Last Updated : 21 Jan, 2015 08:33 AM

 

Published : 21 Jan 2015 08:33 AM
Last Updated : 21 Jan 2015 08:33 AM

குழந்தைகளுக்காக எழுதுவது எப்படி?

நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்போது நீங்கள் உங்களுடைய குழந்தைப் பருவத் துக்கும் இப்போதுள்ள குழந்தைப் பருவத்துக்கும் இடையே முன்னும் பின்னும் பயணப்பட வேண்டியிருக்கும். குழந்தை யாக இருந்தபோது நாம் எப்படி இருந்தோம், நமக்கு ஏன் சிலதெல்லாம் பிடித்திருந்தது, நான் ஏன் சிலவற்றில் மட்டும் ஆர்வமாக இருந்தோம், எது நம்மை மனச் சோர்வுக்கு ஆளாக்கியது, எது உற்சாகத்தை ஊட்டியது, எது நம்மை அச்சப்பட வைத்தது, எதற்காக நாம் ஏங்கினோம், நாம் சந்தித்த குழந்தைகள் எப்படி இருந்தார்கள், எதை ரசித்தார்கள், எதைச் சிந்தித்தார்கள் என்றெல்லாம் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள், நீங்கள் சந்தித்த அக்காலக் குழந்தைகள் ஆகியோரை மனதில் கொண்டுவர வேண்டும். இரண்டு வெவ்வேறு காலத்துக் குழந்தைகளுக்கிடையே என்ன வேறுபாடுகள், முக்கியமாக ஏதேனும் இருக்கிறதா, அல்லது குழந்தைத் தன்மை என்பதே மாறிவிட்டதா? அப்படியானால் நீங்கள் எழுதுவது எப்படி அவர்களைச் சென்று சேரும்?

பெரிய பட்டியல்

சரி, குழந்தைகளுக்காக எழுதுவது என்று தீர்மானித்து விட்டீர்கள், எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும், குழந்தைகளுடைய புத்தகத்தில் எவையெல்லாம் இடம்பெற வேண்டும், எவையெல்லாம் இடம்பெறக் கூடாது என்று பெரிய பட்டியலே இருக்கிறது. அதைப் படித்து ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடலாம். குழந்தைகளுக்கான புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதை இறுதியாகத் தீர்மானிப்பது பதிப்பாசிரியர்தானே என்று நீங்கள் நினைக்கக்கூடும். சிறு வயதில் நீங்கள் படித்த ‘குட்டி இளவரசன்’ என்ற கதைப் புத்தகம் இந்த வரம்புகளுக்கு உட்படாமல் இருந்ததாகத் தோன்றலாம்.

குழந்தைகளுக்காகப் புத்தகங்களை எழுதுவோர் அதற்கு முன்னால் சில முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகங்களை எப்படி அச்சிடுகிறார்கள், கதைகள் எந்த விதத்தில் சொல்லப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். எழுத்தாளர் மோரிஸ் கிளிட்ஸ்மேன், தான் ஒரு பொன்னான விதியைக் கடைப்பிடிப்பதாகக் கூறி அதை விளக்கினார். குழந்தைகளுக்காக எழுதப்படும் கதைதான் என்றாலும் பூர்வ பீடிகையோடு ஆரம்பிக்காமல் நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட வேண்டும் என்கிறார். இப்போதைய இளம் வாசகர்கள் முன்கதைச் சுருக்கத்துக்காகவோ, காட்சி விளக்கத்துக்காகவோ பொறுமையாகக் காத்திருக்கப் பழகிய வர்கள் அல்ல. அத்துடன் அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அதிகம். நேரடியாகக் களத்துக்கே சென்றுவிட்டு, கதையை மெல்ல மெல்ல அவிழ்த்தால் அதை அவர்கள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதே இதன் விளக்கம்.

சிறுவர்களுக்காக எழுதுவது என்றால், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட விதிகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எழுதும்போது அது உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவும்.

முதல் வாசகர்

புத்தகங்களைச் சிறுவர்கள் எப்படித் தேர்வு செய் கிறார்கள், படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள புத்தகக் கடைகளிலும், நூலகங்களிலும், நர்சரி பள்ளிக்கூடங்களிலும், இதர பள்ளிக்கூடங்களிலும் சென்று பார்க்க வேண்டும். நீங்கள் எழுதும் புத்தகத்துக்கு நீங்கள்தான் முதல் வாசகர். குழந்தைகளைப் போல நடித்து நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால், உண்மையில் குழந்தைகள் இயல்பாக அதைப் படிக்க வேண்டுமே! எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள், முதல் வாசகராகப் படிக்கும்போது கறாராக இருந்துவிடுங்கள். அப்போதுதான் அந்தப் புத்தகம் சிறுவர்களால் விரும்பப்படுமா, படிக்கப்படுமா என்று முடிவெடுக்க உதவும். நீங்கள் குழந்தையாக இருந்த போது எப்படிப் படித்தீர்கள் என்ற நினைவு இதில் ஓரளவுக்கு உதவலாம். இது மட்டும் போதாது. இப்போதுள்ள குழந்தை களின் விருப்பத்தை, தேர்வை உங்கள் மண்டையிலும் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான புத்தக உலகம் தோழமை மிக்கது, மகிழ்ச்சிகரமானது. குழந்தைகளுக்கு ஆர்வமூட்ட, கற்பனை யான வார்த்தைகளாலும் சித்திரங்களாலும் மகிழ்ச்சியூட்ட, தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் நிரம்பிய உலகம் அது. மிகக் குறைவான ஊதியமே கிடைத்தாலும் குழந்தை களுக்கு நாம் தரும் புத்தகம் மகிழ்ச்சியையும் அறிவையும் ஊட்ட வேண்டும் என்று அதற்காக மிகுந்த அக்கறையுடனும் கனிவுடனும் உழைக்கும் எழுத்தாளர்கள், ஓவியர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் அனேகம். தங்களுடைய முழு வாழ்க்கையையும் அதற்காகவே தியாகம் செய்வோர் உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்காக எழுதும் புத்தகங்கள் புத்தகக் காட்சிகளிலும் நூலகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இடம்பெறுவதில்தான் வெற்றியே இருக்கிறது. குழந்தை களுக்காகவே புத்தகங்களை எழுதி வெற்றிகண்டவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் எழுதும் புத்தகம் யாருக்குப் போய்ச்சேர்கிறது என்ற சமூக நோக்கம்தான் முக்கியம். குழந்தைகளுக்கான நூல் களைக் கொண்டுபோய் சேர்க்க பெற்றோர்கள், நூலகர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களோடு நீங்கள் சேர்ந்திருப்பதுதான் முக்கியம். இதில் உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால் உங்களுடைய ஆசைப்படி நீங்கள் புத்தகம் எழுதத் தொடங்கலாம்.

- மைக்கேல் ரோசன், சிறுவர் இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்தவர், குழந்தைகளுக்கான கவிதைகள், கதைகள் என்று 140 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

‘தி கார்டியன்’, தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x