Published : 01 Mar 2016 08:51 AM
Last Updated : 01 Mar 2016 08:51 AM

கொத்தடிமைகளுக்கு விடிவு எப்போது?

கொத்தடிமைகளின் நிலையை மறைத்துவிட்டு வேறொரு இந்தியாவைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்



இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக இந்திய அரசியல் சாசனப் பிரிவுகள் 21 மற்றும் 23 (1) சொல்கின்றன. ஆனால், எதார்த்தம் அப்படி இல்லை; இன்னமும் கொத்தடிமைக் கொடுமைகள் தொடர்கின்றன என்பதற்குச் சமீபத்திய உதாரணம் மாரிமுத்து.

மதுரை மஞ்சள்மேடு காலனியைச் சேர்ந்த பால் பாண்டி - பெருமாள் தம்பதியின் மகன் மாரிமுத்து. 15 வயதே ஆன இவர் கந்துவட்டிக் கடன் பாக்கிக்காகக் கடந்த நவம்பரில் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே பந்தல்போர் என்னுமிடத்தில் ரஞ்சித் தேவரின் மிட்டாய் கம்பெனியில் வேலைக்குச் சேர்க்கப்பட்டார். அங்கே இரண்டு வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்து அந்தச் சிறுவனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அவரது தாய் மறைந்த செய்திகூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இரவும் பகலும் மிட்டாய் கம்பெனியில் சக்கையாய் பிழியப்பட்ட மாரிமுத்து, கடந்த வாரம் தலைவலி என்று சொல்லி ஓய்வு கேட்டிருக்கிறார். அதற்காக ரஞ்சித் தேவர், கொதிக்கும் எண்ணெயைத் தூக்கி மாரிமுத்து மீது ஊற்ற, பதறித் துடித்துச் சுருண்டிருக்கிறார். உடம்பெல்லாம் ரணமாகி, வலியோடும் பசியோடும் இரண்டு நாட்கள் அங்கேயே முடங்கிக்கிடந்த மாரிமுத்து, எப்படியோ தப்பித்து மதுரையில் வந்து விழுந்திருக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்ற அவரது உடல்நிலை சரியாக இன்னும் பல மாதங்களாகும்.

உறிஞ்சப்படும் இளம் ரத்தம்

முறுக்கு, மிட்டாய் கம்பெனிகளுக்காக வெளி மாநிலங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கடத்தப்படும் சிறுவர்கள் இப்படி சிக்கிச் சின்னாபின்னமாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாய் நடக்கின்றன. சரியான உணவுகூட இல்லாமல் அடுப்புகளுக்கு மத்தியில் படுக்க வைக்கப்படும் கொத்தடிமைச் சிறுவர்கள், வேலை நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போய்விடுவார்கள் என்பதற்காகவே, குடிக்கத் தண்ணீர்கூடத் தராமல் தவிக்கவிடப்படும் கொடுமையும் நடக்கிறது.

தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை சுருளிமுத்து, 7 வயதில் உத்தரப் பிரதேசத்துக்கு முறுக்கு கம்பெனி வேலைக்காகக் கடத்தப்பட்டார். 17 ஆண்டுகள் அங்கே நெருப்புச் சித்ரவதைகளை அனுபவித்துவிட்டு, ஊருக்குத் திரும்பினார்.

ரூ. 2,000 முன்பணம் கொடுத்து, குஜராத் முறுக்குக் கம்பெனிக்குக் கொத்தடிமையாகக் கடத்தப்பட்ட மதுரை மாவட்டம் வடுகபட்டி சிறுவன் வைரமணி, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஊருக்கு அழைத்துவரப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் 2014 அக்டோபரில், மகாராஷ்டிர மாநிலத்தின் முறுக்குக் கம்பெனிக்குக் கொத்தடிமையாகச் சென்று மர்மமான முறையில் இறந்தார். உறவுகள் அங்கு செல்வதற்குள் உடலை முறுக்குக் கம்பெனிக்காரர்களே எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்புத் தோட்ட தலித் கொத்தடிமைகள் மூன்று பேர் இரண்டு நாட்கள் தானியக் குதிருக்குள் அடைத்து வைத்துச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் 2007-ல் நடந்தது. முடிவற்று நீளும் எண்ணிக்கை இது.

வறுமையும் வஞ்சமும்

தென் மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, புதுகை மாவட்டங்களைச் சேர்ந்த தலித் மற்றும் வறுமைக் குடிகள்தான் கொத்தடிமைக் கடத்தல் கும்பலின் இலக்கு. பெரும்பாலும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்களின் கம்பெனிகளுக்கே ஆள்பிடிக்கப்படுவதால் உள்ளூர் பிரமுகர்களே இதில் தரகர்களாக ஈடுபடுகிறார்கள்.

