Last Updated : 20 Sep, 2014 09:02 AM

 

Published : 20 Sep 2014 09:02 AM
Last Updated : 20 Sep 2014 09:02 AM

செவ்வாயை வெல்லுமா மங்கள்யான்?

இந்தியா தனது முதல் செவ்வாய் அனுபவத்தில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து…

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் வருகிற 24-ம் தேதி காலை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி, அதனைச் சுற்றிவர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் சஸ்பென்ஸ் அம்சம் இருக்கத்தான் செய்கிறது. உள்ளபடி மங்கள்யான் தனது பாதையில் அதிக வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதன் வேகம் பெருமளவுக்குக் குறைக்கப்பட்டால்தான் அது செவ்வாயின் பிடியில் சிக்கும். வேகத்தைக் குறைப்பதற்கென்றே மங்கள்யானில் லேம் (LAM) எனப்படும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை 24-ம் தேதியன்று இந்திய நேரப்படி காலை சுமார் 7-15 மணிக்கு இயக்குவார்கள். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான ஆணை மங்கள்யானில் உள்ள கணிப்பொறியில் ஏற்கெனவே பதிவாகியுள்ளது. ஆகவே, குறித்த நேரத்தில் அது ஆணை பிறப்பிக்கும். ஒருவேளை அந்த இயந்திரம் செயல்படாமல் போனால், மங்கள்யான் செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்க முடியாமல் போகும். அதாவது, அது செவ்வாயைச் சுற்ற முற்படாது.

மாறாக, மங்கள்யான் அதே வேகத்தில் தன் பாதையில் செல்ல முற்பட்டு, சூரியனைச் சுற்ற ஆரம்பிக்கும். செவ்வாயில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து தகவல் அனுப்ப வேண்டும் என்ற நோக்கம் ஈடேறாமல் போய்விடும். சுருங்கச் சொன்னால், மங்கள் யான் திட்டம் தோல்வியில் முடியும்.

பூமியைப் போல மங்கள்யான்

மங்கள்யானில் உள்ள இயந்திரம் செயல்படாமல் போகலாம் என்ற சந்தேகம் ஏற்படுவானேன்? மங்கள் யான் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி விண்வெளியில் செலுத்தப்பட்டது. உயரே, செலுத்தியதுடன் ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. பின்னர், வானில் மங்கள்யான் விண்கலம் அமைந்த உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இறுதியில் நவம்பர் 30-ம் தேதி அது செவ்வாயை நோக்கி மிகுந்த வேகத் தில் செலுத்தப்பட்டது. மங்கள்யானின் உயரம் அதிகரிக் கப்பட்டபோதும் சரி, செவ்வாயை நோக்கிச் செலுத்தப் பட்ட போதும் சரி, விண்கலத்தின் ஒரு பகுதியாக அமைந்த இன்ஜின்தான் மொத்தம் ஏழு தடவை பயன்படுத்தப்பட்டது. செவ்வாயை நோக்கிச் செலுத்தும் பணி முடிந்ததும் அந்த இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு மங்கள்யான் விண்கலம், ஆற்றில் தள்ளி விடப்பட்ட படகுபோல விண்ணில் செல்லத் தொடங் கியது. பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்ட பின்னர் விண்கலம் தொடர்ந்து செல்வதற்கு எந்த இயந்திரமும் தேவையில்லை. சூரியனை பூமி சுற்றிவருகிறது. பூமியில் இதற்கென ஏதாவது இயந்திரம் இருக்கிறதா? அந்த அளவில், மங்கள்யான் இயற்கைச் சக்திகளின்படி பூமியைப் போலவே சூரியனைச் சுற்ற முற்பட்டது.

பீச்சு இயந்திரங்கள்

எனினும், மங்கள்யான் செவ்வாய்க்குப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக அதன் பாதையில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இது ஒரு பெரிய சாலையில், ஒரு லேனில் செல்லும் வாகனம் வலது புறத்தில் உள்ள அடுத்த லேனுக்கு மாறுவது போன்றது. இதற்கென மங்கள்யானில் 12 சிறிய பீச்சு இயந்திரங்கள் உண்டு. இவற்றை இஸ்ரோ விஞ் ஞானிகள் அவ்வப்போது இயக்கி, மங்கள்யானை செவ்வாயை நோக்கிப் பயணிக்கும்படி செய்தனர். வேறு கிரகங்களுக்கு அனுப்பப்படுகிற எல்லா விண்கலங்களிலும் இப்படியான இயந்திரங்கள் இருக்கும். வேறு விதமாகச் சொல்வதானால், விண் கலம் செல்லும் பாதையில் சிறு திருத்தங்களைச் செய் வதற்கு விண்கலத்தில் உள்ள பிரதான இயந்திரம் பயன்படுத்தப்படுவது கிடையாது.

விளக்கமாகச் சொல்வதானால், மங்கள்யானில் உள்ள பிரதான இயந்திரம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி இயக்கப்பட்டதற்குப் பிறகு 300 நாட்களாகச் செயல்படுத்தப்படவே இல்லை.

இப்போது அந்தப் பிரதான இயந்திரத்துக்கு முக்கிய வேலை இருக்கிறது. செவ்வாயை நெருங்கும் கட்டத்தில் உள்ள மங்கள்யான், மணிக்கு சுமார் 80,000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த வேகம் மணிக்கு சுமார் 5,700 கிலோ மீட்டராகக் குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கும்.

