Published : 18 Jun 2017 10:24 AM
Last Updated : 18 Jun 2017 10:24 AM

தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்கிறோம்!

இந்த ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த 70-வது ஆண்டு மட்டுமல்ல, இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரித்த பிரிவினையின் 70-வது ஆண்டும்கூட. பிரிவினை என்பது மிக மோசமான ரத்தக்களரி. இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என்று ஒரு கோடியே 45 லட்சம் பேர் புதிய பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து புதிய பாகிஸ்தானுக்கும் குடிபெயர்ந்த நேரம்.

குடிபெயர்ந்தவர்கள் அனைவரும் அச்சத்துடன் நடுங்கிக்கொண்டே ‘அகதி முகாம்கள்’ என்ற பெயரை மட்டும் தாங்கிய அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடங்களுக்கு பீதியுடன் வந்து சேர்ந்தனர். மிகப் பெரிய பணக்காரரும், ஏதுமற்ற பராரியும் ஒரே நேரத்தில் ‘அகதி’ என்ற அந்தஸ்தை அடைந்தனர். ஒருவர் பெரிய மாளிகையில் வசித்திருக்கலாம், இன்னொருவர் குடிசையில் வாழ்ந்திருக்கலாம் இருவருமே அடுத்த வேளை உணவு, உடை, மருந்துகளுக்காகக் கையேந்தி நின்றனர். கடத்தல், சூறையாடல், மரணம் ஆகியவற்றின் கோரப் பிடியிலிருந்து தப்பினோம் என்ற ஆறுதல்தான் அவர்களிடம் மிஞ்சியிருந்தது.

பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை, ‘குறைந்தபட்சம் 2 லட்சம் - அதிகபட்சம் 20 லட்சம்’ என்கின்றனர். இந்து, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 33,000 பெண்கள் கடத்தப்பட்டுவிட்டதாக இந்திய அரசு கூறியது. 50,000 முஸ்லிம் பெண்கள் கடத்தப்பட்டுவிட்டதாக பாகிஸ்தான் கூறியது. ஒரே சமயத்தில் வாழ்க்கையும் மரணமும் கூட பிரிவினைக்குள்ளாயின!

கோபத்தில் கொதித்த அகதிகள்

1947 என்பது, ஒரு பகுதிக்கு விடுதலை தேசத்தின் ஒரு பகுதி வெட்டி நீக்கம், ஒரு பகுதிக்கு வெற்றி - தேசத்தின் ஒரு பகுதியில் பெரும் சோகம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். கற்பனையே செய்ய முடியாத, விவரிக்கவே முடியாத சோகம் அது.

“பிரிட்டிஷார் பூட்டிய அடிமை விலங்கிலிருந்து நாளை நாம் விடுதலை பெற்றுவிடுவோம்; ஆனால், இன்று நள்ளிரவு முதல் இந்துஸ்தானம் இரண்டாகப் பிளவுபட்டுவிடும். நாளைய தினம் கொண்டாட்ட தினமாகவும் துக்க தினமாகவும் இருக்கும்” என்று கல்கத்தாவில் பேசினார் காந்தி. நகரில் மறுநாள் மகிழ்ச்சியும் தோழமை உணர்வும் கொப்பளித்தது. பொங்கிய அந்த நல்லுணர்வு சிறிது நேரமே நீடித்தது. சுதந்திரம் கிடைத்த 16-வது நாள் ஆகஸ்ட் 31-ல் இரவு 10 மணியளவில், பெலியகட்டா என்ற முஸ்லிம்கள் குடியிருப்புப் பகுதியில் காந்தி தங்கியிருந்த இடத்துக்கு கோபாவேசத்துடன் இந்து இளைஞர்கள் கூட்டமொன்று வந்தது. அவருக்கு இடம் கொடுத்த முஸ்லிம்களைத் தாக்கிக் கொல்ல வந்தனர். அன்று காந்தி மௌன விரதம் இருந்த நாள்.

காந்தி உடல் நலமில்லாமல் இருந்தார், மிகவும் களைத்திருந்தார். அடுத்த நாள் காலை, கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நவகாளிக்கு யாத்திரை புறப்பட ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லியிருந்தார். இப்போது வங்கதேசம் என்று அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானில் இருக்கிறது நவகாளி. தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்துக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் திட்டமிட்டிருந்தார். அந்த நிலையில் அவரைப் பார்க்க வந்த இளைஞர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் உடைத்தார்கள், தெரு விளக்குகள் மீது கற்களை வீசினார்கள், ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கினார்கள்.

