Last Updated : 03 Jun, 2016 09:21 AM

 

Published : 03 Jun 2016 09:21 AM
Last Updated : 03 Jun 2016 09:21 AM

நதிநீர் இணைப்பு சரிதானா?

நதிகளை இணைப்பது கோடிக்கணக்கான மக்களை அவர்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற வைக்கும்

இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டவர் 1858-ல் பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் ஆர்தர் தாமஸ் காட்டன். கடந்த ஆண்டு வரை நாட்டின் சில பகுதிகளில் இதை மத்திய அரசு அமல்படுத்தியதில் ஆந்திராவின் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலம், மத்தியப் பிரதேசத்தின் கென்-பேட்வா நதிகள் இணைப்புத் திட்டம் குறிப்பிடத்தக்கவை.

இந்த இணைப்பால் கிடைத்தவை கலவையான அனுபவங்கள்தான். இந்தத் திட்டங்கள் அவதிப்படும் 22 கோடி இந்தியர்களுக்கு நீரை வழங்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்டவை. ஆந்திர மாநிலப் பரப்பளவைப் போல இரண்டு மடங்குக்கும் அதிகமான பரப்புக்கு பாசன நீரைக் கூடுதலாக வழங்கவும், அபரிமிதமான வெள்ளத்திலிருந்தும் கடுமையான வறட்சியிலிருந்தும் மீள இந்த நதிநீர் திட்டம் உதவும் என்று நம்பப்பட்டது. ஆனால், இவை அமலாகத் தொடங்கியதிலிருந்தே பல்வேறு இடர்ப்பாடுகள். முதல் கட்டமாக 27.66 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்க வேண்டியிருக்கிறது. சுமார் 15 லட்சம் மக்கள் வேறிடங்களுக்குக் குடிபெயர வேண்டியிருக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான செலவு ரூ.11 லட்சம் கோடியாக உயரும் என்று தெரிகிறது.

வடிநிலங்கள்

பெரும் அணைகளையும் நீர்த்தேக்கங்களையும் நிறுவவும் அவற்றை முறையாகப் பராமரிக்கவும் ஏற்படுத்தப்பட்டது மத்திய தண்ணீர் வள ஆணையம். கடந்த ஆண்டு எந்த அளவுக்கு நீர் இருந்தது, கடந்த பத்தாண்டுகளில் நிலவிய சராசரி அளவுடன் ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது, இதையொட்டி நீர்மின் திட்டங்களில் அல்லது பாசனத்துக்கான தண்ணீர் திறப்புகளில் என்ன உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும், சாகுபடியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க இந்தத் தரவுகள் உதவும்.

கண்காணிப்பதற்கு எளிமையாக இருப்பதற்காக நாட்டின் பாசனப் பரப்பை 12 பெரிய வடிநிலங்களாகப் பகுத்திருக்கிறார்கள். அவற்றில் மிகப் பெரியது கங்கை வடிநிலம். தண்ணீர் இருப்பில் அது மோசமான நிலையில் இல்லை. ஏப்ரல் 28 நிலவரப்படி தண்ணீர் இருப்பு 780 கோடி கன மீட்டர். கடந்த ஆண்டு இருந்த அளவு 1,060 கோடி கன மீட்டர். 635 கோடி கன மீட்டர் என்ற சராசரி அளவைவிட (22.8%) அதிகம். ஆனால், சிந்து வடிநிலத்திலும் கிருஷ்ணா வடிநிலத்திலும் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. சிந்து வடிநிலத்தில் 35%. கிருஷ்ணாவில் 67%. கடந்த பத்தாண்டு சராசரியைவிட இது குறைவு.

வடிநிலங்களின் நபர்வாரி தண்ணீர் அளவு பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. பிரம்மபுத்திரா வடிநிலத்தில் ஒரு நபருக்கு 13,000 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. மஹி ஆற்றுப் பகுதியில் வெறும் 260 கன மீட்டர் அளவுதான். தண்ணீர் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாகவே மத்திய தண்ணீர்வள ஆணையத்தைச் சேர்ந்த பொறியாளர்களும் அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களும் கங்கை வடிநிலத்தில் உள்ள உபரி நீரைப் பிற பகுதிகளுக்குத் திருப்ப வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். வறட்சிக் காலங்களில்கூட கங்கையில் வெள்ளம் ஏற்படுகிறது. அசாமிலும் இந்த ஆண்டு இப்படித்தான்.

இணைப்பின் வழிகள்

புதிய வாய்க்கால்களையும், நடுத்தர அளவு நீர்த்தேக்கங்களையும் அமைத்தும், அதிக நீர்ப்பெருக்கு இல்லாத ஆறுகளுக்கு நீரைத் திருப்பியும் நீரைப் பகிர்ந்தளிக்கலாம். “தண்ணீரைத் தேக்கி வைப்பதால் தேவைப்படும் காலத்தில் தேவைப்படும் அளவுக்கு நீரைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அணைகள் அவசியம் தேவை. ஆனால், அவை பெரிதாக இருக்க வேண்டுமா, சிறியதாக இருக்க வேண்டுமா என்பது அந்தந்தப் பகுதிக்கேற்பத் தீர்மானிக்கப்பட வேண்டும்” என்கிறார் மத்திய தண்ணீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ். ஜா.

