Published : 09 Feb 2017 09:38 AM
Last Updated : 09 Feb 2017 09:38 AM

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றதில் ஆச்சர்யம் என்ன?

தமிழகத்தில், குறிப்பாக தென் தமிழகத்தில், இஸ்லாமியருக்கும் பிற சமூகத்தவருக்கும் இடையே இன்றளவும் நிலவிவரும் மாமன் - மச்சான், சித்தப்பா - சித்தி, தாத்தா, அப்பு, சீயான் என்ற ஒரே குடும்பம் போன்ற உறவு முறைகள், உலகில் வேறெங்கும் காணப்படாத, தமிழகத்துக்கும் தமிழருக்கும் மட்டுமே உரிய சிறப்புக் குணாம்சம்!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக, சமீபத்தில் நடந்த தமிழ்ச் சமூக எழுச்சி தமிழக வரலாற்றில் மிக முக்கியமானது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் சாதி, மதம், பாலினம் தாண்டித் தமிழகம் முழுவதும் பெருகிய ஆதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த எழுச்சியில் தமிழ் முஸ்லிம்கள் பெருமளவில் பங்குபெற்றது சிலருக்கு ஆச்சரியமாகவும் சிலருக்கு அதிர்ச்சியாகவும்கூட இருந்தது எனலாம். பாடப் புத்தகங்களைக் கடந்து தமிழக வரலாற்றைப் பார்த்தால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று புரியும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக நடந்த போராட்டம், முல்லைப் பெரியாறு விவகாரம் என்று தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்ந்து பங்கேற்றிருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பின் இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில், இந்தியை தேசிய மொழியாக ஆக்க நடந்த விவாதத்தில் தமிழை பரிந்துரைத்தவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அன்றைய தலைவர் காயிதே மில்லத். தமிழ்ச் சமூகத்துக்குள் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்துச் சொல்வதற்கு இன்னும் நிறைய உண்டு.

பன்மைத்துவத்தைக் கொண்டாடும் இஸ்லாம்

இந்தத் தமிழ் இனம் சார்ந்த தார்மீகமான, உணர்வுபூர்வமான ஆதரவுக்கான அடிப்படை, தமிழ் முஸ்லிம்கள் பின்பற்றும் இஸ்லாம் சார்ந்ததும் ஆகும். இன்று இஸ்லாத்தை ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட மதமாகப் பலரும் (சில முஸ்லிம்கள் உட்பட) தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தும் இஸ்லாம், அதே சமயத்தில் பன்மைத்துவத்தைக் கொண்டாடுகிறது என்பது பலருக்குத் தெரியாது. புனித நூலான குர்-ஆனிலிருந்தும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்களில் இருந்தும் இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும். புனித குர்-ஆனில் ‘சூரத்துல் ஹுஜுராத் அறைகள்’ என்ற 49-வது அத்தியாயத்தில் வரும் 13-வது வசனம், ‘மனிதர்களே, நாம் உம்மை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு, உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ என்கிறது. ஆக, மனிதர்கள் வெவ்வேறு சமூகங்களாக, இனங்களாகப் படைக்கப்பட்டிருப்பதை குர்-ஆன் உறுதி செய்கிறது.

வெவ்வேறு இனங்களை, சமூகங்களை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது? அது ஒவ்வொரு சமூகத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டதுதான். ஆக, தமிழ் அடையாளத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த முரண்பாடும் இல்லை. அதனடிப்படையில், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஓரிறைக் கொள்கையை விட்டு விலகாமல், தமது சமூகப் பண்புகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொன்றுதொட்டே தமிழக முஸ்லிம்கள் நெறிப்படுத்திக்கொண்டனர்.

தமிழும் இஸ்லாமும்

அரேபியாவில் பரவிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே வணிகம் மூலம் தமிழகம் வந்தடைந்த இஸ்லாம், தமிழ் மண்ணோடு தன்னை வெகு எளிதாக ஐக்கியப்படுத்திக் கொண்டது. முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை இறைவனைத் தொழுவதற்காகக் கூடும் வழிபாட்டுத் தலமே பள்ளிவாசல். அன்றைய தமிழக மூவேந்தர்களின் உதவியுடன் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல்கள், பிற சமயத் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைப் போல் திராவிட பாணியிலேயே கட்டப்பட்டன. பிற சமயத்தவர் உருவங்களுடனான கோயில்களை நிர்மாணித்தனர் என்றால், அதே திராவிட பாணியில் இஸ்லாமியக் கோட்பாடுகளுடன் உருவங்களற்ற கல்லுப் பள்ளிகளை தமிழ் முஸ்லிம்கள் நிர்மாணித்தனர். கிட்டத்தட்ட இதே நடைமுறையைத்தான் இலக்கியத்திலும் பின்பற்றினர்.

