Last Updated : 27 May, 2014 08:00 AM

 

Published : 27 May 2014 08:00 AM
Last Updated : 27 May 2014 08:00 AM

மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

இந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது!

இந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின் காலம் நெருங்கிவிட்டது என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்றுக்கொண்டிருந்த அம்பாசிடர் கார்கள் இப்போது அதில் பத்தில் ஒரு பங்குகூட விற்பதில்லை.

என்னைப் போன்ற வயதான இந்தியர்களின் பயண வாழ்க்கையின் முக்கிய அங்கமாயிருந்த, எங்கள் செல்ல ‘ஆம்பி’ வீரன் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் விதவிதமான மேனாமினுக்கி கார்களுக்கிடையே போட்டி போட முடியாமல் தோற்றுப்போனான். எங்கள் காலத்தில், ‘அம்பாசிடருக்கு நாலு வீல் மட்டும் இருந்தால் போதும்… பெட்ரோலே தேவையில்லை!’ என்கிற அளவுக்கு எங்களை ஆட்கொண்டிருந்தது இந்த நண்பன்தான்!

நம் எல்லோர் வாழ்விலும் குறைந்தபட்சம் ஒரு டாக்சியாகவாவது அம்பாசிடர் கார் இடம்பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் அம்பாசிடர் வைத்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் பத்மினி வைத்திருந்த பண்ணையார்போல ஆயிரம் கதைகள் இருக்கும்.

60-களில் அம்பாலாவில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அம்பாசிடர் காரிலேயே பிரசவமாகி, அம்பாசிடர் பாட்டியா என்று காரணப்பெயரையும் தாங்கிக்கொண்டு ஒருவர் இருக்கிறார்.

60-களில் பிர்லாவில் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பி.எம்.பிர்லாவின் (பிரிஜ் மோகன் பிர்லா) செயலராகப் பணிபுரிந்தேன். தற்போதைய தலைவர் சந்திரகாந்த் பிர்லாவின் தாத்தா. பிர்லா ஹெளஸில் மாலை நேரங்களில் உத்தர்பாராவிலிருக்கும் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் ஜெனரல் மேனேஜர் டி.சி.லஹோட்டியிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று தாத்தா பேரனுக்குச் சொல்லிக்கொடுப்பது, வயதான புலி தன் குட்டிக்கு வேட்டை அனுபவங்களைக் கற்றுக்கொடுப்பது போலிருக்கும். பதின்ம வயது சந்திரகாந்த் பிர்லா தினமும் தாத்தாவுக்குத் தெரியாமல் என்னிடம் கெஞ்சி ஸ்கூட்டர் சாவியை வாங்கி, ஓரிரு ரவுண்டுகள் ஓட்டிவிட்டு வருவார். இதனால் எனக்கு லாபம் என்னவென்றால், போகும்போது காலியாகவே இருக்கும் என் ஸ்கூட்டர் டேங்க், வரும்போது ஒரு கேலன் பெட்ரோலால் நிரப்பப்பட்டிருக்கும். ஆமாம், அப்போது லிட்டரெல்லாம் வரவில்லை. ஒரு கேலன் பெட்ரோல் (சுமார் நான்கு லிட்டர் பெட்ரோல்) விலை வெறும் 12 ரூபாய் 60 நயாபைசா மட்டுமே.

சமீபத்தில் சந்தித்தபோது, சந்திரகாந்த் பிர்லா இதையெல்லாம் ஞாபகம் வைத்து நினைவுகூர்ந்தது மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது.

இப்போதைப் போலத் தேவையான பணத்தோடு அல்லது செக்கோடு ஷோரூம் போய் நமக்கு விருப்பமான நிற காரை ஓட்டிப்பார்த்து மகிழ்ந்து சாவியுடன் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக முடியாது. அன்று அம்பாசிடர் காருக்காக

ரூ. 15,000 கட்டி புக் செய்தால், கார் கைக்கு வர ஐந்து வருடங்கள்கூட ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம். அலாட்மெண்ட்டுக்கான டெலிவரி ஆர்டர் வந்த பிறகும் நாம் விரும்பிய கருப்பு நிறத்துக்குப் பதிலாக பச்சை நிறத்தில் ஒன்று காத்திருக்கும். அதை விட்டால் இன்னும் ஆறு மாதமாகலாம்... அப்போதும் ‘வெள்ளை நிறம்தான் இருக்கிறது. வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்பதுதான் பதிலாக இருக்கும். அதுதான் பெர்மிட் கோட்டா ராஜ்.

