Last Updated : 03 Aug, 2014 12:00 AM

 

Published : 03 Aug 2014 12:00 AM
Last Updated : 03 Aug 2014 12:00 AM

கொலைச் சிந்துகளின் காலம்

தமிழக வட மாவட்டங்களில் கோவை, ஈரோடு, சேலம், ஆற்காட்டுப் பகுதிகளில்தான் கொலைச்சிந்துகள் அதிகம் பாடப்பட்டன. பெரிய சந்தையின் முன் பகுதி, நாட்டார் தெய்வ விழாக்கள் நடக்கும் இடம், ஊர்ப் பொதுமன்றம் போன்றவற்றில் டேப் என்ற இசைக் கருவியை அடித்துக்கொண்டே பாடகர் பாட ஆரம்பிப்பார். கூட்டம் கொஞ்சம் கூடியதும் கதையைப் பூர்வீகத்திலிருந்து சொல்ல ஆரம்பிப்பார். ஒருவகையில், இன்றுள்ள புலனாய்வுப் பத்திரிகைகளின் மொழிநடை போன்றுதான் அந்தக் கதை கூறும் பாங்கு இருக்கும். கதையைப் பாதியில் நிறுத்திவிட்டு, அச்சிட்ட புத்தகங்களை வாங்கச் சொல்லுவார்.

முறையற்ற உடலுறவு, பாலியல் வல்லுறவு போன்றவை காரணமாகவோ சூழ்நிலை காரணமாகவோ நிகழும் கொலையும் தற்கொலையும்தான் கொலைச் சிந்துகளின் பாடுபொருள்கள். சிந்துப் பாடல்கள், நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தாலும் நூல் இறுதியில் ‘இவை நடந்தவை அல்ல; கற்பனையே’ என்றிருக்கும். பெரும்

பாலும் ஊர், பெயர்கள் மாற்றப்படுவது சிந்துவின் பொதுப் பண்பு. இப்பாடல்களில் சில அச்சில் வந்துள்ளன; சில வாய் மொழியாக உள்ளன. இவற்றை ஆய்வாளர்களான சி.மா. இரவிச்சந்திரனும், பா. சுபாஷ் போஸூம் பதிவுசெய்துள்ளனர்.

கடலூரை அடுத்த ஒரு சிறு கிராமத்தில் நாட்டார் தெய்வ விழாவில் ஒரு பாடகர் டேப் அடித்துக்கொண்டு சிந்து பாடி யதைக் கேட்டேன். பாடல் தெளிவாக இல்லை. விழா இரைச்சல். நான் கேட்ட அந்த சிந்து அச்சில் வந்தது. படித்த பிறகு கதை புரிந்தது. அந்தப் பாடகர் பாடியபோது அவருடைய மனைவி, சிந்து புத்தகங்களைக் கூவி விற்றார். கூடவே, சினிமா பாட்டுப் புத்தகங்கள், பேதி மாத்திரை, தைலம் இத்தியாதிகளும் இருந்தன.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அச்சில் வராத பாடல்கள், கட்டுரைகளைத் தேடி காரைக்குடி ரோஜா முத்தையா செட்டியாரின் நூல் நிலையத்துக்குச் சென்றபோது சில சிந்துப் பாடல்களைப் பார்த்தேன். கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த தென் திருவிதாங்கூரில் நடந்த ஒரு கொலையைப் பற்றிய சிந்துகூட இருந்தது. ‘பிள்ளையைக் கொன்ற பாட்டு’ என்ற அந்தச் சிந்து 1920-ல் வெளியானது. தென்மாவட்டங்களில் சிந்துப் பாடல்கள் கிடையாது என மூத்த ஆய்வாளர்கள் சொன்னதற்கு நேர்மாறாக இருந்தது.

