Last Updated : 16 Feb, 2014 12:31 PM

 

Published : 16 Feb 2014 12:31 PM
Last Updated : 16 Feb 2014 12:31 PM

மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று பா.ஜ.க-வின் கெப்பல்ஸ்கள் அணி 24x7 ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கூவினாலும், தமிழ்நாடு, பா.ஜ.க. அலை ஏதும் வீசாத குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது என்பதுதான் கள உண்மை. தமிழ்நாட்டில் நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் மோடியா ராகுலா கேஜ்ரிவாலா என்ற அடிப்படையிலேயே நடக்கப்போவதில்லை, நடக்க முடியவும் முடியாது என்பதே அசலான உண்மை.

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தல்போல தி.மு.க-வா அ.இ.அ.தி.மு.க-வா என்ற அடிப்படையிலேயே போட்டி நடக்கவிருக்கிறது. இருவரும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். ஆனால், டெல்லி ஆட்சியில் செல்வாக்குடன் இருக்கப்போவது யார் என்பதுதான் தேர்தல் களத்தில் இன்று அவர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை.

கடந்த ஒரு மாத காலமாக வெவ்வேறு இதழ்களும் ஊடகங்களும் செய்துவரும் கருத்துக் கணிப்புகள், கள நிலவரச் செய்தி அறிக்கைகள், கடந்த காலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், விருப்புவெறுப்பின்றி அலசும் எல்லோருக்கும் ஓர் உண்மை புரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸோ பா.ஜ.க-வோ வேறொரு பெரிய திராவிடக் கட்சியுடன் கூட்டு இல்லாமல் அதிகபட்சம் ஒரு சீட்டுக்கு மேல் ஜெயிக்கவே முடியாது. யாருடன் சேர்ந்தால் தங்களுக்கு ஐந்தாறு சீட்டுகளாவது கிடைக்கும் என்று அலசி ஆராய்வதைத் தவிர காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறு வழி இல்லை.

அப்படி அலசினால், பா.ஜ.க-வுக்கு இருக்கும் முதல் சிக்கல், அதனுடன் கூட்டுசேர்வதை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற இரு பெரிய திராவிடக் கட்சிகளும் நிறுத்திக்கொண்டு பத்து ஆண்டுகளாகிவிட்டன. இந்த முறையும் அவை யாரும் பா.ஜ.க-வுடன் சேரப்போவதில்லை என்ற நிலையில் பா.ஜ.க-வுக்குக் கூட்டுசேர்ந்துகொள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு திராவிடக் கட்சியே இல்லை.

கடுகுகளும் மிளகுகளும்

ஆனால், ம.தி.மு.க., கட்டெறும்பு தேய்ந்து கடுகு ஆன மாதிரி, தி.மு.க., அ.தி.மு.க. இருவருடனும் மாறி மாறிக் கூட்டுவைத்து விலகி, இன்று சிறு திராவிடக் கட்சியாகவே இருக்கிறது. தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் தமிழகத்தில் மாற்று ம.தி.மு.க-தான் என்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளேனும் தனியே போட்டியிட்டு மூன்றாவது அணியை இங்கே உருவாக்க முயற்சித்திருந்தால், ம.தி.மு.க. இவ்வளவு கடுகுக் கட்சியாக இருந்திருக்காது. இப்போது, அதனுடன் பா.ஜ.க. என்ற இன்னொரு அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் இன்னொரு கடுகுக் கட்சி, வேறு வழியின்றி சேர்ந்திருக்கிறது.

பா.ஜ.க. என்ற கடுகைவிடக் கொஞ்சம் பெரிய மிளகுக் கட்சிதான் தமிழகத்தில் காங்கிரஸ். பா.ஜ.க-வுக்கு மூன்று நான்கு சதவிகிதம் வரை வாக்குவங்கி இருக்குமென்றால், காங்கிரஸுக்கு இருப்பது அதிகபட்சம் 10. இதுவரை காங்கிரஸுக்கு இருந்துவரும் வசதி என்னவென்றால், 20 முதல் 30 சதவீதம் வரை வாக்குவங்கி வைத்திருக்கும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க-வுடன் மாறி மாறிக் கூட்டுசேர்ந்து, பத்துப் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பிவிட அதனால் முடிந்திருக்கிறது. இந்த முறை பா.ஜ.க-வுக்குப் பெரிய திராவிட முதுகு கிடைக்காததுபோல காங்கிரஸுக்கும் பெரிய திராவிட முதுகு மட்டுமல்ல, சவாரி செய்ய சிறிய திராவிட முதுகுகூட இதுவரை கிடைக்கவில்லை.