நானிருந்த 10 வருடங்களில் அம்பாசிடர் காருக்கான சாங்ஷன், பெர்மிஷனுக்காக எத்தனை தடவை தொழில்நுட்ப வளர்ச்சித் துறை தலைமை நிர்வாகியின் அலுவலகத்துக்கு ஏறி இறங்கியிருப்பேன் என்பது டெல்லி உத்யோக் பவன் படிகளுக்கும் என் கால்களுக்கும்தான் தெரியும்.

இந்தியாவின் பெர்மிட் கோட்டா காலங்களில் அம்பாசிடரையும் ப்ரீமியர் பத்மினியையும் தான் இந்திய ரோடுகளில் பார்க்க முடியும். ஆனியில் ஒன்று... ஆடியில் ஒன்று என்று எப்போதாவது கண்ணில் தென்படும் இறக்குமதி செய்யப்பட்ட காரின் பிருஷ்ட பகுதியில் ‘எச்சரிக்கை: இடது பக்க ஓட்டுநர் இருக்கை’ என்று எழுதியிருக்கும். ஐரோப்பாவில் தயாரான எல்லா காருக்கும் இடது பக்கம்தான் ஸ்டீயரிங் வீல். தலைநகரில் இருக்கும் பன்னாட்டுத் தூதரகங்கள் அவர்களுக்குத் தேவையான கார்களை இறக்குமதி செய்து, மூன்று வருடங்கள் உபயோகித்த பின் அவற்றை State Trading Corporation of India-வுக்கு மட்டுமே விற்க முடியும். பின்னர், எஸ்.டி.சி. அவற்றை ஏலமிடும். சிவாஜி கணேசனுக்கு இந்த ஏலமுறையில் ஓரிரு வண்டிகளை மலிவாக வாங்கிக்கொடுத்திருக்கிறேன். வெளிநாடுகளில் அம்பாசிடர் காரை டாக்கா நகரில்தான் பார்த்தேன். இந்தியத் தூதரகத்தில் கே.பி.எஸ். மேனன் அம்பாசிடராக இருந்தபோது, அம்பாசிடர் காரை உபயோகித்துவந்தார்.

70-களில் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டுறவில் - மாருதிக்கெல்லாம் முன்பு - ஒரு புதிய கார் தயாரிக்க பி.எம். பிர்லா ஒரு விண்ணப்பம் தயாரித்து, தொழில்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் அனுப்பினார். அதில் ‘கடந்த 30 வருடங்களாக அம்பாசிடரில் எந்த மாற்றமும் இல்லாமல் க்ரில்லை மட்டும் மாற்றி, மார்க் ஒன், மார்க் டூ என்று விற்றுக்கொண்டிருக்கிறோம். இப்போது தயாரிக்கப்போகும் கார் தொழிற்சாலைக்கு, ஒரு பைசாகூட அந்நியச்செலாவணியோ, தொழிற்சாலை சீர்திருத்தமோ தேவையில்லை. ஆனால், உலகத்தரமான ஊர்தி தயாரிக்க முடியும்’என்று உறுதியளித்திருந்தார். அப்போது சஞ்சய் காந்தியின் ‘மாருதி 5000 ரூபாய் மக்கள் கார்’ திட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியதால், இந்தத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டார் பிரதமர்.

அம்பாசிடர் தன் அந்திமக் காலங்களில் கொல்கத்தாவில் டாக்ஸிகளாகவும், தலைநகரங்களில் அமைச்சர்களுக்காக வெள்ளை நிறத்திலும் உலவிவந்தன. அதையும் இப்போதைய SUV-க்களும் BMW-7-களும் ஆக்கிரமித்துக்கொண்டு ஆண்டுக்கு 6,000 வண்டிகள்கூட விலை போகாத நிலைக்கு வந்துவிட்டது அம்பாசிடர். அன்புள்ள அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

- பாரதி மணி, மூத்த எழுத்தாளர், நாடகக் கலைஞர், தொடர்புக்கு: bharatimani90@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x