கேரளத்தில் வீட்டு வேலை செய்வதற்காக விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள். இவர்கள் முதியோர்களைப் பராமரிக்க, நாய்களைக் குளிப்பாட்ட, பூனைகள் வளர்க்க, கால்நடைகளைப் பராமரிக்கப் பணிக்கப்படுகிறார்கள் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், ‘‘பல நேரங்களில் இந்தச் சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள்’’ என்று பதைபதைக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி என்ற 11 வயது இருளர் சமூகத்துச் சிறுமி, 2011-ல் வீட்டு வேலைக்காக கொச்சி அருகிலுள்ள ஆலுவா என்ற இடத்துக்கு வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்குக் கொத்தடிமையாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரை சிகரெட்டால் சுட்டுக் கொடுமைப்படுத்திய வீட்டின் உரிமையாளர் ஜோஸ்குரியன், தனலெட்சுமியை நாய் அடைக்கும் கூண்டில் படுக்க வைத்திருக்கிறார். இன்னும் சில தொடர் சித்ரவதைகளால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு கடைசியில் இறந்தே போனார் தனலெட்சுமி. இப்படி, இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருப்பதை மறைத்துவிட்டு, நாம் வெளியில் வேறொரு இந்தியாவைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்.

உதவிக்கு வராத சட்டங்கள்

கொத்தடிமைகளை ஒழிப்பதற்காக 1976-ல் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டம் மீட்கப்படும் கொத்தடிமைகளின் மறு வாழ்வுக்கும் வழி சொல்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. மீட்கப்படும் கொத்தடிமைகளுக்கு உடனடியாக 1,000 ரூபாயும் அடுத்ததாக 19,000 ரூபாயும் நிவாரணம் வழங்குவதுடன் அவர்களின் மறுவாழ்வுக்காக வேளாண் நிலமும் அளிக்க வேண்டும். தலித்தாக இருந்தால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்குக் கூடுதலாக 90,000 ரூபாய் வழங்க வேண்டும். சட்டத்தின் ஷரத்துக்கள் இப்படி இருந்தாலும், ஒரு சில வழக்குகளில் மட்டுமே ஓரளவுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் 2010-14 கால கட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் 864 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 320 பேர் பழங்குடிகளும் தலித்துகளும்; 379 பேர் வட மாநிலத்தவர்கள். இதில் 6 பேருக்கு மட்டுமே 20,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 690 பேர் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிவாரணம் பெற்றனர். மூன்று பேருக்கு மட்டுமே தலா 2.5 சென்ட் நிலம் கிடைத்தது.

2011-12 முதல் 2013-14 வரை மீட்கப்பட்ட 1,866 கொத்தடிமைகளுக்கு 1,36,52,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2014-15-ம் ஆண்டுக்கு கொத்தடிமைகள் நிவாரணத்துக்காக 1.2 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியது. 2010 ஜனவரி தொடங்கி நாலரை ஆண்டுகளில் மீட்கப்பட்ட 1,873 கொத்தடிமைகளில் 44% பேர் வட மாநிலத் தொழிலாளர்கள். இது தொடர்பாக முதலாளிகள் மீது 131 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சமூகக் குற்றம்

‘‘2002-ல் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறிக் கூடத்தில் கொத்தடிமைகளாக வைத்திருந்த 58 குடும்பங்களை மீட்கப்போன என்னையே மரத்தில் கட்டிவைத்து உடம்பில் பெட்ரோலை ஊற்றிவிட்டார்கள். கொஞ்சம் தாமதித்திருந்தால் கொளுத்தியும் இருப்பார்கள்’’ என்று சொல்லும் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், கொத்தடிமைகளாக நடத்துவதை சமூக அவலமாகப் பார்க்காமல் சமூகக் குற்றமாகப் பார்க்காதவரை இந்தக் கொடுமைகள் ஒழியாது’’ என்கிறார்.

குழந்தைக் கடத்தல், குழந்தைக் கொத்தடிமை, குழந்தை வியாபாரம், குழந்தைத் தொழிலாளர்கள் என்று பல குற்றங்கள் கொத்தடிமைக் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினையின் பின்னணியில் உள்ளன. பரம்பரையாய்க் கொத்தடிமை தொழிலுக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள், குடும்ப ஏழ்மையைக் காரணமாகச் சொல்கிறார்கள். இவர்கள் கொத்தடிமையாகப் போனதால் ஏழ்மை பறந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை.

கொத்தடிமைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நகராட்சி, பஞ்சாயத்து அதிகாரிகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்று ஒரு உத்தரவு வந்தால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழித்துவிடலாம் என்கிறார்கள். அது சாத்தியமாகுமா?

- குள. சண்முகசுந்தரம்,

தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

கொத்தடிமை ஒழிப்பு உதவிக்கான செல்போன் எண்ணை விழிப்புணர்வு நாடகம் மூலம் வெளிப்படுத்திய கலைக் குழுவினர்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x