Last Updated : 07 Oct, 2013 12:56 PM

 

Published : 07 Oct 2013 12:56 PM
Last Updated : 07 Oct 2013 12:56 PM

சமூக வலைத்தளம் எதிர்கொள்ளும் ஆபத்து

தனி நபர் கருத்துப் பரிமாற்றங்கள் சமூக வலைத்தளங்களில் (ட்விட்டர், ஃபேஸ்புக்) பெருமளவில் நடக்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு எதிராக, ஆட்சி மாற்றம் கோரி பல நாடுகளில் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் வெற்றியும் கண்டுள்ளன.

இத்தொழில்நுட்பம் தனி மனித கருத்துச் சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி எனக் கூறுவோரும் உண்டு. இவ்வலைத்தளங்களை நோக்குவோரின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்டன. அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சமூக வலைத்தளத்துக்குள் நுழைந்து பிரச்சாரங்களை வலுப்படுத்த விழைந்துள்ளனர். பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்துக்கென 3000 பேரை நியமித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களின் வீரியத்தை உணர்ந்து உபயோகப்படுத்தும் அரசியல் தலைவர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவு செய்யும் வேளையில், மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வதில்லை. விமர்சனக் கருத்துக்களுக்கு எதிராக எதிர் விமர்சனங்களைப் பதிவு செய்யாமல் கருத்துப் பதிவுகள் செய்தவர்கள் மீதே காவல்துறையை ஏவிவிடுகின்றனர்.

சுதந்திரக் கருத்துக்களைப் பதிவு செய்வதால் ஆபத்து இல்லை என்று நினைத்த அப்பாவிகள் பலரும் சிறையில் தள்ளப்பட்டனர். கருத்து சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக்கியுள்ளபோதும், முறையற்ற சட்டப் பிரிவுகளால் அவை நசுக்கப்படுகின்றன.

சிவசேனைக் கட்சி அமல்படுத்திய பந்த்தின் பாதிப்பால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரு மாணவிகள் கைது செய்யப்பட்டதோடு அதில் ஒருவரின் உறவினரது மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளாகியது. மம்தா பானர்ஜியின் கேலிச் சித்திரத்தை வெளியிட்ட கொல்கத்தா பேராசிரியர் கைதானார். மத்திய நிதியமைச்சரின் மகனைப் பற்றி கேள்வி எழுப்பியவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதோடு பணி முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பியோர் வீட்டுக் கதவுகள் காவலர்களால் தட்டப்படும் நிகழ்வுகள் ஏறிக்கொண்டே போகிறது. கைதுகளை நியாயப்படுத்த 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-A சுட்டிக்காட்டப்படுகிறது. அதன்படி ஒருவர் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ்சல் அல்லது மின் செய்திகள் அனுப்பி யாருக்கேனும் எரிச்சல், சுகவீனம், ஆபத்து, தடுப்பு, நிந்தை, ஊறு மற்றும் மிரட்டல் விடுத்தால் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். தெளிவற்ற வரையறைகள் மூலம் இதர சட்டங்களில் இல்லாதவற்றையும் குற்றமாக்கி, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக இப்பிரிவு உள்ளது.

மும்பை மாணவிகள் இச்சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றமே தனது கசப்பை வெளிப்படுத்தியது. இச்சட்டப்பிரிவை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று அரசை அறிவுறுத்தியது. தனி மனித கருத்துச் சுதந்திரம் விரும்பும் அனைவரும் இச்சட்டப் பிரிவை ரத்து செய்ய ஒரே குரலில் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சட்டத்தை முறையாகப் பயன்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை விட்டதோடு தன் கடமை முடிந்துவிட்டதென நினைக்கிறது.

அதே நேரத்தில் வலைத்தளங்களை சமூக விரோத, சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தும் போக்கு கருத்து சுதந்திரவாதிகளை கவலை கொள்ள வைக்கிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூர் நகரில் நடந்த வகுப்புக் கலவரப் பின்னணியில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட விஷமப் பிரச்சாரங்களும் காரணம் என்று தெரியவருகிறது.

எனவே த.தொ.நு. சட்டம் திருத்தப்படும்போது சமூக வலைத்தளத்தில் தீய சக்திகளின் செயல்களை தண்டிப்பது உறுதியாக்கப்படுவதோடு நியாயமான கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அரசு முன்வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x