமைப்புகள் எப்படி நம்புகின்றன? உண்மையில், இம்மாதிரியான விஷயங்களைப் பகிரங்கமாகத் தொடர்ந்து செய்வதன்மூலம், நம் அமைப்புகள் நம்பிக்கையற்ற நிலையில் உழன்றுகொண்டிருக்கின்றன என்ற கணிப்புக்கு ஒரு குடிமகன் வரக்கூடும்.

ஸ்வாதி பாட்டியின் அறச்சீற்றம்

பாதுகாப்பு அரண்களாக இருப்பவை இந்த மாதிரியான சிக்கலுக்குள் விழும்போது பொதுமக்களும் இவற்றின் மீதான நம்பகத்தன்மையை இழக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி கடவுளிடம் முறையிடுவது. அதனால்தான் ஸ்வாதியைப் பறிகொடுத்த அவரது பாட்டி கேட்கிறார், “கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இந்த முறையில் எடுத்துக்கொள்ளலாம்?’’ என்று.

பாண்டியன் நெடுஞ்செழியனின் முன் கண்ணகி நிகழ்த்திய அறச்சீற்றத்தையும்விட இந்தக் கேள்வி இன்னும் அதிதீவிரமானதாகத் தோன்றுகிறது. கூடவே, கடவுளின் அறக்கோட்பாடு என்ன என்கிற சிந்தனையையும் இது கிளர்த்துகிறது. எதிர்பாராத இழப்புகளுக்கு மனித மனம் ஆளாகும்போது, கடவுளின் மீது வசைகள் பாய்வது இந்திய ஆன்மிக மரபு. கேட்கக் கூடாத கேள்விகள் பல்லாயிரமும் கடவுளை நோக்கி இந்தியச் சமூகம் எழுப்பிவிட்டது.

கடவுளின் மனசாட்சி என்ன பதிலை அவற்றுக்கெல்லாம் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற ஒரு கேள்வி இதுவரை கடவுளை நோக்கி எழுப்பப்படவில்லை. இன்று கேட்கப்பட்டுவிட்டது. கடவுள் இந்தப் பாட்டிக்கு என்ன பதிலைச் சொன்னார்?

ஒருவேளை அவரும் கையறு நிலையில்தான் நிற்கிறாரோ என்னவோ? முக்கியமாக நாம் அறிந்துகொள்வோம், கடவுளின் மீதும் போர் தொடுக்கப்பட்டுவிட்டது.

- தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x