Last Updated : 05 May, 2015 08:53 AM

 

Published : 05 May 2015 08:53 AM
Last Updated : 05 May 2015 08:53 AM

போகும் வழியும் ஒரு பள்ளிக்கூடம்தான்

முப்பதைத் தாண்டியவர்களா நீங்கள்? அப்படி யென்றால், உங்களில் பெரும்பாலானோருக்கும் இப்படிப்பட்ட பள்ளிப் பருவம் வாய்த்திருக்கும்.

காலை 8.30. இட்லியைப் பிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருப் பீர்கள். வாசலிலிருந்து குரல் கேட்கும், “ஏய், மணிமாறா வாடா. பள்ளியோடத்துக்கு லேட்டாவுது.” உங்களோடு மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் குமாரின் குரல்தான் அது. “தோ வந்துட்டேன்டா” என்று எழுந்துபோய், கையைக் கழுவிவிட்டு வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் மஞ்சப் பையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சொல்லியதும் சொல்லாததுமாக ஓட்டம் பிடிப்பீர்கள். குமாரும் நீங்களும் சேர்ந்து அடுத்த தெருவில் இருக்கும் பீட்டரையும் கூட்டிக்கொண்டு நடைபோடுவீர்கள். இப்படியாக ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும்.

பள்ளி போய்ச் சேர்வதற்குள் பேச்சு, பாட்டு, ஓட்டம், சண்டை என்று உங்களுக்குள் பெரும் கச்சேரியே நடந்து முடிந்திருக்கும். பள்ளி முடிந்த பிறகும் இப்படித்தான். வீர சாகசங்களையெல்லாம் முடித்த பிறகுதான் வீடு திரும்பல். வீடு திரும்பியதும் அம்மா தரும் டீ, காபி, நொறுக்குத் தீனியையெல்லாம் முடித்துவிட்டு, விளையாட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியது. கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் சற்று தாமதமாகத்தான் நம் பள்ளிப் பருவத்தில் நுழைந்திருக்கும். விளையாட்டென்றால், திருடன் - போலீஸ், நாடு பிடித்தல், பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக்கிச்சுத் தாம்பலம், கூட்டாஞ்சோறு முதலானவைதான். சிறுவர்-சிறுமியர் எல்லோரும் கலந்துகட்டி ஆடும் விளை யாட்டுகள் இவை. தவிர, அந்தந்த நேரத்துக்கு, அந்தந்த இடத்துக்கு ஏற்றாற்போல் நீங்களே கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டுகளும் உண்டு. இருட்ட ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா சொல்லாமலேயே பாடப் புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பிப்பீர்கள். இதுதான் அன்றாட நிகழ்வுச் சுழற்சி.

வாழ்வின் பொற்காலம்!

குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகள், நெருக்கடிகள், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கண்டிப்பு, வீட்டுப்பாடம் போன்றவற்றைக் கழித்துவிட்டு நம்முடைய பள்ளிப் பருவத்தைப் பற்றிக் கருத்து சொல்லச் சொன்னால் என்ன சொல்வோம்? “பள்ளிப் பருவம்தான் என் வாழ்வின் பொற்காலம். அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேன்” என்று தானே பெரும்பாலானோர் சொல்வோம்! அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான பள்ளிப்பருவத்தை நாம் நம்முடைய குழந்தைகளுக்குத் தருகிறோமா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொண்டால் எப்படிப்பட்ட துரோகத்தை நம் பிள்ளைகளுக்குச் செய்துவருகிறோம் என்பது தெரியும். சிறுவர்களுக்கு, கற்பனையூட்டத்துடன் கூடிய துடிப்பான ஒரு பொழுதுபோக்கு (என்லைட்டன்டு லெஷர்) தேவை என்பது உலகமெங்கும் உளவியலாளர்கள் முன்மொழியும் கருத்து. அந்தப் பொழுதுபோக்கை நாம் அவர்களுக்கு அனுமதிக்கிறோமா?

நம்மில் பெரும்பாலானோர் தெரிந்தே செய்கிறோம். ‘நம்ம காலத்துல எவ்வளவு ஜாலியா ஸ்கூல் போவோம். பாவம்! இந்தக் காலத்துப் பசங்க’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே காலை 7 மணிக்கே பெரிய புத்தக மூட்டை, சாப்பாடு எல்லாம் கட்டிக்கொடுத்து, வீட்டுவாசலுக்கோ தெருமுனைக்கோ வரும் பள்ளிக்கூட வேனில் நம் பிள்ளைகளை ஏற்றிவிடுகிறோம். என்ன செய்வது? போட்டி உலகம். நம் பிள்ளைகளின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், இப்போதிருந்து அவர்கள் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும். நம் காலம் போல இல்லையல்லவா! என்றெல்லாம் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வோம். எல்.கே.ஜி-யில் அந்தக் குழந்தைகள் ஏற ஆரம்பித்த வேன்கள் அல்லது பேருந்துகள்… 12-வது முடித்து, கல்லூரி (பெரும்பாலும் பொறியியல் கல்லூரி) முடித்து, டி.சி.எஸ்., ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தாலும் அவர்களை வேன்களோ பேருந்துகளோ பொத்திப் பொத்தி ஏந்திச்சென்றுகொண்டிருக்கும். இப்படி ஒரு ‘பேக்கேஜ்’ வாழ்க்கையின் தொடக்கமாகவே எல்.கே.ஜி. வேன் அமைந்து விடுகிறது.

