Last Updated : 16 Mar, 2015 10:00 AM

 

Published : 16 Mar 2015 10:00 AM
Last Updated : 16 Mar 2015 10:00 AM

போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு...

நீதிபதிகள் பணி நியமனத்தில் சமூகநீதி மறுக்கப்படுகிறதா? புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஒரு பார்வை!

‘வெற்றிவேற்கை’ எழுதிய அதிவீரராம பாண்டியன், ‘‘பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே/ மெய்யுடையொருவன் சொலமாட்டாமை யால் பொய்போலும்மே பொய்போலும்மே” என்றார். தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கும், அவர்கள் வெளியிட்டுவரும் செய்திகளுக்கும் இந்தக் கூற்று முற்றிலும் பொருந்தும். காரணம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் செய்துவரும் பிரச்சாரத்தில் உண்மை இல்லை என்பதைத் தமிழக நீதித்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பார்க்கும் யாராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த பிப்ரவரி 19-ல் தலைமை நீதிபதியைச் சந்தித்த ‘சமூகநீதிக்கான போராட்டக் குழு’வின் அமைப்பாளர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. முதல் கோரிக்கை என்னவென்றால், இனி உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் நபர்களின் பட்டியலில் பார்ப்பனர், முதலியார், கவுண்டர், பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறக் கூடாது என்பதே. அவர்களின் இரண்டாவது கோரிக்கை, இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத சாதியைச் சேர்ந்தவர்கள்தான் இனி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது.

ஆனால் உண்மையிலேயே நீதிபதிகள் பணி நியமனத்தில் சமூகநீதி மறுக்கப்படுகிறதா என்பதையும், சமூகநீதி என்றால் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். தமிழகத்தில் சட்டத்தின் வாயிலாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமூகநீதி என்னவென்றால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 18% தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 1% பழங்குடியினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 30% பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதாகும். அதாவது தமிழகத்தைப் பொறுத்த அளவில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகபட்சம் 69% இடஒதுக்கீடு உள்ளது என்பதும், அந்த ஒதுக்கீடு தனித்தனி சாதிகளுக்கான ஒதுக்கீடாக அல்லாமல் பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியல் இன மக்கள், பழங்குடியினர் ஆகிய குழுக்களுக்குத்தான் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அதாவது, இடஒதுக்கீட்டுச் சலுகை ஒவ்வொரு சாதிக்கும் அளிக்கப்படும் சலுகையல்ல, பல சாதிகளைக் கொண்ட ஒவ்வொரு பிரிவுக்கும் அளிக்கப்படும் சலுகையே. இந்த 69% இடஒதுக்கீடு என்பது உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பொருந்தாது. ஆனால், கீழமை நீதிமன்றங்களில் உள்ள மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிமன்ற நடுவர்களுக்கு இந்த 69% இடஒதுக்கீடு பொருந்தும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள்

தற்போது உயர் நீதிமன்றத்தில் 42 நீதிபதிகள் பணி புரிகிறார்கள். அவர்களில் 2 பேர் வெளிமாநிலத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கென்று நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 4 பேர் தற்போது வெளிமாநிலங்களில் பணிபுரிந்துவருகிறார்கள். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் 44 பேர் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த 44 பேரில், 6 பேர் முற்பட்ட வகுப்பினர், 28 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஒருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 9 பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாத உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவியிலேயே 85% பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மாவட்ட நீதிபதிகள்

பின்வரும் பட்டியல்களைப் பாருங்கள்:

சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, கீழமை நீதிமன்றங்களில் தமிழகத்தில் தற்போது பணிபுரியும் 864 நீதிபதிகளில், 45 பேர் கிறிஸ்தவர்கள், 42 பேர் முஸ்லிம்கள். அதாவது, மொத்தமுள்ள பதவிகளில் 10% பதவிகளில் சிறுபான்மையினர் பணிபுரிகிறார்கள். இந்தப் புள்ளிவிவரத்தின்படி, கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைவிட, சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். ஒரு சிறு வழக்கறிஞர்கள் குழுவினரால் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை உண்மைக்கு மாறானது என்பதே மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் நமக்குத் தெரிவிக்கும் உண்மை.

கீழமை நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி பதவிகளுக்கு எப்போதெல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அப்போ தெல்லாம், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவற்றில் பங்குகொள்வதே தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. மேலே குறிப்பிட்டதுபோல், கீழமை நீதிமன்றம் என்பது (1) மாவட்ட நீதிபதிகள் (2) முதுநிலை உரிமையியல் நீதிபதிகள், மற்றும் (3) உரிமையியல் நீதிபதிகள் ஆகிய மூன்று பிரிவுகளாலான பதவிகளைக் கொண்டது. உரிமையியல் நீதிபதிகள் எனப்படும் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் நேரடி நியமனத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.

