Last Updated : 18 Nov, 2015 08:09 AM

 

Published : 18 Nov 2015 08:09 AM
Last Updated : 18 Nov 2015 08:09 AM

சென்னைய அப்பிடியே அலேக்கா தூக்கிருவோமா?

சொந்தப்புத்திய கடன் குடுத்துட்டு, ‘செய்திகளை’ மட்டும் வெச்சிப் பாத்தோம்னா சென்னை அழிஞ்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு பீல் வருது. அரசியல்வாதிகளும், சமூக வலைத்தளங்களும் அடிக்கிற கூத்தப் பாத்தா, அல்ரெடி சென்னை அழிஞ்சே போயிட்ட மாதிரி தோணுது. உண்மையில, அங்க நியாயமா வடகிழக்கு பருவ காலத்துல எம்புட்டு மழ பெய்யணுமோ அந்தளவுக்குத் தான் (79 செ.மீ) பெஞ்சிருக்கு.

நிலமே இல்லாட்டாலும் கிராமத்தான் மழயப் பாத்து சந்தோஷப்படுறான். ஆனா, பட்டணத்தானோட ரியாக் ஷன் எல்லாம் எப்பவுமே வேற மாரி இருக்கு. “சென்னை எப்பேற்பட்ட ஊரு. இங்க மழ பெய்யலாமா? பெஞ்சாலும் ரோட்டுல தண்ணி ஓடலாமா?”ன்னு நினைக்காங்க. மொத்தமா பந்தல்போட்டு, மழத் தண்ணியை கடலுக்கோ, வீராணம் ஏரிக்கோ கொண்டு போகச் சொல்றாங்க போல.

சென்னையில் ஒரு மழைக்காலம்!

போன வருஷம் இதே அடைமழக்காலத்துல சென்னையில அக்கா வீட்ல இருந்தேன். சும்மா சொல்லக்கூடாது, புதுப்பொண்டாட்டிய கவனிக்கிற மாரி சென்னைய விழுந்து விழுந்து கவனிக்காங்கய்யா அதிகாரிங்க.

வேளச்சேரி பக்கம் ஒரு மரம் மழயில சாய்ஞ்சி விழுந்த அஞ்சவாது நிமுசத்துல, அதை அறுத்து அப்புறப்படுத்திட்டாங்க. மரத்துக்கு மரம் நாலு ஆள வேலைக்குப் போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வந்திருச்சி, அவ்ளோ வேகம். நம்ம ஊர்ல மரம் விழுந்தா, அது காய்ஞ்சி இத்துப்போகத் தண்டியும் ஒருபய எட்டிப்பார்க்க மாட்டான். இதாம் சாக்குன்னு வாரக்கணக்குல டவுன் பஸ்ஸையும் நிப்பாட்டிருவாம்.

அக்கா வீட்டுப் பக்கத்துல ஒரு டிரான்ஸ்பார்மர் தீப்பிடிச்சி எரிஞ்சுது. “சுத்தம். எப்பிடியும் ரெண்டு வாரத்துக்கு கரண்டு வராது. போன் போட்டாலும் ஒருபய எடுக்க மாட்டாம்”ன்னேன். “ஏலேய் நம்ம ஊர்னு நினைச்சியா? இது சென்னை. tangedco.gov.in வெப்சைட்டுக்குப் போலெ”ன்னா.

போனேன். மேல ஊதாக்கலருல 24 மணிநேரமும் எழுத்து ஓடிக்கிட்டே இருந்துச்சி. “என்னது சிங்காரச் சென்னையில கரெண்டு இல்லியா, உடனே 1912க்கு போன் போடுங்க. துட்டுல்லாம் கெடையாது, டோல் ப்ரி நம்பர் தாம்”னு வருது. நான் அந்த நம்பருக்குப் போன் போட்டேன். நம்புனா நம்புங்க. அன்னைக்கே சரி பண்ணிட்டாங்க.

அடங்கொப்புரானே, இத்தனை நாளா இதுகூட தெரியாம இருந்திருக்கோமேன்னு, நம்ம மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு எல்லாம் என்ன நம்பர்னு தேடுதேடுன்னு தேடுனேன் ஒண்ணத்தையும் காணும். இது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வெப்சைட்டா, இல்ல சென்னை மின்பகிர்மான கழகத்தோடதான்னு எனக்கு சந்தேகமே வந்திருச்சி. அவங்களப் பொறுத்தவரைக்கும் சென்னை தான் தமிழ்நாடு போல.

வானிலை ஆய்வு மையத்தின் ஓரவஞ்சனை

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைக்கு லீவுன்னு சென்னையில முந்துன நாளே அறிவிக்காங்க. எங்க ஊர்ப்பக்கம் எல்லாம் மறுநாள் காலையில ஒம்பது மணிக்கு மேல தான் சொல்வாங்க. அதுக்குள்ள தனியார் ஸ்கூல்ல ரெண்டு பீரியடு முடிஞ்சிரும். பொறவு எப்பிடி லீவு விடுவாங்க?

‘சென்னையில் நாளை காலை கனமழை பெய்யும். மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்’னு டீடெய்லா வானிலை அறிக்கை சொல்றவங்க தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் பத்தி ஒத்தை வரியில, ‘கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யலாம்’னு மேலோட்டமா சொல்லிடுறாங்க. தென்மாவட்டம் என்றால் 13 மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என்றால் 12 மாவட்டங்கள்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன? சென்னைக்குச் சொல்ற மாதிரி துல்லியமா சொன்னாத்தான் என்னவாம்?