அச்சில் வந்தவை

கொலைச் சிந்துகளைப் படித்தவர்களும் கேட்டவர்களும் பெரும்பாலும் கிராமத்துக்காரர்களே. அவர்களுக்கு அவை பரபரப்பான செய்திகளைக் கூறிய ஊடகங்களாகத்தான் இருந்தன. வாய்மொழியிலும் எழுத்து வடிவிலும் பதிவுசெய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட கொலைச் சிந்துகளில், கிட்டத்தட்ட 36 பாடல்கள் வன்புணர்ச்சி தொடர்பானவை. முறையற்ற உறவு குறித்தவை 11-க்கும் மேல் உண்டு. முறையற்ற உறவால் விளைந்த கொலைகள் அப்போது சிந்துப் பாடல்களால் கிராமங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இதுபோன்ற சிந்துகள் 10,000 பிரதிகள்கூட விற்பனை ஆயின.

பெரும்பாலான சிந்துகளில் சூழ்நிலையே முறையற்ற உறவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வன்புணர்ச்சியால் விளையும் கொலையைச் சிந்துப் பாடகர் நியாயப்படுத்தியே பாடுகிறார்! தர்மத்தைக் காப்பாற்றக் கொலை செய்தவரை நாட்டார் பாடகர் தண்டிக்க மாட்டார்; அறத்துக்கும் மரபுக்கும் எதிராகச் செயல்படுபவர்களைக் கொலை செய்வதை நாட்டார் பாடகர் நியாயப்படுத்துகிறார்!

ஆளவந்தார் கொலை

வெளிநாடுகளுக்கு ஆண்கள் சம்பாதிக்கப் போவதைப் பற்றியும், அவர்களுடைய மனைவிகளில் சிலரது பாலியல் சிக்கல்கள் பற்றியும் அதன் காரணமாக எழும் பிரச்சினைகளையும் கொலைச் சிந்துகள் பதிவுசெய்திருக்

கின்றன. கேடிகளோ, சூழ்நிலை காரணமாக மற்றவர்களோ பெண்களைப் பலவந்தப்படுத்துவதும், அதனால் நிகழ்ந்த கொலைகளும் சிந்து நூல்களில் நீதிபோதனையுடன் காட்டப்

படுகின்றன. ஆளவந்தார் கொலை வழக்கு சிந்து 60-களில் மிகவும் புகழ்பெற்றது. ஆளவந்தாரின் கதை ஒரு தொலைக் காட்சியில் தொடராகக்கூட வந்தது. மதுரை கரகாட்டக் குழு ஒன்று, 80-களில் இக்கதையைப் பாடக் கேட்டிருக்கிறேன்.

ஊடகங்கள் பரவலாகாத காலம்

20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதாரண கிராமத்து மக்களுக்கும் சிறு நகரங்களில் இருந்தவர்களுக்கும்கூட நாட்டு நடப்புகள் முழுதாகத் தெரியாது. இந்திய விடுதலைப் போர் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருந்த காலம். சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்து ஆசிபெற்றவரும், முன்னாள் எம்பியுமான தியாகி சிவன் பிள்ளையை ஒரு முறை நான் பேட்டிகண்டபோது “…வங்கப் பிரிவினை நடந்த காலம்; நாஞ்சில் நாட்டுக்கு ஐந்து அல்லது ஆறு ‘இந்து’ பத்திரிகை கள்தான் வருமாம். ஆங்கிலம் தெரிந்த ஒருவர் படித்து மொழிபெயர்த்துச் சொல்லுவார் என்று அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன். என் காலத்தில் மணிக்கொடி இதழ் நாகர்கோவிலுக்கு ஐந்துதான் வந்தது; மூன்று அல்லது நான்குதான் விற்பனையாகும்” என்றார்.

திருநெல்வேலி மாவட்டம் தென் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பு நடந்தபோது, பலருக்குத் தங்கள் குழந்தை களின் வயதை உத்தேசமாகச் சொல்லத் தெரியவில்லை. அதற்

காக அதிகாரிகள் அந்தப் பகுதியில் நடந்த இரண்டு நிகழ்ச்சி களைக் கூறி, குழந்தை பிறந்தது அந்த நிகழ்ச்சிகளுக்கு முன்பா பின்பா எனக் கேட்டனர். அந்த நிகழ்ச்சிகள்: ஒன்று, செம்புலிங்கம் என்ற கொள்ளைக்காரன் கொலைப்பட்டது; இரண்டாவது, மகாத்மா காந்தி அந்த ஊரில் பேசியது.