மாவட்ட நீதிபதிகள் (நுழைவு நிலை) பதவிகள் 25% நேரடி நியமனத்தின் மூலமும், 10% துறைரீதியான போட்டித் தேர்வுகள் மூலமும், மற்றும் 65% பதவி மூப்பு அடிப்படை மற்றும் தகுதி அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. சாதாரணமாக, மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் மூலம் நேரடி நியமனத்தின் கீழ் தேர்வு செய்யப்படுகிறார்கள். மாவட்ட நீதிபதிகள் (நுழைவு நிலை) உயர் நீதிமன்றத்தின் மூலம் நேரடி நியமனத்துக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கீழமை நீதிமன்றங்களும் தமிழ்நாடு நீதித்துறைப் பணியின் கீழ் வருவதால் எந்தவொரு பதவிக்கான நேரடி நியமனத்துக்கும், தமிழ்நாடு சார்நிலைப் பணிகள் விதி 22-ன் படி 200 புள்ளி வகுப்புவாரிப் பட்டியல் அடிப்படையில் 69% இடஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட வேண்டும்.

மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்கள் நியமனம் 2012

2012-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, உயர் நீதிமன்றம் தானே முன்வந்து 185 உரிமையியல் நீதிபதிகள் (மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித் துறை நடுவர்கள்) நேரடி நியமனத்துக்கான முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டு, ஜனவரி 2012-ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 10,443 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. அவற்றில் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட பின்னர், 8,998 நபர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. நியமன விதிகளுக்கிணங்க, அனைத்து விண்ணப்பதாரர்களும் நான்கு தேர்வுகளை எழுத வேண்டும். நியமன விதிகளில் நிர்ணயித்துள்ளபடி பட்டியல் இனத்தவர் ஒவ்வொரு தேர்விலும் குறைந்தபட்சம் 30% மதிப்பெண்கள் பெற்றால்தான் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுடையவராவார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒவ்வொரு தேர்விலும் குறைந்தபட்சம் 35% மதிப்பெண்கள் பெற்றால்தான் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுடையவராவார். பொதுப் பிரிவினர் (ஒதுக்கீடற்ற பிரிவு) ஒவ்வொரு தேர்விலும் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றால்தான் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுடையவராவார்.

கீழ்க்கண்ட பட்டியலைப் பாருங்கள்:

மேற்கண்ட 460 பேரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இறுதியாக 174 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை நடுவர்களாக 2012-ல் நியமிக்கப் பட்டார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 174 பேரில் ஒருவர் மட்டுமே பொதுப்பிரிவைச் சேர்ந்தவர், 75 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 12 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்கள்), 43 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 36 பேர் பட்டியல் இனத்தோர், 3 பேர் பட்டியல் இனத்தோர் (அருந்ததியர்) மற்றும் 4 பேர் பழங்குடியினர். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட 174 பேரில் ஒருவர் மட்டும்தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மீதி 173 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர்.

மாவட்ட நீதிபதிகள் (நுழைவு நிலை) நியமனம் 2013

2013-ல் சென்னை உயர் நீதிமன்றம் 23 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய முடிவு செய்தது. இந்த 23 காலியிடங்களில் தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணிகள் பொது விதிகள் அட்டவணை III-ன்படி, 1 பதவி பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), 3 காலியிடங்கள் பட்டியல் இனத்தவர் (2 ஆண், 1 பெண்), 4 காலியிடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (3 ஆண், 1 பெண்), 1 காலியிடம் பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்-பெண்) மற்றும் 6 காலியிடங்கள் பிற்படுத்தப்பட்டோர் (4 ஆண், 2 பெண்) ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 8 காலி யிடங்கள் (4 ஆண், 4 பெண்) பொதுப்பிரிவைச் சேர்ந்தவை.

23 மாவட்ட நீதிபதிகளுக்கான பதவிகளுக்கு, மொத்தம் 3,273 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 34 விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர், 3,239 பேருக்குத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. அதில் 2,688 பேர் இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்றார்கள். அவர்களில் 165 பேர் மட்டும்தான் 35% மதிப்பெண்கள் பெற்று இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றார்கள். அப்படி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 165 பேரில் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 16 (10 ஆண்கள், 6 பெண்கள்), பிற்படுத்தப்பட்டோர் 97 (78 ஆண்கள், 19 பெண்கள்), பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்) 6 (3 ஆண்கள், 3 பெண்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 (30 ஆண்கள், 4 பெண்கள்), பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 12 (11 ஆண்கள், 1 பெண்).

எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 165 பேரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் 23 பேர் மாவட்ட நீதிபதிகள் நியமனத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொதுப் பிரிவில் 8 காலியிடங்கள் இருந்தபோதிலும், அதில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2 நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வகுப்பு வாரியாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் விவரம் கீழே:

இதிலிருந்து நமக்குத் தெரியும் உண்மை என்னவென்றால், நீதிபதிகள் பதவியைப் பொறுத்தவரை முற்பட்ட வகுப்பினரின் பங்கேற்பே பெருமளவு குறைந்துவிட்டது. 69% இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லாத உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களிலேயே, தற்போது முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 15%-க்கும் குறைவே. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களே 85%-க்கும் அதிகம்.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு பகுதி வழக்கறிஞர்கள் இந்த உண்மையை அறியாமலோ, அல்லது மறைத்தோ, அல்லது தாமாக ஏற்படுத்திக்கொண்ட மறதி நோயின் காரணமாகவோ பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டு மக்கள் இப்படிப்பட்ட வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் அது மெய்யாகிவிடாது என்பதை நாம் உணர வேண்டும்.

- கே. சந்துரு,
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி (ஓய்வு),
தொடர்புக்கு: saraskrish1951@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x