5 மாநிலம், 3 யூனியன் பிரதேசத்துக்கான மண்டல வானிலை ஆய்வு மையம் தாம் சென்னையில இருக்கு. ஆனா அதோட செயல்பாட்டைப் பாக்கும்போது, ‘சென்னை வானிலை மையம்’னு மீடியாக்கள் சொல்றது சரிதாம்னு தோணுது.

மின்சாரம் கொண்டோடினான்!

மழ நேரத்துல சென்னைல கரெண்ட் போகுதாம். பேஸ்புக்ல ஒரே ஆவலாதியா கிடக்கு. அண்ணாச்சி, தெற்குப் பக்கம் கொஞ்சம் திரும்பிப்பாருங்க.. மழைக்காலத்துல மட்டும் தான் எங்களுக்கு கரண்டே வருது. மிச்ச நேரம் பூராம் மின்வெட்டு தான். இத்தனைக்கும் முக்காவாசி மின்உற்பத்தி நிலையங்கள் எங்க ஏரியாவுல தான் இருக்கு.

எங்க ஊர்ல கோடையில 24 மணி நேரமும் ‘விண்ட் மில்’ சுத்திக்கிட்டே இருக்கும். ஆனா, ஊருக்குள்ள பொட்டுக்கரண்டு இருக்காது. புழுக்கத்தோட மொட்டமாடியில படுத்துக்கிட்டே இந்த காத்தாடிகள வேடிக்கை பாக்கலாம். பாவநாசம், சுருளி நீர்மின்நிலையங்கள்லேயும், தூத்துக்குடி அனல்மின்நிலையம், ராமநாதபுரம் (வழுதூர்) இயற்கை வாயு மின்நிலையத்திலேயும் வருஷம் பூராம் கரண்ட் தயாரிக்காங்க. ஆனா அதைச் சுத்தி இருக்கிற ஊர்கள்ல கரெண்ட் வல்லுசா இருக்கிறதில்ல.

இவ்வளவு எதுக்கு? உசிரையே பணயம் வெச்சி கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு இடம் கொடுத்திருக்காங்க பாருங்க. அந்த ஊர்க்காரங்களுக்கும் கரெண்ட்ட கட் பண்ணீருதாங்க. இந்தக் கரெண்ட் முக்கியமா எங்க போகும் தெரியுமா? சென்னைக்கு!

பாரதிதாசன் மட்டும் இப்ப இருந்தாருன்னு வெச்சிக்கோங்க, ‘இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினான். குமரி வாழ்வான் இருமிக்கொண்டே மருந்து கொண்டோடினான்’ன்னு எழுதியிருப்பாரு.

நாங்க கெட்டுற கரண்ட் பில்லைத்தான் மெட்ராஸ்காரங்களும் கெட்டுறாங்க. எங்கள மாரியே அவங்களும் ஒரு ஓட்டுத்தான் போட முடியும். பிறகெதுக்கு, எங்க பீஸைப் பிடிங்கிட்டு அவங்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் கரெண்ட் சப்ளை பண்ணுறாங்கன்னு ஒண்ணும் புரியலை.

“அனுமார் சஞ்சீவி மலையை தூக்குன மாரி, சென்னைய அப்படியே அலேக்கா தூக்கி, தெற்க கொண்டாந்து வெச்சிருவோமாடே”ன்னு கோட்டிக்காரத்தனமா சிந்திக்கிறது தவுற எங்களுக்கு வேற வழி தெரியல. ஏன்னா, அரசு இயந்திரத்தின் தலைமை, அரசியல்கட்சிகளின் தலைமைக்கழகம், மீடியாக்களோட ஹெட் ஆபீஸ் எல்லாமே சென்னையில தாம் இருக்கு. அதாம் பூராப்பேரும் அந்த ஊரை தலமேல வெச்சிக் கொண்டாடுதாங்க.

சென்னைக்கு ஈகோலா தென்னாட்டுக்கும் கரெண்ட் தரணும்னு கேட்ட ஒரு வழக்கு அஞ்சாறு வருஷமா ஐகோர்ட்ல பென்டிங்ல இருக்கு தெரியுமா? எங்களுக்கு கரெண்ட் கூட வேண்டாம்பா. குடிக்கத் தண்ணி வேணும். அதனால, உங்க கூத்தப்பூராம் நிப்பாட்டிட்டு, தாமிரபரணித் தண்ணிய 99 வருஷத்துக்கு உறிஞ்ச அனுமதி வாங்கியிருக்கிற கம்பெனியை தடுக்குறதுக்கும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. ஏற்கெனவே இன்னொரு கூல்டிரிங்ஸ்காரன் உறியுறது போதாதா?

சென்னையில மழயே பெய்யலாட்டாலும், எங்கிட்டு இருந்தாச்சும் தண்ணியை கொண்டாந்திருவாங்க அரசியல்வாதிங்க. ஆனா, தாமிரபரணி வறண்டு போனா எங்களுக்கு எவன் தண்ணி தருவாம் சொல்லுங்க? தமிழ்நாட்டோட முகத்துக்கு பவுடர் பூசுனது போதும். காலையும் கொஞ்சம் கவனியுங்க. ப்ளீஸ்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x