நதிகளை ஒன்றுடன் மற்றொன்றை வாய்க்கால்கள் மூலம் இணைக்கலாம். அதனால் 3.5 கோடி ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன நீர் கூடுதலாகக் கிடைக்கும். இதனால் 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடிப் பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக உயர்த்த முடியும். கூடுதலாக 34,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கலாம். அது மட்டுமா? வெள்ளச் சேதத்தைக் குறைக்கலாம். ஆற்றில் படகுப் போக்குவரத்தை அதிகரிக்கலாம். விவசாயம், தொழில்துறை, குடிநீர் தேவைகளுக்குக் கூடுதல் நீர் பெறலாம். மீன்வளர்ப்பை அதிகப்படுத்தலாம். தண்ணீரின் உவர்தன்மையைக் குறைக்கலாம். சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கலாம்.

மாற்றுக் கருத்துகள்

நதிநீர் இணைப்பு சாத்தியம் என்பதிலும் அது நன்மைதரும் என்பதிலும் மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. இத்திட்டத்துக்கு 10 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்கிறார் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி. இமயமலைப் பகுதியில் பாயும் 14 ஆறுகள், தீபகற்பத்தில் பாயும் 16 ஆறுகளை இணைப்பதற்கு 15,000 கிலோ மீட்டர் நீளத்துக்குக் கால்வாய்களை வெட்ட வேண்டும். அவற்றால் 17,400 கோடி கன மீட்டர் தண்ணீரைக் கூடுதலாகக் கிடைக்கலாம். நதிகளை இணைப்பது கோடிக்கணக்கான மக்களை அவர்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற வைக்கும். நதிகளின் இயற்கைச் சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும்.

கிருஷ்ணா நதி மீது பெரியதும் நடுத்தர அளவுள்ளதுமான பல அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிவிட்டதால் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ஆண்டுகளில் கடைமடைப் பகுதிக்குப் பாய்வதற்குச் சொட்டுத்தண்ணீர்கூட இல்லாமல் போய்விடுகிறது என்று முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் மிஹிர் ஷா சுட்டிக்காட்டுகிறார்.

கங்கை நதியின் வடிநிலம் பெருமளவுக்குச் சமதளமாக இருக்கிறது. அணைகளைக் கட்டுவதால் ஆறுகளில் நீர்ப்பெருக்கை அதிகப்படுத்த முடியாது. அதே வேளையில், இமயமலைப் பகுதியில் உள்ள காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக மாறக்கூடும். அது பருவமழைப் பொழிவுகளையும் பாதிக்கக்கூடும்.

புதிய உத்திகள்

இன்னொரு கவலையளிக்கும் அம்சம் பருவநிலை மாறுதல். நதிகளை இணைக்கும்போது பெரிய ஆறுகளின் தண்ணீரை, தேவைப்படும் வடிநிலப் பகுதிக்கு மாற்றிவிட முடியும் என்று நாம் நினைக்கிறோம். இப்போது இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளில் நீர்ப்பிடிப்பு அதிகமாக இருப்பதால் அவற்றில் உபரி நீர் உள்ளது. எதிர்காலத்தில் காடுகள் அழிப்பு, பருவநிலை மாறுதல்களால் அந்த ஆறுகளே வறட்சி அடையக்கூடும். மலையின் பனிமுகடுகள் வேகமாக உருகி, பனி சேருவது குறைந்தால் நீர்ப்பெருக்கமும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. கோசைய்ன்.

நதிகளை இணைப்பதற்குப் பதிலாக இப்போதுள்ள ஆறுகளின் தண்ணீரைச் சிக்கனமாகவும் அதிக அளவு பயன்தரும் வகையிலும் பயன்படுத்தும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தை ஊக்குவிக்க வேண்டும். ஏரிகளில் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பழையகாலப் பாசன முறையை ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் தண்ணீர் வளத்துறைச் செயலர் சசி சேகர். வறட்சிக்கு ஆளாகும் பகுதிகளில் ஏராளமான ஏரிகளையும் குளம், குட்டை போன்றவற்றையும் ஏற்படுத்தி மழை நீரைச் சேமிக்க வேண்டும். தேவைப்படும் காலங்களில் அந்த நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்த வேண்டும். நதிநீர் இணைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு இதற்கும் அளிக்க வேண்டும் என்கிறார் சசி சேகர்.இத்தகைய மாற்றுக்கருத்துகளும் விவாதிக்கப்பட வேண்டியவையே.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x