Last Updated : 04 Mar, 2016 09:25 AM

 

Published : 04 Mar 2016 09:25 AM
Last Updated : 04 Mar 2016 09:25 AM

வேற்றுலகப் பயணம் சாத்தியமா?

சூரிய மண்டலத்துக்கு வெளியே, எங்கோ ஒரு கிரகத்தில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்களைப் பார்க்க நமக்கு ஆசையாக இருக்கிறது. நம்மால் நேரில் சென்று பார்க்க முடியுமா? அந்தக் கிரகத்துக்குச் செல்வதில் ஒன்றல்ல, பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை நம்மால் சமாளிக்க முடியும் என்றால் அது சாத்தியமே.

முதல் பிரச்சினை, அந்தக் கிரகம் உள்ள தொலைவு. சந்திரனுக்குச் சென்று வந்தோமே என்று கேட்கலாம். சந்திரன் பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி. சந்திரன் வெறும் 4 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கிறது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு சந்திரனுக்கு ஒன்றரை நாளில் போய்ச் சேர்ந்துவிடலாம். ஆனால், நாம் எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தைச் சுற்றிவருகின்ற கிரகத்துக்குச் சென்றாக வேண்டும்.

ஒளியாண்டுத் தொலைவு

பூமிக்கு (சூரியனுக்கு) ‘மிக அருகில்’ இருக்கின்ற நட்சத்திரம் பிராக்சிமா செண்டாரி நட்சத்திரம். அது 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பிடுகின்ற அலகு ஆகும். ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பியதிலிருந்து ஓராண்டுக் காலத்தில் பயணம் செய்யக்கூடிய தூரமே ஒளியாண்டுத் தொலைவு.

ஒளி ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. தூரம் செல்லும். அந்த அளவில் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. ஆகும். நட்சத்திரங்களுக்கான தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்வதானால், நிறைய பூஜ்ஜியங்களைப் போட வேண்டியிருக்கும் என்பதால், ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர்.

தூரம் ஒரு பெரிய பிரச்சினை அல்ல. தகுந்த தொழில்நுட்பம் இருந்தால் தூரத்தை ஜெயிக்கலாம். பஸ், ரயில், விமானம் ஆகியவை இல்லாத காலத்தில் தமிழகத்திலிருந்து காசி யாத்திரை சென்று

வருவது பெரும்பாடாக இருந்தது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் லண்டனுக்குக் கப்பல் மூலம் பல மாதம் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் தூரத்தை வென்றன. ராக்கெட்டும் விண்கலமும் சந்திர மண்டலப் பயணத்தைச் சாத்தியமாக்கின.

அண்டவெளிப் பயணம்

சுமார் 11 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள டாவ் செடி என்னும் நட்சத்திரத்தை பூமி போன்ற இரு கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒளி வேகத்தில் இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் ஒரு விண்கலத்தைச் செலுத்தும் திறன் கொண்ட ராக்கெட்டை நம்மால் உருவாக்க முடியுமானால், நீண்ட அண்டவெளிப் பயணம் பற்றிச் சிந்திக்க முடியும்.

இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்டுகள் அதி வேகத்தில் செல்லக்கூடியவை அல்ல. 2006-ல் நாஸா, குட்டிக் கிரகமான புளூட்டோவை நோக்கி ஒரு ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தியபோது, அந்த ராக்கெட் மணிக்கு 64 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்தது. விண்வெளி விஞ்ஞான வரலாற்றிலேயே ஒரு ராக்கெட் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது அதுவே முதல் தடவை.

ஆனால், மிகத் தொலைவில் உள்ள கிரகத்துக்கு நாம் செல்வதானால் ஒரு விண்கலத்தை மணிக்கு பல கோடி கி.மீ. வேகத்தில் செலுத்தக்கூடிய ராக்கெட் தேவை. ராக்கெட்டுகளில் இப்போது நாம் பயன்படுத்துகின்ற திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் எரிபொருட்களால் அவ்வித வேகத்தை அளிக்க இயலாது. எனவே, புதிய வகை எரிபொருளைக் கண்டுபிடித்தாக வேண்டும். அது மட்டும் போதாது. அதி வேகத்தில் செல்கின்ற ராக்கெட்டைப் புதிய வகைப் பொருட்களைக்கொண்டு தயாரிக்க வேண்டியிருக்கும்.

