Last Updated : 04 Nov, 2016 09:39 AM

 

Published : 04 Nov 2016 09:39 AM
Last Updated : 04 Nov 2016 09:39 AM

புன்னகையும் பொறுமையும் என்ன விலை?

ஆசிரியர்களே! குழந்தைகளிடம் சிறிது பொறுமை காட்டுங்கள்; நிறையச் சிரியுங்கள்.

கடந்த வாரம் தனியார் பள்ளிகளைப் பற்றி எழுதிய கட்டுரைக்குப் பல எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும் பல்வேறு பிரச்சினைகளை எதிரொலிக்கும் வேதனைக் குரல்கள் அவை. இலக்கணம் கற்றுத்தருவதற்கான தனிக் கட்டணம் உட்படப் பலவிதங்களில் கட்டணம் வசூலிப்பது, மதிப்பெண் பெறுவதற்கு அதீத நெருக்கடி கொடுப்பது, அதிக மதிப்பெண் வாங்காத மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோரையும் மோசமாக நடத்துவது முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்த பெற்றோரின் குமுறல்களை எழுத முனைந்தால், பெரிய நூலாக அது விரியும்.

வெளிப்படையான இந்தப் பிரச்சினைகளைத் தவிர, நுட்பமான சில சிக்கல்களும் தனியார் பள்ளிகளில் உள்ளன. வளரிளம் பருவத்தினருக்கான வாழ்வியல் திறன்களை (Life Skills) யுனெஸ்கோ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. எம்பதி (Empathy) என்பது அதில் ஒன்று. பிறரது நிலையில் நம்மை வைத்துப் பார்த்து, அவர்களைப் புரிந்துகொள்ளும் திறன் இது. மாணவர்களிடம் இந்தத் திறனை வளர்க்க உதவ வேண்டிய ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் இந்தத் திறன் இருக்கிறதா? அதிநவீன முறையிலும் ஆழமான கல்விச் சிந்தனையுடனும் நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் தனியார் பள்ளிகளில் இத்தகைய திறன் மிகுந்த ஆசிரியர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்களா?

கற்பித்தல் குறைபாடு

குறிப்பான ஒரு அம்சத்தை எடுத்துக்கொண்டு இதை அணுகுவோம். மாணவர்களில் சரியாகப் படிக்காதவர்கள், உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்கள் முதலானோரை அணுகும் விதத்தில் நமது பள்ளிகளின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் கொடுப்பதில்லை என்பதோடு, அவர்கள் மேலும் நம்பிக்கையும் ஊக்கமும் படிப்பில் ஆர்வமும் இழக்கும் வகையில் சில ஆசிரியர்களின் அணுகுமுறை இருக்கிறது.

ஆண்டுக்கு ரூ.50,000-க்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் ஒரு பள்ளியில், கற்றல் குறைபாடுள்ள ஒரு மாணவனிடம் ஒரு ஆசிரியை சலிப்பும் எரிச்சலும் காட்டியிருக்கிறார். ஏற்கெனவே மெதுவாகக் கற்கும் இயல்பு கொண்ட அவன், படிப்பில் மேலும் பின்தங்கியிருக்கிறான். அந்த மாணவனின் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் இதுபற்றிப் பேசினார்கள். மருத்துவரீதியாக டிஸ்லெக்ஸியா (Dyslexia) இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்குமாறு சொன்னார்கள். டிஸ்லெக்ஸியா என்று சொல்லும் அளவுக்கு அந்த மாணவனுக்குக் கற்றல் குறைபாடு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. அவன் படிப்பதும் எழுதுவதும் ஒப்பீட்டளவில் மெதுவாக இருக்கும். பொதுவாக, அவனுக்கு எழுத்தைக் காட்டிலும் பேச்சு, பாடங்களைக் காட்டிலும் கதைகள், சொற்களைக் காட்டிலும் சித்திரங்கள் ஆகியவற்றில்தான் ஆர்வம் அதிகம்.

ஆசிரியர்களுக்குத் தேவை சிகிச்சை

இதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், நாம் வகுத்துவைத்திருக்கும் ‘மைய நீரோட்ட’ப் போக்குக்கு மாறுபட்டதாக இருப்பதால், ஆசிரியர்களுக்குப் பதற்றமும் எரிச்சலும் வருகின்றன. தரப்படுத்தப்பட்ட, ஒற்றைப்படைத் தன்மையிலான அணுகுமுறையே அவர்களது வழிமுறை. இப்படிப்பட்ட மாணவர்களுக்குச் சற்றே கூடுதல் கவனம் கொடுத்தால், அவர்கள் விரைவில் ‘பொதுப் பழக்க’த்துக்கு வந்துவிடுவார்கள். ஆனால், அப்படிக் கையாள்வதற்கான பொறுமை யாருக்கும் இல்லை.

