Last Updated : 04 Feb, 2016 08:46 AM

 

Published : 04 Feb 2016 08:46 AM
Last Updated : 04 Feb 2016 08:46 AM

நட்சத்திரக் கிரகணம்

சூரியனைச் சுற்றுவது போலவே நட்சத்திரங்களையும் சில கிரகங்கள் சுற்றி வரலாம்



இரவு நேரம். ஒரு குக்கிராமத்துக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை. கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஊருக்கு வெளியே சாலை ஓரமாக நின்றுகொண்டிருக்கிறீர்கள். சுற்றிலும் ஒரே இருட்டு. ஆனால், தூரத்தில் ஏதோ விளக்கு இருப்பது தெரிகிறது. லாந்தர் விளக்காக இருக்கலாம். அந்த விளக்கின் அருகே யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. திடீரென விளக்கு சில கணம் மறைந்து மறுபடி தெரிகிறது. யாரோ குறுக்கே சென்றிருக்க வேண்டும். அடுத்து மறுபடியும் விளக்கு மறைகிறது. இன்னொருவர் குறுக்கே சென்றிருக்க வேண்டும். ஆள் உருவம் தெரியாவிட்டாலும் விளக்கு மறைவதிலிருந்து அருகே ஆட்கள் இருப்பதாக ஊகிக்கலாம்.

அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற நட்சத்தி ரங்களுக்கு இருக்கக்கூடிய கிரகங்கள் இவ்வித ஊக அடிப்படையில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த மாதிரி மறைமுக வழிகள் மூலம் அண்டவெளிக் கிரகங்களைக் கண்டறிய முடியும். இதை நட்சத்திரக் கிரகண முறை என்றும் வர்ணிக்கலாம். இப்படிச் சொல்வதற்குக் காரணம் உண்டு.

ஒளி குன்றும் நட்சத்திரம்

நமக்கு சூரிய கிரகணம் தெரியும். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் நடுவே சந்திரன் வந்து நின்றால், அது சூரியனை முற்றிலுமாக அல்லது ஓரளவுக்கு மறைக்கிறது. இது சூரிய கிரகணம். இப்போது நட்சத்திரக் கிரகணத்துக்கு வருவோம். நட்சத்திரமும் சூரியன் மாதிரிதான். சூரியனுக்குப் பல கிரகங்கள் இருப்பதுபோல நட்சத்திரங்களுக்கும் கிரகங்கள் இருக்கலாம். அந்தக் கிரகங்கள் அந்த நட்சத்திரத்தைச் சுற்றிச் சுற்றி வரு கின்றன. அப்படி அவை சுற்றிக்கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு கட்டத்தில் அவை சூரிய கிரகண மாதிரியில் நட்சத்திரத்துக்கும் நமக்கும் இடையே அமைய நேரிடலாம்.

நீங்கள் இரவு வானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது அந்த நேரம் பார்த்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற கிரகம் ஒன்று உங்களுக்கும் நட்சத்திரத்துக்கும் குறுக்கே வந்து நிற்கிறது. அதுவே நட்சத்திரக் கிரகணம். இதன் விளைவாக நட்சத்திரத்தின் ஒளி வட்டம் முற்றிலுமாக அல்லது அதன் ஒரு பகுதி சிறிது நேரம் சற்றே மறைக்கப்படும். இதன் பலனாக நட்சத்திரத்தின் ஒளி சற்று குன்றும்.

ஆனால், பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்கும் போது நமக்கு எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், மிக நுட்பமான டெலஸ்கோப் மூலம் அதுவும் பூமியின் காற்று மண்டலத்துக்கு மேலே செயல்படும் டெலஸ்கோப்பினால் இதை நன்கு கண்டுபிடிக்க முடியும்.

பறக்கும் டெலஸ்கோப்

நாம் முந்தைய அத்தியாயத்தில் கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப் பற்றிக் குறிப்பிட்டோம். நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பல கிரகங்களை கெப்ளர் டெலஸ்கோப் இவ்வித முறையில் கண்டுபிடித்துள்ளது.

கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப்பில் இதற்கென நுட்ப மான கருவி வைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஒளி எந்த அளவுக்குக் குன்றுகிறது என்பதை அது துல்லியமாகக் கணக்கிட்டுத் தெரிவிக்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நட்சத்திரத்துக்குக் கிரகம் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

நட்சத்திரத்தின் ஒளி எந்த அளவுக்கு மங்குகிறது என்பதை வைத்து, அந்தக் கிரகம் எவ்வளவு பெரியது, அது அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு நட்சத்திரத்தை அதைச் சுற்றுகின்ற கிரகம் மறைக்கும்போது, அந்தக் கிரகத்துக்குக் காற்று மண்டலம் உள்ளதா என்பதையும் அறிய முடிகிறது.