அ.தி.மு.க-வுக்கே லாபம்

ஆனால், காங்கிரஸ் இந்த முறையும் தப்பித்துக்கொள்ள வசதியாக, பாக்கி இருக்கும் ஒரே அரசியல் சூழல், தி.மு.க-வுக்கு டெல்லியில் அடுத்த ஆட்சியிலும் செல்வாக்கும் பிடிமானமும் தேவை என்ற நிலைதான். இப்போதுள்ள களநிலவர மதிப்பீடுகளின்படி காங்கிரஸ் தனியாகவோ தே.மு.தி.க-வுடன் சேர்ந்தோ நின்றாலும், தி.மு.க. சில சிறு கட்சிகளுடனும், பா.ஜ.க. - ம.தி.மு.க. - பா.ம.க. என்று கூட்டுசேர்ந்தும் போட்டியிட்டாலும், அந்தப் பலமுனைப் போட்டியில் அ.தி.மு.க-வுக்கே அதிக லாபம். அ.தி.மு.க-வுக்கு பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை. மொத்தம் 40 இடங்களில் அ.தி.மு.க. அணி 30 முதல் 35 வரை இடங்களை அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அப்படி நடந்தால், தி.மு.க-வுக்கு இரட்டை இழப்பாகிவிடும். தங்களுக்கு டெல்லி அரசியலில் எந்தச் செல்வாக்கும் இல்லாமல் போவது மட்டுமல்ல, தங்களின் எதிரிக் கட்சியான அ.தி.மு.க. டெல்லி ஆட்சியில் பங்கேற்கும் நிலையையும் சந்திக்க வேண்டிவரும். ஜெயலலிதா வசம் 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களானால், அவர் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தாலும் செல்வாக்கோடு இருப்பார். பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும் அவர் தயவு தேவைப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் குறைவானாலும், அது வெளியிலிருந்து ஆதரிக்கக்கூடிய மூன்றாவது அணி ஆட்சியில் அ.தி.மு.க. இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவது தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலாகும்.

ஆனால், தி.மு.க., காங்கிரஸுடனும் விஜயகாந்தின் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்தால், களமதிப்பீடுகளின்படி மொத்தம் 40 இடங்களில் அந்த அணி சரிபாதி இடங்கள் வரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதன்படி ஜெயலலிதாவின் அணிக்கு 20 முதல் 25 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அப்போது, டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு ஓங்கி, தங்கள் தரப்பு முற்றிலும் பலவீனமாகிவிடாமல் காப்பாற்றும் வசதி தி.மு.க-வுக்குக் கிடைக்கும். இதுதான் கள யதார்த்தம்.

தயக்கத்தின் காரணம்

எனினும், இத்தனை நாள் ஒன்றாக இருந்த தி.மு.க-வும் காங்கிரஸும் இப்போது கூட்டணி அமைக்கத் தயங்கிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? கட்சியில் அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்டுவிட்ட ஸ்டாலின்தான், இந்தத் தயக்கத்தின் பிரதான காரணம் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஸ்டாலினின் தயக்கத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை விட, தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்சினையே காரணம் என்று கருதலாம். தி.மு.க-வின் சார்பில் டெல்லிக்கு எம்.பி-க்களாக அனுப்பப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்ட அழகிரி, தயாநிதி, அமைச்சர் வாய்ப்பை நூலிழையில் இழந்த கனிமொழி எல்லோருமே கலைஞர் குடும்பத்தினர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இன்று கட்சியை முழுக்கவும் தன்வசம் கொண்டுவந்துவிட்ட ஸ்டாலினுக்கு, டெல்லி அரசியல்தான் தி.மு.க-வின் சரிவுகளுக்குக் காரணம் என்றும், அந்தச் சரிவுகளில் முக்கியப் பங்காளிகளாக இருப்போர் எல்லாருமே குடும்ப அரசியலிலும் தனக்கு எதிரிகள் என்றும் தோன்றுவதில் வியப்பில்லை. எனவே, டெல்லி அரசியலை ஓரங்கட்டிவிட்டு, மாநில அளவில் மட்டுமே தி.மு.க. கவனத்தைக் குவித்து அடுத்த மூன்றாண்டுகளும் வேலை செய்தால், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வலிமை பெற முடியும் என்று அவர் கணக்கிட்டிருக்கலாம். டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இந்த மூன்று ஆண்டுகள் செல்வாக்கு இல்லாமல் போனால் குடிமுழுகிவிடப்போவதில்லை. வழக்குகளில் சிக்கியிருக்கும் கனிமொழி, தயாநிதி போன்றோருக்குத்தான் அந்தக் கவலை இருக்க வேண்டும், கட்சிக்கு இதில் இனி பாதிப்பு வராது என்பது இந்தக் கணக்கின் தொடர்ச்சி.