யுனெஸ்கோ சொல்லும், பிறர் நிலையிலிருந்து அவர்களை அணுகும் ‘எம்பதி’ என்னும் பண்பு இருந்தால், ஆசிரியர்களும் நிர்வாகமும் இப்படி நடந்துகொள்வார்களா? இத்தனைக்கும் அந்தப் பள்ளியில், தேவைப்பட்டால் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் ஏற்பாடும் இருக்கிறது. ஆலோசனையும் வழங்கப்பட்டது. ஆனால், குழந்தைக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத ஆசிரியை அவனைக் காயப்படுத்திய பிறகு எந்த ஆலோசனையும் பலனளிக்கவில்லை. அவன் மேலும் மௌனமானான். மேலும் மெதுவாகச் செயல்பட்டான். அவனுடைய வேகமும் பதில் சொல்லும் தன்மையும் குறையக் குறைய ஆசிரியர்களின் கோபமும் பொறுமையின்மையும் அதிகரித்தன. இன்னும் ஓராண்டு அவன் அந்தப் பள்ளியில் இருந்திருந்தால் தீவிரமான சிகிச்சை தேவைப்பட்டிருக்கலாம் என்று பெற்றோர் கருதுகிறார்கள்.

மாணவனின் பிரச்சினையைப் புரிந்துகொள் வதற்குத் தேவையான நுண்ணுணர்வு இல்லை. அவனுடைய நிலையிலிருந்து பார்க்கும் பக்குவம் இல்லை. ஒருவருடைய குறையைக் கண்டு சாதாரணமாக எவருக்கும் எழும் அனுதாபம் இல்லை. குறையைக் குத்திக் காட்டிக் காயப்படுத்தக் கூடாது என்னும் பண்பும் இல்லை. வாழ்வியல் திறன்களின் அடிப்படைகள்கூடத் தெரியாமல் இவர்கள் எல்லாம் எப்படி ஆசிரியர்களாக இருக்கிறார்கள்? இத்தகைய அணுகுமுறை தங்கள் குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படுவதற்காகத்தான் பெற்றோர் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறார்களா?

பற்றாக்குறை விஷயங்கள்

மாணவர்கள் பள்ளிக்கு விருப்பத்துடன் செல்வது மிகவும் அரிதாகிவருவது ஏன்? குறிப்பாக, தொடக்கக் கல்வியில் இந்த நிலை அதிகம் இருப்பது ஏன்? நாங்கள் விளையாட்டுகளின் துணையோடு பாடம் எடுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பள்ளிகளிலும் இந்த நிலை இருப்பது ஏன்? கருவிகளாலோ, மேம்பட்டது எனக் கருதப்படும் நடைமுறைகளாலோ மாற்றம் வந்துவிடாது. அவற்றைக் கையாளும் மனிதர்கள் மாற வேண்டும். அவர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

தங்கள் மகனுடைய ஊக்கத்தை இழக்கச் செய்த பள்ளியிலேயே தொடர்ந்து அவனைப் படிக்க வைக்கப் பெற்றோருக்கும் விருப்பம் இல்லை. பல்வேறு இடங்களுக்கும் சென்று, பல்வேறு மருத்துவர்களையும் கல்வித் துறை நிபுணர்களையும் பார்த்து, தங்கள் மகனின் கல்வி தொடர்வதை அவர்கள் உறுதிசெய்தார்கள். அந்தப் பள்ளியை விட்டு விலகிப் பல ஆண்டுகள் ஆகியும் அங்கே பட்ட அவமானங்களையும் கேட்ட பேச்சுகளையும் அந்தப் பையனால் மறக்க முடியவில்லை என்கிறார்கள் அவனுடைய பெற்றோர்.

பெற்றோர் அந்தப் பையனைத் தனிப் பயிற்சி வகுப்புக்கு அனுப்பினார்கள். கற்றல் குறைபாடுள்ளவர்களுக்குக் கற்றுத்தருவதில் பேர்போன ஒரு ஆசிரியை பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் அனுப்பினார்கள். அதற்கென்று சிறப்பான எந்தப் பயிற்சியும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும், அவரிடம் அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியோடு படிக்கிறார்கள்; அவர்களுடைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுகிறது என்றார்கள்.

இது எப்படிச் சாத்தியமாகிறது என்று ஆச்சரியப் பட்டு, நான் அவர் வகுப்பைக் காணச் சென்றிருந்தேன். அவரும் எல்லோரையும் போலத்தான் சொல்லிக்கொடுக்கிறார். இரண்டே இரண்டு வித்தியாசங்கள். குழந்தைகளிடம் சிறிது பொறுமையைக் காட்டுகிறார். குழந்தைகளைப் பார்த்து நிறையச் சிரிக்கிறார்.

அபரிமிதமான கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளில் பற்றாக்குறையாக உள்ள இரண்டு முக்கியமான விஷயங்கள் இவை.

அரவிந்தன்

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x