இந்த வேகத்தைக் குறைக்கப் பிரதான இயந்திரம் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டு நவம்பர் கடைசியில் மங்கள்யானுக்குத் தேவையான வேகத்தை அளித்த அதே இயந்திரம்தான் இப்போது வேகத்தைக் குறைக்கவும் உதவப்போகிறது.

பின்புறம் நோக்கி…

இவ்விதம் வேகத்தைக் குறைக்கப் பொதுவில் ஒரு உத்தி கையாளப்படும். நீங்கள் ஜாகிங் போய்க் கொண்டிருக்கிறீர்கள். திடீரென அதுவரை ஓடிக் கொண்டிருந்த அதே திசையில் பின்புறமாக ஓட ஆரம்பிக்கிறீர்கள். இந்த மாதிரியாக மங்கள்யான் பின்புறம் பார்த்தபடி திருப்பப்படும். இதற்குச் சிறு பீச்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பின்புறம் பார்த்தபடி இருக்கும்போது மங்கள்யானின் பிரதான இயந்திரம் இயக்கப்படும். அதாவது சென்றுகொண்டிருக்கும் திசையை நோக்கி நெருப்பு பீச்சப்படும்.

சுமார் 23 நிமிட நேரம் இயந்திரம் இவ்விதம் செயல்பட்டால், மங்கள்யானின் வேகம் செவ்வாயின் பிடியில் சிக்கும் அளவுக்குக் குறைக்கப்பட்டதாகிவிடும். ஆனால், அந்த இயந்திரம் கோளாறு செய்யாமல் செயல்படத்தொடங்குமா என்ற கேள்வி உள்ளது.

இந்த இயந்திரம் திரவ எரிபொருட்களைப் பயன் படுத்துவதாகும். எப்போது வேண்டுமானாலும் இதன் இயக்கத்தை நிறுத்தலாம், மறுபடி செயல்படும்படி செய்யலாம். கடந்த ஏழு முறைகளில் அது இவ்விதம் விட்டு விட்டுத்தான் இயங்கியுள்ளது. எனினும் 300 நாட்கள் செயல்படாமல் இருந்த காரணத்தால் பிரச்சினை ஏற்படுமோ என்ற கவலை உள்ளது.

மாற்றுக் குழாய்கள்

இந்த இயந்திரத்தில் தனித்தனியான இரு உருளை களில் வெவ்வேறான திரவ எரிபொருட்கள் உள்ளன. இவை, தனித்தனியான இரு குழாய்கள் வழியே வந்து இயந்திர அறையில் சேர்ந்து தீப்பிடித்துப் பின்புறத் திறப்பு வழியே பீச்சிடும். இவையெல்லாம் வேதிப்பொருட்கள். ஏற்கெனவே, ஏழு தடவை செயல்பட்டபோது இந்தத் திரவப் பொருட்களின் மிச்சமீதிகள் இவற்றைச் செலுத்தும் குழாய்களில் நுண்ணிய அளவில் தங்கியிருக்கலாம். இவை அந்தக் குழாய்களை அரித்திருக்கலாம். அதன் விளைவாகச் சிறு ஓட்டைகள் ஏற்பட்டிருக்கலாம்.

இப்படியான பிரச்சினை இருந்தால் இயந்திரம் செயல்படாமல் போகலாம். ஆகவேதான் இஸ்ரோ நிபுணர்கள் இந்த இரு சிலிண்டர்களிலும் திட்டமிட்டு மாற்றுக் குழாய்களைப் பொருத்தியுள்ளனர். செவ்வாயை நெருங்கும் கட்டத்தில் இயந்திரம் இயங்கும்போது இந்த மாற்றுக் குழாய்கள் வழியேதான் திரவ எரிபொருட்கள் இயந்திர அறைக்கு வந்து சேரும். அந்த வகையில் பிரச்சினை இருக்காது என்று கருதப்படுகிறது.

அந்த இரண்டு நிமிடங்கள்

இங்கு ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். மங்கள் யானின் வேகத்தைக் குறைப்பதற்காகப் பயன்படுத்த இருக்கும் இயந்திரம் கடந்த பல ஆண்டுகளாகப் பயனில் இருந்துவருவதுதான். எனவே, அதன் செயல்பாடு பற்றி ஐயம் கொள்ள இடம் இருப்பதாகத் தோன்றவில்லை.

சஸ்பென்ஸ் இருக்கக் கூடாது என்பதற்காக இஸ்ரோ இரண்டு நாள் முன்னதாக அதாவது 21-ம் தேதியன்று மங்கள்யானில் உள்ள பிரதான இயந்திரத்தை 2 நிமிடங்கள் இயக்கிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது.

(சூரியன், நிலவுக்கு அடுத்தபடியாக நம் வாழ்வில் அதிக இடம்பிடித்திருக்கும் விண்பொருள் செவ்வாய். எனினும், நிறையப் பேர் வானில் செவ்வாய் கிரகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது செவ்வாயை மாலையில் இருட்டிய பிறகு மேற்கு வானில் காணலாம். அடிவானத்துக்குச் சற்று மேலே சிவந்த நிறத்தில் சிறிய புள்ளியாகக் காணப்படும்.)

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x