Last Updated : 04 Dec, 2013 12:00 AM

 

Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

படுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்

ஒரு தொலைக்காட்சி நிருபராக ஊடக வாழ்க்கையைத் துவக்கிய எனக்கு, வளர்ந்துவிட்ட இன்றைய ஊடக சர்க்கஸ், ஒரு படுகளமாகவே காட்சியளிக்கிறது. முக்கியமாக 24 மணி நேரமும் தீர்ப்புகளை வாரி இறைக்கும் தொலைக்காட்சி நீதிபதிகள், நீதிமன்றங்களில் கோலோச்சும் நிஜ நீதிபதிகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்துடன் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

தீர்ப்பும் எதிர் தீர்ப்பும்

இன்றைய ஊடக விசாரணையில் சில எழுதப்படாத விதிமுறைகள் அமலில் உள்ளன. அவற்றில் முதலாவது, தீர்ப்பை யார் முதலில் சொல்வது என்பதுதான். கொலை நடந்த சில மணி நேரங்களுக்குள் கொலை செய்தவர் குறித்துத் தீர்மானம்செய்து, அதைப் போல குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன பாதுகாப்புத் தயாரிப்புகள் செய்ய வேண்டும் என்பதுவரை அறிவார்ந்த தீர்ப்புகளை அள்ளிவீசுவது முக்கியம். அதிலும் போட்டி அலைவரிசை வேறு ஒரு தீர்ப்பை எழுதினால், தம்முடைய சொந்தத் தீர்ப்பை அழுத்தமாக மீண்டும் மீண்டும் கூறி நிலைநிறுத்துவது.

முதலாவது நாள், ஆருஷி பரிதாபத்துக்குரிய பள்ளி மாணவியாக, எண்ணற்ற கனவுகளைக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணாகத் தெரிவாள். அவளுக்காக மெழுகுவத்தி ஊர்வலங்கள் நடத்தக்கூட இந்தச் செய்தி அலைவரிசைகள் திட்டமிட்டிருக்கலாம். அந்த நாளில் ஹேம்ராஜ் ஒரு வன்மம் நிறைந்த கொலைகாரன் மட்டுமே. அவரைப் போல வறுமையால் துரத்தப்பட்டு, நாட்டை விட்டு ஓடிவந்து, சிறுசிறு பணிகள் புரிந்து வாழும் ஏராளமான ஏழை மக்களின் பிரதிநிதியல்ல. தொலைக்காட்சி நீதிபதிகளுக்கு அன்றிரவு அவரின் பின்புலம் தேவைப்படவில்லை.

காவல் துறையோ அமைச்சர்களோ உயர்மட்ட அதிகாரிகளோ சம்பந்தப்படாத வழக்குகளில், இந்த ஊடக சர்க்கஸில் கலந்துகொண்டு, பார்வையாளர்களை மகிழ்வூட்டக் காவல் துறை அதிகாரிகள் பலரும் தயாராகவே இருக்கிறார்கள். பேட்டி மேல் பேட்டி அளித்துக் குற்றம் நடந்த இடத்தை, அங்குள்ள ஆதாரங்களைப் பாதுகாக்கும் பணியை மறந்து இவர்களும் நியாயத்தை இரண்டே நிமிடங்களில் உலகுக்கு அறிவிக்கும் தீர்க்கதரிசிகளாக மாறுவார்கள்.

மாறும் தீர்ப்பு

மறுநாள், ஹேம்ராஜின் சடலம் கிடைக்கிறது. உடனே காட்சி மாறுகிறது. ஐயோ! நேற்று முழுவதும் தவறான தீர்ப்புகளை அள்ளிவீசிவிட்டோமே என்று வருத்தப்படுவது, மறுப்பு வெளியிடுவது எல்லாம் காலாவதியாகிப்போன ஊடக தர்மங்கள். உடனடியாக, அன்றிரவு மீண்டும் குற்றவாளிகளைத் தேடி கேமராவும் மைக்குமாக அலைவார்கள் ஜனநாயகத்தின் நான்காம் தூதர்கள்.

மாயக்கண்ணாடிப் பெட்டி

இருந்தது நாலு பேர். ஒருவர் இறந்து விட்டார். இரண்டு பேர் கண் முன்னால் இருக்கிறார்கள். எனவே, இல்லாத ஒருவர்தான் குற்றவாளி என்ற முதல் நாளின் மிகப் பிரமாதமான தருக்கம் இப்போது உடைந்துவிட்டது. மீண்டும் சுழற்றுங்கள் நொடியில் தீர்ப்புமிழும் அந்த மாயக்கண்ணாடிப் பெட்டியை. மீதி இருக்கும் இருவர் குற்றவாளிகள். நேற்றிரவு பிள்ளையைப் பறிகொடுத்த பரிதாபப் பெற்றோராகக் காண்பித்தவர்களை இன்று கொலைகாரர்களாகக் காண்பிக்க ஒரு சம்பவம் அல்லது குறிக்கோள் வேண்டுமே.

என்னதான் உடனடியாகத் தீர்ப்பு வீசும் பஞ்சாயத்தாக இருந்தாலும், காரண காரியத்தோடு சொன்னால்தானே சுவாரஸ்யம். பாலியல் பிறழ்வைவிட சுவாரஸ்யமான செய்தியே இல்லை என்பது உலக அளவில் ஊடகங்களின் பட்டறிவு. உடனே, பெற்றோரின் பாலியல் வாழ்க்கை ஊகங்களின் அடிப்படையில் அலசப்படுகிறது.