தமிழ் இலக்கியத்துக்குச் சமணம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்துவம் என்று ஒவ்வொரு சமயமும் பெருந்தொண்டாற்றி இருக்கிறது. இதிலும் இஸ்லாமியர் ஓரிறைக் கொள்கையில் இருந்து மாறாமல், தமிழ் மரபுப்படி பெருங்காப்பியம், சிறு காவியம் என்று ஏராளமான படைப்புகளைப் படைத்துள்ளனர். நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழ் உலகத்தாருக்கு எடுத்துரைத்த உமறுப் புலவரின் சீறாப் புராணத்தில் சித்தரிக்கப்படும் அரேபியப் பாலைவனம், தமிழகத்தின் ஐந்திணைகளைக் கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறு பல தமிழ்க் கலாச்சாரக் கூறுகளையும் சீறாப்புராணத்தில் காணலாம். இஸ்லாமியர் என்றில்லாமல், கிறித்தவர்களும் இதே பாணியையே தமிழ் இலக்கியத்தில் பின்பற்றியிருக்கிறார்கள். வீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணியில் காணப்படும் ஜெருசலேம் நகரத்து வீதிகள் தமிழ் நிலப்பரப்பை உணர்த்துவதைப் பார்க்க முடியும். தமிழ் இலக்கிய உலகத்துக்கு இது ஒன்றும் புதிதல்ல. கம்ப ராமாயணத்தில் கம்பன் விவரிக்கும் கோசல நாட்டின் நிலப்பரப்பு, சோழ நாட்டு இயல்புகளைக் கொண்டதாகவும், சரயு நதி காவிரியை ஒத்திருப்பதாகவும் அமைந்திருக்கும்.

போற்றுதலுக்குரிய நடைமுறை

அதேபோல் பிள்ளைத் தமிழில் கடவுள் வாழ்த்து என்பது அனைத்து இந்து சமய கடவுள்களையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது பொது மரபு என்றால், இஸ்லாமியர் இயற்றிய பிள்ளைத் தமிழில் அதற்குப் பதிலாக ஒரு இறைவனை மட்டுமே வாழ்த்திப் பாடினார். தமிழ் முஸ்லிம்கள் இன்றும் உபயோகிக்கும் பசியாறுதல், ஆணம், சோறு போன்ற பல சொற்கள் தூய தமிழ்ச் சொற்கள்! குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்கூட இதே நடைமுறையைத் தமிழ் முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். நாச்சியார், நைனார் ஆகியவை தமிழ் முஸ்லிம்களிடையே பரவலாகக் காணப்படும் சில பெயர்கள். சமீப காலம் வரை முத்து வணிகத்தில் பாரம்பரியமாகத் தமிழ் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்ததால் முத்து முகம்மது, முத்து மீரான், முத்து லெப்பை, முத்துக் கனி, முத்து சுலைஹா என்று பல பெயர்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. இந்துக் கடவுள்களின் பெயரைத் தவிர்த்துவிட்டு பொதுவான தமிழ்ச் சொற்களுடன் பெயர் வைப்பது தமிழ் முஸ்லிம்களின் வழக்கம். மீரான் பிள்ளை, தம்பிதுரை, ரத்தின முகம்மது, ராஜா முகம்மது, செல்லம்மாள், ராசாத்தி என்று உதாரணத்துக்குச் சில.

எனது தாயார் வருடா வருடம் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்து செய்து எங்களுக்குப் பரிமாறுவது வழக்கம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த என் தாயாரின் பெயர் செல்லம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் நாளில் வீட்டில் கட்டாயம் அசைவம் கிடையாது. அது இன்றளவும் தொடர்கிறது. முகநூலில் இதுதொடர்பாக எழுதியபோது தங்கள் வீட்டிலும் கிட்டத்தட்ட இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது என்று பல முஸ்லிம்கள் பின்னூட்டம் இட்டிருந்தனர்.

சிறப்புக் குணாம்சம்

அவை அனைத்துக்கும் முத்தாய்ப்பாகத் தமிழகத்தில், குறிப்பாகத் தென் தமிழகத்தில் இஸ்லாமியருக்கும் பிற சமூகத்தவருக்கும் இடையே இன்றளவும் நிலவிவரும் உறவு முறை இருக்கிறது. இது உலகில் வேறெங்கும் காணப்படாத, தமிழகத்துக்கும் தமிழருக்கும் மட்டுமே உரிய சிறப்பு குணாம்சம் என்றே கூறலாம். வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவரிடையே மாமன் - மச்சான், சித்தப்பா - சித்தி, தாத்தா, அப்பு, சீயான் என்ற ஒரே குடும்பம் போன்ற உறவு முறைகள் இஸ்லாமியரை இந்த மண்ணோடும் தமிழ்ச் சமூகத்தோடும் பின்னிப் பிணைத்திருக்கின்றன. கண்ணுக்குப் புலப்படாத இந்தப் பிணைப்புகளே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் முஸ்லிம்களை பெருவாரியாகக் கொண்டுவந்து நிறுத்தின.

ஆக, தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரக் கூறுகளைத் தங்கள் இறை நம்பிக்கைக்கு ஏற்ப உள்வாங்கிக்கொண்ட ஒரு சமூகமாகவே தமிழ் முஸ்லிம் சமூகம் இயங்குவதால், தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட ஜல்லிக்கட்டுத் தடையைத் தீவிரமாக எதிர்த்ததில் வியப்பேதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு. ஜல்லிக்கட்டு மீதான தடை எதிர்ப்புப் போராட்டம் அவற்றைப் பொது உலகுக்குப் பறை சாற்றியிருக்கிறது!

- கோம்பை எஸ். அன்வர், தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர், வரலாற்று ஆய்வாளர். தொடர்புக்கு: anvars@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x