Last Updated : 05 Oct, 2015 08:41 AM

 

Published : 05 Oct 2015 08:41 AM
Last Updated : 05 Oct 2015 08:41 AM

மீண்டும் தாக்கும் டெங்கு!

கொசுக்களை ஒழிப்பது மட்டுமே டெங்குவைக் கட்டுப்படுத்த ஒரே வழி

முன்பெல்லாம் அக்டோபர், நவம்பர் மாதங்களைப் ‘பருவமழைக் காலம்’ என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றோம். இப்போது சில ஆண்டுகளாக இது ‘டெங்கு காய்ச்சல் காலம்’ என்று பயந்து அலறும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. நிகழாண்டில் தலைநகர் புதுடெல்லியில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்ச கத்தின் புள்ளிவிவரப்படியே செப்டம்பர் 20 வரை புதுடெல்லியில் மட்டும் 27,668 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 60 பேர் இறந்தி ருக்கிறார்கள். இப்போது புதுடெல்லியைத் தவிர்த்து, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்மாநிலங்களில்தான் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் இதுவரை 10,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

'டெங்கு' (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் டெங்கு காய்ச்சல் வருகிறது. இந்தக் கிருமிகளைச் சுமந்து திரியும் ‘ஏடஸ் எஜிப்தி' (Aedes Aegypti) எனும் கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது கிருமிகள் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக்கூடியவை. பகலில்தான் கடிக்கும்; அதுவும் பெண்கொசுதான் கடிக்கும். கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும்.

அறிகுறிகள் என்ன?

கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கே உரித்தான அறிகுறிகள். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயை இனங்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும். சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

ஆபத்து எப்போது?

பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந் ததும் ஓர் அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறை வதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரை யீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகிய வற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கான சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்த அழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறி வது மிக முக்கியம். இதன்மூலம் இந்த ஆபத்தான பின்விளைவுகளை வரவிடாமல் தவிர்க்க முடியும். டெங்கு ஐ.ஜி.எம். (Dengue IgM), என்.எஸ்.1 ஆன்டிஜென், எலிசா (Elisa), பிசி.ஆர். (PCR) ஆகிய நவீன பரிசோதனைகளில் டெங்கு பாதிப்பு உடனே தெரிய வரும். இந்தப் பரிசோதனை வசதிகளை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்தால், ஏழை எளியவர்கள் இந்தக் காய்ச்சலால் உயிரிழப்பதைத் தவிர்க்கலாம்.

உதவும் நவீனத் தொழில்நுட்பங்கள்

டெங்குவைப் பொறுத்த அளவில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி. நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்தான் டெங்கு பரவுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்தப் பருவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட வேண்டும். கொசுக்களை ஒழிக்க ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற மருந்துகளை முறைப்படி முன்கூட்டியே பயன்படுத்துவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு உலக அளவில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் தேவை.

உதாரணத்துக்கு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை, பிற நீர்நிலைகளில் 'கம்பூசியா அஃபினிஸ்' ( Gambusia affinis) எனும் மீன்களை வளர்க்கின்றனர். இவை கொசுக் களின் லார்வாக்களைத் தின்றுவிடும். இதனால் கொசுக் கள் வளர்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். கொசுக்களை வேரோடு அழிக்கும் தொழில்நுட்பம் இது. சமீபத்தில், பிரேசில் நாட்டில் கொசுக்களை மலடாக் கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, குறிப்பிட்ட பருவத்துக்குப் பிறகு கொசுக்கள் வளர்வதற்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும் வகையில் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி அமைத்து, அந்தக் கொசுக்களை ஒரு பண்ணையில் வளர்த்து, வெளியில் விடுகின்றனர். இந்தக் கொசுக் களோடு மற்ற கொசுக்கள் இணைந்து இனப்பெருக்கம் செய்து பிறக்கிற கொசுக்கள் தொடர்ந்து வளர வேண்டுமானால், அவற்றுக்கு டெட்ராசைக்ளின் மருந்து தேவைப்படும். அது கிடைக்காதபோது அவை இனப்பெருக்கம் செய்ய முடியாது. இறந்து விடும். இந்த வகையில் கொசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி கொசுக்களை ஒழிக்க முன்வந்துள்ளனர். இந்தியாவிலும் இம்மாதிரியான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதற்கு நம் அரசுகள் புதிய திட்டங் களைக் கொண்டுவர வேண்டும்.

மக்கள் கடமை

டெங்கு நோயை ஒழிப்பதில் மக்களுக்கும் அதிக கடமை உண்டு. வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டு மல்ல, சாதாரண தண்ணீர்கூடத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சாக்கடைகளைச் சுத்தப் படுத்துவது போன்றவற்றில் சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொசுக்களை ஒழிக்கும் புகை அடிக்கும் பணிகளை உள்ளாட்சிகள் தீவிரப்படுத்த வேண்டும். பூந்தொட்டிகள், அழகு ஜாடிகள், சிறு பாத்திரங்கள், தகர டப்பாக்கள், பயன்படாத டயர்கள், ஆட்டு உரல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டடம் கட்டுமானப்பணிகள் நிகழும் இடங்களில் சுத்தம் காக்கப்பட வேண்டும்.

தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போதெல்லாம் தொட்டிகளில் தண்ணீர் சேமிக்கும் வழக்கம் எல்லா ஊர்களிலும் உள்ளது. அப்போது அந்தத் தொட்டிகளைச் சரியாக மூடிவைக்க வேண்டும். டெங்கு நோயை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமானால், கொசுக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எப்படி பெரியம்மை, மலேரியா, போலியோ போன்ற நோய்களை ஒழிப்பதற்குத் தனித் திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி பெற்றோமோ அதுபோல டெங்குவுக்கும் தேசிய அளவில் தனித்ததொரு தடுப்புத் திட்டத்தை வரையறுத்து, போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும்.

கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x