அந்த நட்சத்திரத்தின் ஒளி எப்போதெல்லாம் மங்குகிறது என்பதை வைத்து அந்த நட்சத்திரத்துக்கு எவ்வளவு கிரகங்கள் உள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளலாம். கெப்ளர் டெலஸ்கோப் இதுவரை பல ஆயிரம் கிரகங்களை இந்த முறையில் கண்டுபிடித்துள்ளது.

கெப்ளர் டெலஸ்கோப் சூரியனைச் சுற்றி வந்தபடி வானில் சிறு பகுதியை ஆராய்கிறது. அது ஒரே நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நட்சத்திரங்களை ஆராயும் திறன் கொண்டது. எந்த நட்சத்திரத்தின் ஒளி சற்றே மங்குகிறது என்பதை அது கண்டுபிடித்துக் கூறுகிறது. வானில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் அது தொடர்ந்து ஆராய்வதால் நட்சத்திரங்கள் எண்ணற்ற தடவை டெலஸ்கோப்பின் பார்வைக்கு உள்ளாகின்றன. ஆகவே, கிரகங்களால் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் மறைக்கப்படுமானால் அது நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது. நட்சத்திரத்தின் ஒளி ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு மங்கினாலும் கெப்ளரில் உள்ள கருவி அதைப் பதிவு செய்துகொண்டு விடுகிறது. வானில் குறிப்பிட்ட பகுதியில் அதிக நட்சத்திரங்கள் இருக்க வாய்ப்பு உண்டா என்று நீங்கள் நினைக்கலாம்.

பொதுக்கூட்ட நட்சத்திரம்

வானம் என்பது கூரை போன்றது அல்ல. ஒரு பொதுக்கூட்டத்தில் முன்வரிசையில் 100 பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் இன்னொரு வரிசை. அதற்குப் பின்னால் மேலும் ஒரு வரிசை என மைதானத்தின் பரப்பளவைப் பொறுத்து மக்கள் எவ்வளவு வரிசைகளில் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாம். அது போல நட்சத்திரங்களுக்குப் பின்னால் மேலும் பின்னால் எவ்வளவோ நட்சத்திரங்கள் இருக்க முடியும்.

இரவு வானில் ஒரு நட்சத்திரம் தெரிகிறது. அது 25 ஒளியாண்டு தொலைவில் உள்ளதாக அறிகிறோம். அந்த நட்சத்திரத்தின் அருகே இன்னொரு நட்சத்திரம் தென்படலாம். அது 36 ஒளியாண்டு தொலைவில் இருக்கலாம். நம் பார்வையில் அவை அருகருகே இருப்பது போன்று தோன்றினாலும் இவை ஒன்றன் பின் ஒன்றாக வெவ்வேறு தொலைவில் அமைந்திருப்பதாக அறிகிறோம்.

சிதறடிக்கும் காற்று மண்டலம்

பூமியில் நிறுவப்பட்டுள்ள டெலஸ்கோப்புகள் மூலம் நட்சத்திரங்களை இவ்விதம் ஆராய்ந்து கிரகங்களைக் கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்கலாம். முதலாவதாக, காற்று மண்டலம் ஒரு பிரச்சினையாகும். நட்சத்திரங்களின் ஒளியானது காற்று மண்டலம் வழியேதான் வந்தாக வேண்டும். காற்று மண்டலத்தில் உள்ள நுண்ணிய துணுக்குகள் ஒளியைச் சிதறடிக்க முற்படுகின்றன. நட்சத்திரங்கள் மினுக்குவதற்கு இதுவே காரணம். எனவே, நட்சத்திரத்தின் ஒளி மங்குகிறதா என்பதைத் துல்லியமாக அறிய இயலாது.

தவிர, நட்சத்திரங்கள் தொடர்ந்து ஆராயப்பட வேண்டும். பூமி தனது அச்சில் சுழல்வதால் நட்சத்திரங்கள் டெலஸ்கோப்பின் ‘பார்வையில்’ தொடர்ந்து இருக்க முடியாது போய்விடும். அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வழி இருக்கிறது. டெலஸ்கோப்பும் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப நகரும்படி செய்ய முடியும். ஆனால், இரவு முடிந்து பகல் வந்துவிட்டால் அந்த நட்சத்திரங்களை டெலஸ்கோப்பினால் ஆராய முடியாது. இரவு நேரங்களிலும் சரி, மழை பனி மூட்டம், மேக மூட்டம் ஆகிய காரணங்களால் நட்சத்திரங்களைத் தொடர்ந்து ஆராய முடியாமல் போய்விடும்.

இப்படியான பல காரணங்களால்தான் கெப்ளர் டெலஸ் கோப்பை உயரே செலுத்தி அங்கிருந்து நட்சத்திரங்களை ஆராயும்படி செய்துள்ளனர். விண்வெளியில் எப்போதும் இரவுதான். காற்று மண்டலப் பிரச்சினையும் இல்லை. கெப்ளர் டெலஸ்கோப்பினால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை வைத்த கண் வாங்காமல் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் தொடர்ந்து ஆராய முடிகிறது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

(வியாழன்தோறும் தொடர்வோம்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x