ஆனால், நடைமுறையில் டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இதுவரை இருந்துவரும் செல்வாக்கை, பிடியை அது இந்த முறை இழந்தால், அந்தப் பிடி ஜெயலலிதாவிடம் போய்விட்டால், ஸ்டாலின் நினைப்பதைவிடப் பல மடங்கு கூடுதலான பாதிப்புகளையே தி.மு.க. அடைய நேரிடும். இந்த உண்மை ஸ்டாலினுக்குப் புரியாவிட்டாலும் கலைஞருக்குப் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காங்கிரஸ் காத்திருக்கிறது. தங்களுடன் தி.மு.க-வைக் கூட்டணி சேரவைக்க விஜயகாந்த் என்ற துருப்புச் சீட்டை காங்கிரஸ் பயன்படுத்துகிறது.

டெல்லிக்குப் போவாரா ஸ்டாலின்?

தி.மு.க-வுக்குள் இந்த நெளிவுசுளிவுகளைப் புரிந்துவைத்திருக்கும் அனுபவசாலிகள், ஸ்டாலினின் உட்கட்சி குடும்ப அரசியலா, வெளியே எதிரிக் கட்சியைச் சமாளிக்கும் பொது அரசியலா என்ற ஹாம்லெட் கலக்கத்துக்குத் தீர்வாகச் சில யோசனைகளைப் பேசிவருகிறார்கள். டெல்லி அரசியல் தி.மு.க-வைச் சரிவுக்குத் தள்ளியது என்றால், அதிலிருந்து ஸ்டாலின் ஒதுங்குவதற்குப் பதிலாகத் தானே இறங்க வேண்டும் என்பது அந்தத் தீர்வு. காங்கிரஸுடனும் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்துவிட்டு, ஸ்டாலின் தானே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லிக்குச் சென்றால்தான், டெல்லியில் ஜெயலலிதா அமைக்கும் வியூகத்தையும் நேரடியாகச் சந்திக்க முடியும்; குடும்ப உறுப்பினர்களின் வசம் டெல்லி தி.மு.க. இல்லாமல் அதையும் தன் பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்பது இந்தப் பார்வை. எப்படியும் தமிழகச் சட்டப்பேரவையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வெளிநடப்புகள் செய்வதைத் தவிர செய்ய வேறு அரசியல் பணிகள் இல்லை! ஒருவேளை, மத்தியில் தி.மு.க. ஆதரவுடன், மூன்றாம் அணியோ காங்கிரஸோ ஆட்சி அமைத்தால், அதில் ஸ்டாலின் அமைச்சராகவும் ஆகிவிடலாம். மத்திய அமைச்சராக அழகிரி செய்த சாதனையிலிருந்து மாறுபட்டு, ஸ்டாலின் சாதித்துக்காட்டினால், அடுத்த அரசியல் பாய்ச்சலுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது இந்தக் கணக்கு. இப்படிப்பட்ட கணக்குகளை நம்பியே காங்கிரஸ் காத்திருக்கிறது.

ஆனால், இப்போதைக்குக் களத்தில் தன் கைதான் ஓங்கியிருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கையுடன் ஜெயலலிதா இருக்கிறார். அவர் கை ஓங்கினால், டெல்லியில் தேவைப்பட்டால், தேர்தலுக்குப் பின் காங்கிரஸைவிட தங்களுக்கே அவர் சாதகமாக இருப்பார் என்ற கணக்கில் பா.ஜ.க-வும் நம்பிக்கையுடன் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மக்களவைத் தேர்தல் என்பது மோடி x ராகுல் தேர்தல் அல்ல. தி.மு.க x அ.தி.மு.க. முடிவு செய்யும் தேர்தல்தான்.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x