இந்த இரு நிகழ்ச்சிகளில் மகாத்மா வந்தது பலருக் குத் தெரியவில்லை. செம்புலிங்கம் கொலைப்பட்ட கால கட்டத்தைச் சரியாகக் கணக்கிட்டார்களாம். இதற்கு முக்கியக் காரணம் செம்புலிங்கம் கொலைபற்றி சிந்துப் பாடல்கள் அப்போது பரவலாக அங்கே பாடப்பட்டதுதான். மகாத்மா வந்தது பற்றிய செய்திகளைப் பத்திரிகைகள் வழியாக மக்கள் அறியவில்லை என்பதும் ஒரு காரணம். மகாத்மா கொலைப்பட்டபோது, மகாத்மா கொலைச் சிந்து, துக்கச் சிந்துப் பாடல்கள் வழிதான் செய்தியைச் சிலர் அறிந்திருக்கிறார்கள்.

கொலைச் சிந்திலிருந்து சில பகுதிகள்:

பிள்ளையைக் கொன்ற பாட்டு

இஃது கோலப்ப பிள்ளையால் இயற்றப்பட்டது.

...வேளையும் விடிய கண்டிட்ட - சிலர்கள்

வந்து கண்டிதை யுரைக்க வூராரிளகி

சென்றதையும் வட்டமிட்டனர் போலிஸ்

சேதியறிந்தவ்விட முடனேயடைந்து

முறைப்படி மஹஸறெழுதி கோட்டாற்

ஆசுபத்ரி டாக்டரையு மங்கழைப்பித்து

ப்ரேதப்பரிசோதனை செய்து - அதை

பந்து ஜனங்களுக்களித்திட்ட பிற்பாடு

துப்பறியத்தான் முயன்றனர் - ஆற்கும்

தைவமென்றும் பொதுவென்ற சொல் வீணாகுமா

நன்மை நட்டால் நன்மை விளையும் அதுபோல்

தின்மை நட்டால் தின்மையே விளையும் எந்நாளும்

அவ்வித மகஸ்த்தமாக இந்த

அனியாயக்கார் போலிசார்

கேசுமுறையே தெளிந்தது - புள்ளிகள்

குமாரன் தம்பி இன்ஸ்பெக்டவர்களினாலே

இலாக்குடியெனும் ஸ்டேஷனில் விலங்கு

மிட்டுவந்து பாறாவுள்டைக்கப்பட்டனர்

படித்தறிவீர் மற்றவிபரம் - இரண்டாம்

புஸ்தகத்திலிருந்தரிய நண்பரே நீங்கள்

(ஆ)

தாயாரின் ஒப்பாரி

(பத்தினிக் கர்ணகையே என்ற மெட்டு)

என்னருங் கண்மணியே - நீயு - மெங்க சென்றாய் தனியே

உன்னை விட்டெவ் வித முயிற் தறிப் பேனடி உரைப்பாய் பசுங்கிளியே

கடையிலாசை கொண்டா அந்தப் பாழ்மடம் சென்னனை நீ

இகத்தில் எனக்கு இனியாருண்டெனக்கு கண்மணி – இது என் விதிப்பளனா

நட்டாற்றியெந்தனைக்கை - விட்டாயோ என் மகளே

பட்டப் பகலுனைப் பாதகர் கொன்றாரோ பகராயோ கண்மணியே

கட்டில் மெத்தை இருக்க - ரத்த - கம்பளி பட்டிருக்க

பாம்புக்கள்ளியில் நெல்சாக்கும் புதைத்து நீ படுக்கவிடை யோடீ

எந்தனைத் தேடியழ நீயு மிருப்பாயென்று நினைத்தேன்

உந்தனை எண்ணீயுள் நொந்திட விதிப்பய னுண்டாச்சுதோ மகளே

இதுவென் தலைவிதியே ஈஸ்ஷனின் மதியோ

அதிபாதக கரகிரு தாளந் செய்கைக்கோ னாளான் என்மகளே

(அச்சுப் பிரதியில் இருப்பது போன்றே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.)

- அ.கா. பெருமாள்,நாட்டுப்புறவியலாளர்

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x