தங்களுடைய ‘இலக்குகளை’ தேடி ஒவ்வொரு அறையாக நுழைந்தனர். அவர்களை நோக்கிச் சென்ற காந்தி தன் மௌன விரதத்தை முறித்துக்கொண்டு, “என்ன இதெல்லாம்?” என்று வேதனை பொங்கக் கேட்டார். “என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள், நான் சொல்கிறேன், என்னை ஏன் நீங்கள் கொல்லக் கூடாது?” என்று கேட்டார். அதற்குள் ராணுவ போலீஸ் படை வந்ததால் அவர்கள் ஓடிவிட்டனர். நகரில் கலவரம் வெடித்தது. அடுத்த நாள் தன்னுடைய நவகாளி யாத்திரையை ரத்துசெய்துவிட்டு உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.

“எத்தனை நாளைக்கு?” என்று கேட்டார் ஆபா காந்தி. “அமைதி திரும்பும் வரையில் தண்ணீர்கூட அருந்த மாட்டேன்” என்றார் காந்திஜி. நான்காவது நாள் கல்கத்தாவில் அமைதி திரும்பியது. அன்றிரவு கலவரக்காரர்களில் சிலர் வந்து அவர் முன்னர் சரணடைந்ததுடன் துப்பாக்கிகள், ரவைகள், நாட்டு வெடிகுண்டுகள் போன்றவற்றையும் ஒப்படைத்தார்கள்.

டெல்லியில் படுகொலைகள் மீண்டும் தொடங்கின. மீண்டும் அமைதியை நிலைநாட்ட உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1948 ஜனவரி 20 அன்று பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சிறிய நாட்டு வெடிகுண்டு வெடித்தது. அதனால் சலசலப்பு ஏற்பட்டது. “கவனிங்க, கவனிங்க, இங்கே எதுவும் நடக்கவில்லை; அப்படியே ஏதேனும் நடக்க வேண்டுமென்றிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். கூட்டத்தினரை அமைதிப்படுத்திவிட்டு, கூட இருந்தவர்களை ‘ராம்துன்’ பாடச் சொன்னார். அகில இந்திய வானொலி அனைத்தையும் அப்படியே ஒலிப்பதிவு செய்தது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததுகூடத் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது.

பயங்கரமான சதி!

அந்த குண்டை வெடிக்கச் செய்தவர் மேற்கு பஞ்சாபிலிருந்து வந்த 25 வயது அகதி மதன்லால் பாவா. சுலோசனா என்ற பெண்தான் அவரை அடையாளம் கண்டார். போலீஸ்காரர்கள் வந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ‘பொறுப்பில்லாத இளைஞனின் செயல் என்று இதை நினைக்கிறீர்களா?’ என்று காந்தியைக் கேட்டபோது, ‘இல்லை’ என்றே அவர் பதில் அளித்தார். ‘பயங்கரமான, விரிவான சதி இதன் பின்னணியில் இருப்பதைக் காணவில்லையா?’ என்று பதிலுக்குக் கேட்டார். அவர் நினைத்தது முற்றிலும் சரி. மிகப் பெரிய சதியின் ஓர் அங்கம்தான் மதன்லால் பாவா. அந்த சதிக் கும்பல் அடுத்த 10 நாள்களில் தனது ‘இலக்கை’ அழித்தது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டின் நிலைமை அது. வெறுப்பு, முரட்டுத்தனம், திடீரென்றும் திட்டமிட்டும் மேற்கொள்ளப்படும் வன்செயல்கள் நிறைந்திருந்தன. பழிவாங்கலுக்கும் பழிதீர்த்தலுக்குமான காலம். பயங்கர சதிகள் பற்றிய சந்தேகங்கள் நிலவிய காலம்.

70-வது ஆண்டு நிகழ்வு என்பது சுதந்திர இந்தியாவின் பிறந்த நாள் மட்டுமல்ல, பிளவுபடாத இந்தியா மறைந்த 70-வது ஆண்டு நிகழ்வும்தான், இதில் கொண்டாட ஏதும் இருக்கிறதா? பிரிட்டனின் காலனி என்ற அடிமைத்தளையிலிருந்து விடுபட்டது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியதுதான். ஏகாதிபத்திய சக்தி நம்முடைய வாழ்விலிருந்து அகன்றது கொண்டாட்டத்துக்கு உரியதுதான். டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியைப் பிரதமர் நேரு ஏற்றியதைக் காண்பதே மகிழ்ச்சிக்குரியதுதான்.

