Last Updated : 16 Oct, 2013 10:07 AM

 

Published : 16 Oct 2013 10:07 AM
Last Updated : 16 Oct 2013 10:07 AM

பேரிடர்! மேலாண்மை?

ஒரே வாரத்தில் இரண்டு பேரிடர்கள். மத்தியப் பிரதேச ரத்னாகர் கோயில் திருவிழாக் கூட்ட நெரிசலில் நூற்றுக் கணக்கானோர் மிதிபட்டு இறந்திருக்கின்றனர். ஒடிசா, ஆந்திர மாநிலங்களைத் தாக்கிய புயலின் விளைவாக லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாகியிருக்கின்றனர்.

வறுமையிலும் விரக்தியிலும் பெரும் மக்கள்தொகையினர் வாழும் நம் நாட்டில், ஏழைகளின் உயிருக்கான மதிப்பு எப்போதும் குறைவானதுதான். அதனால்தான் பெரிதும் ஏழைகளே பாதிப்புக்குள்ளாகும் பேரிடர் நிகழ்வுகள் எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடி நிவாரணப் பணிகளும் போதுமான அளவில் இல்லை.

இதற்கென்றே சிறப்புச் சட்டங்களையெல்லாம் இயற்றி, நிதி அமைப்புகளையெல்லாம் ஏற்படுத்திவிட்ட தாகச் செய்திக் குறிப்புகளில் மத்திய அரசும் மாநில அரசுகளும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் அவை ஏட்டளவில் மட்டுமே இருக்கின்றன என்பதைச் சென்ற வருடம் மார்ச்சில் வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கை ஏப்ரல் 2012-ல் அவையில் வைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை.

பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓய்வுபெற்ற அதிகாரிகள்தான் உறுப்பினர்கள். எப்போதாவது டெல்லியின் நட்சத்திர விடுதிகளில் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி அறிக்கை வெளியிடுவதுதான் இதுவரை இந்த அமைப்பின் பகிரங்கமான நடவடிக்கை. “2008-ல் அமைக்கப்பட்டதிலிருந்து 2012 வரை இந்த ஆணையத்தின் தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை” என்கிறார் தணிக்கை அதிகாரி.

இந்த அமைப்புதான் தேசத்தில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்க வழிமுறைகளையும் நடவடிக்கை களையும் செய்ய வேண்டிய அமைப்பு. இது உருவாக்க உத்தரவிட்ட எந்தத் திட்டமும் முழுமையாக நிறைவேற்றப்படவே யில்லை. எந்தத் திட்டத்துக்கும் காலவரையறைகூட நிர்ணயிக்கப்படவில்லை என்கிறார் தணிக்கை அதிகாரி.

தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார், குஜராத், ஒடிசா உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர,வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம்கூட அமைக்கப்படவில்லை என்கிறது தணிக்கை அறிக்கை. எல்லா மாநிலங்களிலும் பேரிடர் வந்தால் அதைச் சமாளிப்பதற்கான தனிப் படை அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதை ஒரு மாநிலம்கூடச் செய்யவில்லை.

தணிக்கை அறிக்கை வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சென்ற மாதம் உச்ச நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனங்களால் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மத்திய அரசு, உத்தராகண்ட், ஆந்திரம், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மேற்கு வங்கம் , தமிழகம் ஆகிய மாநில அரசுகள், தேசிய ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ரத்னாகர் கோயில் திருவிழாவும் சரி, ஒடிசாவைத் தாக்கிய புயலும் சரி, போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் நடக்கவில்லை. கோயில் திருவிழாக்கள் ஆண்டுதோறும் நடப்பவை. ஒவ்வோராண்டும் எத்தனை பேர் கூடுகிறார்கள் என்பது நிர்வாகத்துக்குத் தெரியும். இந்த வருடமும் வரப்போகும் பக்தர்களுக்குப் போதுமான வசதிகளைப் பல வாரங்கள் முன்பாகவே தயார் செய்திருக்க முடியும். புயலோ, ஆந்திரத்தையும் ஒடிசாவையும் போய்த் தாக்கி கரையைக் கடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அந்தத் திசையில்தான் செல்லும் என்பதை வானிலை ஆய்வு நிலையம் துல்லியமாகச் சொல்லியிருக்கிறது. எனவே, மக்களை வெளியேற்றி, பொருட்களைப் பாதுகாக்கப் போதுமான கால அவகாசம் இருந்தது. ஆனால், இந்த வேலைகளைச் செய்யப் பயிற்சி பெற்ற ஊழியர்களோ, பிரத்தியேக அமைப்போ, அரசு வசம் தயார் நிலையில் இல்லை. அதை ஏற்படுத்தி வைப்பதுதான் தேசிய ஆணையத்தின் பணி என்கிறது சட்டம்.

இயற்கைப் பேரழிவுகளில் உயிரிழப்புக்குக் காரணம் இயற்கை அல்ல, மனிதன்தான். கட்டடங்களைக் கட்டும் முறை, பராமரிக்கும் விதம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை எல்லாம்தான் இழப்புகளை ஏற்படுத்துகின்றன. பீகாரில் 2008-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 250 சாவுகள். 30 லட்சம் பேர் வீடிழந்தனர். அதேசமயத்தில், அமெரிக்காவில் 24 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட புயலில், மொத்தம் 147 சாவுகள்தான். வீடிழந்தோர் எண்ணிக்கை வெறும் 30 ஆயிரம். நம் நாட்டின் நெரிசலான மக்கள் தொகையை மனதில் கொண்டு நாம் நமது சிற்றூர்களையும் நகரங்களையும் திட்டமிட்டு வடிவமைக்கவே இல்லை. கட்டடக் கட்டுமானங்களிலோ எங்கும் விதிமீறல்கள்.

டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் நில அதிர்ச்சியோ, அணுக் கதிரியக்க வீச்சோ ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட்டால், அதை நிர்வகிக்க நம்மிடம் எந்த ஏற்பாடும் ஒழுங்காக இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் கல்பாக்கம் அணு உலையில் நடத்திய ஒத்திகையின்போது, மக்களை அப்புறப்படுத்தக் கொண்டுவந்த பஸ்கள் பிரேக் டவுன் ஆகிவிட்டன. ஒத்திகை நடப்பதே அரசின் பல துறைகளுக்குத் தெரியாது. ஒத்திகைக்காக ஏற்படுத்தப்பட்ட கண்ட்ரோல் அறையில் போன் வேலை செய்யவில்லை. சென்ற வருடம் கூடங்குளத்தில் பேரிடர் ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சுற்றியிருக்கும் எல்லா கிராம மக்களுக்கும் அறிவுறுத்தப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஒரே ஒரு கிராமத்துக்குப் போய் அங்கிருந்த 50 பேரிடம் ஒப்புக்கு ஒரு கூட்டம் நடத்திவிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தாகிவிட்டது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டார்கள்.

இன்னொரு பக்கம், கதிர்வீச்சுப் பேரிடர் ஏற்பட்டால், ‘என்ன செய்யத் திட்டம்?’ என்று தான் தலைவராக இருக்கும் அமைப்பிடமே பிரதமர் கேள்வி எழுப்பினார். தன்னிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று இதுவரை விரிவான தகவல் எதையும் அந்த ஆணையம் நீதிமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ சொல்லவே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் சென்னையிலோ, மும்பையிலோ ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால், என்னாகும்? கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறதா? கடவுளுக்கே இந்திய அரசிடம் உத்தரவாதம் இல்லை என்கிறது உத்தராகண்டில் வெள்ளத்தில் மிதந்து சென்ற சிவன் சிலை!

- ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக விமர்சகர் - தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x