எரிபொருள் தேவையில்லை

பூமியிலிருந்து அந்த வேகத்தில் கிளம்பிய பிறகு, வழி நெடுகப் பயணம் செய்ய எரிபொருள் செலவு எதுவும் கிடையாது. பயணிக்க ஆரம்பித்த பிறகு விண்கலமானது இயற்கை விதிகளின்படி தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும். நாம் காரில் செல்வதானால், போய்ச் சேருகின்ற இடம் வரையில் இன்ஜின் இயங்கியாக வேண்டும். ஆகவே, ஒவ்வொரு விநாடியும் எரிபொருள் செலவாகிக்கொண்டிருக்கும். விண்வெளிப் பயணம் அப்படியானதல்ல. கிளம்பிய பிறகு இன்ஜின் செயல்பட வேண்டியதில்லை. வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அல்லது வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போதுதான் மறுபடி இன்ஜினை இயக்கியாக வேண்டும். ஆற்றில் ஆளில்லாப் படகைத் தள்ளிவிட்டால் அது தானாக மிதந்து செல்வதைப் போல விண்கலம் விண்வெளியில் சென்றுகொண்டிருக்கும். சூரியனை கோடிக்கணக்கான ஆண்டுகளாகச் சுற்றிவருகின்ற பூமியில், சூரியனைச் சுற்றி வர ஏதேனும் எரிபொருள் இருக்கிறதா? அதி வேகத்தில் செல்வதற்கு உதவக்கூடிய எரிபொருளை உருவாக்குவதில் வெற்றிபெற்றுவிட்டால், அந்த வேகத்தில் செல்வதற்கான ராக்கெட்டைத் தயாரிப்பது சாத்தியமாகலாம்.

அவ்வளவு தொலைவு செல்லும் விண்கலத்தில் 2 அல்லது 3 பேர் செல்வது உசிதமாக இருக்காது. குறைந்தது 30 பேர் சென்றாக வேண்டும். மிக நீண்ட தூரப் பயணத்துக்கான விண்கலத்தின் பல்வேறு பகுதிகளையும் கவனித்துப் பராமரிக்கவே பலர் தேவைப்படுவர்.

இவ்வித நீண்ட பயணத்தின் முடிவில், அந்தக் கிரகத்தில் இறங்க முடிவதாக வைத்துக்கொண்டாலும் மேலே வருவது எளிதான விஷயமாக இருக்காது.

பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் செல்வதில் உள்ள பிரச்சினையே கீழே இறங்கினால் எப்படி மேலே வருவது என்பதுதான். ஏனெனில், ராக்கெட் இல்லாமல் ஒரு விண்கலம் மேலே வர முடியாது. நாம் எந்தக் கிரகத்துக்குச் சென்றாலும் மேலே ஏறி வருவது என்பது பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.

ஒன்று செய்யலாம். அந்தக் கிரகத்தில் இறங்காமல் அதை வட்டமடித்துவிட்டுத் திரும்பலாம். இப்படிச் செய்தால் பிரச்சினை இருக்காது. சந்திரனில் 1969 ஜூலையில் முதல் தடவையாக மனிதன் இறங்கியதற்கு முன்னர், நாஸா அனுப்பிய அப்பலோ -10 விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் இப்படியாக சந்திரனை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, பூமிக்கு வந்து சேர்ந்தனர். ஒத்திகைப் பயணம் என்பதால் அவர்கள் சந்திரனில் இறங்கவில்லை.

சுமார் 11 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள கிரகத்துக்கு இவ்விதம் ஒத்திகைப் பயணத்தை மேற்கொள்ளலாம். அது வெற்றிபெற்றால் அடுத்த தடவை கீழே இறங்குவது பற்றிச் சிந்திக்கலாம்.

எங்கோ இருக்கிற கிரகத்துக்குப் போய்ச் சேர்வதற்கு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றால், விண்கலத்தில் உள்ளவர்கள் எப்படி ஜீவிப்பது? அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் வேண்டாமா? 30 பேருக்கு வேண்டிய உணவைக் கையோடு எடுத்துச் செல்வது என்றால் அவற்றின் எடையே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும்.

ஆனால், இந்த சாப்பாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி உண்டு. அவசியம் கருதி விழித்துக்கொண்டிருக்கிற சிலரைத் தவிர, யாருக்கும் மாதக் கணக்கில் சாப்பாடே கிடையாது என்றால் பிரச்சினை தீர்ந்துவிடும். அதாவது, சாப்பிட வேண்டிய அவசியமே இன்றி அவர்கள் பல ஆண்டுக்காலம் தொடர்ந்து கட்டாயமாக உறங்கும்படி செய்துவிட்டால் பிரச்சினையைச் சமாளித்துவிடலாம். இப்படியான நீள் துயில் சாத்தியமா என்பது ஏற்கெனவே ஆராயப்பட்டு வருகிறது

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com, (தொடரும்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x