Last Updated : 24 Aug, 2014 12:00 AM

 

Published : 24 Aug 2014 12:00 AM
Last Updated : 24 Aug 2014 12:00 AM

மனதில் நிறைந்திருக்கும் மதறாஸ் | நடிகர் நாசர் எழுதிய அனுபவக் கட்டுரை

எனக்கும் சென்னைக்குமான (என்னுடைய மனதில் என்றும் மதறாஸ்தான்) உறவு மிக நெருக்கமானது; உணர்வுரீதியாக மட்டுமல்ல; புவியியல்ரீதியாகவும். ஏனெனில், நான் இருந்த செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் 60 கிலோ மீட்டர்தான். என்றாலும், நான் சென்னைக்கு வந்தது எனது 13-வது வயதில்தான்.

ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று, “நாளைக்கு என்னுடன் மெட்றாஸ்க்கு வர்றியாடா?” என்று கேட்டார். அப்போதெல்லாம் சென்னைக்குப் போவது என்பது கிட்டத்தட்ட வெளிநாடு போவதுபோலத்தான். உடனே, சந்தோஷமாகத் தலையாட்டினேன். மறுநாள், சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அப்பா மடியில் உட்கார்ந்ததும், காற்று தாலாட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். “மெட்றாஸ் வந்துடிச்சி” என்று அப்பா உலுக்கியவுடன், விழித்த என் கண்கள் முன் பரந்து விரிந்து கிடந்தது சென்னை. பாரி முனையில் இறங்கினோம். ஒரே ஜன நெரிசல், பரபரப்பு. பேருந்து நிலையம் எதிரில் அப்பா பதநீர் வாங்கிக் கொடுத்தார். பழக்கடை தாண்டி கந்தகோட்டம் என்று ஓர் இடத்தில்தான் அப்பா, தன் கில்ட் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்குவார். இந்த முறை, என்னையும் சென்னைக்கு அழைத்துவந்திருந்தார்.

நினைவின் சொர்க்கம்: பின்னர், தேவி பாரடைஸ் திரையரங்கம் வளாகத்துக்குள் நுழைந்தோம். அங்கு படம் பார்க்கவில்லை. வெறுமனே திரையரங்கைச் சுற்றிக் காண்பித்தார் அப்பா. அங்கே வட்டமான, சரிவுப் பாதை ஒன்று இருக்கும். படிக்கட்டு இல்லாமல் சுற்றிச் சுற்றி மேலும் கீழும் போகக்கூடிய பாதை. அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த வட்டப் பாதைக்கு நடுவில் சுமார் மூன்று அல்லது நான்கு அடி பருமனும், அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயரமும் கொண்ட செவ்விந்தியர் ஒருவரின் சிலை ஒன்றிருக்கும். அதன் மேல் தண்ணீர் பீறிட்டு அடிக்கும்படி செயற்கை நீரூற்று ஒன்றை அமைத்திருந்தார்கள். மறக்க முடியாத நினைவு அது. சென்னைக்கு வந்த முதல் நாளில் அணிந்திருந்த உடைகூட நினைவிருக்கிறது.

அதன் பின்னர், சென்னை என் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானது. கிறிஸ்தவக் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். அவ்வப்போது ரயிலில் ஏறி தாம்பரத்திலிருந்து பாரி முனைக்குப் போய்வருவேன். எப்போதாவது கோடம்பாக்கம் லிபர்ட்டி, குரோம்பேட்டை வெற்றி போன்ற திரையரங்குகளில் படம் பார்ப்போம். நான் நடிகனாக வேண்டும் என்று விரும்பிய என் அப்பா, சென்னை திரைப்படக் கல்லூரியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அப்போதெல்லாம் செங்கல்பட்டிலிருந்து ரயிலில் வந்து மாம்பலத்தில் இறங்குவேன். பனகல் பூங்கா ஓரமாக நடந்து, ஜி.என். செட்டி சாலை வழியாக வேர்க் கடலையைக் கொறித்துக்கொண்டே நடந்து போனால், ஜெமினி சர்க்கிள் வரும். அதைத் தாண்டிய வுடன் திரைப்படக் கல்லூரி. ஜி.என். செட்டி சாலையில் கடலையை மென்றுகொண்டே நடந்துபோவது ஒரு சுகமான அனுபவம். அவ்வளவாக ஆள் நடமாட்டமே இருக்காது. பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அந்தச் சாலை எனக்கு ஒரு நண்பன்போல. அதில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அங்கிருந்த ஒரு பூங்காவில் தூங்கியிருக்கிறேன்.