கறைபூசுதல்

ஆருஷி ஒரு குழந்தைதான்; ஆனால், அவள் பதின்பருவப் பெண் குழந்தை என்பதாலும், அவள் கையில்லாத சட்டை அணிந்த புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவள் என்பதாலும், அவளுக்கு ஆண் நண்பர்கள் இருந்ததாலும், அவளிடம் ஒரு கைபேசி இருந்ததாலும், அவள் ஒரு பாலியல் கருவியாகப் பார்க்கப்படும் ஒரு பெண்ணாக ஆனாள்.

ஒரு பெண், ஒரு ஆண் இறந்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்குள் தகாத உறவு இருந்திருக்கக் கூடாது? என்ற கேள்வியை மாயத்தீர்ப்புப் பெட்டி எழுப்புகிறது.

பிரமாதம்! உடனே சர்க்கஸ் மேலதிக இரைச்சலுடன் புதிய தீர்ப்புகளை அள்ளிவீசப்போகும் செய்தி நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும். நியாயமார் அனைவரும் ஒப்பனை செய்துகொண்டு, குரல் பயிற்சிகளைச் செய்துமுடித்துச் சபையேறுவர். இந்தப் பக்கம் நாலு பேர்… அந்தப் பக்கம் நாலு பேர் என்று ஒரு அவசர நியாய சபை அமைக்கப்படும். காவல் துறை ஐ.ஜி. பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஆருஷி-ஹேம்ராஜ் இடையே கள்ள உறவு இருந்தது, ஆருஷியின் அப்பா ராஜேஷ் தல்வாருக்கு வேறு பெண்ணுடன் கள்ள உறவு இருந்தது. அதைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் ஆருஷியும் ஹேம்ராஜும் என்பதால் அவர்களை ராஜேஷ் தல்வார்தான் கொன்றார் என ஒரு த்ரில்லர் கதையை விசாரணையின் துவக்கத்திலேயே அறிவிப்பார்.

உச்ச நேரப் பசி

ஊடகப் பஞ்சாயத்து தர்பார் களைகட்டும். பேசிப் பேசிப் பார்வையாளர்களைக் குறுஞ்செய்தி அனுப்பச் சொல்லி, குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று போட்டிகளை அறிவித்து, இந்த ஊடக நியாயவான்கள் தங்களுடைய உச்ச நேரத்தை (ப்ரைம் டைம்) நிரப்புவார்கள். இன்னொரு சுவாரஸ்யமான பின்னணி கொண்ட சடலமோ செய்தியோ கிடைக்கும்வரை ஆருஷியின் புகைப்படம் இந்தச் செய்திப் படலத்தின் முகப்பாக நீடிக்கும்.

ஆருஷியின் பெற்றோர் நல்லவர்கள் என்று சான்றிதழ் வழங்குவதில்லை என் நோக்கம். 14 வயதுக் குழந்தையின் கொடூர மரணத்தைத் திருவிழா போல மாற்றிய ‘ஊடக விசாரணை’ அறத்தைப் பற்றியதுதான் என் நோக்கம். ஆருஷி வழக்கு விசாரணையின் ஓட்டைகளையும் விசாரணை நடத்தியவர்களின் சறுக்கல்களையும்பற்றி எழுத இன்னொரு கட்டுரை தேவைப்படும்.

‘சூழ்நிலை’

ஆருஷி எப்படி ஒரு பாலியல் பிறழ்வு குற்ற வலைக்குள் தள்ளப்பட்டாள் என்ற கேள்விக்கு எளிய விடைகள் எதுவும் இல்லை. ஊடகங்கள், அதில் நியாயம் பேசும் ஊடகவியலாளர்கள், செய்தியிலும் பரபரப்பு, சுவாரஸ்யம் தேடும் மக்கள் ஆகிய பல தரப்பினரின் மன வக்கிரங்களின் வெளிப்பாடுதான் இது. ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் பாலியல் உறவு இருந்ததாக ‘சூழ்நிலை’ சாட்சியங்களைக் கொண்டுகூட சி.பி.ஐ-யும் நீதிமன்றமும் இன்றுவரை நிறுவவில்லை.

மன வக்கிரங்களைத் தூண்டிவிட்டு, அதில் பணம் கொழிப்பது நாம் வாழும் இந்தச் சமூகத்தில் நடக்காத ஒன்றல்ல. ஆனால், இப்படிச் செய்பவர்களுக்கு ‘ஜனநாயகத்தின் நான்காவது தூண்’ என்ற கௌரவம் பொருத்தமானதுதானா என்பதுதான் கேள்வி.

குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் மனித உரிமைகள் இருக்கின்றன. குற்றம் நிறுவப்பட்ட பின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை வழங்கும். இவர்கள் இருவருமே தனிநபர்கள், அவர்களுக்கும் கௌரவமும் சொந்த வாழ்வின் மீது அதிகாரமும் இருக்கின்றன. அவற்றைச் சூறையாட, இறந்துபோனவர்கள் மீது காமக் கதைகளைக் கட்ட ஊடகங்களுக்கு உரிமை இல்லை. நீதியைக் கடைச்சரக்காக்குவதற்கு ஒப்பானது இது.

- ப்ரேமா ரேவதி, எழுத்தாளர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: revathi.work@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x