Last Updated : 18 Aug, 2014 09:52 AM

 

Published : 18 Aug 2014 09:52 AM
Last Updated : 18 Aug 2014 09:52 AM

சென்னை 375: ஒரு முன்கதைச் சுருக்கம்

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உருவாவதற்கு 119 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டு திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் கட்டுப்பட்டவராக பூந்தமல்லியின் நாயக்கரான வேங்கடகிரி இருந்தார். அவர்களின் பிடியில் இன்றைய சென்னையின் நிலம் இருந்தது.

ஒரு குடியிருப்பைக் கட்ட நிலம் தேடி கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்ஸிஸ் டேவும் ஆண்ட்ரூ ஹோகனும் புதுச்சேரி வரை கடற்கரையில் அலைந்தனர். பெரி திம்மப்பா எனும் வணிகரின் சைகை மொழிபெயர்ப்பு உதவியோடு, மனித வாடை இல்லாத சுமார் ஐந்து கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர நிலம் வேங்கடகிரியிடமிருந்து வாங்கப்பட்டது. ஆங்கிலேயர் குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு வெளியே கருப்பர் நகரம் உருவானது. சென்னை நகரின் முதல் குடும்பம் என்ற பெயரை பெரி திம்மப்பாவின் குடும்பம் பெற்றது. ஆக, சென்னையின் ஸ்தாபகர்களாக பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ ஹோகன், பெரி திம்மப்பா ஆகிய மூவரும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். ஆனால், அவர்கள் பெயரில் ஒரு தெருகூட சென்னையில் இன்னமும் இல்லை.

ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கு உள்ளே இந்தியாவின் முதல் ஆங்கில மருத்துவமனை 1664-ல் உருவானது. பிறகு, கோட்டைக்கு வெளியே வந்தது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை. 1842 முதல் இந்தியர்களுக்கும் அதில் மருத்துவம் செய்யப்பட்டது.

மதறாஸ் நகராட்சி

1668-ல் திருவல்லிக்கேணியை உள்வாங்கிக்கொண்ட சென்னை 1688-ல் சென்னை நகராட்சியாக (அதாவது மதறாஸ் நகராட்சி) இங்கிலாந்து அரசரால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆசியாவில் எங்கும் அப்படிப்பட்ட உள்ளாட்சி முறை இல்லை. இதற்கிடையே சந்திரகிரி ராஜாவை கோல்கண்டா சுல்தான் தோற்கடித்தார். சுல்தானைப் பேரரசர் அவுரங்கசீப் தோற்கடித்தார். வென்றவர்களிடம் போய் நின்று தங்கள் சென்னை கோட்டைக்குப் பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1701-ல் அவுரங்கசீப் படைகள் சென்னைக் கோட்டையை லேசாகத் தட்டிப்பார்த்தன. 1746-ல் பிரான்ஸ் படைகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்த ராபர்ட் கிளைவ், சென்னை நகருக்கு வெளியே ஓடிப்போய் ஒரு கோட்டையில் ஒளிந்துகொண்டார். வடஅமெரிக்காவில் தங்களிடம் இருந்த ஒரு தீவை பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்து, சென்னையை ஆங்கிலேயர்கள் 1748-ல் மீண்டும் வாங்கினார்கள்.

ஆர்க்காடு நவாப் சாந்தோம் பகுதியை ஆங்கிலேயர்களுக்குப் பரிசாக வழங்கினார். மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை போன்றவை ஆங்காங்கே தீவுகள் போன்று தனித்து இருந்த கிராமங்கள். சென்னையின் வளர்ச்சி எனும் கடல் அவற்றை இடைவெளி விடாமல் தழுவிக்கொண்டது.

1711-ல் முதல் அச்சகம் சென்னையில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தவிர யாரும் அச்சகங்களை வைத்திருக்கக் கூடாது என கிழந்திய கம்பெனியின் தடை 1840 வரை இருந்தாலும், சென்னை மாகாண ஆளுநராக இருந்த எல்லீஸ் உள்ளிட்டோரின் முன்முயற்சியால் தமிழ் நூல்கள் அச்சாகின. சென்னையில் அச்சான நூல்கள்தான் பிற்பாடு எழுந்த தமிழ் மறுமலர்ச்சியின் மையம்.

பஞ்சமும் போர்களும்

தென்னிந்தியாவில் 1876 முதல் 78 வரை தாதுவருசப் பஞ்சம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சென்னையில் பஞ்சத்துக்கான நிவாரண வேலைக் கூலியாக 6 பைசாவும் அரை கிலோ தானியமும் தந்து பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் சென்னையின் மீது குண்டுவீசிவிட்டு மறைந்தது. 1942-ல் இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னை மக்களை வெளியேற்றியது.1943-ல் ஜப்பான் விமானங்கள் நகரில் குண்டுகளை வீசின.

சென்னை கோட்டையைச் சுற்றி உருவாகியிருந்த கருப்பர் நகரம், பிரான்ஸ் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. கருப்பர் நகரம் இருந்த இடத்தைச் சுற்றி 1708-ல் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1911-ல் அந்தக் கோட்டைக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை சாலையின் முதல் காரை பாரி அண்ட் கோவின் இயக்குநர் 1894-ல் ஓட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு ஆரம்பமான டிராம் சர்வீஸ் 1953-ம் ஆண்டு 'டாட்டா' காட்டியது. 1931-ல் முதல் மின்சார ரயில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை ஓடியது.

1901-ல் சென்னையின் மக்கள்தொகை: 5,40,000. பரப்பளவு: 70 சதுர கிலோமீட்டர். 1914-ல்தான் சென்னையில் கழிவுநீர் அமைப்புகளும் தெருவிளக்குகளும் குடிநீர் அமைப்புகளும் உருவாகின. ஆங்கிலேயர்களின் காலத்திய அந்த அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை எடுக்கத்தான் நவீன இயந்திரங்களும் சில நேரங்களில் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி மனிதர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், 1917-ல் முதல் விமானம் பறந்தது. 1923-ல் 80 சதுர கிலோ மீட்டராக வளர்ந்தது. 1925-ல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ரிப்பன் மாளிகையிலிருந்து வானொலி ஒலிபரப்பு 1930-ல் தொடங்கியது.

1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி உட்பட வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன. 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் எனும் சென்னை தேர்வானது. 1950-ல் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிந்தது. 1969-ல் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996-ல் மெட்ராஸ் மாநகரம் சென்னை என பெயர் மாற்றப்பட்டது. 2011-ல் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இன்றைய பெருநகரமாக சென்னை விரிவடைந்துள்ளது.

-த. நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x