Last Updated : 03 Sep, 2015 09:52 AM

 

Published : 03 Sep 2015 09:52 AM
Last Updated : 03 Sep 2015 09:52 AM

சீனாவும் ஜப்பானும் 70 ஆண்டுகளும் ஒரு சொல்லும்

போரிடுவதற்கு மட்டுமில்லை, மன்னிப்புக் கேட்பதற்கும் துணிவு வேண்டும்.

இன்று பெய்ஜிங் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தியானன்மென் சதுக்கத்தில் 12,000 துருப்புகளின் அணிவகுப்பு நடக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்னால், 1945 செப்டம்பர் 2-ம் நாள் டோக்கியோவில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்கப் போர்க் கப்பலில், ஜப்பானியர்கள் சரணாகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்குவந்தது. 1937 முதல் 1945 வரை, எட்டு ஆண்டுகள் ஜப்பானியர்கள் சீனாவின் மீது தொடுத்த போரும் முடிவுக்குவந்தது. செப்டம்பர் 3-ம் நாளை போரின் நினைவு நாளாக சீனா கொண்டாடிவருகிறது. இந்தப் போரில் ஒன்றரைக் கோடி சீனர்கள் மாண்டுபோயினர்.

8 கோடிப் பேர் அகதிகளாயினர். எனினும், சீனர்கள் விடாமுற்சியுடன் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டனர். இன்று சீனா அவர்களை நினைவு கூர்கிறது. அதே வேளையில், ஜப்பான் தனது ஆக்கிரமிப் புக்காக மன்னிப்புக் கோரவில்லை என்கிற கோபமும் பெய்ஜிங்கில் கனன்றுகொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய ஜப்பான்

ஜப்பான் என்றதும் பலருக்கும் ஹிரோஷிமாவின்மீது குண்டு வீசப்பட்டதுதான் நினைவுவரும். அது போரின் கடைசி அத்தியாயம். அதன் முந்தைய அத்தியாயங்கள் அனைத்திலும் ஜப்பான் பாதிக்கப்பட்ட நாடாக அல்ல, ஆக்கிரமிப்பாளராகவே இடம்பெறுகிறது. 1895-ல் கொரியாவிலும் தாய்வானிலும் கால்பரப்பியது ஜப்பான்; 1905-ல் சீனாவின் கிழக்குப் பகுதியான மஞ்சூரியாவில் செல்வாக்கு செலுத்திய ரஷ்யாவைத் தோற்கடித்தது; 1931 முதல் சீனாவைத் தாக்கத் தொடங்கியது; 1937-ல் போர் தீவிரமடைந்தது. பெய்ஜிங், ஷாங்காய் நகரங்கள் வீழ்ந்தன.

அதே ஆண்டின் இறுதியில், அப்போது சீனாவின் தலைநகராக இருந்த நான்ஜிங்கைக் கைப்பற்றியது. அடுத்த ஆறு வாரங்களில் நிகழ்ந்தவை, வரலாற்றில் ‘நான்ஜிங் படுகொலை’ என்று குறிக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகக் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் வரை இருக்கும் என்கின்றனர் வரலாற்றாளர்கள். வெ. சாமிநாத சர்மா தனது ‘சீனாவின் வரலாறு’ எனும் நூலில் எழுதுகிறார்: ‘இருவர் இருவராக மணிக்கட்டுகளை இரும்புக் கம்பி களால் இறுக்கிக் கட்டிச் சுட்டுக் கொன்றார்கள்; துப்பாக்கி முனையால் குறிபார்த்துக் குத்தும் பயிற்சி பெறுவதற்காக, சிறைபட்ட சீனப் போர் வீரர்களின் கண்களைக் கட்டிவிட்டு அவர்களை உபயோகப்படுத்தினார்கள்; பச்சைக் குழந்தைகளை ஆகாயத்திலே தூக்கிப்போட்டுக் கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள்’.

ஆயிரக்கணக்கான சீனப் பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப்பட்டனர். இவர்களை ‘சுகப்பெண்டிர்’ என்றழைத்தது ஜப்பானிய ராணுவம். இழப்புகளைப் பொருட்படுத்தாமல் சீனா விடாப்பிடியாகப் போராடியது.

1941-ல் அமெரிக்காவின் முத்துத் துறைமுகத்தை தாக்கியது ஜப்பான். அடுத்த மூன்று மாதங்களில் வியட்னாம், லாவோஸ், கம்போடியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், எல்லாம் ஜப்பான் வசமானது. இந்தத் தென்கிழக்காசிய நாடுகள் பிரான்ஸ், பிரிட்டன், டச்சு, அமெரிக்க நாடுகளின் காலனிகளாக இருந்தன. அதுவரை சீனாவின் எதிரியாக மட்டுமே கருதப்பட்டுவந்த ஜப்பான், நேச நாடுகளின் எதிரியானது. 1943 முதல் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஜப்பான் தோல்விமுகம் காணத் தொடங்கியது. 1945 ஆகஸ்ட் 6-ல் அமெரிக்கா, ஹிரோஷிமா நகரின்மீது அணுகுண்டு வீசியது.