சுயகற்றலின் பரவசம்

பள்ளி மட்டுமல்ல; பெற்றோர் மட்டுமல்ல; பள்ளி போகும் வழியும் நம் பிள்ளைகளுக்குக் கல்வியைத் தரும். தாங்களாகவே வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான ஆரம்பப் பயிற்சியை அது அவர்களுக்குத் தரும். குட்டி சகாக்கள் ஒன்றாகப் பள்ளிக்குப் போவதென்பது, பெரியவர்களாக வளர்ந்த பிறகு சமூகத்துடன் உறவுகொள்வதற்கான மாபெரும் பயிற்சி. எல்லாவற்றையும்விட உலகைச் சுயமாகவே கற்றுக்கொள்ளும் பரவசம்தான் இதில் மிகவும் முக்கியமானது.

சமூகத்தின் சூழலையும் இயற்கையையும் எதிர்கொள்வது என்பது கற்றல் பருவத்தில் மிகவும் இன்றியமையாதது. சகாக்களுடன் பள்ளி செல்லும் வழியில் சாலையோரம் தென்படும் சிறு சிறு உயிரினங்கள், செடிகொடிகள், மரங்கள், வழியில் குறுக்கிடும் சிற்றாறு, ஒற்றையடிப் பாதை, தோப்பு, அஞ்சல் அலுவலகம், கடைவீதி இவையெல்லாமே பள்ளிக் கல்வியைத் தாண்டிய மகத்தான கல்வியை அவர்களுக்குத் தரும்.

சைக்கிள் சாகசம்

நடந்து செல்லும் சிறுவர்கள் ஒரு பருவத்துக்குப் பிறகு சைக்கிளில் செல்ல ஆரம்பிக்கிறார்கள். அதுவும் ஒரு தொடர்ச்சிதான். அதுவும் பெரிய சாகசம்தான். தங்களைத் தாங்களே கையாள்வதில் வேறு ஒரு பரிமாணத்தை அடை வதன் அடையாளம். சைக்கிளில் செல்லும்போதும் கூட்டாகச் சேர்ந்துதான் செல்வார்கள். இப்படிச் செல்வது தோழமை உணர்வு, சூழலைக் கற்றல் என்பவற்றோடு பாதுகாப்பும்கூட.

இப்படி ஒன்றாக அவர்கள் செல்லும்போது, அவர் களுக்குள் சிறு சிறு பிரச்சினைகள், சண்டைகள் ஏற்படும். அவற்றைப் பெரும்பாலும் ஆசிரியர்களிடமோ பெற் றோரிடமோ எடுத்துச்செல்லாமல் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளும் திறனும் அவர்களுக்கு இயல்பிலேயே ஏற்படுகிறது. சமூகத்துடனான ஊடாட்டத்துக்கு மிகவும் அவசியமான ஒரு பண்பு இது.

வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல்

கிராமமோ நகரமோ அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள்தான் இன்னமும் தாங்களாகவே பள்ளிக்குச் செல்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்கள் இயற்கையான சூழலுடன் கைகோத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள் என்றால், நகரத்துச் சிறுவர்கள் தாங்கள் வாழும் சூழலுடன் கைகோத்துக்கொண்டு செல்கிறார்கள். இயற்கைச் சூழலாக இல்லாவிட்டாலும் வாழும் சூழலோடு சேர்ந்து செல்வது குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது. கிராமங்களிலும் நகரங்களிலும் தங்கள் பள்ளிக்குச் சகாக்களுடன் நடந்தோ அல்லது அரசுப் பேருந்துகளில் உற்சாகமாகப் பேசிக் கொண்டோ செல்லும் சிறுவர்கள் வாழ்க்கையோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடன் இருக்கிறார்கள்.

வாழ்க்கையுடன் குழந்தைகளைத் தொடர்புபடுத்துவதுதான் மிகவும் முக்கியமானது. உண்மையான கல்வி அதைத்தான் செய்யும். ‘பேக்கேஜ்’ கல்வி முறையோ வாழ்க்கையிலிருந்து கல்வியைப் பிரித்துவிடும். கல்வி என்பதை வெறும் அறிவாகப் பார்க்கும் கல்வி அது. அறிவும் உணர்வும் சேர்ந்ததுதான் உண்மையான கல்வி. உலகமெங்கும் ‘உணர்வுசார் அறிவு’ குறித்து (எமோஷனல் இன்டெலிஜென்ஸ்) பேசிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் இன்னும் அறிவை மட்டுமே பிடித்துக்கொண்டு தொங்குகிறோம்.

ஆனால், குழந்தைகள் அற்புதமான திறமை கொண்டவர்கள். நாம் அவர்களை வேன்களில் கொண்டுபோய் அடைத்தாலும் அவர்கள் அதற்குள்ளும் ஒரு சிறு உலகத்தை, நட்பை சிருஷ்டித்துக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களுக்கான இடத்தை எவ்வளவு குறுக்கினாலும் அந்தச் சிறு இடத்திலும் உயிர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளக் கூடியவர்கள். ஆனால், போகப்போக அந்த உயிர்ப்பையும் அவர்களிடமிருந்து நாம் பறித்துவிடுகிறோம் என்பதுதான் வேதனையானது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் மிக எளிமையானது; பள்ளி செல்லும் வழியையும் நம் பிள்ளையின் ஆசிரியராக ஆக்கிவிடுவதுதான் அது.

‘ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னைத் தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்…

மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே’

என்று தற்காலத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான தேவதேவன் கவிதை எழுதியிருப்பார். மரத்தடி நிழலைப் போலவே பள்ளி செல்லும் வழியும் நம் பிள்ளை களுக்கு எல்லாவற்றையும் அறிமுகப்படுத்திவிடும். அவர் களை அவர்களாகவே இருக்க விடுவோமே!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x