நாம் அதையும், இன்னும் பல சாதனைகளையும் கொண்டாடுவோம். பொருளாதாரத்தில் சுயச்சார்பு, தொழில் வளம், தேர்தல் நடைமுறையுடனான ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்று கொண்டாட பல உள்ளன. எந்த விலை கொடுத்து இந்த சுதந்திரத்தை வாங்கினோம் என்பதை மறந்துவிடக் கூடாது. அப்போது அதிக விலை கொடுத்தோம் என்பது மட்டுமல்ல, இப்போது அதற்கு வட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். ‘இரட்டை தேசம்’ என்ற கோரிக்கைக்காக இப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும் கூடுதல் வரி இது.

இரட்டை தேசம்

‘இரட்டை தேசம்’ என்ற கருத்தை ஆதரித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இந்து மகாசபையைச் சேர்ந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர், மற்றொருவர் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முகம்மது அலி ஜின்னா. அவர்களுடைய நோக்கமும் கண்ணோட்டமும் வேறு. ‘இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாட்டில் சேர்ந்து வாழ வேண்டியவர்கள்’ என்பது சாவர்க்கரின் கண்ணோட்டம். அவர் இந்தியா பிளவுபடுவதை விரும்பவில்லை. ‘இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி தேசங்கள், அவர்கள் தனித்தனியாக இரு வேறு நாடுகளில் வாழ வேண்டியவர்கள்’ என்பதுதான் ஜின்னாவின் கண்ணோட்டம்.

70 ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தான் உருவானதை அடுத்து முஸ்லிம் லீகின் கோரிக்கை பூர்த்தியடைந்துவிட்டது; அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கோரிக்கைக்கு என்னவாயிற்று?

கடந்த 70 ஆண்டு அரசு மதச்சார்பற்றது, இந்தியச் சமூகம் பன்மைச் சமூகமாகவும் தொடர்கிறது. இங்கே மதத்துக்கு அரசாங்கத்திடம் எந்த வேலையும் கிடையாது; அரசாங்கத்துக்கும் மதத்தின் மீது ஆர்வம் கிடையாது. இதுதான் இதுவரை இருந்த நிலை. இது அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுவிட்டதா? இல்லை. ஆனால் அந்த நிலைமை இப்போது அரிக்கப்படுகிறது. இந்து ராஷ்டிரத்துடன் வரலாற்று, கலாச்சாரத் தொடர்புள்ளவர்கள் நீண்ட நாட்களாக நெஞ்சில் வளர்த்துவந்த சித்தாந்தங்களை இப்போது பல்வேறு வழிகளில் பதியவைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததைப்போல ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஊடுருவும் அச்சம்

முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர், பெரும்பான்மை இந்துக்களின் மூச்சுக்காற்றினாலே ஊதித் தள்ளப்படுவோம் என்று கிறிஸ்தவர்கள் கலங்குகின்றனர், தாங்கள் தாக்கப்படுவோம் என்ற அச்சம் சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது, அரசின் கோபத்துக்கு இலக்காவோம் என்று மாற்றுக் கருத்துள்ளோர் நினைக்கின்றனர். கால்நடை வியாபாரி அஞ்சுகிறார்; அசைவம் சாப்பிடுகிறவர், ‘இது மாட்டுக் கறி அல்ல’ என்று அலறுகிறார். பத்திரிகையாளர் தன் கருத்தைக் கூறத் தயங்குகிறார். நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டிருப்பதாக விவசாயி குமுறுகிறார், பட்டியல் இனத்தவர்களும் பழங்குடிகளும் தங்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று அஞ்சுகின்றனர். நிர்வாகத்தாலோ காவல்துறையாலோ பாதிக்கப்பட்டவர்கள் அதை சொல்லக்கூட அஞ்சுகின்றனர். அரசுக்கு எதிராகக் கருத்து சொன்னால், தேசத்துக்கு எதிரான குற்றமாகக் கருதப்படுகிறது.

அச்சம் என்பது கண்ணுக்குத் தெரியாத புகையைப் போல; உங்களை சூழ்ந்துகொள்ளும். எப்போது வேண்டு மானாலும் வெடித்துச் சேதப்படுத்திவிடும். சுதந்திரப் போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ‘புதிய தலைமுறை’ 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சக்திகளுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கும் உள்ளேயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம் செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல; இரட்டைப் பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.

70-வது சுதந்திர தினம், தேசப் பிரிவினை ஆகிய நிகழ்வுகளின் விழாவின்போது, இந்தியாவை மீண்டும் பிளவுபடுத்தும் மதவாத சக்திகளின் முயற்சிகளுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

- கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், காந்தியின் பேரன்.

தி இந்து (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x