ஆகஸ்ட் 15-ல் சரணடைவதாக அறிவித்தார் ஜப்பானியப் பேரரசர். சீனா நிகழ்த்திய போரின் முக்கியத்துவம் வரலாற்றில் முறையாகப் பதிவாகவில்லை என்கிறார் ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ரானா மிட்டர். சமீபத்தில் வெளியான ‘மறக்கப்பட்ட நட்புநாடு’ (Forgotten Ally) என்கிற நூலில் மிட்டர் சொல்கிறார், ‘போர் நடந்த எட்டு ஆண்டுகளில் சாதரண சீனக் குடிமகன் தினசரி மரணங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. சீனாவின் கடுமையான எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால் ஜப்பான் 1938-லேயே சீனாவைக் கைப்பற்றியிருக்கும். அதன் கவனம் தென்கிழக்காசியாவின் மீது அப்போதே திரும்பியிருக்கும். சீனா பலவீனமாக இருந்திருந்தால் பிரிட்டிஷ் இந்தியாவைக் கைப்பற்றுவதும் ஜப்பானுக்குச் சாத்தியமாகியிருக்கும்’.

ஜெர்மனியும் ஜப்பானும்

இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு, ஜெர்மனி தனது நாஜித் துருப்புகளின் சகல அராஜகங்களுக்கும் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் மன்னிப்புக் கோரியது; இழப் பீடுகளும் வழங்கியது. நேட்டோ, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் எதிரிகளை இணைத்தன. மாறாக, ஆசியாவில் அப்படியான இணக்கம் ஏற்படவில்லை.

ஜெர்மனி தனது போர்க் குற்றங்களை மறைக்க முயலவில்லை. அவுஷ்விட்ஸ் கொலை முகாம்களுக்கு யூதர்கள் சரக்கு ரயிலில் மிருகங்களைப் போல் அடைத்து அனுப்பி வைக்கப்பட்டதைச் சித்தரிக்கும் வெண்படிகப் பிரதிமை ஜெர்மனியில் நிறுவப்பட்டிருப்பதைத் தனது ‘பெர்லின் நினைவுகள்’ நூலில் எழுதுகிறார் பொ.கருணாகரமூர்த்தி.

அவர் மேலும் சொல்கிறார், ‘நாங்கள் குடியிருக்கும் வீட்டின் வாசலில்கூட ‘இங்கே வாழ்ந்த யூதர்கள் தியா குண்ட்மான், லினா குண்ட்மான் 1943-ல் முன்பனிக் காலத்தில் அவுஷ்விட்ஸ் அனுப்பப்பட்டு, அங்கே மறைந்தார்கள்’ என்ற வாசகம் பதித்த பித்தளைத் தகடு தரையில் பதிக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல்லாயிரம் நினைவுத் தகடுகளைப் பல வீட்டு வாசல்களிலும் பெர்லினில் இன்றும் காணலாம்’.

ஜெர்மனியைப் போல் ஜப்பானால் வரலாற்றுக்கு நேர்மையாக முகம் கொடுக்க முடியவில்லை. கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஜப்பானிய அரசு தாங்கள் சரணடைந்ததை நினைவுகூர்ந்தது. ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் உரையில் நிறைய வார்த்தைகள் இருந்தன. சுற்றிவளைத்துப் பேசும் சாமர்த்தியம் இருந்தது. ஆனால், சீனர்கள் எதிர்பார்த்த மன்னிப்பு என்கிற சொல் மட்டும் இடம்பெறவில்லை. வருங்காலச் சந்ததியினர் தொடர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது என்றும் அபே தெரிவித்தார். இந்த உரையைத் தொடர்ந்து அவருக்கு, உள்நாட்டுத் தேசியவாதிகளின் ஆதரவு பெருகிவருவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானில் நிகழ்ந்த மாற்றங்களையும் குறிப்பிட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளில் ஜப்பான் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை; அணு ஆயுதம் தயாரிக்கவில்லை. அதேவேளையில், ஜப்பானின் அரசியல் தலைவர்கள் ஜப்பானின் போர்க் குற்றங்களை நினைவுகூரவோ அதற்காக மன்னிப்புக் கேட்கவோ விரும்பவில்லை.

மன்னிப்பு எனும் சொல்

இந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் சசி தரூர் ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் ‘பிரிட்டன் தனது காலனி நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டுமா’ என்ற விவாதத்தில் நிகழ்த்திய உரையைக் குறிப்பிடலாம். இந்தியாவின் வளங்களை பிரிட்டன் எப்படியெல்லாம் கொள்ளையடித்தது என்று பட்டியலிட்ட தரூர், பிராயச்சித்தமாக பிரிட்டன் இழப்பீடு எதுவும் கொடுக்க வேண்டாம். மாறாக, இந்தியாவிடம் மனதார மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பேச்சை முடித்திருந்தார். அவருடைய ஆதங்கம் பல இந்தியர்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் குறுகிய காலத்தில் அவரது உரையை யூடியூபில் 30 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

சீனாவைப் பொறுத்தமட்டில் அது ஆதங்கமாக அல்ல, ஆறாத ரணமாக இருக்கிறது. இப்போது சீனாவிடம் செல்வம் இருக்கிறது, ராணுவ பலமும் இருக்கிறது. இன்று நடக்கும் பேரணியில் அவை வெளியாகும். கூடவே, அதன் போர்க் காயங்கள் ஆறாமல் இருப்பதும் தெரியவரும்.

அறத்துக்கு மட்டுமல்ல, வீரத்துக்கும் அன்பே துணையாகும் என்கிறார் வள்ளுவர். அது போலப் போரிடுவதற்கு மட்டுமில்லை, மன்னிப்புக் கேட்பதற்கும் துணிவு வேண்டும். அப்படியான துணிவு ஜப்பானியத் தலைவர்களுக்கு வர வேண்டும். அப்போது சீனாவின் காயங்களும் ஆறும்.

மு. இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்,
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x