70-களில் சென்னையில் தனி வீடுகள்தான் நிறைந் திருந்தன. வழக்கமாக நான் போகும் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு வீட்டுக்கு வெளியே ‘நச்சினார்க்கினிய சிவன், வண்டார் பூங்குழலி' என்று பெயர்ப் பலகை இருக்கும். அந்தப் பெயர்களைப் பார்த்துவிட்டுத்தான் கடந்து போவேன். திரைப்படக் கல்லூரியிலிருந்து சபையர், அங்கிருந்து பிரிட்டிஷ் கவுன்சில், கொஞ்சம் தள்ளி ஸ்பென்சர்ஸ், பிறகு தேவி பாரடைஸ், சாந்தி, ஜங்ஷனைக் கடந்தால் ராஜாஜி ஹால் ஊடே நுழைந்து வலது பக்கம் திரும்பினால் டி.வி. ஸ்டேஷன், அதையும் கடந்தால் மெரினா பீச்; இவ்வளவுதான் அப்போதைய சென்னை. நடந்தே கடந்து சென்றுவிடக்கூடிய நகரமாகத் தான் சென்னை அப்போது எனக்குத் தோன்றியது.

தாஜ் கோரமண்டலில் வேலை செய்தபோது, நுங்கம்பாக்கம் பகுதிகளிலெல்லாம் சைக்கிளில் சுற்றுவேன். ஷிஃப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி யிருந்தது. செங்கல்பட்டிலிருந்து வரவும் முடியாது. இங்கே அறை எடுத்துக்கொண்டு தங்கவும் வசதியில்லை. எனவே, நானும் என் நண்பர்களும் இப்போது உள்ள அண்ணா மேம்பாலம் சர்க்கிளில் தூங்குவோம். எங்களைப் போலப் பலரும் அங்கு தூங்குவார்கள். விடியும் வரை நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதன் பிறகு தூங்கி எழுந்து தாஜ் கோரமண்டல் பணியாளர் களுக்கான ஓய்வறையில் தயாராகி, வேலைக்குச் சென்றுவிடுவோம். அதன் பின் வாழ்க்கையில் பல மாற்றங்கள். அனைத்திலும், சென்னை எனக்கு ஆறுதலாக, கூடவே பயணித்தது.

மாறிப்போன முகம்: இப்போதைய சென்னையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ மனதுக்கு உவப்பானதாக இல்லை. அன்று நடந்ததுபோல இன்று ஜி.என். செட்டி சாலையில் நடக்க முடியாது. நடைபாதைகளும் இல்லை, மரங்களும் இல்லை. நச்சினார்க்கினிய சிவனும் வண்டார் குழலியும் எங்கு போனார்களோ தெரியவில்லை. அந்த இடத்தில் பளபளப்பான வணிகக் கட்டிடங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

இப்போது இருப்பதை வளர்ச்சி என்று கூறுவது விசித்திரமாக இருக்கிறது. நாம் நாமாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய சென்னையில் இடமே இல்லை. அப்போது மூர் மார்க்கெட் இருந்தது. விரக்தியான மனநிலையில் அங்கே நுழைபவர்களை உற்சாகமாக மாற்றிவிடும் அதிசயப் பிரதேசம் அது. பழைய கடிகாரங்கள், வித்தியாசமான பொருட்கள், புத்தகங்கள், மீன்கள், பறவைகள் என்று பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதேபோல், பழைய ஸ்பென்சரும் வசீகரமான இடம்தான். ஆனால், அது மேல்தட்டு மக்களுக்கானது.

இன்றைய சென்னைக்கென்று தனிப்பட்ட எந்த அடையாளமும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள பல இடங்கள் பிடிக்காதபோதும், கதீட்ரல் சாலையில் இருக்கும் தாவரவியல் பூங்கா எனக்குப் பிடிக்கும். அதேபோல், எழும்பூர் அருங்காட்சியகமும், அதன் பின்னால் அடைந்திருக்கும் காடும் மிகவும் பிடித்தமானவை. கலைஞர்கள், இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்த டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் இடிக்கப்பட்டது பெரும் வலியைத் தந்தது. குப்பைகளும் அழகுணர்ச்சியின்மையும் சென்னையின் அழகைக் குறைக்கின்றன என்பது உண்மைதான். ‘நான் வாழும் நகரம் இது' என்ற பொறுப்பு வந்தாலே எல்லாம் மாறிவிடும்.

மாறாத மனசு! - பொதுவாக, சென்னைவாசிகள் நடந்துகொள்ளும் முறை, பழகும் முறை, விருந்தினர்களைக் கவனிப்பது ஆகியவற்றைப் பற்றி எதிர்மறையான கருத்துகள் உண்டு. என்னைப் பொறுத்தவரை தன்னை நாடி வருபவர்களுக்கு நம்பிக்கை தரும் நகரம் இது. காசில்லாமல்கூட எப்படியாவது இங்கே வந்துவிட்டுப் போகலாம். இன்னும் கையேந்தி பவன்கள் உள்ளன. ஒன்றுமில்லாதவருக்குக்கூட ஏதாவது ஒன்று இங்கே கிடைத்துவிடும். இன்னொரு நல்ல விஷயம். சென்னைவாசிகளிடம் நாம் ஏதாவது கேட்டால், நின்று, பொறுமையாகச் சொல்லிவிட்டுத்தான் போவார்கள். என்னைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நட்புணர்வுள்ள நகரமாகத்தான் இன்றும் இருக்கிறது, என் ‘மதறாஸ்’.

- நாசர், நடிகர், இயக்குநர், தொடர்புக்கு: kameelanasser@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x